புத் 63 இல. 12

விரோதி வருடம் பங்குனி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ர. ஆகிர் பிறை 04

SUNDAY MARCH 21, 2010

 
.

ஐ.பி.எல் தொடரில் யார் சம்பியன்?

ஐ.பி.எல் தொடரில் யார் சம்பியன்?

பரபரப்பான மூன்றாவது ஐ. பி. எல். தொடர் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியது. தோனி, யுவராஜ்சிங், ஜயசூரிய, ரெய்னா உள்ளிட்ட நட்சத்திரங்கள் மீண்டும் வானவேடிக்கை காட்ட காத்திருக்கின்றனர். வீரர்களின் அதிரடியுடன் நடன பெண்களும் சேர்ந்து ரசிகர்களை கிறங்கடிக்க உள்ளனர். சமீபத்திய ஏலத்தில் பாகிஸ்தான் வீரர்கள் புறக்கணிப்பு தெலுங்கானா விவகாரம் காரணமாக போட்டிகள் ஹைதராபாத்தில் இருந்து வேறு இடங்களுக்கு மாற்றம் . ரவீந்திர ஜடேஜாவுக்கு தடை உள்ளிட்ட சர்ச்சைகளை கடந்து, இம்முறை போட்டிகள் இந்திய மண்ணில் வெற்றிகரமாக நடக்க உள்ளன.

பயங்கரவாதிகளின் மிரட்டல் காரணமாக உச்சகட்டப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த முறை டெக்கான் சார்ஜஸ் அணி கோப்பையை கைப்பற்றியது.

இம்முறை சம்பியன் பட்டத்தை குறிவைத்து டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், சச்சினின் மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட முன்னணி அணிகள் களமிறங்குகின்றன. இதில் யாருக்கு அதிக வாய்ப்பு என்று பார்ப்போம்.

இந்திய கிரிக்கெட் சபை சார்பில் இந்தியன் பிரிமியர் லீக் (ஐ. பி. எல்) அமைப்பு உருவானது. இதன் சார்பில் முதலாவது ஐ. பி. எல். “டுவெண்டி -20” தொடர் 2000 இல் இந்தியாவில் நடந்தது. அப்போது ஷேன் வார்ன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சம்பியன் பட்டம் வென்றது. லொக்சபா தேர்தல் காரணமாக பாதுகாப்புப் பிரச்சினை ஏற்பட 2009ல் இரண்டாவது தொடர் தென்னாபிரிக்காவில் நடத்தப்பட்டது. தற்போது மூன்றாவது ஐ. பி. எல். தொடர் மீண்டும் இந்தியாவில் நடத்தப்படுகிறது. மும்பையில் போட்டிகள் துவங்கியது பைனல் வரும் ஏப். 25ம் திகதி மும்பையில் நடக்கிறது.

45 நாட்கள் 60 போட்டி

இம்முறை வழக்கம் போல் 8 அணிகள் பங்கேற்கின்றன. மொத்தம் 45 நாட்களில் 60 போட்டிகள் நடக்க உள்ளன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் இரண்டு முறை மோத வேண்டும். ஒரு அணி மொத்தம் 14 லீக் போட்டிகளில் விளையாடும். லீக் சுற்றின் முடிவில் முதல் நான்கு இடங்களை பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். முக்கியமான போட்டிகள் இரவு 8 மணிக்கு நடப்பதால், ஏராளமான ரசிகர்கள் மைதானத்துக்கு வந்து போட்டிகளை காணலாம். ‘டி. வி. தவிர, நாடு முழுவதும் ஆயிரம் சினிமா தியேட்டர்களில் போட்டிகள் நேரடியாக ஒளிபரப்பாக இருப்பதால் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு சூப்பர் கிரிக்கெட் விருந்து காத்திருக்கிறது.

யார் சாம்பியன்?

மிகவும் குறைவான ஓவர்கள் கொண்ட ‘டுவெண்டி-20’ தொடரில் வெற்றியாளரை கணிப்பது மிகவும் கடினம். ஆனாலும் கடந்த இரு முறை சம்பியன் வாய்ப்பை கோட்டை விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறை சாதிக்கத் துடிக்கிறது. கப்டன் டோனி, ஹைடன், மைக்கல் ஹசி, சுரேஷ் ரெய்னா போன்றவர்கள் அதிரடி காட்ட வேண்டும். பந்துவீச்சில் பாலாஜி, நிடினி, முரளிதரன் நம்பிக்கை தருகின்றனர்.

இலங்கை வீரர் திசேரா பெரேரா புதுமுகமாக சேர்க்கப்பட்டிருப்பது கூடுதல் பலம், சமீபத்திய ஒருநாள் போட்டிகளில் சிக்சர் மழை பொழிந்த இவர் மின்னல் வேகத்தில் ஓட்டம் சேர்ப்பதில் கெட்டிக்காரராக உள்ளார். சச்சினின் மும்பை இந்தியன்ஸ் அணி மே. தீவுகள் வீரர் பொலார்ட் வரவால் புதுதெம்புடன் காட்சி அளிக்கிறது. சமீபத்தில் பொலார்ட் சுமார் 3.5 கோடி ரூபாவுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். ஜயசூரிய, பிராவோ போன்ற அனுபவசாலிகள் இருப்பதால் கவலையில்லை. தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 200 ஓட்டங்கள் எடுத்து உலக சாதனை படைத்த குஷியில் இருக்கும் சச்சின் அணிக்கு கோப்பை வென்று தருவதை லட்சியமாக கொண்டுள்ளார்.

கொல்கத்தா அணிக்கு மீண்டும் கப்டன் பொறுப்பை ஏற்றுள்ள கங்குலி மாற்றம் தருவார் என அணியின் உரிமையாளர் நடிகர் ஷாருக்கான் எதிர்பார்க்கிறார். இதே போல் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியின் கப்டன் பதவியில் இருந்து யுவராஜ் நீக்கப்பட்டு சங்கக்கார புதிய கப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த மாற்றம் கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். கடந்த 2008ல் கோப்பை வென்ற ஷேன்வோர்ன் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி, இம்முறை வாட்சன், ரவீந்திர ஜடேஜா போன்ற முன்னணி வீரர்கள் இல்லாமல் தவிக்கிறது.

முதலாவது தொடரில் கடைசி இரண்டு இடங்களைப் பெற்ற பெங்களூர் ரோயல் சாலஞ்சர்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் ஆகிய அணிகள் 2009ல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அதிர்ச்சிதந்தன. இதில் சற்றும் எதிர்பாராத வகையில் கில்கிறிஸ்ட் தலைமையிலான டெக்கான் அணி கோப்பை கைப்பற்றியது. இதே போன்றதொரு அதிர்ச்சி இம்முறையும் தொடரலாம்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.