புத் 63 இல. 12

விரோதி வருடம் பங்குனி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ர. ஆகிர் பிறை 04

SUNDAY MARCH 21, 2010

 
.

பரிதாப நிலையில் ஹொக்கி வீரர் பல்ஜித் சிங்

பரிதாப நிலையில் ஹொக்கி வீரர் பல்ஜித் சிங்

இந்திய ஹொக்கி அணிக்காக தனது கண் பார்வையை இழந்து இன்னும் சகஜ நிலைக்கு திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகிறார் பல்ஜித் சிங்.

தற்போது டில்லியில் நடக்கும் உலகக் கோப்பைத் தொடரை நேரில் பார்க்க இவருக்கு இலவச அனுமதி தரப்படவில்லை என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.

ஒரு வருடத்துக்கு முன்பு வரை இந்திய ஹொக்கி அணியின் ‘நம்பர் -1’ கோல் காப்பாளர் பல்ஜித் சிங் (28). கடந்த ஆண்டு ஐரோப்பிய சுற்றுப்பயணத்துக்குத் தயாராக , புனேயில் பயிற்சியில் ஈடுபட்ட போது, கோல்ப் பந்து இவரது வலது கண்ணில் பலமாக தாக்கியது. கண் விழிப்படலம். கிழிந்து பார்வை பறிபோகும் அபாயம் ஏற்பட்டது.

இதையடுத்து அமெரிக்காவில் நடந்த பல ஆப்பரேஷன்னுக்குப் பின் 50 சதவீத பார்வை இப்போது திரும்பியுள்ளது. விரைவில் இதிலிருந்து மீண்டு, காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்க முயற்சித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது டில்லியில் நடக்கும் உலகக்கோப்பை ஹொக்கி தொடரை நேரில் காண்பதற்கு இவருக்கு அழைப்பிதழ் அல்லது இலவச அனுமதி (பாஸ்) எதுவும் வழங்கப்படவில்லை.

இதுகுறித்து அவர் கூறியது: எனக்கு மட்டும் காயம் ஏற்படாமல் இருந்திருந்தால் இப்போதைய அணியில் இடம்பெற்றிருப்பேன். துரதிருஷ்டவசமாக விளையாட முடியவில்லை.

ஆனாலும் சக வீரர்களின் ஆட்டத்தை அருகில் இருந்து ரசிக்கலாம் என விரும்பினேன். இதற்குரிய எந்த அனுமதியும் (பாஸ்) தரமறுத்து விட்டனர்.

வேதனை அடைந்தேன். நான் இன்னும் என்னை அணியிலுள்ள ஒருவனாகவே நினைத்துக் கொண்டுள்ளேன். தேசத்துக்காக ஏறக்குறைய எனது கண் பார்வை முழுவதும் இழந்து விட்டேன்.

இந்த தகுதியை வைத்துக்கூட ஹொக்கி நிர்வாகம், எனக்கு ஒரு அழைப்பிதழ் கொடுக்காதது அதிர்ச்சியாக உள்ளது.

இந்திய ஹொக்கி அணியின் உறுப்பினரான நான், ‘டிக்கெட்’ வாங்கித் தான் போட்டியை பார்க்க வேண்டும் என்றால், அதை வீட்டில் இருந்தபடியே ‘டிவி’யில் பார்த்து விடுவேனே, எனக்கு காயம் ஏற்பட்டது எப்படி எனத் தெரிந்தும், ஹொக்கி நிர்வாகம் இப்படி செய்ததால் மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

இதே நேரம் அணியில் நான் இருந்திருந்தால் எனக்கு கிடைத்திருக்கும் மரியாதையே வேறு. காயமடைந்து விலகி இருப்பதால், என்னை எல்லோரும் மறந்துவிட்டார்கள்.

உதவுவாரா கில்?

எனது பார்வை முழுமையாக திரும்ப அமெரிக்க டாக்டர்கள் அறிவுறுத்தல்படி, மற்றொரு சத்திரசிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. இதனைக் கடந்த மாதம் (ஜன 6) விளையாட்டுத் துறை அமைச்சர் எம். எஸ். கில்லை சந்தித்து முறையிட்டேன்.

ஆனால் அவர், அரசு ஏற்கனவே அதிகம் செலவழித்து விட்டதால், மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாது என்றார். எனது சத்திர சிகிச்சையை இந்தியாவில் செய்து கொள்கிறேன் என்றேன்.

அதற்கு அவர் தெளிவான பதில் எதுவும் கூறவில்லை. நான் மீண்டும் தேசிய ஹொக்கி அணியில் இடம்பிடித்து சாதிக்க விரும்புகிறேன். இதற்கு கில் தான் உதவ வேண்டும். இவ்வாறு பல்ஜித் சிங், பரிதாபமாகத் தெரிவித்தார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.