புத் 63 இல. 12

விரோதி வருடம் பங்குனி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ர. ஆகிர் பிறை 04

SUNDAY MARCH 21, 2010

 
.

ஆயிரம் ஓட்டங்களை நோக்கி பிரண்டன் மெக்கலம்

ஆயிரம் ஓட்டங்களை நோக்கி பிரண்டன் மெக்கலம்

சர்வதேச டுவெண்டி-20 அரங்கில் அதிக ஓட்டங்கள் சேர்த்த வீரர்கள் வரிசையில் நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம் முன்னிலையில் உள்ளார். இவர் இன்னும் 13 ஓட்டங்களை எடுக்கும் பட்சத்தில் ‘டுவெண்டி -20’ வரலாற்றில் ஆயிரம் ஓட்டங்கள் எட்டிய முதல் வீரர் என்ற சாதனை படைக்கலாம்.

கடந்த 2002ல் ஒருநாள் போட்டியில் அறிமுகமான பிரண்டன் மெக்கலம் (28 வயது) இதுவரை 167 ஒருநாள் போட்டிகளி விளையாடி 2 சதம் 16 அரைச்சதம் உட்பட 3933 ஓட்டங்கள் சேர்த்துள்ளார். கடந்த 2004ல் டெஸ்ட் அரங்கில் அறிமுகமான இவர் இதுவரை 50 டெஸ்ட்களில் பங்கேற்று 4 சதம் 15 அரைச்சதம் உட்பட 2678 ஓட்டங்கள் சேர்த்துள்ளார்.

இரண்டாவது வீரர்; சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டுவெண்டி-20 போட்டியில் சதம் கடந்து அசத்திய இவர் ‘டுவெண்டி- 20’ வரலாற்றில் சதம் கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமை பெற்றார்.

முன்னதாக மேற்கிந்திய தீவின் கப்டன் கிறிஸ் கெய்ல் (117, எதிர், தென்னாபிரிக்கா, 2007, ஜோகன்னஸ்பேர்க்) சதம் அடித்திருந்தார். தவிர இவர், டுவெண்டி-20 வரலாற்றில் அதிவேக சதம் கடந்த வீரர்கள் வரிசையில் மேற்கிந்திய தீவின் கெய்ல் சாதனையை சமன் செய்தார். இருவரும் தலா 50 பந்துகளில் 100 ஓட்டங்களை எட்டினர்.

புதிய சாதனை

இதுவரை 33 டுவெண்டி-20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் ஒரு சதம் 6 அரைச்சதம் உட்பட 987 ஓட்டங்கள் சேர்த்துள்ளார். அடுத்து நடக்கும் போட்டியில் 13 ஓட்டங்கள் சேர்க்கும் பட்சத்தில் ‘டுவெண்டி-20’ அரங்கில் ஆயிரம் ஓட்டங்களை கடந்த முதல் வீரர் என்ற புதிய சாதனையைப் படைக்கலாம்.

இவரை அடுத்துள்ள இங்கிலாந்தின் கெவின் பீட்டர்ஸன் (663 ஓட்டங்கள்), தென்னாபிரிக்காவின் ஸ்மித் (642), இலங்கையின் தில்ஷான் (607), ஜெயசூரிய (606), பாகிஸ்தானின் சொயிப் மலீக் (603) உள்ளிட்டோர், ஆயிரம் ஓட்டங்களைக் கடக்க கடுமையாகப் போராட வேண்டும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.