புத் 63 இல. 12

விரோதி வருடம் பங்குனி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ர. ஆகிர் பிறை 04

SUNDAY MARCH 21, 2010

 
.

கப்டன் ஆசை இல்லை

கப்டன் ஆசை இல்லை

அப்ரிடி

அணியின் கப்டனாகும் ஆசை அனைவருக்கும் இயற்கையான ஒன்று. ஆனால், பாகிஸ்தான் சகலதுறை வீரர் சயித் அப்ரிடி கப்டன் பதவி மீது விருப்பம் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் சிறந்த சகலதுறை வீரரில் மிக முக்கியமானவர் சயீத் அப்ரிடி. (30 வயது). இவர் கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த ‘டுவெண்டி 20’ உலக கோப்பை தொடருக்குப் பின் பாகிஸ்தான் அணியின் கப்டனாகப் பொறுப்பேற்றார்.

சமீபத்தில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த போட்டியில் பந்தை கடித்த விவகாரத்தில் ஐ. சி. சி. யின் கழுகுப் பார்வைக்கு இரையானார்.

இதனால், இவர் இங்கிலாந்துக்கு எதிராக துபாயில் நடந்த டுவெண்டி-20 போட்டியில் கப்டனாக செயல்படவில்லை. இவருக்குப் பதிலாக சொயிப் மலிக் கப்டனாக அணியை வழிநடத்தினார்.

இந் நிலையில், அடுத்த மாதம் மே.தீவில் நடக்கவுள்ள ‘டுவெண்டி 20’ உலகக் கோப்பை தொடருக்கான 30 பேர் கொண்ட உத்தேச அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (பி. சி. பி) அறிவித்தது.

இதில் யூனுஸ்கான், முகம்மது யூசுப், சொயிப் அக்தர் உள்ளிட்ட சீனியர் வீரர்கள் இடம்பெறவில்லை. இதனால், இத்தொடருக்கு அப்ரிடி கப்டனாக நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது. இருப்பினும் பந்தை கடித்த விவகாரத்தில் சிக்கியதால், கப்டன் பதவி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அப்ரிடி கூறியதாவது:- பாகிஸ்தான் அணியின் கப்டன் பொறுப்பு தானாக வரும் பட்சத்தில் மனநிறைவுடன் ஏற்றுக் கொள்வேன்.

ஒருவேளை நான் கப்டனாக தேர்வு செய்யப்படாத பட்சத்தில், அணியின் சீனியர் வீரராக தொடர்ந்து செயல்பட உள்ளேன். கப்டன் பதவி மீது எனக்கு ஆசை இல்லை. சிறந்த வீரராக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிக்க விரும்புகிறேன்.

கப்டன் பதவி மீது ஆசை இருந்திருந்தால், தற்போது விளையாடி வரும் உள்ளூர் தொடரில் முகம் சமி தலைமையின் கீழ் விளையாடி இருக்கமாட்டேன். அணியின் கப்டன் பொறுப்பு முக்கியமல்ல.

விளையாடும் லெவன் அணியில் இடம்பிடித்து, அணியை வெற்றிக்கு கொண்டு செல்வதே முக்கியம். எனவே, மே. தீவில் நடக்கவுள்ள ‘டுவெண்டி -20’ உலக கோப்பை தொடரில் சகலதுறை வீரராக அசத்தி பாகிஸ்தான் அணியை வெற்றிபெறச் செய்வேன் என்றார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.