புத் 63 இல. 12

விரோதி வருடம் பங்குனி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ர. ஆகிர் பிறை 04

SUNDAY MARCH 21, 2010

 
.

மருதமுனை டெக்ஸா விளையாட்டுக் கழக வருடாந்த ஒன்றுகூடல்

மருதமுனை டெக்ஸா விளையாட்டுக் கழக வருடாந்த ஒன்றுகூடல்

அம்பாறை மாவட்ட விளையாட்டுத் துறையில் தனக்கான இடத்தினை தடம்பதித்திருக்கும் மருதமுனை டெக்ஸா விளையாட்டுக் கழகத்தின் 2ஆவது வருட ஒன்று கூடலும், ஹரிக்கன் நைற்றும் கழகத்தலைவரும் தொழிலதிபருமான எம். எச்.எம். தாஜுதீன் தலைமையில் கடந்த சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

முழு நிலவின் கீழ் ஹரிக்கன் லாம்புகள் தொங்க பல நிறமின் குமிழ்கபள் கண்சிமிட்ட, இதமான தென்றலின் தழுவலில் மருதமுனைக் கடற்கரைத் திறந்த வெளியில் நடந்தேறிய இந்நிகழ்வு அழைக்கப்பட்ட விளையாட்டு ரசிகர்களை மட்டுமல்ல; கடற்கரைப் பிரியர்களையும் ரம்யமடையச் செய்தது.

டொக்ஸாவின் நிருவாகத் திட்டமிடல் முகாமைத்துவ அமைப்பின் தலைவர் ஏ. ஆர். கலீலின் சார்பாக புதிய வருடத்திற்கான நிருவாகச் செயல்படுத்தல் ஒப்பு மூலம் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் பீ. எம். ஆப்தினால் தலைவர் எம். எச். எம். தாஜுதீனிடம் ஒப்படைக்கப்பட்டது.

அம்பாறை மாவட்ட விளையாட்டுக் கடிகழங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்பீட உறுப்பினர்கள்; மத்தியஸ்தர்கள்; கல்வியியலாளர்கள்; தொழிலதிபர்கள் எனப் பெருமளவிலானோர் அழைக்கப்பட்டிருந்த இந்நிகழ்வில் உரையாற்றிய தலைவர் தாஜுத்தீன், கழகத்தின் வளர்ச்சியில் பங்கெடுக்கும் அனைவரையும் நினைவுகூர்ந்தார்.

விளையாட்டுத்துறையினர் மட்டுமல்லாது ரசனையாளர்கள் பலரையும் உள்ளடக்கியுள்ள எமது கழகத்தின் அறுவடைகளில் ஒன்றே இக் ஹரிக்கன் நைற் எனக் கூறியதுடன் அம்பாறை மாவட்ட உதைபந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவர் பொலிஸ் அத்தியட்சகர் மர்ஹும் எச். எல். ஜமால்டீனுக்குப் பிரார்த்தனையும் இடம் பெற்றது.

தலைவரின் உரையை அடுத்த கழக முகாமயாளரும் சட்ட ஆலோசகருமான ஐ. எல். எம். றமீஸ் டொக்ஸாவின் சவால்கள் நிறைந்த ஆரம்பம் பற்றிப் பேசினார்.

எமது முகாமைத்துவத் திட்டமிடல் நிருவாகக் கட்டமைப்பினர் விளையாட்டுக் கழகமெனும் குழந்தையொன்றை ஏற்கனவே வளர்த்து, ஆளாக்கி இன்னுமொருவருக்குத் தத்துக் கொடுத்து விட்டு இங்கு வந்துள்ளனர்.

இவ்வாறானதொரு நிலை டொக்ஸாவுக்கு ஏற்படாது. இக்குழந்தையினை முழுமையாக அழகு பார்க்கவே அனைவரும் திடசங்கற்பம் பூண்டுள்ளனர் என்றார்.

அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளரும் கழகத் தவிசாளருமான ஏ. எம். அப்துல் லத்தீபின் உரை டொக்ஸாவின் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் எதிர்கால சமூக முன்னெடுப்புக்கள் பற்றியதாகவும் அமைந்திருந்தது.

பல்வேறு விளையாட்டுக் கழகங்கள் 5ஆம் ஆண்டு மற்றும் பல்கலைக்கழகம் உள்ளிட்ட புலமைப் பரிசில் நடவடிக்கைகளில் ஈடுபட்ட போதிலும் நாம் ஜனாஸா நலன்புரி, வீரர்களுக்கான காப்புறுதி, மக்கள் நலன் உதவி உள்ளிட்ட வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.

எந்தக் கழகங்களுக்குமிடையிலான போட்டித் தன்மைக்காகவோ இவைகளைச் செய்யவில்லை. ஒரே சேவைகளில் எல்லோரும் ஈடுபடும் போது ஏற்படும் இரட்டிப்புத் தன்மையிலிருந்து மீளவே இவ்வாறான திட்டங்களை நடைமுறைப்படுத்த முனைந்துள்ளோம். எமது முன்னோக்கில் உடன்பாடு கொண்ட அனைவரும் எம்முடம் ஒன்றிணைய முடியும் என்றார்.

டொக்ஸாவின் ஒன்று கூடலும் அதனை முன் நிறுத்திய செயற்திட்டங்களும் மனதிற்கு இன்பமூட்டுகின்றன.

அம்பாறை மாவட்ட உதை பந்தாட்டத்துறையில் மேற்கொள்ளப்படும் வளப்பங்கீட்டுச் சீரின்மை குறித்து நான் பதவியேற்றதும் அதிகம் கவனம் செலுத்துவேன் என அம்பாறை மாவட்ட உதைபந்தாட்டச் சங்கத் தலைவராக பொறுப்பேற்கவுள்ள சட்டத்தரணி ஏ. எம். றகீப் ஆசியுரை வழங்கும் போது தெரிவித்தார்.

கழக உயர்பீட உறுப்பினர் ஆசிரியர் ஏ. ஆர். ஏ. புகாரியின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கெளரவ விருந்தினராகக் கலந்து கொண்ட கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம். ரீ. ஏ. நிசாம் தமதுரையில் விளையாட்டுக்களோடு நின்றுவிடாமல் திட்டமிட்ட சமூக நோக்கில் தேசிய ரீதியில் முன்னணிக் கழகம் என இதனைக் கொள்ளலாம்.

கல்வி, சமயம், சமூக சேவை, மருத்துவ உதவியைப் பல்வேறு கூட்டமைப்புகளையும் வகுத்து இக் கழகம் இயங்கி வருவது பாராட்டத்தக்கது.

மிகப்பெரும் அரச நிறுவனங்களின் நிருவாக அமைப்பை இது ஒத்துள்ளது. இதனை ஏனைய கழகங்களும் பின் தொடருமாயின் விளையாட்டுக் கழகங்களினூடாக மிகப் பெரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

விளையாட்டுக் கழகங்களிடமும்; விளையாட்டு வீரர்களிடமும் இருக்க வேண்டிய நாகரிகமான அணுகு முறையினை டொக்ஸாவின் நிர்வகிகளிடம் காண முடிகின்றது.

கல்முனைக் கல்வி வலயத்தில் நான் பணிப்பாளராக இருந்த போது மருதமுனையின் கல்வி முன்னெடுப்புக்களில் இக்கழகம் என்னுடன் கொண்ட தொடர்புகளே இன்றும் என்னை இவ் இடத்திற்கு வரத் தூண்டியுள்ளது.

கழக வீரர்களின் அறிவியல் சார் நிகழ்ச்சிகளின் கலவைகளாக நடைபெற்ற டொக்ஸாவின் “ஹலிக்கன் நைற்றும் வருடாந்த ஒன்று கூடலும்” நிலாச் சோறுடன் நிறைவு பெற்றது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.