புத் 63 இல. 12

விரோதி வருடம் பங்குனி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ர. ஆகிர் பிறை 04

SUNDAY MARCH 21, 2010

 
.

காத்திரமான இலக்கிய சிற்றேடுகள் வெளிவரவேண்டும்

காத்திரமான இலக்கிய சிற்றேடுகள் வெளிவரவேண்டும்

- முருகேசு ரவீந்திரன்

சிற்றேடு வெளியீடு என்பது மிகவும் சிரமமானபணி. இலக்கிய ஆர்வம் உள்ள பலரும் இவ்வாறான முயற்சியில் அவ்வப்போது ஈடுபட்டு வந்துள்ளனர். காத்திரமான சிற்றேடுகள் எமது நாட்டில் வெளிவந்திருக்கின்றன. வெளிவந்து கொண்டுமிருக்கின்றன. பல நல்ல இலக்கிய சிற்றேடுகள் இடைநடுவில் நின்று போயுள்ளன. இவ்வாறு சில இதழ்கள் வெளிவந்த பின் நின்றுபோன சிற்றேடுகளின் எண்ணிக்கை அதிகம் என்றே கூறலாம்.

சிற்றேடுகளை வெளிகொண்டுவருபவர்கள் தமது பொருளாதார தேவையை நிறைவேற்றுவதற்காக இவற்றை வெளியிடுவதில்லை. இலக்கியம் மீதுள்ள ஆர்வத்தினால் சிற்றேடுகளை வெளியிடுகின்றனர். மாதா மாதாமோ அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவையோ அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு தடவையோ இவை வெளிவருகின்றன. ஒவ்வொரு தடவை இதழ்கள் வெளிவரும்போதும் விற்பனை என்பது பிரச்சினைக்குரியதாக இருக்கும்.

இதழ்களை சிரமப்பட்டு விற்றாலும் அடுத்து வரும் இதழ்களை வெளிக்கொண்டுவருவது என்பது கடினமாக இங்கும் பல சந்தர்ப்பங்களில் சற்றிதழ்களை வெளியிடுவோர் உற்பத்தி செலவை ஈடுசெய்தால் போதும் என்ற நோக்கிலேயே இவற்றை வெளியிடுகின்றனர். காகிதாதிகள், அச்சிடுவதற்கான மை போன்றவற்றின் விலை அதிகரிப்பு சிற்றிதழ் வெளியீட்டாளர்களை பெரிதும் பாதிக்கின்றது. இவை மட்டுமல்லாது இன்னும் பல அம்சங்களும் தொடர்ச்சியாக சிற்றிதழ்கள் வெளிவருவதில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

இவற்றை எல்லாம் வெற்றிகரமாக சமாளித்து வவுனியாவில் இருந்து “மாருதம்” சிற்றேடு தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கிறது. “மாருதம்” சஞ்சிகையின் பத்தாவது இதழ் அண்மையில் வெளியாகியிருக் கிறது. இந்த சிற்றேடு சமூக, கல்வி, கலை, இலக்கிய விடயங்களை தாங்கி வெளிவருவதாக சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வடத்தினால் “மாருதம்” சஞ்சிகை வெளியிடப்படுகின்றது. பத்தாவது “மாருதம்” இதழின் முகப்பட்டயை மறைந்த கவிஞர் இ.முருகையனின் வர்ணப்படம் அலங்கரிக்கிறது.

கவிஞர் இ. முருகையன் என்றதும் வானொலி நேயர்கள் பலருக்கும் உடனே நினைவுக்கு வருவது அவர் இயற்றிய கங்கையாளே என்ற மெல்லிசைப்பாடல்தான். கவிஞர் இ. முருகையன் இயற்றிய கங்கையாளே எனத் தொடங்கும் அந்த மெல்லிசைப்பாடல் இன்றும் காதருகில் கேட்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றது. அத்தனை அற்புதமான மெல்லிசைப் பாடல் இங்கே “மாருதம்” பத்தாவது இதழில் கவிஞர் இ. முருகையன் பற்றிய ஓர் அஞ்சலிக் குறிப்பு காணப்படுகிறது. பிரக்ஞைபூர்வமான மொழி, விஞ்ஞானப் பார்வை, அறிவுசார்ந்த கவிநயம், பழந்தமிழ்ச் சொற்களும் கிராமிய வட்டார சொற்களும் கலந்து வரும் பேச்சோசை நடை, மரப்புபா வடிவங்களுடன் புதுமை கலக்கும் கவிதை நயம் எனப் பல பரிமாணங்களுடன் கவிதை படைத்துள்ளவர் என மாருதம் குறிப்பிட்டுள்ளது.

இந்த பத்தாவது இதழில் நேர்த்தியான ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. திரு. மொழி என்ற தலைப்பிலே கை. தவலதா எழுதிய கவிதை தமிழின் பெருமையை பேசுகின்றது. நவயுகா குகராஜாவின் “தலைவிதி” மற்றும் தியத்தலாவ எச். எப். ரிஸ்னா எழுதிய “எனை ஆளும் என் தேவதைக்கு” என்ற கவிதை இந்த கவிதை இவ்வாறு தொடங்குகிறது.

யுகங்களாய் வருத்தும்
ஒவ்வொரு நிமிடமும்
உன் அன்பினை தவிர
ஞாபகங்கள் ஏதுமில்லை!

இன்னும் சிவநெறிப்புறவலர் சி. ஏ. இராமஸ்வாமி எழுதிய “வலையில் பட்டமான்” என்ற கவிதை. முத்துமொழியானின் “நாமே எமக்கென்றும்”, வெலிகம ரிம்ஸா முஹம்மத்தின் “எவரெஸ்ட்” அ. பேனாட்டின் “உரிமை”, கயல் வண்ணன் வவுனியா எழுதிய “இல்லாள்” இவரின் பார்வையில்

இல்லம் எங்கும் இன்பம்
இல்லாள் மனது தங்கம்
இல்லை என்ற சொல்லை
இல்லா தொழிலுக்கும்
மங்கை
எனச் சொல்லப்படுகிறாள்.

பா. அபூர்வன் “தனித்துவம்” என்ற தலைப்பில் தண்ணீரின் தனித்துவத்தை கவிதை வரிகளில் தந்துள்ளார். ச. சிவதுர்க்காவின் “முத்தத்துப் பூஞ்செடியே”, சி. ஞானசுந்தரியின் “காத்திருக்கிறேன் அவதுக்காக” ஆம் காத்திருத்தல் தவிப்புடன் கூடிய நம்பிக்கை தருவது. அந்த நம்பிக்கை மனதுக்கு ஆறுதலை தந்தாலும் அந்த ஆறுதல் நிலைப்பதில்லை. அடிக்கடி ஏக்கம் அந்த ஆறுதலை குறுக்கறுக்கும். காத்திருப்பு காதலனுக்கு காதலிக்கு மட்டமல்ல. தாய்மைக்கும் அது பொருந்தும் என்பதை சி. ஞானசுத்தரி தனது கவிதையில் வெளிப்படுத்தியுள்ளார்.

காணி நிலம் வேண்டும் என பாரதி பாடினான். இங்கே தந்தா அப்படியெல்லாம் வேண்டாம்.

உறைபனியிலும்
உயிர் வாழ்ந்திடும்
வகைதெரிந்திடில்
அவ்விடமே ஓரிடம்
குடியிருக்க எமக்கு
குவலயத்தில் ஓரிடம்

என கவிதை எழுதியுள்ளார். “மாருதம்” பத்தாவது இதழில் பல கவிஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரசுரிக்கப்பட்டுள்ளது. கவிதைகள் இதழை அழகூட்டுகின்றன.

அறுசுவை உணவை அன்புள்ள மனைவி அருகிருந்து இன்னும் உண்ணுங்கள். இன்னும் உண்ணுங்கள் என்று விரும்பி ஊட்ட போதும் போதும் என்று கூறி மறுபிடி உணவை மறுத்து விலக்கி உண்டவரும் வறுமைப்பட்டு கூழ்குடிக்கக் கூட வழியின்றிக் கையேந்தி இரந்து இன்னொருவர் முன்னிலையில் நிற்கவேண்டி வரலாம்.

அதனால் செல்வம் நிலையானதல்ல என்பதை ஒரு புலவர் நாலடியாரில் கூறுகிறார். இங்கே “மாருதம்” பத்தாவது இதழில் தமிழ் மணி அகளங்கன் “புலவர்களின் தீர்க்க தரிசனம்” என்ற ஆக்கத்திலே இதனை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

பூநகர் பொன். தில்லைநாதன் எழுதிய அவர்கள் வரவை நோக்கி என்ற சிறுகதை வெளிநாட்டிலுள்ள பிள்ளைகளின் வரவுக்காக ஏங்கித்தவிக்கும் பெற்றோரின் நிலையை வெளிப்படுத்துகிறது. பனைஓலையால் இழைக்கப்பட்ட உமல்களில் புழுக்கொடியல் தோட்டுப் புழுக்கொடியல் பாணிப்பனாட்டு என்பவற்றை சேர்த்துவைக்கும் பழக்கம் வடபகுதியில் காணப்படுகிறது.

இவ்வாறு சேமித்துவைக்கும் உணவுப் பொருட்களை மாரி காலத்தில் பயன்படுத்துவர். பூநகரின் மொட்டைக்கறுப்பன் அரிசிப்பிட்டும் ஒடியல் கூழும் மிகவும் சுவையாக இருக்கும். இவைபற்றியும் இந்தச் சிறுகதையில் சுவைபடக் கூறப்பட்டுள்ளது.

வடபகுதி கடற்பரப்பில் பிடிக்கப்படும் கணவாய் மிகவும் சுவைமிகுந்தது. அவுஸ்திரேலியாவில் கூட இவ்வாறு சுவைமிகுந்த கணவாய்கறியை நான் உண்ணவில்லை என எஸ். பொன்னுத்துரை தனது ஆக்கம் ஒன்றிலே குறிப்பிட்டுள்ளார். சங்குப்பிட்டி கேரதீவு பாதையூடாக யாழ்ப்பாணம் செல்பவர்கள் அந்தப் பகுதியில் உள்ள சிறிய உணவகங்களில் சாப்பிட்டுச் செல்லவதுண்டு. அந்த உணவகங்களில் அரிசிமாப் பிட்டும் கணவாய்கறியும் மிகச் சுவையாக இருக்கும். மாருதம் இதழ் பத்தில் வெளியாகியிருக்கும் அவர்கள் வரவை நோக்கி சிறுகதை அவற்றையெல்லாம் நினைவுபடுத்துகிறது.

இன்னும் வவுனியாவில் குறுப்படங்கள் கந்தையா ஸ்ரீகணேசன் எழுதிய “கைகள் உண்டு கால்கள் உண்டு” நாடகம், ந. பார்த்திபனின்” முற்றத்து மல்லகைகள்” என பல ஆக்கங்கள் மாருதம் பத்தாவது இதழை அலங்கரிக்கின்றன.

மாருதம் சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் தமிழ் மணி அகளங்கன், கந்தையா ஸ்ரீகணேசன் ஆகியோர் இணைந்து செயற்படுகின்றனர். இவர்களது கடின உழைப்பு இதழை வாசிக்கும் போது தெரிகிறது.

“மாருதம்” நம் நாட்டில் வெளிவரும் இன்னும் பல சிற்றேடுகளையும் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அவை பற்றிய செய்திகளும் வெளியாகியுள்ளன.

இலங்கையில் அச்சகதுறை நன்கு வளர்ச்சியடைந்துள்ளது. மாருதம் போன்ற சிற்றிதழ்களிலும் கூட அதன் பிரதிபலிப்பைக் காணமுடிகிறது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.