புத் 63 இல. 12

விரோதி வருடம் பங்குனி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ர. ஆகிர் பிறை 04

SUNDAY MARCH 21, 2010

 
.

மயாளங்கஞம் மையவாடிகஞம்

மயாளங்கஞம் மையவாடிகஞம்

அல்லாஹு அக்பர்  

அல்லாஹு அக்பர்....

நீண்டு நிமிர்ந்து நித்திரை செய்து கொண்டிருந்த மெளன இரவின் நிசப்தத்தை கிழித்தவாறு வளமைக்கு மாறான உரத்த தொனியில் கேட்ட சப்தம்.... கனவுகளுடன் சிலரும் கவலைகளுடன் பலரும் “களிப்புகளுடன்” கொஞ்சமானவர்களும் செய்து கொண்டிருந்த துயிலை குழப்பி வைத்தது.

உறங்கிக் கொண்டிருந்த இல்லத்தின் ஒவ்வொரு மின் குமிழ்களும் கண்விழித்துக் கொண்டன.

“அல்லாஹு அக்பர். அல்லாஹு அக்பர்.... எல்லோரும் உங்கிட உங்கிட ஆயுதங்களை எடுத்திக்கிட்டு ஓடி வாங்க. தம்மிழன் ஊருக்க வெட்ட வந்திட்டான்” யாரோ ஒருவன் உணர்ச்சியின் உச்சத்தில் நின்று பள்ளிவாயலின் ஒலிபெருக்கியில் முணங்கிக் கொண்டிருந்தான். ஒரு பள்ளிவாயலில் மாத்திரம் கேட்ட இந்த அபாய அறிவுக்கொப்பான ஆயுத அழைப்பு அனைத்துப் பள்ளிவாசல்களிலும் கோரஷாக ஒலிக்க ஆரம்பித்தன.

நேரம் அப்போது அதிகாலை 1.10 மணி....

அப்போதுதான் மெதுவான மழைத்தூற்றல் தணிந்திருந்தது.... இக்பால் கதவுகளின் வழி மறிப்பான பூட்டுகளைத் திறந்து கொண்டு வெளியே வந்தான்.

கூடவே மனிதர்களைவிட விசுவாசத்திலும், நேர்மையிலும் உச்சத்திலிருக்கும் பூனையும் ஓடிவந்து சாறத்தின் தொங்கலில் விராண்டிக் கொண்டிருந்தது. அரோகரா... அரோகரா... உடனடியாக ஊர்மக்கள் எழும்பி ஆயுதங்களுடன் வெளியே வாங்க... காக்காமார் (முஸ்லிம்கள்) ஊரை அழிக்க வந்துட்டானுகள். ஊரைக் காப்பாத்தனும் பக்கத்துப் பிள்ளையார் கோயிலில் உலோக மணி உலகத்தின் மூலைக்கே கேட்கும் அளவிற்கு பாரிய சப்தத்துடன் “டாண்... டாண்...” என அடித்துக் கொண்டு போருக்கான அழைப்பும் காதுகளுக்குள் முகாமிட்டுக் கொண்டிருந்தன.

மூன்றாவது முறையாக பொட்டுகளும் தொப்பிகளும் வேண்டுமென்று மோதிக் கொண்டு பெறுமதியான உயிர்களுக்கு, சொத்துக்களை தீயின் வாய்க்கு உண்ணக் கொடுக்கவும் தயாராகி விட்டது இக்பாலுக்கு விளங்காதா என்ன?

பள்ளிவாயலின் அழைப்பிற்கு ஊர்மக்கள் அதிக அக்கறையை இறக்கி வைத்தனர். பொல்லுகள், தடிகள், கத்திகள், வாள்கள் இவைகள் தான் ஒலிபெருக்கி விளம்பரத்தில் வானைப் பிளந்த ஆயுதங்கள்...

ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இந்தியாவின் கூர்க்காப்படைகளையும், நேபாளின் பட்டாளங்களையும் ஞாபகித்து நிற்க ஒன்றாகி நின்றனர். “வாங்கடா போவம் தமிழண்ட கடையள பத்தவப்பம்” ஒருவரின் “புத்திசாலித்தனமான” குரல்... “இல்லடா அவனுகளும் எனவுன்ஸ் பண்றானுகள் சாமானோட நிப்பானுகள் புறகு வெட்டிப் போடுவானுகள்” இவ்வாறு பட்டிமன்றமொன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது.

காலம் காலமா அண்ணன் தம்பிகளாக இணைபிரியாது வாழ்ந்த இரு சமூகங்களும் ஏன் மோதிக் கொள்கின்றன... எத்தனை நூற்றாண்டுகள் பாக்கியத்தின் பொங்கல் புக்கையுடனும், பாத்திமாவின் புரியாணிச் சோற்றுடனும் கழிந்திருக்கும். இன்று ஏன் இப்படி மாய்த்துக் கொள்கிறார்கள்... இதன் பின்னணி என்ன...? யார் இப்படி சும்மா கிடக்கும் சமூகங்களை மோதவிட்டு அதன்கீழ் குளிர் காய்கின்றனர். இதனால் அடையும் அற்ப சொற்ப ஆதாயங்களுக்கு பலியாகும் உயிர்கள், தீக்குத் தீனியாகும் உடமைகள், உளவியலால் அழியும் பிஞ்சுகள், உறவுகளைத் தொலைக்கும் கன்னிகள்... அனாதைகள், அங்கங்களைப் பலிகொடுக்கும் வலுவிழந்தோர், முகங்கள் பார்க்க முடியாமல் வெட்கித் தலைகுனியும் அநாகரிக அசிங்கங்கள்...

சீ.... இக்பால் நினைத்து நினைத்து நொந்து போனான். “என்ன மனிதர்கள், என்ன தலைவர்கள் ஏன் இப்படி மனித உணர்வுகளுடன் விளையாடுகிறார்கள். ம்... ஹ்...” நித்திரை கலந்த மயக்கத்துடன் இதயத்தின் ஆழத்திலிருந்து வழிந்த பெருமூச்சை இறக்கி வைத்துவிட்டு நிமிர, ஊரின் எல்லையில் பாரிய புகை மூட்டம்... அமெரிக்காவின் நூற்றிப்பத்து மாடிகளில் இருந்து வழிந்ததுபோல் இருந்தது.

வீதிகளிலே அங்கும் இங்கும் சாரன்களை மடித்துக் கட்டிக் கொண்டும். சேட் கைகளை உயர்த்திக் கொண்டும் நின்ற இளைஞர் கோஷ்டி அங்கே ஓடுகின்றது. எல்லையிலே அமைந்திருந்த கலந்தர் லெவ்வை ஹாஜியார், லெவ்வைத் தம்பி மரைக்கார் சுலைமான்ட மகன் இன்னும் பலரின் ஓட்டுமொத்த சொத்துக்களையும் உள்வாங்கிக் கொண்டிருந்த கடைகள் தீயின் அனைத்து சக்திகளையும் இணைத்து பசிதீர உண்டு கொண்டிருந்தன... முதலையின் வாய்க்குள் பல்லிமாட்டியது மாதிரியான கதைதான் அது... “டேய் வாங்கடா போவம்...

அவனுகள்ற கடைகளையும் கோயிலையும் உடைப்பம். இளைஞர் படையணி அடுத்த எல்லைக்கு நகர்கிறது.

யாரோ ஒரு அரசியல்வாதியின் அழைப்பால் திரண்ட படையினரும் பொலிஸாரும் ஊரெல்லாம் குவிக்கப்பட்டிருந்தனர்... இடையிடையே படையினரின் துப்பாக்கிச் சூடுகளும் பெருநாள் காலத்துப் பட்டாசுகள் போல வானைநோக்கிச் சென்று இடையில் மறைவதைக் காண முடிகின்றது.

அல்லாஹு அக்பரையும், தேவாரத்தையும் இணைக்கின்ற எல்லைப் பகுதியிலுள்ள அமரசிங்கம் முதலாளி, தர்மகுலம் பக்தர், சோமண்ணன் கடை நீண்டதொரு கடைத் தொகுதி தீக்குத் தீனியாக்கப்பட்டு சுமார் பதினைந்து நிமிடங்களுக்குள் வருடக்கணக்காக அல்லும் பகலுமாகக் கஷ்டங்களைச் சுமந்து தேடிய சொத்துக்கள் அக்கினியுடன் சங்கமமாகின.

பள்ளிவாயல்களிலும், கோயில்களிலும் தர்மயுத்தத்திற்கான அழைப்புக்கள் விடுக்கப்பட்டு சுமார் ஒரு மணித்தியாலந்தான் காற்றுடன் கைகொடுத்திருக்கும். இரு பகுதியிலும் பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் வெறுமனே சாம்பலாகிக் கிடந்தன. எத்தனை மனிதர்களின் உழைப்புகள், தியாகங்கள், எதிர்காலங்கள், நம்பிக்கைகள், வயிற்றுப்பிழைப்புகள் அங்கே சாம்பலாகிக் கிடக்கின்றன.

“கிளி வளர்த்தவனுக்குத்தான் தெரியும் கிளியின் அருமை. பிடித்து உண்ட பூனைக்கு விளங்காது” என்பது ‘@!ளி வெறுமனே எரிபொருளை ஊற்றியவர்களுக்கும், தீக்குள் திணித்தவர்களுக்கும் எங்கே விளங்கப் போகிறது.

இரு பக்கங்களிலும் வானத்தை நோக்கிச் செல்லும் புகை மண்டலம் கிராமங்களின் விலாசங்களை தபால்காரனிடம் கொடுத்து விசாரித்தறிய வேண்டும் போல் இருள் மயமாகவிருந்தது.

“ஊ... ஊ... ஊ....” பாரிய உறுமலுடன் காற்றைக் கிழித்துக் கொண்டு வந்த அம்புலன்ஸ் வண்டி- பல இன மனிதர்களையும் சுமந்து வந்தது. நிச்சயமாக காயப்பட்ட மனிதர்களையே சுமந்து செல்கிறது என்பதில் சந்தேகமில்லை.

“கோயிலுக்குப் பின்னால உள்ள ஊட்டுக்க பூந்து வெட்டு வெட்டென வெட்டிப்புட்டுத்தான் வாறம்.. தம்முளன ஓடஓட விரட்டனும்.. அழிங்கடா அவனுகள்ற ஊருக்க பூந்து....” சுமார் ஐநூற்றுக்கும் சற்று அதிகமான இளசுக் கும்பலுக்குள்ளிருந்து ஒருவர் உணர்ச்சிகரமாக கூறிக் கொண்டிருந்தார்.

படையினரின் குண்டாந்தடித் தாக்குதல், கண்ணீர்ப்புகை வீச்சு, வானை நோக்கிய துப்பாக்கிச்சூடு.... ஏன் இவைகளையெல்லாம் பார்க்க ஊரடங்குச் சட்டத்தையே மீறி குண்டர்கள் பட்டாளம் மீண்டும் அந்தப் பகுதிக்குள் நுழைந்து...

“ஐயோ... கடவுளே.... முருகா.... சிவலிங்கா... பிள்ளையாரப்பா... காப்பாத்து... காப்பாத்து.... “ஊரெங்கும் ஒரே அவலம்... மீண்டும் கோயிலின் பின்புறமான வீடுகளுக்குள் உயிரின் அறுவடை நடக்கிறது.

கோயில்களின் உலோக மணியோசை எச்சரிக்கையாக... போட்டா போட்டியாக ஒலித்துக் கொண்டிருக்க முழு ஊருமே அகதி அந்தஸ்துடன் ஆலயங்களையும், பாடசாலைகளையும் நோக்கி படை எடுத்தன... டுமீர்... டுமீர் பாரிய சத்தங்கள் மடைதிரண்ட வெள்ளம்போல் பீறிட்டு வந்து கோயிலுக்குப் பின்னால் வீடுகளை எரித்த கூட்டத்திற்குள்ளிருந்துதான் சப்தம் காதுகளைப் பிளந்தது. கைக்குண்டு வீச்சுக்களின் சத்தம் சற்று முன்னர வீடுகளுக்குள் வாள் வெட்டுக்களுடன் மரணத்தைத் தொட்ட கந்தசாமிகள், பாக்கியங்கள், சுப்பிரமணியங்களுக்கு முன்னால் குண்டு வெடிப்பில் சுலைமான்களும், இப்றாஹிம்களும், அக்பர்களும் உடல் சிதறிக்கிடப்பது கிட்டத்தட்ட இருபது வருடங்களாகத் தொடரும் இந்தக் கொடூரத்தினால் கலிமாவையும் தேவாரத்தையும் ஓதுகின்ற இரு சமூகங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான முகங்கள் புதைக்கப்பட்டிருக்கின்றன.

இன்னும் முடிந்த பாடில்லை. கமாவாகத் தெரியும் இந்தக் காடைத்தனங்களுக்கு முற்றுப் புள்ளியே இல்லையா?... சுமார் மூன்று தினங்கள் நீளமான பிரச்சினைகள் எரிப்புகள் குண்டுச் சத்தங்கள் சடலங்கள் ஜனாசாக்கள் என நீண்டு கிடந்த ஓலங்கள் ஊரளவு ஓய்ந்தன.

துப்பாக்கிளுடனும் கம்புத் தடிகள் கம்பிகளுடனும் அலைந்தவர்கள் ஓய்வெடுப்பதற்காகவோ என்னவோ சற்று மறைந்திருந்தார்கள்.

எரிக்கப்பட்ட கடைகள் வீடுகள் சொத்துக்கள் ஆலயங்கள் இத்தியாதிகளின் எச்சங்கள் இரு தரப்பிலும் துப்பரவு செய்யப்பட்டு அப்புறப்படுத்தி மீண்டும் சகஜ நிலைமையை உண்டு பண்ணும் பணியில் பொலிஸாரும், சகஜநிலை விரும்பிகளும் முழு மூச்சாக ஈடுபட்டிருந்தனர்.

எல்லாம் முடிந்துவிட்டது. ஆனால் உயிர்களையும் உடமைகளையும் இழந்தவர்களின் மனோநிலையோ இன்னும் இழப்புகளிலிருந்து பழைய இடத்திற்கு மீண்டு வரவில்லை... உயிர்களை உடமைகளை காலமெல்லாம் ஓடி ஓடிச் சேர்த்த சொத்துக்களை நினைத்து நினைத்து நடுக்காட்டில் தனியே விடப்பட்ட மனிதனாக சிந்தித்துக் கிடந்தது கலந்தர் லெவ்வை ஹாஜியாரின் மனசு.

கலந்தர் லெவ்வை ஹாஜியாருக்கு வயது எழுபது, காலமெல்லாம் கந்த சாமியுடனும் கணபதிப் பிள்ளையுடனும் காலத்தை நகர்த்தியவர். அவர்களின் ஊருக்குள் உடுப்புகளைப் பொட்டணியாகக் கட்டிக் கொண்டு சென்று வியாபாரம் செய்து பணம் சம்பாதித்தவர்.

அந்தப் பணத்தில் வைத்த கடைதான் எரிந்து சாம்பராகிக் கிடக்கிறது.

மீண்டும் பழைய நினைவுகளை மீட்டிப்பார்க்கிறார்.

கந்தசாமியின் வீட்டில் கல்யாணத்திற்காகக் கலந்தர் லெவ்வை ஹாஜியாரின் வீட்டில்தான் புரியாணி சமையல் நடக்கிறது... புஹாரி அந்தப் பகுதியில் பெரிய சமையல்காரன். புஹாரிதான் தனது குழுவினரைக்கொண்டு சமைத்துக் கொண்டிருந்தார். புஹாரிக்கு உதவியாக கந்தசாமியின் மகன் சேகர் இளையவன் என பொட்டுகளும் தொப்பிகளும் ஒன்றோடு ஒன்று பிணைந்து நின்று புரியாணி செய்து கொண்டிருந்த போதுதான் சேகர் தேங்காய் உரித்த அலவாங்கில் விழுந்து வயிற்றுப்புறமாகப் பாரியளவில் குத்துப்பட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அதிக இரத்தம் பீறிட்டதால் உயிருக்காகப் போராட வேண்டியிருந்தது.

கலந்தர் லெவ்வை ஹாஜியாரின் மூத்த மகன் சித்தீக்கின் “ஓ” குறூப் இரத்தம்தான் சேகரைக் காப்பாற்றியது. இன்று சேகரின் உடலுக்குள் ஓடுவது சித்தீக்கின் இரத்தம்.

கலந்தர் லெவ்வை ஹாஜியார் இந்த நெஞ்சுருகும் நிகழ்வுகளை எண்ணி நொந்து வெந்து போன போதுதான் ஹாஜியாரின் மனைவி சுலைஹா “என்னங்க.. ஏங்க இப்படி யோசிச்சி யோசிச்சி மூளையைப் போட்டுக் குழப்புaங்க...” என்ற போதுதான் சுயநினைவுக்கு வந்தார்.

நகமும் சதையுமாக பிட்டும் தேங்காய்ப் பூவுமாய் வாழ்ந்த இரு கண்களாகவும் இரு கரங்களாகவும் நிமிர்ந்து நின்ற இனங்கள் இன்று கீரியும் பாம்புமாக நிரந்தரப் பகையாளிகளாகவும் சந்தேகப் பேர்வழிகளாகவும் மாறி நிற்பதன் பின்னணி யார்?

அன்பாலும் மொழியாலும் பாரம்பரியங்களாலும் இணைந்து கிடந்த இரு சமூகங்களையும் பிரித்துப் போட்டு குளிர் காய்வது யார்? இவ்வாறான மோதல்களினூடாக இவர்கள் எதிர் பார்ப்பது என்ன? அற்ப சொற்ப சலுகைகளை அறுவடை செய்துகொண்ட இவர்களின் இலக்குகள் எட்டப்பட்டு விட்டனவா?

ஆயிரக்கணக்கான கேள்விகள் நிரம்பிக் கிடக்கும் மனசுடன் கலந்தர் லெவ்வை ஹாஜியாரின் மகன் சித்தீக் வெளியே வருகிறான்.

பாரிய சத்தத்துடன் மாபெரும் பொதுக் கூட்டமொன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மக்கள் வெள்ளம் மடைதிறந்த வெள்ளமெனப் பெருக்கெடுத்திருந்தது. நிறைந்த சனக்கூட்டத்திற்கு மத்தியில் அப்பகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். “இந்த இளைஞர்களை தங்கப்பதக்கம் அணிவித்து கெளரவிக்க வேண்டும். அன்று அவர்களின் ஊருக்குள் புகுந்து &ரிpநிn:!vl8!திx இருந்திருந்தால் அவனுகளை அடக்கியிருக்க முடியாது. கொழும்பிலிருந்து நான்தான் அந்த உத்தரவை நமது ஆதரவாளர்களுக்கு இட்டேன்... இரவோடிரவாக அவர்களை அழித்துவிட வேண்டும்.

இது மட்டுமல்ல நாளையும் அப்படித்தான் செய்தாக வேண்டும்” பீரங்கியாய் அந்த அரசியல்வாதி முழங்கிக் கொண்டிருக்க பாவம் யாதுமறியாத அப்பாவி மக்கள் உணர்ச்சியின் உச்சத்தில் நின்று இனவாதத்தைப் பிடித்துக் கொண்டிருந்தனர்.

சித்தீக் இடி விழுந்தவனைப்போல் பிரமித்து நின்றான். தூய நீரூக்குள் விஷத்தைக் கலப்பதைப் போல தானுண்டு தன்பாடுண்டென்று வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகங்களுக்கிடையில் இனவாதத்தையும் துவேசத்தையும் கக்கி மோதவிட்டு அதன்முலம் வாக்கு வேட்டையாடி தங்களை உயர்த்திக் கொள்ளும் அரசியல்வாதிகளை நினைத்து மனம் வெள்ளாவிப் பானைபோல் கொதித்தது.

குறித்த பாராளுமன்ற உறுப்பினரைச் சந்தித்து இவ்வாறான விசம் கலந்த பேச்சுக்களை நிறுத்தங்கள் அப்போதுதான் இரு சமூகங்களுக்கிடையேயான மோதல்களும், முரண்பாடுகளும் முற்றுப் பெறும் என வேண்டுகோள் விடுப்பதற்காக அவரது அலுவலகம் நோக்கிச் செல்கிறான்.

கிட்டத்தட்ட அரசனின் மாளிகை போன்று காட்சியளித்த அந்த பலஸிற்குள் நுழைய முற்பட்ட போது “இன்னும் நம்முட பதவிக்காலம் முடிய மூணுவருசம் இருக்கி. அந்தக் காலத்துக்குள்ள நமமுளாள எதையுமே செய்ய இயலாது. இப்புடி அடிக்கடி நம்மூடாக்களையும் அவங்களையும் மோதவச்சாத்தான் நம்முட பவர் விளங்கும். இப்புடித்தான் ஆறுமாதத்துக்கொருக்கா ஒரு ஆளுக்குத் தட்டியுட்டா- அவரு போய் நம்முட ஆளுக்குத் தட்டுவாரு... அப்புறம் பத்தி எரியும். நாமளும் வோட்டெடுத்துக்கலாம்” அரசியல்வாதி ஆதரவாளர்களுடன் ஆத்மாவிலிருந்து வழியும் அசிட்டை இறக்கிக் கொண்டிருந்தார்.

அப்போதுதான் சித்தீக்கிற்கு விளங்கியது. நடப்பது என்ன என்பது! சித்தீக்கிற்கு தலைசுற்றியது. உலகம் பல கோணத்தில் தெரிந்தது. மனிதர்கள் சுய நலங்கள். ஆசைகள் கேவலங்கள் இத்தியாதிகளை நினைத்து தன்னைத்தானே நொந்து கொண்டான்.

காலை 10.00 மணி

சோகச் சுமையுடன் சாய்மனை நாற்காலியில் அமர்ந்திருந்த சித்தீக்கை தபால்காரனின் அழைப்பொலி எழுப்பி வைத்தது.

கடிதத்தைப் பிரித்தான்.

“அன்புள்ள சித்தீக், தங்களின் தந்தையின் கடை எரிந்தது கண்டு நெஞ்சு வெடிக்கிறது... உன் வாப்பாவும் என் அப்பாவும் நீயும் நானும்... காளிகோவில் திருவிழாவும், உன் ஊரின் புஹாரிக் கந்தூரியும் எங்கள் வீட்டுப் பொங்கலும் உன் உம்மாவின் புரியாணியும் உன் நிகாஹ் ரெஜிஸ்டருக்கு என் றவுசரைப் போட்ட நிகழ்வும் இவைகளை நீண்டு நிமிர்ந்து நினைக்கிறேன். எங்கள் உறவுகளையும் நேசங்களையும் கொள்ளி வைத்திருக்கிறார்கள்.

சித்தீக் கவலைப்பட வேண்டாம். நானும் நீயும் உன் வாப்பாவும் என் அப்பாவும்... அந்தப் பொங்கலும் புரியாணியும் இன்னும் அப்படியேதான் இருக்கின்றன. எதிர்வரும் தேர்தலில் வாக்குத் தேடுவதற்காகவும் மக்கள் மத்தியில் செல்வாக்குத் தேடவும் எங்கள் பகுதியில் ஆயுதம் ஏந்தியவர்களின் செயற்பாடுகளே இவைகள்... அனைத்தையும் மறந்து விடு... நாளை புலரும் பொழுதில் என்றும் போல எங்கள் பிள்ளையார் கோயிலின் மணி ஒலியும், அங்கே முகைதீன் பள்ளியின் பாங்கோசையும் ஒருமித்துக் கேட்க வேண்டும்...

அங்கே சாத்வீகம் சொல்லும் அரசியல்காரர்களும் இங்கே ஆயுதம் தூக்கும் அரசியல்காரர்களும் நம்மிடையே வாழும்வரை தொடர்ந்தும் நமது பூமிகளில் மயானங்களும், மண்ணறைகளும் மலிந்து கிடக்கும்.

இப்படிக்கச் சேகர்.

சேகரின் கடிதம் சித்தீக்கை புது மனிதனாக்கியது.

ஜன்னலினூடாக வெளியே பார்க்கிறான். வெள்ளைப்புறா ஒன்றை காக்காக் கூட்டங்கள் கொத்தித் தின்று கொண்டிருந்தன.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.