புத் 63 இல. 12

விரோதி வருடம் பங்குனி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ர. ஆகிர் பிறை 04

SUNDAY MARCH 21, 2010

 
.

உலகை மாற்றிய 11 பெண்கள்

உலகை மாற்றிய 11 பெண்கள்

உலகை மாற்றிய 11 பெண்கள் மார்ச் 8 மகளிர் தினத்தை முன்னிட்டு ஹப்பிங்டன் போஸ்ட் பத்திரிகை உலகளவில் முக்கியமான பெண் ஆளுமைகளில் 11 பேரை தேர்ந்தெடுத்து அறிமுகப்படுத்தியுள்ளது.

நுஜுத் அலி

யெமன் நாட்டுச் சிறுமியான நுஜுத் அலி தன் 10வது வயதில் தன்னை விட 20 வயது மூத்த மனிதரைத் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தப்பட்டார். ஆனாலும் ஒரு வழக்கறிஞரின் உதவியால் மணவிலக்குப் பெற்றார்.

இன்றைக்கு மத்திய கிழக்கு நாடுகளில் பெண்ணுரிமைக்காகப் போராடும் பெண்ணாக சர்வதேச அளவில் அறியப்பட்டிருக்கிறார். நான் நுஜுத் 10 வயதானவள் மேலும் விவாகரத்தானவள் (I Am Nujood. Age 10 and Divorced) என்ற இவரது சுயசரிதை நூல் அதிக விற்பனையில் இருக்கும் சிறந்த சுயசரிதை.

வேரிஸ் டைரி

சோமாலிய நாட்டு மாடல் வேரிஸ் டைரி 1990 இல் தன் ஆசாரச் சடங்கான, கட்டாய பாலுறுப்பு அறுவையால் பாதிக்கப்பட்டவராக உலக அளவில் அறியப்பட்டவர்.

அத்தகைய கொடிய நிகழ்வுகளுக்கு எதிராக தொடக்கத்திலிருந்து செயல்பட்டு வருகிறார்.

பல்வேறு அமைப்புகளை உருவாக்கியிருக்கிறார். அதில் ஒன்று பெண்களின் உரிமை மற்றும் கெளரவத்திற்காக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.

மற்றொன்று பெண்களின் கட்டாய பாலுறுப்பு அறுவைக் கொடுமை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயலாற்றி வருகிறார்.

இவர் புகழ்பெற்ற சுயசரி தையான ‘பாலவனப் பூ’ அதிகளவில் விற்பனை செய்யப்பட்டது.

ஷெரில் வுடுன்

நியூயோர்க் டைம்ஸின் எழுத்தாளர் நிகோலஸ் கிறிஸ்டோஃபின் மனைவியாக அறியப்பட்ட ஷெரில் வுடூன் பல்திறன் படைப்பாளி. இவரும் புலிட்சர் பரிசு வென்றவர்.

தன் கணவருடன் சேர்ந்து பாதி வானம் (Half The Sky) என்ற நாவலை எழுதியிருக்கிறார். சர்வதேச உதவிகள் சரியான முறையில் பயன்படுத்த ஒரு வழிகாட்டியாக இந்நூல் போற்றப்படுகிறது.

வளரும் நாடுகளின் குறிப்பிடத்தக்க வளர்ச்சி என்பது பெண்களின் கல்வியிலும் முன்னேற்றத்திலும் செய்யும் முதலீடுகளே ஆகும். இவை சிறந்த பலன் கொடுக்கும் என்று இந்நூல் பரிந்துரைக்கிறது.

ராச்சேல் மடோவ்

தனது மாறுபட்ட நிகழ்ச்சிகளால் புகழ்பெற்ற ராச்சேல் மடோவ் பிரதான நேரத்தின் செய்தி நிகழ்ச்சியால் அறியப்பட்டவர். முதன் முதலில் ஹோட்ஸ் உதவித் தொகை பெற்ற அமெரிக்கவாசி என்று வெளிப்படையாகத் தன்னை கூறிக்கொண்டவர்.

ராச்சேல் மடோவின் நிகழ்ச்சி, கெய்த் இல்பர்மான் உடன் கவுன்டவுன் மற்றும் ஜான் ஸ்டூவர்டுடன் தின நிகழ்ச்சி என்று மிகவும் பேசப்படுகிற நிகழ்ச்சிகளில் பிரச்சினைக்குரியவர் களை பிரச்சினைக்குரிய விடயங்களை முன்னிறுத்துவதால் சமீப காலமாக அமெரிக்க அரசியலின் இரு கட்சிக்காரர்களின் குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளானவர்.

ஈவ் ஏன்ஸ்லர்

தனது விருது பெற்ற நாடகமான The Vagina Monologue மூலம் அறியப்பட்ட ஈவ் ஏன்ஸ்லர் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்க இயங்கும் சர்வதேச இயக்கம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்.

இவர் உருவாக்கி உள்ள இலாப நோக்கமற்ற கழகமான வி-டே (V-Day) என்பது கொங்கோ நாட்டில் போர் மற்றும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மறுவாழ்வு மையமாக இயங்குகிறது.

டாக்டர் வாங்கரி மத்தாய்

பசுமை வளைய இயக்கம் என்ற பெயரில் பெண்கள் உரிமை மற்றும் சுற்றுச் சூழல் பற்றி கவனம் செலுத்துகிற அமைப்பு 1970ல் உருவாக்கியவர். 2004 இல் இந்த அமைப்பிற்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இப்பரிசைப் பெற்ற முதல் ஆபிரிக்க பெண் இவர்.

சோம – மாம்

சோமலி மாம் குழந்தையாக இருக்கும் போதே ஒரு அடிமையாக 1970ல் கம்போடியாவிற்கு விற்கப்பட்டவர். பல ஆண்டுகளாக தினமும் பலாத்காரத்திலும் பயங்கர சித்திரவதையிலும் சிக்கி துன்புற்றவர். ஒரு கட்டத்தில் அங்கிருந்து தப்பித்து வெளியேறி தன் அனுபவத்தை வெளிப்படுத்தி, தன்னைப்போல் பாதிக்கப்பட்டவர்களை விடுவிக்கப் போராடி வருகிறார்.

தற்போது இதற்காக ஒரு இயக்கத்தை ஆரம்பித்து உலகு முழுவதுமான பெண்ணடிமை மற்றும் பாலியலுக்கான மனித விற்பனையை ஒழிப்பதற்கு பாடுபட்டு வருகிறார்.

மாரி சி. வில்சன்

மாரி சி. வில்சன் பெண்கள் இன்னும் அதிக அளவில் அரசியலுக்கு வரவேண்டும். இன்னும் அதிகமாக ஜனநாயகத்தில் பொறுப்பு வகிக்க வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்து வெள்ளை மாளிகை திட்டம் (The White House Project) என்ற இயக்கத்தை உருவாக்கியர்.

ஜோஹன்னா சிகர் டாடோடிர்

ஜோஹன்னா சிகர் டாடோடிர் ஐஸ்லாந்தின் முதல் பெண் பிரதமர். வங்கிகளுக்கு எதிரான தீவிர திருத்தங்களைக் கொண்டிராத இதனால் நாட்டின் சரிவை தடுத்தவர்.

ஐரோப்பாவின் மிக பெயர் பெற்ற பெண்மணியாக ஜெர்மன் பெண் அதிபர் ஏஞ்சலா மெர்கெல்லுடன் போட்டியில் இருக்கிறார்.

கேத்தன் பிக்கலோ

இன்றைக்கு உலகையே தன்னை நோக்கி திருப்பிய கேத்தன் பிக்கலோதன The Hurt Locker படத்தின் இயக்குநர். ஒஸ்கர்விருது பெற்ற முதல் பெண் இயக்குநர்.

இயக்கம், தயாரிப்பு மற்றும் திரைப்படங்களில் வன்முறை பற்றிய தேடல், இவற்றில் தொடர்ந்து எல்லைகளை விரிவாக்கி வருபவர்.

சமந்தா பவர்

புலிட்சர் பரிசு வென்ற சமந்தா பவர் ஒரு பத்திரிகையாளர். மனித உரிமை அவமதிப்பு மற்றும் இன அழிப்புக்கு எதிராக எழுதி வருபவர். சூடான் நாட்டின் டார்பர் கொடுமைகளை உலகின் முக்கியமான நாளிதழ்களின் முன்பக்கத்தில் தொடர்ந்து கவனப்படுத்தியவர்.

உலகிற்கு வெளிப்படுத்தியவர். இப்போது அமெரிக்க பாதுகாப்பு சபையின் பல்நோக்கு விவகாரத் துறையின் இயக்குனராக இருக்கிறார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.