புத் 63 இல. 12

விரோதி வருடம் பங்குனி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ர. ஆகிர் பிறை 04

SUNDAY MARCH 21, 2010

 
.

மகளிர் விழாவாக அரங்கேறிய புரவலர் புத்தக வெளியீடு

மகளிர் விழாவாக அரங்கேறிய புரவலர் புத்தக வெளியீடு

கே. பொன்னுத்துரை

கொழும்பு கிழக்கு தினகரன் நிருபர்

நூற்றாண்டை எட்டிப்பிடிக்கும் நிலையிலிருக்கும் சர்வதேச மகளிர் தின விழாவினை ஒரு நாளைக்கு முன்பாக கொண்டாட தன் துணை மூலம் ஏற்பாடு செய்த ஜனாபா மரியம் சுலைஹா ஹாசிம் உமர் அவர்கள் நிச்சயம் மகளிர் மனதில் மணம் கவர்ந்தவரே-

மகளிர் மாண்புறும் வகையில் நான்கு இளம் பெண் படைப்பாளிகளின் படைப்புகளை வெளி கொணர்ந்து தமிழ் இலக்கிய உலகிற்கு இவர்களை அடையாளப் படுத்தியதோடு மகளிரை மாண்புறப்படுத்திய இந்த புரவலப் புத்தக பூங்கா மீண்டும் ஒரு வரலாற்றினை பதிவு செய்துள்ளது.

பெண்களின் எழுச்சிக்கு, பெண் விடுதலைக்கு, பெண் சமத்துவத்திற்கு இந்த நிகழ்வு வித்திட்டுள்ளது. மேடையில் கூட பெண் சமத்துவத்திற்கு வழி சமைத்து கொடுத்தமைக்கு பெண் என்ற வகையில் பெருமைப்படுகிறேன் என.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு புரவலர் புத்தக பூங்கா கொழும்புத் தமிழ்ச் சங்க சங்கரப் பிள்ளை மண்டபத்தில் நடத்திய நான்கு பெண் படைப்பாளிகளின் நான்கு நூல்களின் வெளியீட்டு விழாவிற்கு தலைமை வகித்து உரையாற்றிய பம்பலப்பிட்டி, இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி அதிபர் திருமதி கோதை நகுலராஜா குறிப்பிட்டார்.

ஜனாபா மரியம் சுலைஹா ஹாசிம் உமர் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் தமிழ் மொழி வாழ்த்தை திருமதி சொர்ணலாதா பிரதாபன் மிக இனிமையாக பாட தனக்கே உரித்தான கம்பீரமான குரலில் திருமதி ஞானம் ஞானசேகரன் வரவேற்புரையை நிகழ்த்த புரவலர் புத்தக பூங்கா செயலாளர் கலைஞர் கலைச்செல்வன் தொடக்கவுரையை நிகழ்த்தினார்.

மனதிற்கு இதமான மாலை பொழுதினில் நடைபெற்ற இம் மகளிர் தின நிகழ்வுகளை சிரேஷ்ட ஒலி, ஒளி அறிவிப்பாளர் நாகபூஷணி கருப்பையா வழமையான தனது கவிச் சந்தத்துடன் செவிக்கு இனிமையாக தொகுத்து வழங்கினார்.

தொடர்ந்து தலைமையுரை நிகழ்த்திய திருமதி கோதை நகுலராஜா,

ஒவ்வொரு நாளும் ஏதோ, எங்கோ ஒரு இடத்தில் பெண் ஒருவர் அழுகின்ற ஒலி எம் செவிப்பறையில் கேட்டுக் கொண்டே இருக்கிறது என்றும் அதை எல்லாம் மறந்து சிறிது மனது சிலிர்க்க வைக்கின்ற இவ்வாறான நிகழ்வு பெண்களின் மனதிற்கு ஒத்தடம் இடுகின்றது என்றார்.

சுவீடம் நாட்டிலே முதன் முதலாக 1889ம் ஆண்டில் மகளிரின் எழுச்சிக்கு அந்த மாண்புறும் பெண் போராளிகள் எடுத்த முதல் முயற்சி பெண்களின் உழைப்பு, உரிமை போன்றவற்றை மதித்து அரசு முன்வந்தது. இதன் ஆரம்பமே 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மார்ச் 08யை சர்வதேச மகளிர் தினமாக பிரகடனம் செய்து உலகெங்கும் கொண்டாடப்பட்டது.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு புரவலர் புத்தக பூங்காவினால் பெண் படைப்பாளர்களின், “விற்பனைக்கு ஓரு கற்பனை”, “விடியலில் ஓர் அஸ்தமனம்”, “கண்ணுக்குள் சுவர்கம்” மற்றும் “மலையக சிற்றிதழ்கள்” எனும் நான்கு நூல்களினதும் வெளியீடு வெள்ளவத்தை கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்றன. இதன் பிரதிகளை கொழும்பு இந்து மகளிர் கல்லூரி அதிபர் திருமதி கோதை நகுலராஜா ஞானசேகரனிடம் வழங்குவதனையும், அருகில் திருமதி ஞானம் ஞானசேகரன் மற்றும் மரியம் சுவைரா சுலைமன் ஆகியோர் நிற்பதனையும், நூலாசிரியர்களான, திருமதி, எம்.ஏ.சுமைரா செல்வி ஆரையூர் தாமரை, திருமதி காத்தான்குடி நசீரா மற்றும் செல்வி, இரா சர்மிளாதேவி ஆகியோர் மேடையில் அமர்ந்திருப்பதனையும் கலந்து கொண்ட சிலரையும் படத்தில் காணலாம்.

எமது நாட்டிலும் கடந்த பல தசாப்த காலமாக நடைபெற்ற யுத்தத்தில் பெண்களே பல்வேறு அவலங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த யுத்தத்தால் பெரும்பாலன பெண்கள் கணவனை, மகனை, மகளை, சகோதரனை இனபந்தங்களை இழந்து நிர்க்கதிக்கான நிலை எமது நாட்டில் ஏற்பட்டது. இழப்புகளால் பெரும்பாலும் பாதிப்புகளுக்கு உள்ளானவர்கள் பெண்களேயாவார்.

இந்த வருடம் ஐக்கிய நாடுகள் சபை பெண் சமத்துவம், பெண் சமநிலை, பெண் ஆளுமை போன்றவற்றை போற்றும் ஆண்டாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இவற்றை பெண்களான நாங்களும் பயன்படுத்தி உலகம் வியக்க, உலகம் சிறக்க எமது சக்தியை பயன்படுத்தி செயல்படுவோமாக என்றார்.

சிறப்புரை சட்டத்தரணி திருமதி சுகந்தி இராஜகுலேந்திரா,

ஈழத்து இலக்கிய வரலாற்றில் புத்தாயிரம் ஆண்டின் முதல் தசாப்த காலத்திலே புரவல் புத்தக பூங்காவினர் நூறு வீதமான பெண்களைக் கொண்டே சர்வதேச மகளிர் தின நிகழ்வுகளையும் புதிய பெண் படைப்பாளிகளின் படைப்புகளையும் வெளியீட்டு நிகழ்வையும் நிகழ்த்துவது பாராட்ட கூடியவையே.

தாய் வழி சமூகமாக இருந்த சமுக கட்டமைப்பை தகர்த்து தந்தை வழி சமூகமாக மாற்றி அமைத்து ஆண் ஆதிக்க சமுக அமைப்பாக மாற்றியமைத்திருந்த வேளையில், பெண் உரிமை பெண் சமத்துவம் பற்றி பேசி பெண்களின் அடிமை விலங்கை உடைத்து பொடியாக்கிட வெளிகிட்டனர் பெண் போராளிகள்...

இவர்களின் பல்வேறு கட்ட போராட்டங்களின் விளைவாக 1910ம் ஆண்டு சர்வதேச மகளிர் தினமாக மார்ச் 08 யை பிரகடனப்படுத்தினர்.

இன்றைய காலத்தில் பெண்கள் பல்வேறு துறைகளில் முன்னேறி பொறுப்பான முக்கிய பதவிகளில் இருந்து செயல்பட்டு வருகின்றனர் என்றார்.

ஏற்புரை நிகழ்த்திய இரா. சர்மிளா தேவி (மலையகத் தமிழ்ச் சஞ்சிகைள்)

ஈழத்து தமிழ் இலக்கிய உலகில் சிற்றிதழ்களின் பணி மிக முக்கிய இடத்தை வகிக்கிறது. இன்றைய பல பிரபல எழுத்தாளர்களுக்கு களம் அமைத்து கொடுத்தது இச்சிற்றிதழ்களே ஆகவே எனது கலைமானி பட்டப்படிப்புக்கு ஆய்வாக மலையக, சிற்றிதழ்களை தேர்ந்தெடுத்தேன். மலையக மக்களின் வாழ்வினை மிக தெளிவாக படம் பிடித்து காட்டிய புதுமைபித்தனின் துன்பகேனி அதன் பிறகு மூன்றாம் தலைமுறையினரே அம் மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து படைப்புகளை படைத்தனர்.

அவ்வானவர்களின் படைப்புகளுக்கு களமாக பெரும்பாலும் சிற்றிதழ்களே பயன்பட்டன. கவிதை சிறுகதை நாவல் என்று படைப்புகளை வெளியிட்டு வந்த புரவலர் புத்தக பூங்கா” இவ்வாறான ஆய்வு நூலை வெளியிட்டு மலையக இலக்கிய வளர்ச்சியை புடம் போட்டு காட்டுவதற்கு துணை புரிந்துள்ளனர். அத்துடன் இப்பூங்காவில் முதன் முதலாக எனது ஆய்வை நூலாக வெளி வந்ததும் குறிப்பிடத்தக்கது என்றார். கண்ணுக்குள் சுவர்க்கம்- என்ற சிறுகதையை தந்த காத்தான்குடி நசிலா- எனது கனவாக இருந்த கண்ணுக்குள் சுவர்க்கம் நூலாக பார்க்கின்ற போது மனதே சுவர்க்கத்தை அடைந்த போது பெறுகிறேன் என்றார்.

விடியலில் ஓர் அஸ்தமனம் என்ற நாவலை தந்த எம்.ஏ. சுமைரா,

எனது மனவோட்டத்தின் விளைவாக பதிவாகி அதனை நாவலாக படைத்த போது எனக்கு மன உளைச்சல் தான் மிகுதியானது இந்நாவலின் கதாநாயகியின் செயல்பாடு, குடும்ப ஒற்றுமைக்காக அவள் படும் பாடு இறுதியில் அவளின் முடிவு ஆனால் இன்று நாவலாக புத்தக உருவில் காணும் போது அவற்றை எல்லாம் மறந்து மனம் மகிழ்கிறேன். இவற்றை நேர்த்தியாக வடிவமைத்த புரவலர் புத்தக பூங்கா நிறுவனர் புரவலர் ஹாசிம் உமர் அவர்களுக்கும் அவரோடு சேர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் பூங்காவின் செயற்பாட்டளார்க்கும் எனது பாராட்டுகள்.

இறுதியாக ஏற்புரை நிகழ்த்திய, ‘விற்பனைக்கு ஒரு கற்பனை என்ற கவிதை நூலை தந்த ஆரையூர் தாமரை, என்னால் கற்பனை யாக படைத்த கவிதைகளை விற்பனைக்கு தயாராக புத்தகவடிவில் எமக்களித்த புரவலர் புத்தக பூங்காவின் நிறுவனர் செயற்பாட்டளார் களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன் சர்வதேச மகளிர் தினத்தில் சர்வதேச மட்டத்தில் என்னை யும் படைப்பாளியாக இனம் காட்டிய அனைத்து நல் இதய ங்களுக்கும் நன்றிகள் என்றார்.

விழா முழுமையாக பெண்களே நிகழ்த்தியதும் வழமையாக மேடையில் புன்நகையுடன் நடுநாயகமாக வீற்றிருக்கும் புரவலர் ஹாசிம் உமர் அவர்கள் மேடையேறாமல் முன்வரிசையில் அமர்ந்திருந்து விழாவை நகர்த்திக் கொண்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது. திட்டமிட்டபடி மாலை 6 மணிக்கு விழா இனிதே முடிவு பெற்றது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.