புத் 63 இல. 12

விரோதி வருடம் பங்குனி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ர. ஆகிர் பிறை 04

SUNDAY MARCH 21, 2010

 
.
பேனையும் நானும்

பேனையும் நானும்

என் பேனைக்கு
மூடி இருப்பது
என் எழுத்துக்கு
வேலியிடவல்ல
அதன்
எழுதும் முனையை
பழுது படாமல்
பாதுகாத்துக் கொள்ள!

சனங்களின்
விமர்சனங்களுக்காய்
என் வார்த்தைகளுக்கு
விலங்கிட்டு
எழுத்துக்களை வரையறுக்க
என் பேனைக்குத்
தெரியாது!

கண்ணில் காணும்
கொடுமைகளை
பசுமை எனப்பாடும்
பாவங்களை
என் பேனா செய்யாது!

உள்ளத்தைச் சொல்லி
உள்ளத்தை வெல்வதில்
என் பேனா
முடவனுக்கு உதவும்
காலாய் முன் நிற்கும்

என் பேனைக்கு
தனி மொழி
இல்லையென்றாலும்
அதற்கு
என் கருத்தை
எடுத்துச் செல்லும்
வழி தெரியும்

பாவம்...!
பல இரவுகள்
என்னுடனே விழித்திருந்து
என் புன்னகையையும்
கண்ணீரையும்
புதுக் கவிதையாய்
காகிதத்தில்
பதித்துக் கொண்டிருக்கும்!


உங்கள்
எழுத்துத் துளிகள்
உளிகள் - அவை
இதயக் கற்களை
செதுக்கட்டும்
சிற்பமாய், அம்மியாய்
இந்த
மானுடம் சிறப்புற!


மறந்து போன மனிதம்


அலுப்போ வெறுப்போ
புரியவில்லை இவர்களுக்குள்
இன்னும் நான் வாழ்வதை
நினைக்கையில்

நெஞ்சு நிலத்தில்
நஞ்சை பயிர் செய்து
முட்களை வீசுகின்றார்கள்
முதுகில்
அட... என்ன மானிடங்கள்
எலும்புகளில் ஊன்
கொழுத்திருக்கிறது
முகம் அழகைப் பொழிகிறது
உள்ளம் மட்டும் மனிதம் இன்றி
ஒல்லியாய்....

புயலும் சுனாமியும்
பூமியில் எதற்கு...
மனங்கள் வீசுவது
நறுமணங்களாய்ப்
புறப்பட்டால்

பட்டு நூல் ஆடை அணிந்து
சொகுசு இயந்திரத்தில்
உட்கார்ந்து
பாதையில் சென்றால் போதுமா...
விழியிலும் மொழியிலும்
விஷத்தைப் பொழிந்து
கொண்டு

இருப்புக் கொள்ளவில்லை
இவர்களைப் பார்க்கையில்
வெந்துபோன மனதின்
ஆறுதலுக்காக
இந்த வானம்
முட்டும் வரை செல்கிறேன்

பாலை வனம் என்றாலும்
பரவாயில்லை
மறந்து போன
நாகரிகத்தை
தெரிந்து கொண்டு
வாழ்க்கைப் பாதையில்
சிலநாள் தூரம்
சென்றால் போதும்

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.