புத் 63 இல. 12

விரோதி வருடம் பங்குனி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ர. ஆகிர் பிறை 04

SUNDAY MARCH 21, 2010

 
.

மறைமலையடிகள் எழுதி மறைந்துவிட்ட இரு நூல்கள்

மறைமலையடிகள் எழுதி மறைந்துவிட்ட இரு நூல்கள்

தமிழ் வரலாற்றில் நூல்கள் மறைந்து போவது என்பது ஒரு பெரிய விசயமல்ல. முற்கால நூல்களான ‘வளையாபதி’, ‘தகடூர் யாத்திரை’ போன்று உ. வே. சாமிநாதையர், ஆறுமுக நாவலர் கண்களில் பட்டும் மறைந்து விட்ட நூல்களும் உண்டு.

‘விரிவகராதி’, ‘பரத்தை’ போன்று 19, 20 ஆம் நூற்றாண்டில் தோன்றினாலும் தமிழகத்தைப் பொறுத்த வரை மறைந்து போன நூல்களாகி, லண்டன் பிரிட்டிஷ் மியூசியத்தில் அகதிகளாக வாழும் நூல்களும் உண்டு.

இவை எதிலும் சேராத இன்னொரு வகை நூல்கள்தான் நாம் இப்போது பார்க்கப் போவது. பாரதக் கதையில் குந்திதேவி கர்ணனைக் கைவிட்டது போன்று, எழுதிய ஆசிரியர் களாலேயே பிற்காலத்தில் கைவிடப்பட்ட ‘அநாதை’ நூல்கள் இவை.

காலத்தின் கோலத்தால் கருத்து மாறியவர்கள் தங்கள் பழைய கருத்தினின்று மாறிய காலத்தில் இவை தங்களுக்கு ஆகாது என்று ஒதுக்கி விட்டனர்.திரு. வி. கல்யாண சுந்தரனாரின் ‘கதிரைவேற்பிள்ளை சரித்திரம்’, மறைமலை அடிகளாரின் ‘முனி மொழிப் பிரகாசிகை’, (வேதாந்த மத விசாரம்’ ஆகிய நூல்கள் பிற்காலத்தில் இதன் ஆசிரியர்களாலேயே ஓரங்கட்டப் பட்டதற்கு அந்நூல்கள் செய்த பாவந்தான் என்ன?

முதலில் திரு. வி. க. கூறுவதைப் பார்ப்போம். ‘யான் முதன் முதல் 1906 இல் எழுதிய நூல் ‘கதிரைவேற்பிள்ளை சரித் திரம்’. அஃது எழுதப்பட்ட போது யான் பெரிதும் சோமசுந்தரநாயகர் நூல்களையும் சபாபதி நாவலர் நூல்களையும் பயின்று வந்தேன்.

முன்னவரின் வடமொழிப் பெய்வும் பின்னவரின் எதுகை மோனை இசையும் என் உள்ளத்தில் நின்று பரிணமித்தன. அப்பரிணாமத்தின் நடிப்பு கதிரைவேற் பிள்ளையின் சரித்திரத்தின் நடையாக அமைந்தது.

... இப்பொழுது எனக்கு அமைந்துள்ள நடையில் விரிந்த முறையில் வேறு ஒரு சரிதம் எழுதுமாறு சிலர் தூண்டுகின்றனர். மற்றும் சிலர் பழையதையே செப்பஞ் செய்து வெளியிடுமாறு சொல்கின்றனர்.

யான் இரண்டிலுந் தலைப்படாமல் காலங் கழித்து வருகிறேன்’ (திரு. வி. க. வாழ்க்கைக் குறிப்பு, வசந்தா பதிப்பகம். பக்கம் - 109).

தன்னுடைய வாழ்நாளிலேயே தன்னால் எழுதப்பட்ட மற்ற பல நூல்களைப் பலமுறை மறு அச்சு கண்ட திரு. வி. க. இந்த ஒரு நூலை மட்டும் ஓரங்கட்ட அச்சுப் பிழைகள் மட்டுமா காரணம்?

அருட்பா x மருட்பா என்று பேசப்பட்ட தனிநபர் அவதூறு வழக்கில் இது பற்றிய விபரம் துணைத் தலைப்பில் பின் குறிப்பாகத் தரப்பட்டுள்ளது.

வாதியான அதன் ஆசிரியர் கதிரைவேற்பிள்ளை பக்கம் நின்ற திரு. வி. க., கதிரைவேற் பிள்ளை மறைவிற்குப் பின்னர் பிரதிவாதி களான மறை மலையடிகள் போன்றவர்க ளுடன் இணைந்து போகும் நிலை ஏற்படு கின்றது.

பகைவர்களாகக் கருதப்பட்டவர்கள், நண்பர்களாகிப் போன சூழலில் எரிச்சலூட்டும் பழைமையை நினைவூட்டும் அந்த நூல் தேவைதானா? தேவையில்லை என்று கை கழுவியவர் திரு. வி. க. ஆனால் மறை மலையடிகள் தன் முதல் நூல்களைக் கைவிட்ட கதை வேறாக உள்ளது.

இந்தக் கதையைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் (1890), இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் நிகழ்ந்த ‘அத்வைதம்’ என்றால் என்ன? என்பது பற்றியும் தாங்கள் சொல்வதும் கொள்வதும் தான் உண்மையான அத்வைதம் என்றும் நீண்ட கால விவாதம் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும்.

(இவ்விவாதம் புலமை நிலைப்பட்டதாக மேல் பார்வையில் காட்சிய ளித்தாலும் உண்மையில் 20 ஆம் நூற்றா ண்டில் கல்வியின் ஊடாக நவீன சமூக அதிகாரத்தில் பங்கு பெற்ற வேளாளர்கள் உள்ளிட்ட உயர் சாதியினர் பார்ப்பனர்களிட மிருந்து சமய அதிகாரத்தில் பங்கு பெற நடந்த போராட்டத்தின் ஒரு பகுதிதான்) இந்த விவாதம் சங்கரமடத்தைச் சார்ந்தவர் களாகிய பார்ப்பனர்களுக்கும் மறை மலையடி களின் சைவ சித்தாந்த ஆசிரியர் வைதிக சைவ சித்தாந்த சண்ட மாருதம் சோமசுந்தர நாயகர் தலைமையிலான தமிழ் உயர் சாதியினருக்கும் இடையே நடைபெற்றது.

நாகப் பட்டினத்திலிருந்து தன்னைச் சென்னைக்கு அழைத்து வந்த சைவ சித்தாந்த நுட்பங்களைப் பயிற்றுவித்து, சென்னை கிருத்துவக் கல்லூரியில் தமிழாசிரியர் பணியையும் வாங்கித் தந்த தம் ஆசிரியர் சோமசுந்தர நாயகர் சார்பில் நின்று, மாயாவாதிகளான காஞ்சி மடத்துப் பார்ப்பனர்களுக்கு எதிராகச் சூத்திர வேதாந்தத்தை நிலைநாட்டும் முகமாகப் பல கட்டுரைகளை எழுதினார்.

நாகை - வேதாசலம் பிள்ளை. —- வேதாசலம், அடுத்து வந்த காலத்தில் மறைமலையடிகள்என்று தன்னைத் தானே அழைத்துக் கொண்டார்.

பின்னர் மற்றவர்களும் அதனைப் பின்பற்றினர்) இத்தகைய பின்னணியில் ‘வைதிக சைவ சித்தாந்தத்தை’ வலியுறுத்த எழுதிய நூல்கள்தான் ‘முனிமொழிப் பிரகாசிகையும்’ வேதாந்த மத விசாரமும்.

வைதிக சைவ சித்தாந்தம் தமிழ் சைவ சிந்தாந்தமாக அடிகளால் உருமாற்றம் பெற்ற பின்னர், அவருடைய தமிழ் நடையும் தனித்தமிழ்க் கோலம் பூண்டது.

இந்த மாற்றத்திற்கு எதிரானதாகவும் பழைமையை நினைவூட்டுவதாகவும் அமைந்த இந்த நூல்கள் கைவிடப்பட்டு, ஓரங்கட்டப்பட்டது. அவர்கள் தரப்பில் நின்று பார்க்கையில் நியாயமானதுதானே?

தனி நபர்களாகக் காட்சியளித்தவர்கள் வரலாற்றின் ஊடாக இன்று உடன்பாடாகவோ, எதிர்மறையாகவோ தமிழர் வாழ்வின் பிரிக்க முடியாத அங்கங்களாகி விட்டனர்.

இவர்களைப் பற்றிய இன்றைய காலத்தவர்களின் பார்வை என்பது, தவிர்க்க முடியாமல் சென்ற காலத் தமிழக வரலாற்றுப் பார்வையாகவும் உள்ளது. அந்த வகையில் இந்த நூல்களைக் கொஞ்சம் பார்க்கலாம்.

‘முனிமொழிப் பிரகாசிகை’ என்ற கட்டுரையில், ‘தேவர் குறளும், திருநான்மறை முடியும், மூவர் தமிழும், முனிமொழியும்... ஒரு வாசகர் என்று உணர்’ என்ற ஒளவையார் பாடலுக்கு ஈழநாட்டைச் சேர்ந்த கோப்பாய் சபாபதி நாவலர் பொருள் கூறுகையில், ‘முனிமொழி’ என்பதற்கு மாணிக்கவாசகர் கூற்று என்று பொருள் கொள்கின்றார்.

மறைமலையடிகள் இந்தப் பொருள் சரியல்ல என்று கூறி மறுத்து, முனிமொழி என்பதற்கு ‘வியாச சூத்திரம்’ என்று பொருள் கொள்ள வேண்டும் என்று கூறி அதற்கான தன்னுடைய விவாதங்களை எழுதிச் செல்கின்றார்.

அப்போது, ‘....என்று இத்துணையும் கூறியவற்றால் முனி மொழியும் என்பதற்கு வேதாந்த சூத்திரம் எனப் பொருளுரைத்தல் ஒளவையார் குறிப்பொடு உடன்படுத்திக் கொள்ளப்படு வதாம் என்பதும் ‘முனி’ என்னும் சொல்லுக்கு ஈண்டு வேதவியாச முனிவர் என்று கொள்வதே அன்றி பிறவாறு கூறுதல் வழுப்படும் என்பதும்...’ என்று கூறி முடிக்கின்றார்.

பின் வந்த காலங்களில் அடிகள் தன் கருத்துகளைப் பெரிய அளவில் இதற்கு மாறாகக் கொண்டு விடுவதால் இந்தப் பிரசுரம் பின்னர் கண்டு கொள்ளப்படாமல் பொய்விடுகின்றது.

அடுத்த நூலான ‘வேதாந்த மத விசாரம்’ சுமார் 150 பக்கங்கள் கொண்டது. பிற்காலத்தில் சமஸ்கிருத &தி!ழி பற்றியும் அந்த மொழி நூல்கள் பற்றியும் மறைமலையடிகள் கொண்ட கருத்துக்கள் தமிழ் உலகம் நன்கறிந்தது.

ஆனால் இந் நூலில் (இரண்டாவது பக்கம்) அடிகள் பேசுவதைப் பாருங்கள், ‘வேதாந்தம் யாருடைய சொத்து?’அது யாருக்குச் சொந்தம்? என்பதை அறியாமற் போகார்.

(சொந்தக்காரராகிய யாம் சைவர்கள் இது அடிகளே எழுதுவது) எமது மதம் வேதாந்தம்’ இன்றைய காலத்தில் வாழும் நாம் இந்த நூல்களைப் பார்க்காதிருந்தால் அடிகள் மேல் அழுக்காறு கொண்டவர் களின் பொய் மொழிகள் என்றுதான் தள்ளி இருப்போம்.

இதே நூலில் உள்ள இன்னொரு இடம் பாருங்கள் (பக்கம் 46). ‘சைவர்கள் மாயாவாதிகளாவதற்கு அவர்கள் பிரமமாகக் கொண்ட பரம்பொருள், நண்பர் மதக் கொள்கை போல் மாயை ஸ்தானத்திற் சென்று முடிந்த காலமன்றோ நியாயமுண்டாம்? ஜடப் பிரபஞ்சத்திற்கு ஜடமாகிய மாயை உபாதான காரணம் என்று அம்மாயைக்கு வேறான சைதன்யமாயுள்ள பரம்பொருளால் காரண ரூபமா லோபா தனத்திலிருந்து ஜட உலகங் காரியப்படும் என்றும் சித்தாந்த சாஸ்திரங்கள் அறுதியிட்டன.

பிரத்தியட்ச முதலிய பிராமணங்களுக்கிசைந்து, விபரீத முரண்பாடுகளுக்கு இடந்தராமல் ஏதுவையும் பயனையும் இசைவுறக்காட்டி நிர்விவாதமாய் நிகரற்று ஜொலிக்கும் இவ்வரிய கொள்கையை உடைய சைவர் களைப் பார்த்து - நீங்கள்தான் மாயாவதி கள் என்று திருப்பிச் சொன்னால் யார்தான் சிரிக்க மாட்டார்கள்? நாயகரவர்கள் (இவர் ஆசிரியர் சோமசுந்தர நாயகரைக் குறிப்பிடுகின்றார்) இப்பகுதிகளை எல்லாம் முன்னரே நன்கு பகிஷ்கரித்திருப்பதால் இவ்வளவில் நிறுத்தினோம்.

தனித்தமிழ் ஆசானாகப் பிற்காலத்தில் புகழப்பட்ட அடிகளின் ஆரம்பகால உரை நடையில் எழுதப்பட்ட இந்த நூலும் பின்னர் வந்த காலத்தில் கண்டு கொள்ளப் படாதது ஒன்றும் ஆச்சரியப்படத்தக்க விசயமல்ல.

மறைமலையடிகள் பற்றி டாக்டர் பட்ட ஆய்வு மேற்கொண்ட ரவீந்திரன், ஜெயப்பிரகாசம் போன்றவர்களும் அவருடைய வரலாற்றை எழுதிய அவர் மகன் மறை திருநாவுக்கரசு போன்றவர்களும் இந்நூல்களைப் பற்றிப் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதே நேரத்தில், அதே காலகட்டத்தில் பாரதி எழுதிய கட்டுரைகளைக் குறிப்பிட்டு அதில் வடமொழி கலந்துள்ளது, அவர் வேதாந்தத்தைத் தூக்கிப் பிடிக்கிறார். அவர் பார்ப்பனர் தானே என்று குற்றம் சொல்ல ஒரு கூட்டம் கிளம்பி இருக்கிறது.

அக்கூட்டத்தார் மறைமலையடிகள் போன்றவர்கள் 1916க்குப் பின்னர் தங்கள் முன்னைய உரை நடையை மாற்றிக் கொண்டதையும் முந்தைய நூல்களின் நடையைப் பின் வந்த பதிப்புகளில் மாற்றி அமைத்துக் கொண்டதையும் அத்தகைய மாறுதல்கள் செய்தாலும் கருத்தளவில் மாற்ற முடியாத நூல்களை அநாதைகளாக விட்டுவிட்டதையும் வசதியாக மறந்து விடுகின்றனர்.

அத்தகைய வாய்ப்பு பாரதிக்குக் கிடைக்கவே இல்லை. பாரதிதான் 1921இல் மறைந்து விடுகிறானே.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.