வரு. 68 இல. 47

துர்முகி வருடம் கார்த்திகை மாதம் 05ம் நாள் ​​ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1438 ஸபர் பிறை 19

SUNDAY NOVEMBER 20, 2016

 

 

சரிகிறது அவுஸ்திரேலியாவின் ஆதிக்கம்

சரிகிறது அவுஸ்திரேலியாவின் ஆதிக்கம்

தற்போது டெஸ்ட் விளையாடும் அனைத்து நாடுகளும் ஏதாவதொரு தொடரில் விளையாடுகின்றது. தென்னாபிரிக்க அணி அவுஸ்திரேலியாவிலும். இங்கிலாந்து அணி இந்தியாவிலும், பாகிஸ்தான் அணி நியூசிலாந்திலும் டெஸ்ட் கிரிக்ெகட் தொடர்களில் பங்குகொண்டு விளையாடி வருகின்றன. மேலும் இலங்கை. மேற்கிந்தியத் தீவுகள், சிம்பாப்வே அணிகளும் மும்முனைத் தொடரில் சிம்பாப்வேயில் மோதுகின்றன. தற்போது சர்வதேச போட்டிகளில் விளையாடாத பங்களாதேஷ் அணியும் அந்நாட்டில் வருடந்தோறும் நடைபெறும் டுவெண்டி/20 பிரீமியர் லீக் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஓய்வுபெற்ற ஜாம்பவான்களும், தங்கள் அணிகளுக்குத் தெரிவு செய்யப்படாத சிறந்த வீரர்களும் இத் தொடரில் விளையாடி வருகின்றனர். மொத்தத்தில் இப்பருவகாலத்தில் கிரிக்கெட் திருவிழாவே நடைபெற்று வருகின்றது.

அண்மைக்காலமாக நடைபெறும் கிரி்க்கெட் தொடர்களை அவதானிக்கும் போது சில எதிர்பாராத முடிவுகளையே தரும் போட்டிகளாக அமைந்துள்ளன.

அண்மையில் முடிவுற்ற இங்கிலாந்து- பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான தொடரிலும் யாரும் எதிர்பாராத வகையில் பங்களாதேஷ் அணி பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமநிலையில் முடித்துக் கொண்டது. ஆனால் சுழற்பந்து வீ்சசுக்கு சாதகமான பங்களாதேஷ் ஆடு களங்களில் முதலாவது டெஸ்ட்டில் கூட இங்கிலாந்து அணி தோல்வியுறும் நிலையில் இருந்து மயிரிழையில் தப்பியது.

பங்களாதேஷ் அணியுடனான பின்னடைவின் பின் பல விமர்சனங்களுக்கு மத்தியில் கடினமான இந்தியத் தொடருக்கு முகம் கொடுத்த இங்கிலாந்து அணி அங்கு இந்திய அணியிடம் பலமான அடி வாங்கும் என்றே விமர்சகர்கள் கருதினர். ஏனெனில் அண்மைக் காலங்களில் இந்திய மண்ணில் நடைபெற்ற தொடர்களில் பல அணிகள் படுதோல்வியடைந்ததே இதற்குக் காரணமாகும். ஆனால் ராஜ்கொட்டில் நடைபெற்ற முதலாலவது போட்டியிலேயே இந்திய சுழற்பந்து ஜாம்பவான்களுக்கு சிறப்பாக முகம் கொடுத்து வெற்றியின் விளிம்பிற்கே சென்றது இங்கிலாந்து அணி. ஆனால் தலைவர் கோஹ்லியின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி தோல்வியில் இருந்து மீண்டது.

அதேவேளை தொடர் தோல்விகளால் சலிப்புற்றிருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணியும் அண்மையில் பாகிஸ்தான் அணியுடன் சார்ஜாவில் நடைபெற்ற இறுதி டெஸ்ட் போட்டியில் திடீரென மீண்டெழுந்து வெற்றிபெற்று கிரி்க்கெட் உலகை ஆச்சரியப்பட வைத்தது.

அதே வேளை கிரி்க்கெட் உலகின் ஜாம்பவான்களான அவுஸ்திரேலிய அணி அண்மைக் காலமாக திடீரென பின்னடைவைச் சந்தித்து வருகின்றது. இவ்வருட நடுப்பகுதியில் இலங்கை அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வரலாறு காணாத தோல்வியைச் சந்தித்து விமர்சனத்துக்குள்ளானது. இலங்கை மண்ணில் முதன் முறையாக அவுஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரில் முழுமையாக தோல்வியுற்றது இங்கு குறிப்பிடத்தது.

இத் தோல்வியால் அவ்வணி மிகுந்த மன உளைச்சலுக்குள்ளானது. என்றாலும் வேக மைதானங்களில் துடுப்பெடுத்தாடி பழக்கப்பட்ட அவ்வணி இலங்கையில் வேகம் குறைந்த ஆடுகளங்களில் சுழல் பந்து வீச்சாளர்களுக்கு முகம் கொடுக்க சிரமப்பட்டதால் படு தோல்விக்கு முகம் கொடுக்க நேரிட்டதாக அவர்கள் இலங்கையணியிடம் அடைந்த தோல்வி குறித்துக் கூறியிருந்தனர்.

ஆனால் தற்போது அவுஸ்திரேலியாவில் சொந்த மண்ணில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தென்னாபிரிக்காவுடனான 3 போட்டிகள் கொண்ட தொடரில் இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கையிலேயே முதலிரு போட்டிகளில் தோல்வி கண்டு தொடரை இழந்துள்ளது. ஹோபாட்டில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் அவ்வணி இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது. சிறந்த துடுப்பாட்ட வரிசையைக் கொண்ட அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 85 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தமை அந்நாட்டு கிரி்க்கெட் ரசிகர்களின் கண்டத்துக்குள்ளாகியுள்ளன.

மேலும் இத் தோல்வி அவுஸ்திரேலிய அணி பெறும் தொடர்சசியான 5வது டெஸ்ட் தோல்வியாகும். இதற்கு முன் 1984ம் ஆண்டு தொடர்ச்சியாக 6 போட்டிகளில் தோல்வியுற்ற பின் அவ்வணி சந்திக்கும் மோசமான தோல்வி இதுவாகும். அத்துடன் அவுஸ்திரேலியா அணி தென்னாபிரிக்காவிடம் தோல்வியுறும் தொடர்ச்சியான மூன்றாவது தொடர் தோல்வி இதுவாகும்.

இதற்கு முன் 2012ம் 2014ம் ஆண்டுகளில் அவ்வணி தென்னாபிரிக்க அணியிடம் தோல்வியுற்றிருந்தது. தலைவர் ஸ்டீவன் ஸ்மித் தலைமைப் பதவியை ஏற்ற பின இலங்கைத் தொடர் வரை தோல்வியே கண்டிராத தலைவராக வலம் வந்தார். ஆனால் தொடர்சசியாக ஐந்து போட்டிகளில் தோல்வியுற்றதால் பத்திரிகைப் பேட்டிகளுக்கு முகம் கொடுக்கக் கூட அவர் அச்சப்படுகிறார். அதேவேளை அவ்வணியின தேர்வுக் குழுத் தலைவர் ரொட்னி மார்ஷ் தனது பதவியை இராஜினாமாச் செய்துள்ளார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.