வரு. 68 இல. 47

துர்முகி வருடம் கார்த்திகை மாதம் 05ம் நாள் ​​ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1438 ஸபர் பிறை 19

SUNDAY NOVEMBER 20, 2016

 

 

மாயா!

சிங்கள சினிமாவை மற்றொரு பரிமாணத்துக்கு இட்டுச் சென்றிருக்கும்

மாயா!

இந்நாட்டில் சிங்களவரும் தமிழரும் நெருக்கமான பிணைப்புடன் ஒற்றுமையாக வாழ்ந்தாலும் தமிழ் சமூகம் சில விடயங்களில் விடாப்பிடியாக இருந்து வருவதை அவதானிக்க முடிகிறது. பௌத்தர்கள் இந்து தெய்வங்களை தாராளமாக வழிபடுவார்கள். தமிழர்கள் பௌத்த விகாரைகளுக்கு வழிபடச் செல்வதில்லை. தமிழ்ப்படங்களை சிங்களவர்கள் பார்க்கவே செய்கிறார்கள். சிங்கள சப்டைட்டிலுடன் தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்படும் தமிழ் நாடகங்களையும் திரைப்படங்களையும் சிங்களக் குடும்பங்கள் ரசித்துப் பார்க்கின்றன. ஆனால் தமிழர்கள் சிங்களத் திரைப்படங்களை தியேட்டருக்குச் சென்று பார்ப்பது வெகுவெகு குறைவு.

இதற்கு ஒரு காரணம் வைத்திருக்கிறார்கள். தொழில்நுட்ப ரீதியாக சிறந்து விளங்கும் தமிழ்ப் படங்களைப் பார்த்து ரசித்த கண்களுக்கு சிங்கள படங்களைப் பார்த்து ரசிக்க முடியவில்லை என்ற காரணமே பொதுப்படையாகக் கூறப்படுகிறது.

சிங்களத் தயாரிப்பாளர்களும் இக்குறைபாட்டை அறிந்தே வைத்துள்ளனர். சிங்களப் படம் இந்த நாட்டில் மட்டுமே காண்பிக்கப்பட முடியும். இருப்பதோ குறைவான தியேட்டர்கள். தமிழர்கள் செறிவாக வசிக்கும் பகுதிகளிலும் சிங்களப் படத்தைத் திரையிட முடியாது. இப்படி ஒரு சின்ன சந்தையை வைத்துக்கொண்டு பத்து கோடி ரூபா பட்ஜெட்டில் பிரமாண்டமான சிங்களப் படங்களைத் தயாரித்து இலாபம் பார்ப்பதென்பது குதிரைக் கொம்பான விஷயம். இதனால் இலாபம் கிடைக்கின்ற மாதிரி சின்ன பட்ஜெட்டில் மதம் சம்பந்தமான அல்லது சிரிப்புப் படமாக எடுத்து இலாபம் பார்த்தால் போதும் என்ற மனப்பான்மையுடனேயே பெரும்பாலான சிங்களப் படங்கள் தயாரிக்கப்படுகின்றன.

இவ்வாறான மனப்பான்மையுடன் திரைப்படங்கள் தயாரிக்கப்படுவதால் தசாப்தங்களாக சிங்கள திரைத்துறை ஒரு வட்டத்துக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருக்கிறது. புரட்டிப் போடுகின்ற மாதிரியான படங்கள் எப்போதாவது ஒருமுறை தயாரிக்கப்படுகின்றன. சமீப காலத்தில் வெளியான கண்ணகி பற்றிய படமான பத்தினி நாடெங்கும் ஆரவாரத்துடன் ஓடி நல்ல இலாபத்தையும் எடுத்துக் கொடுத்திருக்கிறது.

இந்த வட்டத்தைத் தாண்டி இன்னொரு பரிமாணத்துக்கு செல்வது எப்படி என்று இத்துறையைச் சேர்ந்த சிலர் மூளையைக் கசக்கிக் கொண்டிருக்க, இளம் தயாரிப்பாளர் சதிஷ்குமார் என்ற தமிழர், தமிழக திரைத்துறையின் தொழில்நுட்ப உதவிகளுடன் இரண்டு ரீமேக் படங்களை எடுத்து அதிரடி வெற்றி பெற்றுள்ளார். அடுத்ததாக தமிழில் வெளியான 'ராஜா ராணி', 'கும்கி', 'கோமாதா என் குலமாதா' ஆகிய தமிழ்ப் படங்களையும் சதிஷ்குமார் சிங்கள மொழியில் ரீமேக் செய்யப் போகிறார். தமிழ்ப் படங்களை தமிழ் தொழில் நுட்பவியலாளர்களைப் பயன்படுத்தி சிறந்த தொழில் நுட்பங்களுடன் கூடியதாக சிங்களத்தில் தயாரிப்பதற்கு சிங்கள சினிமா உலகில் ஒரு எதிர்ப்பும் இருக்கத்தான் செய்கிறது.

இது, பொதுவாக, தேசப்பற்றுடன் கூடிய ஒரு பார்வைதான். சிங்கள சினிமா 75 வருடங்களைத் தாண்டிவிட்டது. இப்போதும் தமிழ்ப் படங்களைத்தான் ரீமேக் செய்ய வேண்டுமா? சொந்தமாகத் தயாரித்தால் என்ன? தொழில்நுட்பங்களை நாமே பயன்படுத்தி வளர்வதற்கு பதிலாக இந்திய தொழில்நுட்பங்களையும் தமிழ்ப் படக்கதையையும் பயன்படுத்துவதில் என்ன முன்னேற்றம் வந்துவிடப் போகிறது? எமது திரைப்படங்கள் சொந்தத் திரைப்படங்களாக இருக்க வேண்டாமா? என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.

இதற்கு, மாயாவின் இயக்குநர் டொனால்ட் இப்படிப் பதில் சொல்கிறார்:

இந்திய சினிமா உலகத் தரத்துக்கு சென்று கொண்டிருக்கிறது. பக்கத்து ஊரான தமிழ் நாட்டு சினிமா நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை சிறந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தயாரித்து வருகிறது. ஆரம்பகால சிங்கள சினிமாவின் வளர்ச்சிக்கு தமிழக சினிமாத்துறையே ஆக்கமும் ஊக்கமும் அளித்தது. ஆரம்பத்தில் சிங்களப் படங்கள் சென்னையிலேயே எடுக்கப்பட்டன. தமிழ் இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் படத்தொகுப்பாளர்கள் சிங்களப் படங்களில் பணியாற்றி வந்துள்ளனர். வளர்ச்சி அங்கிருந்துதான் ஆரம்பமானது. சிங்களத் திரையுலகை அடுத்த பரிமாணத்துக்கு எடுத்துச் செல்வதற்கு மீண்டும் தமிழ்ச் சினிமாத்துறையைப் பயன்படுத்திக் கொள்வதில் என்ன தவறு? என்பது டொனால்டின் வாதமாக உள்ளது. மாயா யுனிட்காரர்களும் இப்படித்தான் கருதுகிறார்கள்.

மாயா படத்தின் மொத்த பட்ஜெட் 41/2 கோடி எனச் சொல்கிறார்கள். படம் வெளியாகி ஒரு மாதத்தின் பின்னர் மொத்த வசூல் 14 கோடியைத் தாண்டியிருப்பதாக தெரியவந்துள்ளது. இலங்கையின் சினிமா மார்க்கெட் சிறியது. ஏராளமான தியேட்டர்களும் கிடையாது. தமிழகத்தைப்போல இங்கு கதாநாயகனை தெய்வமாக, வழிகாட்டியாக அல்லது தலைவனாகப் பார்க்கும் ஹீரோ கல்ட்டும் கிடையாது. முதல்நாள் தியேட்டரில் ஆரத்தி எடுத்து, பால் ஊற்றி விசில், கரகோஷத்தோடு படம் பார்க்கும் ரசிகர் பட்டாளமும் இல்லை. காமினி பொன்சேகாவுக்கு ஒரு பெரும் ரசிகர் கூட்டம் இருந்தது. அப்படி ஒரு அபிமானம் பெற்ற நடிகர் என்று இன்று எவரையும் விரல் சுட்டவும் முடியாது. எனவே ரசிகர்களை நம்பி அதாவது ஸ்டார் மதிப்பை நம்பி படம் எடுக்க முன்வரமாட்டார்கள்.

இந்தப் பின்னணியில் இலங்கை சிங்கள ரசிகர்களுக்கு ஒத்துவரக்கூடிய தமிழில் வெற்றி பெற்ற படத்தை சிங்கள உரையாடல்கள் மற்றும் நடிகர்களை வைத்து இலங்கை சூழலில் படம் எடுத்தால் என்ன என்ற எண்ணம் ஏற்பட்டது சதிஷ்குமாருக்கு. அவ்வாறு எடுக்கப்படும் படம் தமிழ் நாட்டு தொழில்நுட்பங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். இவ்வாறு தயாரிக்கப்பட்ட படம்தான் பிரவேகய. தனுஷ் நடித்த பொல்லாதவனின் ரீமேக்தான் இது. நடன காட்சிகளை அமைக்க தமிழக நடன இயக்குநர் ஒப்பந்தம் செய்யப்பட்டதைப் போலவே சண்டைக் காட்சிகளை இயக்க தமிழக ஸ்டன்ட் மாஸ்டர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். படம் வெளியாகி வெற்றி பெற்றது. இது சிங்களப் படந்தானா என சிங்கள ரசிகர்கள் மூக்கின் மீது விரல் வைத்தார்கள். சண்டைக் காட்சிகள் அச்சு அசலாக தமிழ்ப்படங்களைப் போலவே அமைந்திருந்தன. சிங்கள ரசிகர்களுக்கு நல்லதொரு பொது போக்குப் படம் பார்த்த திருப்தி கிடைத்தது.

தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மாயா, காஞ்சனாவின் ரீமேக். ராகவா லோரன்ஸ் நடித்த பாத்திரத்தை புபுது சதுரங்க செய்திருக்கிறார். லக்ஷ்மி ராய் ஏற்றிருந்த நாயகி பாத்திரத்தை திஹாரா என்ற சிங்கள நடிகை ஏற்றிருக்கிறார். காஞ்சனாவாக அதாவது சரத்குமார் ஏற்றிருந்த திருநங்கை வேடத்தை சிங்கள முன்னணி நட்சத்திரமும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்க ஏற்றிருக்கிறார். நடனக் காட்சிகளை ஸ்ரீதரன் மாஸ்டர் அமைத்துக் கொடுத்திருக்கிறார். சண்டைக் காட்சிகளை தமிழகத்து முன்னணி ஸ்டன்ட் மாஸ்டர் செல்வா அமைத்துக் கொடுத்திருக்கிறார். மேலும் தமிழக ஒளிப்பதிவாளர், உதவியாளர்கள் எனப் பலர் இப்படத்துக்கு தமது பங்களிப்பைச் செய்துள்ளனர்.

சுமார் நான்கு வருடங்களுக்கு முன் ராகவா லோரன்சின் காஞ்சனாவைப் பார்த்திருக்கிறேன். அது அப்போது வித்தியாசமான பேய்ப்படமாக இருந்தது. பயங்கரப் படங்களானால் திகிலுடன் பாலியல் உணர்வையும் கலந்து கொடுப்பதுதான் ஹொலிவூட் வழக்கம். ஏனெனில் திகிலும் செக்சும் ஒத்துப்போகும். அந்தக் காலத்து டிரகூலா படங்கள் இந்தக் கலவைப் படிதான் தயாரிக்கப்பட்டிருக்கும். ராகவா லோரன்ஸ் செக்சுக்குப் பதிலாக நகைச்சுவையை சேர்த்துக்கொண்டார். ஒரு திகில் காட்சியில் உறைந்துபோகும் ரசிகர்களுக்கு அடுத்ததாக மனம் விட்டுச் சிரிக்கும் நகைச்சுவைக் காட்சி வந்தால் ஆறுதலாக இருக்குமே என்று லோரன்ஸ் போட்ட கணக்கு மிகச் சரியாக அமைந்ததில் காஞ்சனா பெரு வெற்றி பெற்றது. காஞ்சனா – 2வும் வெளியாகி அமோக வெற்றி பெற்றது மட்டுமல்ல, பேய் + நகைச்சுவை என்ற கலப்பில் பல பேய்ப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகவும் தொடங்கின. த்ரிஷா, நயன்தாரா, நமீதா என எல்லா முன்னணி நடிகைகளும் பேய்ப்படங்களில் நடித்துவிட்டார்கள்.

சரி, சிங்கள காஞ்சனா அல்லது மாயா எப்படி வந்திருக்கிறது என்று பார்ப்போம்.

ஆங்காங்கே சில மாற்றங்களைத் தவிர காஞ்சனாவை அப்படியே எடுத்திருக்கிறார்கள். கதாநாயகன் புபுது சொக்லட் பேயாக ஆரம்பத்தில் வருகிறார். பின்னர் அவர் பேயாக மாறும் போது தன் நடிப்பை வெளிப்படுத்தி மிரட்டவும் செய்திருக்கிறார். இதில் முக்கிய பாத்திரமேற்றிருக்கும் ரஞ்சன் ராமநாயக்கவிடமிருந்து இப்படி ஒரு அட்டகாசமான நடிப்பை சிங்கள ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். படத்தின் பின்பாதி, ரசிகர்களை இருக்கை நுனிக்கே கொண்டு வந்திருக்கும்! படம் படிப்படியாக சூடுபிடித்து உச்சத்துக்கு ரசிகர்களை கொண்டு செல்வதுதான் இப்படத்தின் மெஜிக்! இன்றைக்கும் கியூவில் நின்று மாயாவை சிங்கள ரசிகர்கள் பார்க்கிறார்கள் என்றால், இப்படியான ஒரு பொழுதுபோக்கு + திகில் + நகைச்சுவைப்படம் சிங்களத்தில் முதல் தடவையாக வெளிவந்திருப்பதே காரணம். ரஞ்சன் படத்தின் பின் பாதியில்தான் வருகிறார். அவர் முதலாவதாகத் திரையில் தோன்றும் காட்சியில் சிங்கள சுப்பர்ஸ்டார் ரஞ்சன் ராமநாயக்​ே என்று டைட்டில் கார்ட் போடுகிறார்கள். அப்போது தியேட்டரில் விசிலும் கைதட்டலும் பறக்கிறது! காமினி பொன்சேகா காலத்தின் பின்னர் கைதட்டி, விசிலடித்து ரசிகர்களைப் படம் பார்ப்பது மாயாவில்தான் நிகழ்ந்திருக்கிறது என்கிறார் இயக்குநர் டொனால்ட்.

ஒரு சண்டைக் காட்சி கேரளாவில் படமாக்கப்பட்டுள்ளது. ஸ்டன்ட் மாஸ்டர் செல்வா நேரடியாக இக்காட்சியை அமைத்து இயக்கித் தந்தாராம். ஏனைய சண்டைக் காட்சிகள் அவரது உதவியாளர்களினால் மேற்பார்வை செய்யப்பட்டவையாகும். சண்டைக் காட்சிகள் தூக்கிப் போடுவதாக அமைந்துள்ளன. பாடல் காட்சிகளும் சுப்பராக வந்துள்ளன. தமிழக ஸ்ரீதரன் மாஸ்டர் நடனக் காட்சிகளை அமைத்துத் தந்திருக்கிறார். காஞ்சனாவை ஏற்கனவே பார்த்த தமிழ் ரசிகர்கள் புதுப்படத்தைப் போலவே இதைப் பார்த்து ரசிக்கலாம். பார்க்காதவர்களுக்கு அசத்தலான பொழுது போக்குப் படமாக இருக்கும்!

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.