வரு. 68 இல. 47

துர்முகி வருடம் கார்த்திகை மாதம் 05ம் நாள் ​​ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1438 ஸபர் பிறை 19

SUNDAY NOVEMBER 20, 2016

 

 
சொகுசுப் பேருந்தும் சும்மாவும்

சொகுசுப் பேருந்தும் சும்மாவும்

போக்குவரத்து விதி மீறினா குறைந்த பட்ச அபராதமாக இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் குடுக்க ஏலாதெண்டு தனியார் பஸ்காரங்க சொல்றாங்க. உடனடியா ரத்துச்செய்யாட்டா வேலை நிறுத்தம் செய்வம் எண்டும் மிரட்டுனாங்க. பிறகு பெட்டிப்பாம்பா அடங்குனாங்க. இப்ப புதிசா இன்னொரு சங்கமும் மிரட்டல் விடுத்திருக்கு. பேப்பர்ல நீங்களும் பார்த்திருக்கக்கூடும்.

நீண்ட தூரம் சேவையில ஈடுபடுற பஸ் வண்டிக்காரங்க ஸ்ரைக் பண்ணுவம் எண்டு சொல்லியிருக் கிறாங்க எண்டுதான் பேப்பரிலை பாத்தன். குறைந்த பட்சத் தண்டம் வந்து இருவது ரூபாய்தானாம். அதத்தான் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாயா கூட்டியிருக்கிறதா சங்கம் சொல்லுது. உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்!

இருபது ரூபாய் எண்டதும், எனக்கு ஒரு கதை ஞாபகத்திற்கு வருது. என்ட சிங்கள நண்பர் ஒருவர் சொன்ன கதை. நீதிமன்றத்திலை ஒருத்தர் தூசண வார்த்தை பேசியிருக்கார். உடன கோட்டிலை இருந்த பொலிஸ்காரங்க அவரைப் பிடிச்சு நீதவான் முன்னிலையிலை நிறுத்தியிருக்காங்க. அவருக்கு நீதவான் பத்து ரூபாய் தண்டம் விதிச்சாராம். அப்ப, இவர் என்ன செய்திருக்காரெண்டா, ம்.. தூஷணம் பேசினா பத்து ரூபாய் தண்டமா? இதோ இருபது ரூபாய் ... உனக்கும் சேர்த்து... எண்டு நீதவானையும் ஏசிக்ெகாண்டே இருபது ரூபாய் நோட்ட எடுத்து வெளியிலை போட்டாராம். இது நகைச்சுவைக்காகக் சொன்ன பழைய கதை. ஆனால், அத நம்ப வைக்கிறமாதிரி இப்ப ஒரு புது சம்பவமும் நடந்திருக்கு.

களுத்துறை விகாரையடியிலை, ஓர் அம்மா தன்னுடைய மூன்று பிள்ளைகள வைச்சுக்ெகாண்டு பிச்சை எடுத்திருக்கா. காலி பக்கம் போற வாறவை எல்லாம், களுத்துறை விகாரையடியிலை வாகனத்தை நிறுத்தி, உண்டியல்ல காசு போட்டிட்டுக் கும்பிட்டிட்டுத்தான் பயணத்தைத் தொடருவாங்க. இந்த அம்மா நல்ல ஒரு லொக்கேஷனத்தான் தேர்ந்தெடுத்திருக்கு. ஆனா, பொலிஸ்காரங்க அவவ பிடிச்சுக்ெகாண்டுபோய் களுத்துறை நீதிமன்றத்திலை நிப்பாட்டி யிருக்காங்க. கெட்டிக்கார பொலிஸ். சார், என்ர பிள்ளையிலை ஒண்டு பண்டாரகமவிலை படிக்குது. வீட்டிலை பொருளாதார பிரச்சினை. அதாலைதான் பிச்சை எடுக்கிறன் எண்டு நீதவானிட்டை சொல்லியிருக்கா. அவர் கேட்கல்ல. இருபது ரூபாய் தண்டம் விதிச்சிருக்கார். இது பழைய கதை இல்லை. போன புதன் கிழமை. வியாழக்கிழமை பேப்பர எடுத்துப்பாருங்க. இதை ஏன் சொல்றன் எண்டா, இந்த இருபது ரூபாய் தண்டத்திற்குத்தான்.

இப்பவே, இருபது ரூபாய் அபராதம் விதிச்சா, அப்ப வாகனச் சாரதிகளுக்கும் அந்தத் தொகை குறைந்த பட்ச தொகையா இருந்திருக்கும் என்பது சரியாத்தான் இருக்கும். எனக்குத் தெரிய ஐநூறு ரூபாய்தான் குறைஞ்ச தொகையா விதிச்சிருக்காங்க.

ஒரு நாள் மாலை நேரம். மோட்டார் சைக்கிளில் மூண்டுபேர் ஹெல்மட்டும் இல்லாமப் போய் இருக்காங்க. பொலிஸ் நிப்பாட்டியிருக்கு. உடன அதிலை இருந்த ஒருத்தர் நூறு ரூபாய் நோட்ட எடுத்து பொலிஸ்காரர் கையிலைத் திணிச்சிருக்கார். போயும் போயும் நூறு ரூபாயா என்று நினைப்பீங்க! இது சத்தியமா நடந்த கதை. தலைப்பு என்னவோ, நீ சொல்றது வேற என்னவோ எண்டு நினைப்பீங்க!

தலைப்புக்கு வாறன். நீண்ட தூரம் ஓடுற பஸ்காரங்க ஸ்ரைக் பண்ணப்போறதாச் சொல்றாங்கதானே. அந்த நீண்ட தூரம் ஓடுற ஆக்களப்பத்தித்தான் சொல்ல வந்தன். இலங்கையிலை இருபதினாயிரம் தனியார் பஸ்களும் சுமார் ஆறாயிரம் சிரிபீ பஸ்களும் ஓடுது. சில சிரீபீ பஸ்கள் வந்து ட்ரக்கு மாதிரியும் லொறி மாதிரியும் இருக்கிறதா அந்த பஸ்ஸுக்குப் பொறுப்பான மேலதிகாரி ஒருத்தரே சொல்றார். லொறியிலையும் ட்ரக்கிலையும் ஆக்கள ஏத்துறதுக்கு இருக்ைககள செய்திருக்காங்க எண்டு அவர் வேதனையா சொல்றார். எட்டு வருசம் பழைய பஸ்கள மாத்தணுமாம். ஆனால், இப்ப பாத்தா பத்து வருசம் பழைய பஸ்ஸும்கூட இன்னும் ஓடிக்ெகாண்டு இருக்காம். அவர் உண்மைய ஒத்துக்ெகாண்டு கதைக்கிறார்.

இந்தத் தனியார் பஸ்காரங்களப் பாருங்க. நீண்ட தூரம் எண்டிட்டு அரைச்சொகுசு, முக்காச் சொகுசு எண்டிட்டு போட் போட்டிருப்பாங்க. அரைச்சொகுசு எண்டா, இரண்டு சீட்டுக்கு இடையிலை ஒரு மின் விசிறி- அதான் ஃபேன் இருக்ேகாணுமாம். இப்ப அப்படியெல்லாம் ஒண்டுமில்லை. வேணுமெண்டா ஒரு துணியிலை மறைச்சு கேட்டின் போட்டிருபாங்க. அவ்வளவுதான். கொழும்பிலை இருந்து யாழ்ப்பாணம், வவுனியா, பதுளை, ஹட்டன் போற பஸ்கள்ல நடக்கிற அநியாயங்களப்பாத்தா, அவங்களுக்கு இரண்டாயிரத்து ஐநூறு இல்ல ஐயாயிரம் ஃபைன் பண்ண வேணுமெண்டு நீங்களே சொல்வீங்க!

அரைச்சொகுசு எண்டு ஆரம்பிக்கிற இடத்திலை இருந்து ஒண்டரை ரிக்கற் எடுக்கிறது. பஸ் புறப்பட்டோடன, பத்து ரூபாய்க்கும் ஆள் ஏத்துறது... நேரத்தைக் கணக்ெகடுக்காமல் ஊர்ந்துகொண்டு போறது.. எண்டு பொரிந்து தள்ளுகிறார் மற்றொரு நண்பர். அப்ப இவங்களுக்கு இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் போதுமா எண்டு நீங்களே சொல்லுங்க. போக்குவரத்து விதியை மீறினா தனியார் பஸ் காரங்களுக்கு மட்டும் தண்டம் விதிக்கமாட்டாங்க. எல்லாத்துக்கும் பொதுவானதுதானே.. அப்ப இவங்களுக்கு மட்டும் என்ன பிரச்சினை எண்டு சிலர் கேட்கக்கூடும். அவங்களுக்குத்தான் அந்த வலி தெரியும். தலை வலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தானே தெரியும் என்கிறார்கள் அவர்கள்!

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.