வரு. 68 இல. 47

துர்முகி வருடம் கார்த்திகை மாதம் 05ம் நாள் ​​ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1438 ஸபர் பிறை 19

SUNDAY NOVEMBER 20, 2016

 

Children page


பவளப்பாறைகள்

பவளப் பாறைகள், சுண்ணாம்புக் கற்களாலான உயிரினமாக இருப்பினும் இவை மற்ற நுண்ணுயிரிகளை உண்டு உயிர் வாழ்கின்றன. பவளப் பாறைகளை ஒரு வகையான விலங்கு அல்லது தாவரம் என்றும் கூறலாம். இவற்றிலுள்ள பாலிப்ஸ் எனும் உயிரினம் இறந்துவிட்டால் இந்தப் பவளப் பாறைகளும் இறந்துவிடும்.

இந்தப் பாலிப்ஸ் உயிரினங்கள், கடலிலுள்ள சுண்ணாம்பை எடுத்துக்கொண்டு இவற்றுக்குக் கடினத் தன்மையையும் பல வகையிலான தோற்றங்களையும் தருகின்றன. இவை உண்பதற்காக மட்டும் தலையை வெளியில் நீட்டி தாவர மற்றும் பிற சிறிய மிதவை நுண்ணுயிரிகளைத் தின்று வாழ்கின்றன.

பவளப் பாறைகள் கடினமானவை, மிருதுவானவை என இரண்டு வகைப்படும். பல வடிவங்களிலும் காணப்படும். மனித மூளை வடிவம், மான்கொம்பு வடிவம், மேஜை மற்றும் தட்டு வடிவம் போன்ற வடிவங்களிலும் இருக்கின்றன.

கடல் விசிறி உயிரினமும் மிருதுவான பவளப் பாறை வகையைச் சேர்ந்தவை. இவை பார்ப்பதற்குச் செடிகள் அல்லது சிறு கொடிகள் போன்று இருக்கும்.

பவளப் பாறைகள் பல உயிரினங்களுக்குத் தஞ்சம் அளிக்கின்றன. ஏறக்குறைய 250க்கும் மேற்பட்ட பலவிதமான கண்ணைக் கவரும் வண்ண மீன்கள், பாசி வகைகள் போன்றவையும் கடற் பறவைகள், பாலூட்டிகள், ஒட்டு உயிரினங்கள், முள் தோல் விலங்குகள் போன்றவையும் பவளப் பாறைகளைச் சார்ந்து வாழ்கின்றன.

இந்தப் பவளப் பாறைகள் பல கடல்வாழ் உயிரினங்களுக்கு உறைவிடமாகவும் உணவளிக்கும் இடமாகவும் இருக்கின்றன. கடலோரப் பகுதிகளை மண் அரிப்பிலிருந்து பாதுகாப்பதுடன் வளிமண்டலத்தில் கரியமில வாயுவின் அளவைக் குறைத்துச் சுற்றுப்புறச்சூழலையும் மேம்படுத்துகின்றன.

கே. தாரணி

தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம்,

தலவாக்கலை


பொன்மொழிகள்

அறிவை விட கற்பனை முக்கியமானது. அது நம்மை உறுதியாக நம்பவைத்து இருபது மடங்கு ஆற்றலுடன் இலட்சியத்தை அடையச் செயல் வீரராக உருவாக்கிவிடும்.

- ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்.

நாம் எதைப் பெற்றிருக்கிறோம் என்பது முக்கியமல்ல ; பெற்றிருப்பதை எப்படி அனுபவிக்கிறோம் என்பதுதான் முக்கியம்.

ஜோன் தாற்றன்

மாற்றம் இல்லாமல் முன்னேற்றம் சாத்தியமற்றது ; எண்ணங்களை மாற்றிக் கொள்ள முடியாதவர்களால் வேறு எதையும் மாற்றமுடியாது.

ஜோர்ஜ் பெர்னாட் ஷா

நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து, என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்.

ஆபிரகாம் லிங்கன்

எடுத்த முயற்சியைக் கைவிடும்போது, நாம் வெற்றிக்கு மிக அருகில் இருக்கின்றோம் என்பதை உணராதவர்களே தோல்வியடைகிறார்கள்.

தோமஸ் அல்வா எடிசன்

மற்றவர்களை எடைபோடுவதில் காலத்தை வீணாக்காதீர்கள் ; ஏனெனில் அவர்களை நேசிப்பதற்கு உங்களுக்கு நேரமில்லாமல் போகும்.

அன்னை தெரேசா

சோ. வினோஜ்குமார்

கமு/சது/ சம்மாந்துறை மு. மத்திய மகா வித்தியாலயம்,

சம்மாந்துறை.


 

 ஒளவையார் பாராட்டிய சிறுவன்

பாரதத்தில் பிறந்த பலர் இந்த உலகிற்கே வழிகாட்டிகளாக இருந்ததுடன், பொக்கிசம் நிறைந்த அரிய பல நூல்களையும் எழுதியிருக்கிறார்கள். தமிழகத்தில் வாழ்ந்த புலவர்களுள் ஒருவரான ஔவையார் ஒரு தடவை நீண்டதூரம் நடந்து சென்றமையால் களைப்புற்று நாவல் மரத்தின் நிழலில் அமர்ந்து கொண்டார். அப்போது நாவல் மரத்திலிருந்த சிறுவன் நாவற் பழங்களை பறித்து ஒவ்வொன்றாக வாயில் போட்டுக் கொண்டிருந்தான்.

இதனை அவதானித்த ஔவையார் “வெயிலின் கடுமையினால் நெடுந்தூரமிருந்து வருகின்றேன். நீ உண்ணுகின்ற பழங்களை நானும் உண்ண விரும்புகின்றேன் தருவாயா?” என்று கேட்டார். அதற்கு அந்தச் சிறுவன் ஔவையாரைப் பார்த்து “சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?” எனக்கேட்டபோது திகைத்துப்போனார் ஔவையார். பழத்திலும் சுட்டது, சுடாதது இருக்கின்றதா என தனக்குள் கேட்டுவிட்டு சிறுவனிடம் “சுடாத பழம் தா” என்றார் உடனே சிறுவன் மரத்தின் நிழலின்கீழ் கொஞ்சம் பழங்களை போட்டான். அதனை உண்டு விட்டு மீண்டும் “சுட்ட பழம் தா” என்று ஔவையார் கேட்டார். சிறுவன் சில பழங்களைப்பறித்து சுடுமணலின் மீது வீசினான். அதனைப் பொறுக்கி உண்ண முற்பட்டபோது அப்பழங்களின் மேல் மணல் ஒட்டிக் கொண்டது. மண்ணை வாயினால் ஊதிவிட்டு பழத்தை உண்பதை கண்டுகொண்ட சிறுவன் சிரித்தான். “என்ன பாட்டியாரே பழம் சுடுகிறதா” என்று கேலி செய்தான். சுட்டபழம், சுடாதபழம் இரகசியத்தை அறிந்து கொண்ட ஔவையார் சிறுவனின் புத்திக் கூர்மையை வெகுவாகப் பாராட்டினார்.


இலவசக் கல்வி

துடிப்பான சிறுவர் நாம்
படிப்பே எம் தொழிலாம்
பிடிப்பான எண்ணும் எழுத்தும்
கண் எனக் கொள்வோம்
நித்தம் நாம் எம்மை
சித்தம் பேணிக் காப்போம்
வித்தகராகக் கற்போம் கருத்தாய்
வீண் விளைவு(கள்) போக்குவோம்
சொத்து சுகம் தேவை
சொற்ப எனின் அவை
சேர்த்துப் பெருக சேமித்து
சிக்கனம் கடைப்பிடிப்போம்
ஊக்கம் பெருக்கி கற்போம்
உண்மை பேசிப் பழகுவோம்
தாக்கும் வருமைக்காக
தவிர்க்க வேண்டாம் கற்க
தருவது அரசு இலவசக் கல்வி

மு. மு. முக்சீத்,
தரம்-07,
தி/ கிண்ணியா மத்திய கல்லூரி,
கிண்ணியா.
 


|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.