வரு. 68 இல. 47

துர்முகி வருடம் கார்த்திகை மாதம் 05ம் நாள் ​​ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1438 ஸபர் பிறை 19

SUNDAY NOVEMBER 20, 2016

 

 
ஆறு உப குழுக்களின் அறிக்கைகள் அரசியலமைப்பு சபையில் சமர்ப்பிப்பு

ஆறு உப குழுக்களின் அறிக்கைகள் அரசியலமைப்பு சபையில் சமர்ப்பிப்பு

நாடு முழுவதும் விநியோகிக்க பிரதமர் பணிப்பு
ஜனவரியில் முழு நேர விவாதம்

அரசியலமைப்பு தொடர்பான வழிநடத்தல் குழுவினால் நியமிக்கப்பட்ட ஆறு உபகுழுக்களின் அறிக்கைகள் நேற்றையதினம் அரசியலமைப்பு சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. பிரதமர் ரணில் விக்கிர மசிங்க இந்த அறிக்கைகளை சமர்ப்பித்தார்.

உபகுழுவின் அறிக்கைகள் தொடர்பாக எதிர்வரும் ஜனவரி 9ஆம், 10ஆம், 11ஆம் திகதிகளில் முழுநேர விவாதம் நடத்தப்படவுள்ளது.

இதற்கு முன்னர் எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி கூடவுள்ள அரசியலமைப்பு சபையில் வழிநடத்தல் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. அடிப்படை உரிமைகள், நீதிமன்றம், நிதி, தேசிய மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு, பொது ஒழுங்கு மற்றும் பொலிஸ், அரச சேவைகள் மற்றும் மத்தியும் சுற்றயல் உறவுகள் பற்றிய ஆறு உபகுழுக்களின் அறிக்கைகளே சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. உபகுழுக்கள் சந்தித்த தரப்பினரிடம் பெறப்பட்ட கருத்துக்கள் மற்றும் உபகுழுக்களில் ஆராயப்பட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆராயப்பட்ட ஒவ்வொரு விடயங்கள் தொடர்பில் தனித்தனியான விதப்புரைகளும் முன்மொழியப்பட்டுள்ளன.

அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டாலும், அரசியலமைப்பை ஏற்றுக் கொள்வதா? இல்லையா?என்பதை பொது மக்களே தீர்மானிக்க வேண்டும் என நேற்றையதினம் கூடிய அரசியலமைப்பு சபையில் வலியுறுத்தப்பட்டது.

உபகுழுக்களின் அறிக்கைகளை சமர்ப்பித்து உரையாற்றிய வழிநடத்தல் குழுவின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்க, உபகுழுக்களின் அறிக்கைகள் நாட்டிலுள்ள சகல மக்களையும் சென்றடையும் வகையில் வணக்கஸ்தலங்கள் உள்ளிட்ட சகல இடங்களுக்கும் விநியோகிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியிருப்பதாகக் கூறினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ஆறு உபகுழுக்களின் அறிக்கைகளும் வழிநடத்தல் குழுவுக்கு வழங்கப்பட்ட பின்னர் அதனை அரசியலமைப்பு சபையில் சமர்ப்பிக்கத் தீர்மானித்தோம். இந்த உபகுழுக்களின் அறிக்கைகள் தொடர்பில் அரசியலமைப்பு சபையில் விவாதித்து அதன் அடிப்படையிலேயே வழிநடத்தல் குழு இவை பற்றிய தீர்மானத்துக்கு வரும்.

இவ்வாறு செயற்பாடுகளை மேலும் ஜனநாயகப்படுத்துவதானது அரசியலமைப்பை தயாரிப்பதற்கான சிறந்த பின்புலத்தை ஏற்படுத்தும். இந்த உபகுழுக்களின் அறிக்கைகளில் உள்ள சகல விடயங்களும் அரசியலமைப்பில் உள்ளடக்கப்படாது. இவற்றின் அடிப்படையிலான பின்புலத்துடன் விடயங்களை கலந்துரையாடியே வழிநடத்தல் குழுவின் அறிக்கையைத் தயாரிக்க எதிர்பார்த்துள்ளோம்.

இந்த உபகுழுக்கள் பல்வேறு நபர்கள், அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் என பலரைச் சந்தித்ததுடன், அவர்களின் கருத்துக்களை முன்வைப்பதற்கும் அவகாசம் வழங்கியிருந்தன. இந்த அறிக்கைகளை தயாரித்திருக்கும் உபகுழுக்களுக்கும், அக்குழுக்களுக்கு ஆலோசனை வழங்கிய விசேட நிபுணர்களுக்கும் அரசியலமைப்பு சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அரசியலமைப்புத் தொடர்பான வழிநடத்தல் குழு இதுவரை 40 சந்திப்புக்களை நடத்தி, பல்வேறு விடயங்கள் பற்றி ஆராய்ந்துள்ளது. தற்பொழுது அரசியலமைப்பில் உள்ள அரசாங்கத்தின் தன்மை, மதத்துக்கான முன்னுரிமை என்பவற்றை நீக்குவது எமது நோக்கம் அல்ல. ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் அவற்றை பலப்படுத்துவதே வழிநடத்தல் குழுவின் எதிர்பார்ப்பாகும். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழித்து அதற்கு மாற்றீடாக மூன்று முறைகளை தெரிவுசெய்துள்ளோம். இவை குறித்து அரசியலமைப்பு சபையில் விவாதித்து பொருத்தமான முறை எது என்பதை முடிவுசெய்ய முடியும்.

தேர்தல் முறை மறுசீரமைப்பில் கலப்பு முறையொன்றுக்கான விருப்பம் உள்ளது. உலக நாடுகளில் பின்பற்றப்படும் கலப்பு முறைகளை ஆராய்ந்து மாற்றீடுகள் சிலவற்றை முன்மொழிந்துள்ளோம். இதில் இரண்டு விடயங்கள் உள்ளன. வாக்காளர்கள் வழங்கிய வாக்குகளின் வீதத்துக்கு சமமான பிரதிநிதித்துவத்தை கட்சிகளுக்கு வழங்கமுடியும். மறுபக்கத்தில் ஐந்து வருடங்கள் உறுதியான அரசாங்கமொன்றை அமைக்க முடியும். இதுபோன்ற விடயங்களே கலந்துரையாடப்படவேண்டியுள்ளது. நிறைவேற்று அதிகார முறையின் கீழ் ஜனாதிபதி நியமிக்கப்படுவதால் பாரிய குறைபாடு காணப்படுகிறது. அதிகாரங்களை பகிர்வது குறித்து கலந்துரையாடியுள்ளோம். சில அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இடம் தொடர்பான பிரச்சினை தொடர்பில் ஆராயந்துள்ளதோடு, உபகுழுவின் அறிக்கையில் இதுபற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் தொடர்பில் ஆரம்ப விவாதத்தை ஜனவரி மாதத்தில் நடத்தமுடியும். இதற்காக ஜனவரி 9, 10 மற்றும் 11ஆம் திகதிகளில் விவாதித்து முடிவுக்கு வரமுடியும். இல்லாவிட்டால் மேலும் காலம் எடுக்க முடியும். இது குறித்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கலாம். அடுத்த அரசியலமைப்பு சபை எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி கூடவுள்ளது. வழிநடத்தல் குழுவின் அறிக்கை தயாராக இருந்தால் அதனை அரசியலமைப்பு சபையில் சமர்ப்பிப்பதற்காகவே டிசம்பர் மாதம் கூடவுள்ளோம் என்றார்.

இந்த மூன்று தினங்களில் விவாதத்தை பூர்த்திசெய்ய வேண்டுமென்ற தேவை இல்லை. அதன் பின்னர் நாட்டில் இது பற்றிய கலந்துரையாடல்களை ஏற்படுத்த இடமளித்து மீண்டும் பெப்ரவரி மாதம் கூடி ஆராய முடியும். உபகுழுக்களின் அறிக்கைகள் சகலவற்றையும் மக்களைச் சென்றடையும் வகையில் மதஸ்தலங்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்குச் செல்லும் வகையில் விநியோகிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளேன். இணையத்தளத்தில் தரவேற்றினால் சகலரும் இதனைப்பார்வையிட முடியும் எனவும் தெரிவித்தார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.