வரு. 68 இல. 47

துர்முகி வருடம் கார்த்திகை மாதம் 05ம் நாள் ​​ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1438 ஸபர் பிறை 19

SUNDAY NOVEMBER 20, 2016

 

 
வெளிநாட்டவர்களும் காணிகள் வாங்கலாம்

வெளிநாட்டவர்களும் காணிகள் வாங்கலாம்

ஒலிக்கிறதா அபாய மணி?

வெ ளிநாட்டவர்கள் இலங்கையில் காணிகளைக் கொள்வனவு செய்யலாம் என்று ஒரு ஏற்பாட்டை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருக்கிறார். இந்த அறிப்பை இன்னும் அரசாங்கம் உத்தியோகபூர்வமாக விடுக்கவில்லை என்றாலும் கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பகிரங்கமாகவே பிரதமர் இதைத் தெரிவித்திருக்கிறார்.

இந்த அறிவிப்பு உண்மையானது என்பதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ஷவும் பாராளுமன்றத்தில் இந்த விடயம் தொடர்பாகப் பேசியுள்ளார். மகிந்த ராஜபக்ஷவின் கூற்றுப்படி ஹம்பாந்தோட்டை, கொழும்பு, திருகோணமலை பிரதேசங்களில் பெருந்தொகை காணியை வெளிநாட்டவருக்கு விற்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக அறிய முடிகிறது. இதை அவர் எதிர்த்துமுள்ளார். வெளியாருக்குக் காணிகளை விற்பதன் மூலமாக இலங்கையை வெளிநாட்டு கொலனியாக மாற்றும் ஆபத்தான திட்டத்திற்கு அரசாங்கம் தயாராகிறது. இதற்கான யோசனைகளே வரவு செலவுத் திட்டத்தினூடாக முன்வைக்கப்பட்டுள்ளதாக மகிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். கூடவே, துறைமுகம், நெடுஞ்சாலை, ரயில் பாதை என்பவற்றை தனியாருக்கு விற்பதற்கு அரசாங்கம் தயாராகுவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

வெளியாருக்குக் காணிகளை விற்பது தொடர்பாக ஜேவிபிக்கும் இடதுசாரிக் கட்சிகளுக்கும் கூட உடன்பாடில்லை. அவையும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றன. இனிவரும் நாட்களில் இந்தத் தரப்புகள் எதிர்ப்புப் போராட்டங்களையும் நடத்தக்கூடும். தமிழ், முஸ்லிம், மலையகக் கட்சிகள் இதைப்பற்றி இன்னும் வாய்திறக்கவில்லை. அவை பெரும்பாலும் நாட்டின் தேசியப் பிரச்சினைகளில் அதிகளவுக்குத் தலையிடும் பண்பையும் மரபையும் கொண்டவையில்லை.

எனவே இந்த விசயத்திலும் அவற்றின் குரல் பெரிய அளவில் ஒலிக்கும் என எதிர்பார்க்க முடியாது. கொழும்பு மைய ஊடகங்கள் இந்த விசயம் தொடர்பாக எழுத ஆரம்பித்துள்ளன. ஒரு மென்சூட்டு விவாதம் ஆரம்பமாகியுள்ளது. பிராந்தியப் பத்திரிகைகளில் இதைப்பற்றிய அடையாளங்களைக் காணவில்லை. தமிழ் இணைய வெளியிலும் இது தொடர்பான குறிப்புகள் இல்லை.

வெளிநாட்டவர்கள் இலங்கையில் காணிகளைக் கொள்வனவு செய்யலாம் என்ற தீர்மானம் நடைமுறைக்கு வருமாக இருந்தால் அது எந்த அடிப்படையிலானதாக இருக்கும் என்று இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. வெளிநாடுகளில் வாழ்கின்ற இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர்களா? அல்லது, இலங்கையோடு தொடர்பே இல்லாத வெளிநாட்டவரா? என்று தெளிவாக்கப்பட வேணும். அல்லது பொதுவாகவே எவரும் கொள்வனவு செய்யலாம் என்று முடிவாகப் போகிறதா? எதுவாக இருந்தாலும் இந்தக் கொள்வனவாளர்கள் நிச்சயமாக பெரு முதலாளிகளாகவே இருக்கப்போகிறார்கள். அல்லது பெரு நிறுவனங்களாக இருக்கும்.

இந்தப் பெரு முதலாளிகள் அல்லது பெரு நிறுவனங்கள் இங்கே முதலீட்டை மேற்கொள்ளும் என்பதை ஒரு சாதகமான அம்சமாக அரசாங்கம் கருதுகிறது. நாட்டின் பொருளாதாரத்தை வளப்படுத்துவதற்கான தொழில் ஊக்குவிப்புகளையும் வருமானத்தையும் இது ஈட்டித்தரும் என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடு. அத்துடன் வேலையில்லாப் பிரச்சினையினால் உருவாகும் நெருக்கடிகளையும் முடிந்தளவுக்கு குறைக்கலாம் என்பது இன்னொரு சாதக அம்சம் அரசுக்கு. இந்தக் காரணங்களால் இதை நாட்டு மக்களிலும் கணிசமானவர்கள் வரவேற்கக் கூடும். ஆனால், இவையெல்லாம் நாட்டுக்கு நீண்டகால அடிப்படையில் சரியானதாக இருக்குமா? இது தொடர்பாக இலங்கையின் சமூக, பொருளாதார அறிஞர்களின் நிலைப்பாடு என்ன? அவர்களுடைய குரல் ஏன் இன்னும் ஒலிக்கவில்லை?

பொதுவாகவே வெளிநாட்டுச் சக்திகள் ஒரு நாட்டுக்குள் நுழைகின்றன என்றால், அவற்றின் பிரதான இலக்கு தங்களுடைய லாபமாகவே இருக்கும். அந்த லாபத்தை தாம் முதலீடு செய்கின்ற நாடுகளில் இருந்து பெற்றுத் தங்கள் நாட்டையும் தாங்கள் இருக்கின்ற சூழலையும் வளப்படுத்துவதேயாகும். இதை மன்னர்கள் முன்னர் மேற்கொண்டனர். பின்னர் ஐரோப்பியர்கள் உலகெங்கும் இதைத்தங்களுடைய செல்வாக்கினுள் கொண்டு வந்தனர். இதனால் கொலனித்துவ அமைப்புகள் உருவாகின. இலங்கையும் இதில் சிக்கியது. மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாக அந்நிய சக்திகளின் பிடியில் நாடு சிக்கியிருந்தது. ஆள் மாறி ஆளாக அதிகாரம் செலுத்தினார்கள். ஆளாளுக்குச் சுரண்டினார்கள். சுதேச மக்களாகிய நாட்டு மக்கள் பிறத்தியாரிடம் பணிந்து, பிறத்தியாருக்காகவே உழைத்தனர். உழைத்துக் களைத்தனர். இதில் சமரசவாதிகளாக, நாட்டு மக்களை பிறத்தியாருக்குச் சேவகம் செய்யக்கூடியவர்களாக இணைத்துக் கொடுத்தவர்கள், அன்றைய அதிகார சக்திகளே. அதாவது, நாட்டை ஆட்சி செய்த அந்நியரோடு சமரசப்பட்டு நின்ற இலங்கையின் ஆதிக்கச் சக்திகளே.

முந்நூறு ஆண்டுகளாக

நாங்கள் உழைத்தோம்

எங்கள் நிலத்தில் அவர்களுக்காய்

என்று கவிஞர் திருமாவளவன் எழுதியது இங்கே நினைவுக்கு வருகிறது. மக்களின் நிலை இப்படித்தானிருந்தது. இலங்கை சுதந்திரமடைந்த பிறகும் பல கொம்பனிகள் பிறத்தியாருடையவையாகத்தானிருந்தன. இன்னும் பல கொம்பனிகள் உள்ளன. நாங்கள் இவற்றின் பொருட்களை வாங்கிக்கொண்டிருக்கிறோம். இந்தக் கொம்பனிகளில் வேலை செய்கிறோம். பலருக்கு இந்தக் கொம்பனிகள் எல்லாம் வெளியாருடையவை என்றே தெரிவதில்லை. பல தலைமுறைகளாகப் பழகிய மக்களுக்கு வேறுபாடுகளைத் தெரியவில்லை.

ஆனால், அவற்றின் நிகர லாபம் வெளியேதான் செல்கிறது. வரிப்பணம் மட்டுமே நாட்டுக்குச் செலுத்தப்படுகிறது. அதுவும் பல சலுகைகள், பல விட்டுக்கொடுப்புகள், தள்ளுபடிகளின் கீழ்தான். மட்டுமல்ல, இந்தக் கொம்பனிகளின் உற்பத்திக்கான மூலப்பொருட்களும் எங்கள் நாட்டிலிருந்தே எடுக்கப்படுகிறது. அதற்கும் கொம்பனிகள் சலுகையைப்பெற்றுள்ளன. ஆகவே குறைந்த கட்டணத்தில் தாராளமாக மூலப்பொருட்களைப் பெற்றுக்கொண்டு, குறைந்த ஊதியத்தில் வேலையாட்களையும் ஊழியர்களையும் வைத்து, நிறைய உழைக்கும் நிறுவனங்களே இவை.

இனி வரப்போகின்ற அமைப்பும் ஏறக்குறைய இப்படியானதுதான். சுதந்திர இலங்கையிலும் பிறத்தியாரின் கைகளே ஓங்கப்போகிறது. 1948 க்குப் பிறகு இலங்கையில் இரண்டு பிரதான கட்சிகள் ஆட்சி நடத்தியிருக்கின்றன. இடையிடையே பிற கட்சிகள் ஆட்சியில் கூட்டுச் சேர்ந்திருந்தாலும் ஐ.தே.கவும் சுதந்திரக்கட்சியுமே தலைக்கட்சிகளாக இருந்து ஆட்சியை வழிநடத்தின. இதில் ஐ.தே.க ஆட்சிக்காலத்தில்தான் வெளியாருக்கான கதவுகள் அகலத் திறக்கப்படுவதுண்டு. முதலீட்டாளர்களை ஊக்குவிப்பது என்ற பேரில் நடக்கும் இந்த பொருளாதார நடவடிக்கை, அந்நிய முதலீட்டாளர்களையே ஊக்கப்படுத்தி வந்திருக்கிறது. இப்பொழுது நடக்கப்போவதும் இதுதான்.

இதைச் சிலர் மறுத்து, அதற்காக காரணங்களை முன்வைக்கலாம். குறிப்பாக உலகமே புதிய பொருளாதா ஒழுங்கில் பயணிக்கும்பொழுது, இலங்கை போன்ற மூன்றாம் மண்டல நாடு இதற்கெதிராக நின்று பிடிக்க முடியாது என்று. இதற்கு அவர்கள் இந்தியா போன்ற நாடுகளே தங்களின் கதவுகளை பல்தேசியக் கொம்பனிகளுக்குத் திறந்து விட்டிருக்கின்றன. இந்த நிலையில் இலங்கை என்ன செய்ய முடியலாம் என்றும் கேட்கலாம்.

இலங்கை இந்தியா போன்ற நாடுகளின் கல்வியும் சிந்தனைமுறையுமே இதற்குத் தோதாகத்தான் கடந்த சில நூற்றாண்டுகளாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இப்பொழுது நடைமுறையிலிருக்கும் கல்விக் கொள்கைகளும் பொருளாதார ஆலோசனைகளும் இதற்கமைவானவையே. இவற்றை வடிவமைப்பது உலக நிதி நிறுவனங்களான உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட பேரமைப்புகளே. ஆகவே இவை வடிவமைத்த இன்றைய புத்திஜீவிகளும் பொருளாதாரச் சிந்தனையாளர்களும் எப்படிச் சிந்திப்பார்கள் என்பதை இங்கே அதிகமாக விளக்கத்தேவையில்லை. பிறருக்குச் சேவகம் செய்யும் விண்ணர்களாகவே இருப்பார்கள். அவர்களுடைய நலனும் இந்தப் பேரமைப்புகளோடு தொடர்பு பட்டிருப்பதால், அதற்குத் தோதாகவே சிந்திப்பர்.

இந்த நிலையில் இதையெல்லாம் கண்டுணர்ந்து நாட்டின் நன்மையைக் குறித்துச் சிந்திக்கக்கூடியவர்கள் மாற்று அரசியலாளர்களும் மாற்றுச் சிந்தனையாளர்களுமே. இவர்களே தங்களின் குரலை இன்று உயர்த்த வேண்டியவர்களாகின்றனர்.

இலங்கை ஜனநாயக நாடு என்றால் பல சிந்தனைகளுக்கும் இடமிருக்கும். பல சிந்தனைகளின் திரண்ட வடிவமே ஜனநாயப் பண்பாகும். அதைப்போல, சுதேசச் சிந்தனையே நாட்டின் அடையாளமும் முகமுமாகும். தன்னுடைய தலையை விற்றுப் பிறருடைய தலையை விற்க முடியாது என்பது அறிவு.

இன்றைய ஆட்சியாளர்கள் இன்றைய நெருக்கடிகளுக்குத் தீர்வைக்காண்பதற்காக சில வழிமுறைகளைப் பின்பற்றலாம். ஐ.தே.க செல்வாக்குச் செலுத்தும் பொருளாதாரத்திட்டத்தின்படி, அந்தக் கட்சியின் முதன்மை நோக்கம் பெருமுதலாளிகளை உருவாக்குவதே. இதற்கு அது கடந்த காலத்தில் மத அரசியல் வழியாகப் பொருளாதார மையத்திற்கு நகர்ந்திருக்கிறது. இப்பொழுது இன்னொரு தோற்றத்தை எடுத்திருக்கிறது. இந்த அடிப்படையில் உலகமயத்திற்குத் தேவையாக இருப்பது பெருமுதலாளிகள். அந்தத்தேவையை நிறைவேற்ற அந்நிய முதலீட்டை அனுமதிப்பது என்பது ஐ.தே.கவின் நிலைபாடு. ஆகவே இந்த நாட்டிற்குத் தேவையான சில பெருமுதலாளிகளை - தேசியப் பெருமுதலாளிகளை உருவாக்கும் திட்டத்தைக் கைவசம் வைத்திருப்பது அதன் மறைமுகத்திட்டமாகும்.

தேசியப் பெருமுதலாளிகள் பன்னாட்டு முதலாளிகளாகப் பரிணமிக்கும் வாய்ப்பை அரசதிகாரம் உருவாக்கித் தரத் திட்டமிடுகிறது. அதற்கு வாய்ப்பாகவே நிலத்தைக் கொடுக்கும் நடவடிக்கை. அல்லது நிலத்தை வாங்கலாம் என்ற ஏற்பாடு. இது சாத்தியமானால், நம் நாட்டின் மன்னர்களும் இளவரசிகளும் ஊழியர்களாகவும் நுகர்வோர்களாகவும் மாற்றப்படுவார்கள். காட்சி தொடங்கி விட்டது.

இதற்கமையவே, பாராளுமன்றத்திற்குள்ள நிதி தொடர்பான அதிகாரம் மத்திய வங்கிக்கு வழங்கப்பட்டது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். நிதிச் சபையின் அனுமதியின்றி நிதி தொடர்பான அதிகாரத்தை தனியார் துறைக்கு வழங்க அரசாங்கம் முன்வருவதும் இதற்காகவே என்றும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆகவே, அபாய மணியொலி கேட்கிறது என்பதே இன்றைய அவதானம். இதையிட்டு அவதானமாக இருக்க வேண்டும் என்பதே இந்த மணியொலியின் அடிநாதம்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.