வரு. 68 இல. 47

துர்முகி வருடம் கார்த்திகை மாதம் 05ம் நாள் ​​ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1438 ஸபர் பிறை 19

SUNDAY NOVEMBER 20, 2016

 

short stories

பகல் சாப்பாட்டுக்குக் கூட வாப்பா வரவில்லை. இப்படியொரு நாளும் சுணங்குவதில்லை. நேரம் செல்லச் செல்ல வீட்டில் ஒரே பரபரப்பு. காலையில் புறப்பட்டுப் போனவர் இன்னும் வீடு திரும்பவில்லை. பாடசாலைக்குப்போன மகன் அப்றாஸ் வந்து விட்டான். ஆனால் கூட்டிச் சென்றவர் வரவில்லை.

என்ன நடந்திருக்கும்? எங்கே போனார்?

உறவினர் வீடுகளுக்கெல்லாம் தொலைபேசி மூலம் கேட்டுப் பார்த்தாயிற்று. எங்கும் வரவில்லையென்ற பதில்தான். உறவுகள் ஒவ்வொருத்தருக்கும் செய்தி பரிமாறப்பட்டு அதிகமானவர்கள் என்ன நடந்ததென்பதை நேரடியாக அறியும் நோக்கில் ஒவ்வொருத்தராக வந்து சேர்ந்து விட்டார்கள். சாதாரணமாக ஒரு மரண வீடுபோலவே றினோசாவின் வீடு காணப்பட்டது.

கவலையை முகத்தில் காட்டியவாறு கூடியிருந்தவர்கள் தங்களது சிந்தனையில் தோன்றிய கருத்துக்களையும் பரிமாறத்தவறவில்லை. “கொண்டுபோன காசுமில்லை ஆளுமில்ல எங்க போயிருப்பாரு?” ஒருத்தர் கருத்தைக் கூறி ஆரம்பித்து வைத்தார். “காசிக்காக ஆரும் கடத்தியிருப்பானுகளோ?” இன்னுமொருவர் “காசத்தொலச்சிப் போட்டுத் தேடித்திரியுறாரோ ஞாபக மறதியுள்ள மனிசன்தானே” அடுத்தவர் “காசோட எங்கயும் ஆள் மாறிட்டாரோ” இப்படி வாய்க்கு வந்த வாறெல்லாம் ஆளாளுக்குக்கற்பனைக் குதிரையைத் தட்டிக் கதைகளைக் கட்ட விழ்த்து விட்டார்கள். ஆனால் இவைகளுக்கெல்லாம் செவிசாய்க்கும் நிலையில் றினோசா இல்லை “காசில்லாட்டியும் பரவால்ல, வாப்பா வந்திரிக்கலாமே! சுகமில்லாத மனுசன் காலயிலயும் ஒண்டும் சாப்பிடல்ல என்ன நடந்திச்சோ எங்கயிரிக்காரோ ஆண்டவனே” என்று புலம்பிய றினோசாவின் மனம் “எவ்வளவு கஷ்டப்பட்டு இருந்த நகையெல்லாம் ஈடுவெச்சிக் கேக்காதவங்களுக்கிட்டயெல்லாம் கேட்டுக்கடன் வாங்கி உருட்டிப் பிரட்டியெடுத்த மூணு லச்சம் காசிக்கு என்ன நடந்திச்சோ என்னன்டுதான் இரிக்கிற பிரச்சினகளால விடுபடப்போறேனோ” என்று பெற்ற தகப்பனுக்காக ஒரு புறமும் இழந்த பணத்துக்காக மறுபுறமும் இருதலைக் கொள்ளியெறும்பாய் றினோசாவின் மனம் துடித்தது.

நீண்ட காலமாக ஆசைப்பட்டு எடுத்த வாகனம் லீசிங் கட்டல்லண்டா கண்ட இடத்துல பறிச்சிட்டுப் போயிடுவானே! வங்கிக்கும் ஆளனுப்பிப்பார்த்தாயிற்று. அப்படியொருவர் வரவேயில்லையென்ற பதில்தான் வந்தது. வாகனத்துடன் தூரப்பிரயாணம் மேற்கொண்டிருக்கும் தனது கணவனுக்கு இந்தச் சம்பவத்தை இதுவரை அறிவிக்கவில்லை. சொற்ப நேரத்துக்கு முதல் கூட றினோசாவின் புருசன் தொலைபேசி மூலம் “வங்கியில காசி போட்டாச்சா?” என்று கேட்டதற்கு றினோசா நாக்குழறப் பச்சைப் பொய்யைத்தான் கூறினாள். “ஓ வாப்பாகிட்ட மூணுலச்சம் ரூபாயும் அனுப்பி வேங்குலபோட்டுட்டன்” கூறி முடித்தவுடன் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் எப்படிப்பட்ட மலைபோன்றதொரு விடயத்தை மறைத்துத் தனது கணவனிடமே பொய் கூற வேண்டியதாயிற்றே ஆண்டவனே என்டசீவனாவது போகக் கூடாதா நாளைக்குத் திரும்பி வந்தாருண்டா என்ட நிலம என்னவாகும்? மனம் எரிமலையாய்க் குமுறுவதை றினோசாவால் அடக்க முடியவில்லை. இப்படிப் பல்வேறு மனத்துயரங்களோடு றினோசாவின் வீடு அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது.

றினோசாவின் வாப்பா முஸ்தபா காலையில் எழுந்து தனது வழமையான கடமைகளை முடித்து விட்டுப் பேரன் அப்றாசைப் பாடசாலைக்குக் கொண்டுபோய்விட்டு வீதிக்கு வந்தபோது திடீரென மின்னல் தாக்கியது போல் ஒரு ஞாபகம். வீட்டிலிருந்து வெளியாகும் போது மகள் றினோசா வங்கியில் கட்டச்சொல்லித் தந்த மூணுலச்சம் ரூபாப் பார்சல் எங்கே? இருதயம் சில நொடிகள் நின்று விட்டு இயங்கியதுபோல இருந்தது. காலை வேளையாயிருந்த போதிலும் வியர்வையால் உடல் குளித்தது. தலைசுற்றியது, இறைவா இது என்ன சோதனை நானென்ன செய்வேன் அஞ்சா பத்தா பரவால்லண்டு உட்டுட்டுப்போறதுக்கு மூணுலச்சமாச்சே அந்தக் காசப் பிரட்டப்பட்டபாடு எத்தன நாளா எத்தன பேருட காலப்புடிச்சிச்சேத்த காசி. அறுத்துக் கழுவுன மீன் மாதிரி மகள் றினோசா அத்தன நகையும் வங்கியில ஈடு. என்ன செய்யப்போறன். இத எங்கண்டு தேடுவன். ஆண்டவனே!

முஸ்தபாவின் கண்களில் மாலை மாலையாகக் கண்ணீர். தான் வந்த பாதை முழுக்க ஓடி ஓடித் தேடினார். எங்குமில்லை. அதோ ஒரு பார்சல். ஆண்டவனே அதாகத்தானிருக்கணும். கண்களில் ஒளிபாய ஓடிச்சென்று தூக்கினார். ஏமாற்றம்தான், யாரோ வீதியால் சென்றவர்கள் தூக்கியெறிந்த பழைய பாண் பார்சல்தானது. அதைப் பார்த்தவுடன் இடுப்பு ஒடிந்ததுபோல் அந்த இடத்திலேயே உட்கார்ந்து விட்டார். மனம் முழுக்க ஏராளமான யோசனைகள். “ஒருவேளை மறந்து வீட்டிலேயே வெச்சிப் போட்டு வந்திட்டனோ? இல்லையே வீட்டைவிட்டு வெளியே வரும்போது காசிப் பார்ச்சல் என்ட கைல இருந்திச்சே நல்லா ஞாபகமிருக்கே” காசைத்தரும்போது மகள் றினோசா கூறிய வார்த்தைகள் கூட ஞாபகம் வந்தது. “வாப்பா இது நாம எடுத்த வாகனத்துக்கு லீசிங் கட்டுற காசி. மறந்திராமக் கவனமாய்க் கொண்டுபோய் சிலீப்பு நிறப்பி வெச்சிரிக்கன், வேங்குல போட்டுடுங்க” அத எந்த இடத்தில தவற உட்டேன். மீண்டும் மீண்டும் யோசித்து மூளையைக் குழப்பியவருக்கு எதுவுமே தட்டுப்படவில்லை. காலையிலிருந்து இதுவரை தான் செய்த செயல்களை மிகச் சிரமத்துடன் மீண்டும் ஒருமுறை மீட்டிப் பார்த்தார். “ஆஹா பாடசாலைக்கு முன்னால் உள்ள கடையில் பேரன் அப்றாசுக்குப் பேனை வாங்கினேனே அங்கு தான் வைத்திருப்பேனோ?” அட ஆண்டவனே இவ்வளவு நேரத்துக்கு யார் தூக்கிட்டுப் போனானோ தலைக்குள் பொறி தட்டியது. சுட்டெரிக்கும் வெயிலில் இளைக்க இளைக்க ஓடி வந்தவருக்கு அங்கும் காத்திருந்தது ஏமாற்றமே.

பொலிசில போய்ச் சொல்லுவமா அப்படிச் சொன்னாலும் எங்க தவறவிட்டன் எண்டு கேப்பாங்களே! எந்த இடமிண்டு சொல்லுவன்! ஆண்டவனே ஒரு அதிசயம் நடக்காதா? இந்தாங்க ஒங்கட காசிண்டு யாராவது நல்லவங்க கொண்டு வந்து தரமாட்டாங்களாயா! அல்லாஹ் இந்தக் கஷ்டத்தில இருந்து நீதான் என்னக்காப் பாத்தணும். மனம் இறைஞ்சியது கண்கள் அருவியானது.

வீதியால் போவோரெல்லாம் ஒரு விதமாகப் பைத்தியகாரனைப் பார்ப்பது போல பார்த்துக் கொண்டு சென்றார்கள். கையிலெடுத்து வந்த காசிக்கு என்ன நடந்ததென்பது இந்த நேரம் பார்த்து நாசமாய்ப்போன ஞாபகத்துக்கு வரமாட்டேனென்கிறதே. தலைசுற்றுவது போலிருந்தது. நாவறண்டது மரண வேதனையென்பது இதுதானோ? இப்படித்தான் கடந்த மாதம் ஒரு சம்பவம் மின் கட்டணம் செலுத்த வங்கிக்கு வந்து பார்த்தால் மின்பட்டியல் மட்டும் இருந்தது உள்ளே மடித்து வைத்த ஆயிரம் ரூபா மாயமாகிப் போனது. எங்கே தொலைத்தோமெனத் தேடித்திரிந்து வீட்டுக்கு வந்தவருக்கு ஆள்மாறி ஆள் வார்த்தைகளால் அபிஷேகம் செய்தார்கள். “வயசு போனா இப்படித்தான் கொண்டு போறகாசத் தொலைச்சிப் போட்டு வாறயாக்கும்” கட்டிய மனைவியின் சுடுசொற்கள்” அவருட காசின்டா பத்திரமாக் கொண்டு போயிருப்பாரு மத்தவங்கட இன்டதுக்காகத்தான். நாசமாக்கிப் போட்டு வந்திரிக்காரு” பெற்ற மகளே ஒரு ஆயிரம் ரூபாய்க்காக வாயினால் நெருப்பைக் கொட்டி விட்டுப்போனார். “ஒங்களுக்கு வேற ஆள் கிடைக்கல்லியா இந்தப் புத்தி மாறின மனுசன் கிட்டயும் குடுத்தனுப்பியிருக்கிறீங்களே ஒங்களச் செல்லணும் காசிட அருமதெரியுமா அவருக்கு” வேலைவெட்டியெதுவுமின்றி தண்டச்சோறுதிண்டு சும்மா வீட்டிலிருக்கும் மகனும் தனது பங்குக்கு வார்த்தைகளைக் கொட்டி விட்டுப்போனான். இவ்வளவு காலமும் எத்தன லட்சங்கள உழச்சி இந்தக் குடும்பத்துக்காக செலவழித்திருப்பேன்! வீடுவாசல் நகை நட்டென்று எவ்வளவத் தேடிக் கொடுத்திருப்பேன்! ஆனா இன்று ஒரு குற்றவாளியைப்போல நிற்கவைத்துச் சிறியது முதல் பெரியது வரை மிகக் கேவலமாகத் திட்டித் தீர்க்கிறார்களே! தலைகுனிந்து இத்தனை பேருடைய ஏச்சையும் பேச்சையும் கேட்க வேண்டியதாகிவிட்டதே! தேவையா இப்படியொரு இழிவான வாழ்வு மனம் விரக்தியின் உச்சத்தில் புலம்பியது ஆயிரம் ரூபாய்க்கே அவளவு அமர்க்களமென்றால், இது மூன்று லச்சமாச்சே! காசில்லாம வீட்டுக்குப் போனா நிற்கவைத்துக் கொளுத்தி விடுவார்களே ஆண்டவனே நானென்ன செய்வேன்!?

முஸ்தபா எழுந்து நடந்தார். ஆனால் கால்கள் தாமாகவே நடந்த பழக்கத்திற்கு நடந்தன. கண்கள் பார்த்த பழக்கத்திற்குப் பார்த்தன. அவ்வாறே ஒவ்வொரு உறுப்பும் நெடுநாளைய அனுபவத்தினடிப்படையிலேயே இயங்கினவே தவிர முஸ்தபா என்ற மனிதன் அவைகளை இயக்கவில்லை. காரணம் மனதால் மரணித்தவராக ஒரு நடைப்பிணமாக எங்கு போகிறோமென்பதோ இந்தப்பயணம் எங்கு முடியுமென்பதோ தெரியாமல் நடந்து கொண்டிருந்தார். ஒரு வாகனக்காரன். “ஏய் பெரிசு வீட்டுல சொல்லிட்டு வந்தியா? நீசாக என் வண்டியா கிடச்சது?” ஏசிவிட்டுப் போனான். அதுகாதில் விழுந்ததாகவே தெரியவில்லை, ஏன் என்றால் அவரின்று எல்லாவற்றயும் கடந்த ஒரு மோன நிலையில் உலகையே மறந்தவராக நடந்து கொண்டிருந்தார். அது இப்படியிருக்க எப்போதும் கலகலப்பாக இருக்கும் வீடு இன்று மரண வீடாக அனைவரது முகங்களும் கவலையை வெளிப்படுத்தியதாகச் சிதறுண்டு கிடந்தார்கள். இன்று சமையலுமில்லை சாப்பாடுமில்லை. பாடசாலை விட்டுவந்த அப்றாஸ் என்ன நடக்கிறது. இந்த வீட்டில் இவர்களுக்கெல்லாம் என்ன நடந்தது. ஒரு நாளுமில்லாத திருநாளாய் ஏனின்று அனைவரும் அழுதபடி காணப்படுகிறார்கள் என்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் குழம்பிப் போனாள். தனக்கு வரும் சந்தேகங்களை அப்றாஸ் கேட்டுத் தெரிந்து கொள்வது மூத்தவாப்பா முஸ்தபா விடமிருந்துதான். அவரையுமின்று காணவில்லையே! ஒருவேளை அவருக்குத்தான் ஏதாவது சுகமில்லாமல் ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறார்களோ? அப்படியிருந்தாலும் அதற்காக இவ்வளவு கவலைப்படமாட்டார்களே! ஸ்கூலுக்கு என்னக் கூட்டிப்போகக்குள்ள நல்லாத்தானே இருந்தாரு ஏனின்னு மட்டும் இந்த வீடு இவ்வளவு சோகத்தில் ஆழ்ந்திருக்கிறது என்று அந்த இளமனதில் ஆயிரம் கேள்விகள் அடுக்கடுக்காய் முளைவிட்டன. யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்வதென்று முடிவு கட்டிய அப்றாஸ் தனது தாயிடமே கேட்டுவிட்டான். “என்னம்மா நடந்த? நம்மட ஊட்டுல எல்லாரும் இப்படிக் கவலப்பட மூத்த வாப்பாவயும் காணல்ல, சாப்பாடுமில்ல?” அழுது கொண்டிருந்த றினோசா முந்தானைப் புடவையிலேயே மூக்கைச் சிந்திவிட்டு” ஏன்டா மகனே கேக்குறா அந்த அனியாயத்த! ஒங்க மூத்த வாப்பா செஞ்ச வேலயாலதான் நமக்கு இந்த நிலம. நாளக்கி ஒங்கவாப்பா வாற நேரம் நாம இரிக்கத்தேவல்ல உசிரோட” அப்றாசுக்கு ஒன்றுமே புரியவில்லை தலையைப் பிய்த்துக்கொண்டான். “காலைல நீ ஸ்கூலுக்குப் போவக்குள்ள ஒன்னோட மூத்த வாப்பாவும் வந்தல்லவா.

“ஓம் அதுக்கென்ன அவருதான் என்ன உட்டுப்போட்டு உடனே திரும்பி வந்திட்டாரே!”, “காலைல ஒன்ன ஸ்கூல்ல உட்டுட்டு வேங்குக்குப் போய்க்காசி மூணுலச்சம் ரூபாயும் கட்டிப் போட்டு வாங்கண்டு குடுத்தனுப்புன. இன்னும் ஆளுமில்ல, காசுமில்ல. தேடாத இடமுமில்ல எங்கதான் போனாரோ” தலையிலடித்துக்கொண்டு றினோசா ஒப்பாரி வைக்கத்தொடங்கியதும் “ஓம் மூத்த வாப்பா கைல ஒரு பார்சல் வெச்சிருந்தாரு என்னக் கூட்டிப் போய் ஸ்கூல் கேற்றடியில விட்டுப் போட்டு, எனக்குப் பேன வாங்கக்கடைக்குப் போனாரு. போகக்குள்ள கைல இருந்த அந்தப் பார்சல எனக்கிட்டத்தான் தந்தவரு. நான் அத என்ட ஸ்கூல் பேக்குலதான் வெச்ச. ஆனா மூத்த வாப்பா பேன யோடவரக்குள்ள பெல்லடிச்சிட்டுது. அதோட நான் பேனய வாங்கிக்கிட்டு வகுப்புக்கு ஓடிட்டன். பார்சல மூத்தவாய்ப்பாக்கிட்டக் குடுக்க மறந்திட்டன்.” அப்றாஸ் கூறி முடிப்பதற்கிடையில் அனைவரும் ஒரே குரலில்” இப்ப எங்கடா மகனே அந்தப் பார்சல்?” என்று ஓங்கிய சத்தத்துடன் ஓடி வந்தார்கள். “என்ட ஸ்கூல் பேக்குலதானிரிக்கி” மின்னல் வேகத்தில் புத்தகப்பை பிரிக்கப்பட்டது. வெளியில் நடக்கும் அல்லோலகல்லோலம் எதுவும் தெரியாத காசிப்பார்சல் புத்தகங்களோடு அமைதியாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. அதைக் கண்டவுடன் சோகத்தின் உச்சத்திலிருந்த வீடு மகிழ்ச்சியில் நிறைந்துவிட்டது. “நான் கேட்ட துவா வீண் போகல்ல” மூத்தம்மாவின் பெருமிதம். “என்ட ஆண்டவனே இப்பதான் எனக்குச்சீவன் வந்திரிக்கிடாமகனே” தாய் கூறிக்கொண்டே காசிப்பார்சலோடு அப்றாசைக்கட்டிக் கொண்டு மாறி மாறி முத்தமிட்டார். “அறவே ஞாபகமில்லாத மனிசன் எங்கண்டான துலக்கிப் போட்டுத்தான் திரியுறாராக்குமின்டு தான் நான் நினைச்ச” தந்தை முஸ்தபாவைப் பற்றி மகன் தெரிவித்த கருத்து.

தனது உத்தரவில்லாமலேயே தனது கால்கள் இவ்வளவு தூரம் இழுத்து வந்து ரயில்வேக்கடவயில் நிறுத்த மென்பதோ நிறுத்தியதோ முஸ்தபாவுக்கு விளங்கவில்லை. மனநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிந்தனை கவலை பயம் எதுவும் தோற்றாது. அப்படிப்பட்ட ஒரு நிலைக்கு இன்று முஸ்தபா ஆளாகி இருக்கிறார். புகையிரதக்கடவயில் ஏராளமான வாகனங்களும் மனிதர்களும் இருபக்கமும் காத்து நிற்க முஸ்தபாவின் கட்டுப்பாட்டை மீறிய அவரது உறுப்புக்களுக்குக் காத்து நிற்பதென்பது முடியாத காரியமாய் இருந்ததுபோலும் வீதிக்குக் குறுக்கே போட்டிருந்த தடையின் கீழால் குனிந்து கொண்டு தனது பயணத்தைத் தொடர எத்தனிக்கயில் புகையிரதப் பாதையின் நடுவே தன்னிலை மறந்தவராய் வந்து விட்டார். பாரிய ஒலியெழுப்பியபடி நெருங்கி வந்தது அதிவேகப் புகையிரதம். இருபக்கமும் நிற்பவர்கள் கூக்குரலிட்டனர். இவையெதுவுமே தனது காதில் விழாத வராய்த் தன்னைச் சுற்றியென்ன நடக்கிறதென்றறியாத நிலையில் ஒருசில வினாடிகளில் பல துண்டுகளாகிப்போனார். தனக்கு இப்படிப்பட்டதொரு மரணம் ஏற்பட்டதென்பது கூடத்தெரியாமல், புரியாமல் முஸ்தபா மரணித்துப் போனார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.