வரு. 68 இல. 47

துர்முகி வருடம் கார்த்திகை மாதம் 05ம் நாள் ​​ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1438 ஸபர் பிறை 19

SUNDAY NOVEMBER 20, 2016

 

 

2028 ஒலிம்பிக் கட்டாரில்?

2028 ஒலிம்பிக் கட்டாரில்?

உலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவாகக் கருதப்படும் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை இடம்பெறும் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள், எதிர்வரும் 2028ஆம் ஆண்டு கட்டாரில் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் தலைவர் தோமஸ் பெக் தெரிவித்தார்.நேற்றுமுன்தினம் கட்டாரில் இடம்பெற்ற சர்வதேச ஒலிம்பிக் சம்மேளன பொதுச் சபை கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்படி 2028 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் நாடுகளில் போட்டியிட கட்டார் எதிர்பார்த்துள்ள நிலையில், இதற்கு சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் ஆதரவு தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற சர்வதேச மெய்வல்லுனர் சங்கத்தின் பொதுக்கூட்டத்திலும் கட்டாரில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அதன் தலைவர் செபெஸ்டியன் கோ தெரிவித்திருந்தார்.

இதற்கு முன் வளைகுடா நாடுகள் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு முன்வந்திருந்தாலும்,அங்குள்ள வெப்பமான காலநிலையைக் கருத்திற்கொண்டு மறுக்கப்பட்டது. எனவே சர்வதேச ஒலிம்பிக் சம்மேளன அதிகாரிகள் இதுதொடர்பில் உரிய கவனம் செலுத்தி ஒலிம்பிக் கால அட்டவணையை மாற்றியமைத்து, அங்கு ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெற வழிசெய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

உலகின் கால்பந்து அரங்கின் மிகப் பிரமாண்ட திருவிழாவான பிபா உலகக்கிண்ண கால்பந்து போட்டிகள் எதிர்வரும் 2022ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெறவுள்ள நிலையில், 2019இல் உலக மெய்வல்லுனர் போட்டிகள் அங்கு நடைபெறவுள்ளது.எனினும், 2016 மற்றும் 2020 ஒலிம்பிக் போட்டிகளுக்காக கட்டார் விண்ணப்பித்த போதும், தவிர்க்க முடியாத காரணங்களால் மறுக்கப்பட்டது. எனவே 2028 ஒலிம்பிக் போட்டிகளுக்காக மறுபடியும் கட்டார் போட்டியிடவுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இதன்படி ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் முதலாவது அரபு நாடு என்ற பெயரை கட்டார் பெற்றுக்கொள்ளும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.