வரு. 68 இல. 47

துர்முகி வருடம் கார்த்திகை மாதம் 05ம் நாள் ​​ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1438 ஸபர் பிறை 19

SUNDAY NOVEMBER 20, 2016

 

 

41 வருட சேவையின் பின்பு ஓய்வுபெறும் திகலை அதிபர்

41 வருட சேவையின் பின்பு ஓய்வுபெறும் திகலை அதிபர்

வடிவாம்பிகை துரைராஜா

கே காலை தெஹியோவிட்ட திகலை தமிழ் வித்தியாலய அதிபர் திருமதி வடிவாம்பிகை துரைராஜா தனது நாற்பத்தொரு ஆண்டுகால ஆசிரிய சேவையின் பின்பு அண்மையில் ஓய்வு பெற்றார். சிறந்த நிர்வாக திறமை கொண்ட இவர், மாணவர்களையும், ஆசிரியர்களையும் சிறந்த முறையில் வழி நடாத்தி தான் கடமையாற்றிய பாடசாலையை உயர் நிலைக்கு கொண்டு வந்தவர்.

திருமதி வடிவாம்பிகை துரைராஜா தனது ஆசிரிய சேவையை 1975ஆம் ஆண்டின் இறுதியில் பின் தங்கிய கஷ்டப் பிரதேசமான கிளனஸ் தோட்டத்திலேயே ஆரம்பித்தார். பாடசாலை கட்டட வசதிகள் இல்லாது கிளனஸ் தோட்ட ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் மண்டபத்தில் வகுப்புகள் நடாத்தப்பட்டன. அதன் பின் மாணவர்களின் தொகை அதிகரிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரசின் ஒத்துழைப்பினால் பாடசாலைக்கென இரண்டு ஏக்கர் காணி பெறப்பட்டு எண்பதாயிரம் ரூபா செலவில் பாடசலை கட்டடம் நிர்மாணிக்கப்பட்டு அந்த கட்டடத்தில் வகுப்புகள் நடத்தக்கூடிய விதத்தில் பாடசாலை வளர்ச்சி கண்டது.

அதன் பின்பு கேகாலை வின்சிட் தமிழ் வித்தியாலயத்திற்கு மாற்றம் பெற்ற இவர், ஆசிரிய பயிற்சியை வெற்றிகரமாக முடித்துவிட்டு தெஹியோவிற்ற தமிழ் மகா வித்தியாலயத்தில் சித்திர ஆசிரியராக கடமையை தொடர்ந்தார். மாணவர்கள் சித்திரப் பாடத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்றதனால் 1994, 2001 ஆம் ஆண்டுகளில் சிறந்த ஆசிரியருக்கான விருதையும் பெற்றார். தெஹியோவிற்ற தமிழ் மகா வித்தியாலயத்தில் ஏறத்தாழ பன்னிரண்டு ஆண்டுகள் கடமையாற்றியதன் பின்பே அவருக்கு தெஹியோவிற்ற திகல தமிழ் வித்தியாலயத்தில் அதிபராக நியமனம் பெறும் வாய்ப்பு கிட்டியது.

இவர் அதிபராக கடமையை பொறுப்பேற்றபோது திகலை தமிழ் வித்தியாலயத்தில் தரம் 1 முதல் தரம் 5 வரையான வகுப்புகளுடன் அறுபது மாணவர்களுக்கு மூவர் ஆசிரியர்களாக கடமையாற்றினர். அதிபராக பொறுப்பேற்றதன் பின் பாடசாலையின் கல்வித்தரம் உயர்ந்ததால் மாணவர்களின் தொகை அதிகரித்ததுடன் பெற்றோர், நலன் விரும்பிகளின் முழுமையான ஒத்துழைப்பும் கிடைத்தது.

சப்ரகமுவ மாகாண சபை மூலம் பாடசாலைக்கு 80x20 அளவிலான புதிய கட்டடத்தை பெற்றுக்கொள்ளவும் முடிந்தது. பெற்றோரின் சரீர ஒத்துழைப்பு, நிதியுதவியுடன் தற்காலிகமாக வகுப்பறை கட்டடம் ஒன்றை பெறவும் பெற்றோரின் நிதியுதவியைக் கொண்டு பாடசாலைக்கென மின்சார வசதிகள் பெறப்பட்டதோடு மாகாண கல்வி அமைச்சினால் பாடசாலைக்கு குடிநீர் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டது. நான்கு அறைகளைக் கொண்ட கழிவறை கட்டடம் மற்றும் விளையாட்டு மைதானத்திற்கான காணி, பாடசாலையைச் சுற்றி முட்கம்பி வேலி போடப்பட்டதுடன், விளையாட்டு மைதானமும் செப்பணிடப்பட்டது. இந்த அபிவிருத்தி திட்டங்கள் மூலம் பாடசாலை வளமிக்க பாடசாலையாக உருவானது.

அதிபரின் சிறந்த வழிநடத்தலினால் பாடசாலையின் கல்வி கற்பித்த ஆசிரியர்களின் முழுமையான ஒத்துழைப்பு கல்வி கற்பித்தலின் மூலம் பாடசாலையின் கல்வித்தரம் உயர்ந்து தரம் பதினொன்று வரையிலான வகுப்புகளை நடாத்தும் அளவிற்கு வளர்ச்சி கண்டது. 2013, 2014ஆம் ஆண்டுகளில் நடாத்தப்பட்ட சமூக விஞ்ஞான போட்டிகளில் திகலை தமிழ் வித்தியாலய மாணவர்கள் முதல் இடங்களை பெற்றனர். அத்துடன் கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சையிலும் மாணவர்கள் சிறந்த முறையில் தனியார் பாடசாலைகளை நாடாமல் குறிப்பிட்ட பாடசாலையில் கல்வி கற்றே சித்தியடைந்தமை குறிப்பிடத்தக்கது. இங்கு இன்னும் முக்கியமான இரண்டு விடயங்களை குறிப்பிட்டே ஆகவேண்டும். வடிவாம்பிகை துரைராஜா நோய் வாய்ப்பட்டு மூன்று மாத காலம் விடுமுறையில் இருந்த சூழ்நிலையிலும் கூட அவர் மாணவர்களை தனது இல்லத்திற்கு வருவித்து கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதை அவரது பழைய மாணவர்கள் இன்றும் நினைவுகூருகின்றனர்.

ஆசிரியை வடிவாம்பிகை துரைராஜாவின் அர்ப்பணிப்புடன் கூடிய சேவைக் காலத்தால் அழிக்க முடியாத சேவை என்பது மறுக்க முடியாத கருத்து என்றால் அது மிகைப்படுத்தி குறிப்பிடும் கருத்தாக முடியாது என்பது திண்ணம். இத்தகயை பண்புகளை கொண்டவருக்கு இறைவனின் இன்னருள் நிச்சயம் கிட்டும்.

 

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.