வரு. 68 இல. 47

துர்முகி வருடம் கார்த்திகை மாதம் 05ம் நாள் ​​ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1438 ஸபர் பிறை 19

SUNDAY NOVEMBER 20, 2016

 

 

மத்திய மாகாண சபைக்கும் சபை ஊடகவியலாளர்களுக்கும் இடையே என்ன பிரச்சினை?

மத்திய மாகாண சபைக்கும் சபை ஊடகவியலாளர்களுக்கும் இடையே என்ன பிரச்சினை?

ச மீப காலமாக மத்திய மாகாண சபையின் சில உறுப்பினர்கள் மற்றும் அதன் தலைவர் ஆகியோருக்கும் மத்திய மாகாண சபை நிகழ்வுகளை ஊடகங்களுக்கு அறிவிக்கும் உடகவியலாளர்களுக்கும் இடையே கடுமையான முரண்பாடு ஏற்பட்டுள்ளது. சபை நிகழ்வுகளை ஊடகவியலாளர்கள் பகிஷ்கரிக்க, சபைக்கு வந்த ஊடகவியலாளர்களை எழுந்து வெளியே செல்லும்படி சபைத் தலைவர் உத்தரவிட என முறுகல் நிலை நீடித்து வருகிறது.

மத்திய மாகாண சபை பொது மக்களால் தெரிவு செய்யப்பட்ட சபை என்பதால் அச்சபையில் என்ன நிகழ்கிறது, என்னென்ன பேசப்படுகிறது என்பதை சபை உறுப்பினர்களைத் தெரிவு செய்த மக்களுக்கும் முழு நாட்டுக்கும் தெரிவிக்க வேண்டிய பொறுப்பு ஊடகவியலாளர்களுடையது. வாக்களித்த மக்களின் பிரதிநிதிகளாகவே அவர்கள் சபை நடவடிக்கைகளை அவதானிக்கிறார்கள். நடைபெறுவனவற்றை பக்கச்சார்பின்றி அறிவிக்கிறார்கள். சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழு, ஐக்கிய நாடுகள் சபை, ஜனநாயக நாடு என்ற வகையில் இலங்கை அரசாங்கம் ஊடகவியலாளர்களுக்கு வழங்கியிருக்கும் சட்டரீதியான சுதந்திரம் என்பனவற்றின் கீழ் ஊடகவியலாளர்களுக்கு உரித்துடைய கடமைகள், அறிவிக்கும் சுதந்திரம் என்பனவற்றை மீறுவதாக மத்திய மாகாணசபை தற்போது செயற்பட்டு வருவது வருத்தத்துக்குரியது. ஊடகவியலாளர்கள் பேரில் தவறுகள் இருப்பின் சபை அதனைச் சுட்டிக்காட்டலாம். பேச்சுவார்த்தை நடத்தி பிணக்குகளைத் தீர்த்துக் கொள்ளலாம். ஆனால் ஏட்டிக்குப் போட்டியான தற்போதைய நிலையை நீடிக்க விடுவது ஜனநாயக மரபுகளுக்கு முரணானது என்பதோடு சபை நடவடிக்கைகளை மக்கள் பார்வையில் இருந்து மறைப்பதற்கு சமனானதுமாகும்.

இந்த முரண்பாடு எவ்வாறு ஆரம்பமானது என்பதை வாசகர்களுக்கு எடுத்துச்சொல்ல விரும்புகிறேன்.

சபைத் தலைவர் உட்பட மத்திய மாகாண சபை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 58 ஆகும். இவர்களை மூன்று குழுக்களாகப் பிரித்து ரஷ்யாவுக்கு அழைத்துச்செல்ல முடிவு எடுக்கப்பட்டது. ஊடகவியலாளர்கள் இதை சுற்றுலா எனக் குறிப்பிட்டதோடு, மக்கள் பணத்தில் சபை உறுப்பினர்கள் சுற்றுலா செல்வது தவறு என்பதை ஊடகங்கள் வாயிலாக தெரிவித்திருந்தனர். மாகாணத்தில் நிறைவேற்றப்படுவதற்கான முக்கிய தேவைகள், குறைபாடுகள் இருக்கையில் மக்கள் பணத்தில் சுற்றுலாவா? என்று கேள்வி எழுப்பி இருந்தனர். இச்சந்தர்ப்பத்தில் முதல் குழு ரஷ்யாவுக்கு பயணமாகியிருந்தது.

இந்தச் செய்தி ஜனாதிபதியை எட்டியதும் அவரது உத்தரவின் பேரில் ஆளுநர் இதுபற்றி விசாரித்தார். இரண்டாவது குழு மறுநாள் புறப்படவுள்ள நிலையில் ஜனாதிபதியின் தலையீட்டால் ஆளுநர் அப்பயணத்தை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் இரண்டாவது குழுவும் புறப்பட்டுச் சென்றது. மூன்றாவது குழுவினரால் பயணத்தை மேற்கொள்ள முடியவில்லை. இதனால் உறுப்பினர்களுக்கு ஊடகவியலாளர்கள் மீது கோபம் ஏற்பட்டது. சபையில் தமது ஆத்திரத்தை வெவ்வேறு கோணத்தில் வெளிப்படுத்தினர். பதிலுக்கு ஊடகங்களும் சுற்றுலா செலவுகள் பற்றியெல்லாம் தேடி வெளியிட்டன. இந்த நிலையில் சபையின் மாதாந்த கூட்டம் ஒன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் 18 உறுப்பினர்கள் கூட கலந்துகொள்ளவில்லை. குறைந்தபட்சம் 18 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். முதற் குழுவினர் அதிகாலை 4 மணிக்கு வந்ததாலும் இரண்டாவது குழு புறப்பட்டுச் சென்றதாலும் சபையில் கோரம் இருக்கவில்லை.

இதனை ஊடகங்கள் சுட்டிக்காட்டின. கோரமில்லாத சபையில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிவித்தன. இதுவரை கோரமில்லை என சுட்டிக்காட்டும் உறுப்பினர்கள் கூட வாய்பேசவில்லை. எதிர்க்கட்சியினர் ஆளுங்கட்சியின் கோரத்தை கணக்கில் எடுக்காமல் கூட்டத்தினை நடத்தினர். ஊடகவியலாளர்கள் இதனை செய்தியாக வெளியிட்டனர். பதிலுக்கு பெயர்களைக் குறிப்பிட்டு உறுப்பினர்கள் விமர்சித்தனர். இதையடுத்து மாகாண சபைக்கூட்டம் நடத்துவதற்கு 10 இலட்ச ரூபா செலவிடப்படுவதாகவும் அவ்வாறிருந்தும் சபைக்கு உறுப்பினர்கள் சமூகம் அளிப்பதில்லை என்றும் ஊடகங்களில் செய்தி வெளியாகியது.

இதனால் கோபமுற்ற சபைத் தலைவர் 10 லட்சம் அல்ல; 77 ஆயிரம் மட்டுமே கூட்டம் நடத்த செலவாகிறது என்று குறிப்பிட்டதோடு அப்பணம் உணவுக்காகவே செலவிடப்படுகிறது என்றும் கூறினார். ஊடகவியலாளர்களும் அந்த உணவை உண்டுவிட்டு ஊடகங்களில் மாகாண சபைக்கு எதிராக செய்தி எழுதுகிறார்கள் என்று அவர் கூறியதால் ஊடகவியலாளர்கள் சபையை விட்டு வெளிநடப்பு செய்தனர். ஒருமுறை மகிந்த அபேகோன் சபைத்தலைவராக இருந்தபோது ஒரு சபைக்கூட்டத்தை நடத்த ரூபா 10 இலட்சம் செலவாகிறது என்றும் உறுப்பினர்கள் சமுகமளிப்பது போதாது என்றும் சபையில் தெரிவித்திருந்தார். இதுவே ரூபா பத்து லட்சம் செலவு எனச் செய்தி வெளியிட காரணமானது. ஊடகவியலாளர்கள் நிலைமை ஆளுநருக்கு தெளிவுபடுத்தினர். ஆளுநர் அடுத்த கூட்டத்திற்கு வாருங்கள் என்றார். சபைத் தலைவரிடமிருந்து அழைப்பு கடிதமும் தபாலில் ஊடகவியலாளர்களுக்கு கிடைத்தது. எனவே சபைக்கு ஊடகவியலாளர்கள் சமுகமளித்தனர். ஆனால் சபை தொடங்கும்போது சபைத்தலைவர் ஊடகவியலாளர்களைப் பார்த்து வெளியேறுமாறு உத்தரவிட்டார்.

சபையை விட்டு வெளியேறுமாறு சபைத் தலைவர் கூறியபோது அதற்கு அவர் ஒரு காரணம் சொன்னார். சபை நடவடிக்கை காலை பத்து மணிக்கு ஆரம்பமாகிறது. ஆனால் சபை உறுப்பினர்கள் பி.ப ஒரு மணிக்கு ஊடகவியலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உத்தேசித்துள்ளனர். ஆகவே சபையை விட்டு வெளியேறி ஒரு மணிக்கு வாருங்கள் என்பதே சபைத் தலைவர் வெளியேறுமாறு கூறியதற்கான காரணம். மூன்று மணித்தியாலங்கள் வெளியே காத்திருக்க முடியாது என்பதால் ஊடகவியலாளர்கள் கலைந்து சென்றனர். சபைத் தலைவர் விரும்பியிருந்தால் சபை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம். பின்னர் சபை நடவடிக்கைகளை ஊடகவியலாளர்களின் பிரசன்னத்தோடு நடத்தியிருக்க முடியும்.

இவ்வாறு சபைக்கும் சபைக்கான ஊடகவியலாளர்களுக்கும் இடையிலான முறுகல் தீர்வின்றி நீடித்துக்கொண்டிருக்கிறது. இதற்கு ஒரு முடிவு வந்து மத்திய மாகாண சபை நடவடிக்கைகள் மக்களுக்கு அறியத்தரப்பட வேண்டும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.