புத். 67 இல. 52

மன்மத வருடம் மார்கழி மாதம் 12ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ர.அவ்வல் பிறை 15

sunday december 27, 2015

 

 

அடிப்படை வசதிகள் இல்லாத அவல நிலையில் வலப்பனை மகாஊவா

அடிப்படை வசதிகள் இல்லாத அவல நிலையில் வலப்பனை மகாஊவா

இந்த நவீன காலத்திலும் அடிப்படை வசதிகள் இல்லாமல் தமது எதிர்காலத்தை தீர்மானிப்பது எவ்வாறு என்ற மனதாக்கத்துடன் வாழ்ந்து வருகின்றார்கள் மதுரட்ட பெருந்தோட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் வலப்பனை மகாஊவா தோட்ட மக்கள். இராகலையிலிருந்து 10 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள இத்தோட்டத்தில் 250ற்கு மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

தமது குடியிருப்புகள் வெள்ளையரின் காலத்தில் கட்டப்பட்ட குடியிருப்புகளாக இருப்பினும் அதனை தமது கடின உழைப்பின்மூலம் கிடைக்கும் வருமானத்திலும் ஊழியர் சேமலாப நிதியில் எஞ்சியுள்ள பணத்தைக் கொண்டு லயன் குடியிருப்புகளை புனரமைத்துக் கொண்டிருக்கின்றனர்.

மகாஊவா ஒரு வருடத்திற்கு முன் தோட்ட நிர்வாகத்தால் தேயிலைக் காணிகள் தேயிலை செடிகளின் எண்ணிக்கைகளின் அடிப்படையில் 800 தொடக்கம் 1500 தேயிலை செடிகள் தொழிலாளர் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

தேயிலைச் செடிகளைப் பராமரிப்பதற்கான முழுப் பொறுப்பும் தொழிலாளர்களைச் சார்ந்தது. பராமரிப்பு செலவீனங்களை அவர்களே பார்த்துக்கொள்ள வேண்டும். இத்தோட்டத் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதுடன் பறிக்கப்படும் தேயிலை கொழுந்து வேறு தோட்டங்களுக்கு அனுப்பப்படுகின்றது.

முன்னர் தோட்ட நிர்வாகத்தின் கீழ் இருந்தபோது தேயிலை மலைகளை மேற்பார்வை செய்வதற்கு உத்தியோகத்தர்கள் மற்றும் கங்காணிமார் இருந்தார்கள். தற்போது உத்தியோகத்தர்களோ, கங்காணிமாரோ இல்லாமல் தேயிலைச் செடிகளின் பராமரிப்பு சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதுடன் தேயிலை உற்பத்தியின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது.

இத்தோட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் பாதை, குடிநீர், வீடுகள் பற்றாக்குறை, வடிகாண்கள், மலசலகூடம் என சுகாதார அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. அரசியல்வாதிகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் எதுவும் கண்டுகொள்ளாத நிலையில் மிகவும் மோசமான நிலையில் தங்களது வாழ்க்கையை நகர்த்துவதாக இங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

தோட்ட நிர்வாகம் இங்கு வாழும் மக்களை அடிமைகள் போல நடத்துகின்றனர். இங்குள்ள மக்களை மனிதர்களாக எண்ணுவதில்லை. தோட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்பதோடு அதனை மீறும் பட்சத்தில் அவர்களை நசுக்கி வேலை வாங்குவதாகவும் இவர்கள் கண்ணீர்மல்க தெரிவிக்கின்றனர்.

அத்துடன் தொழிலாளர்களின் பிரச்சினைகளை சில தொழிற்சங்க தலைவர்களுடன் சமரச பேச்சவார்த்தைகளை நடத்திக்கொண்டு அவர்களுக்கு தேவையான வசதி வாய்ப்புகளை செய்துகொடுத்து விட்டு தங்களது தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் தோட்ட நிர்வாகம் செயல்படுவதாகவும் இவர்கள் மீது குற்றம் சுமத்தப்படுகின்றது.

இத்தோட்டத்தில் 300 பேர் தொழில் செய்தபோதும் எல்லா தோட்டத் தொழிலாளர்களிடமும் காணி பகிர்ந்து கொடுப்பதாக ஒப்பந்தங்களில் பலவந்தமாக கையொப்பங்களை தோட்ட நிர்வாகம் பெற்றுக்கொண்டதாகவும் இதில் 60 தொழிலாளர்கள் மாத்திரமே இத்திட்டத்தை எதிர்த்து குரல் எழுப்பியதாகவும் இவ்விடயம் தொடர்பாக அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் அறிவித்த போதிலும் எந்த ஒரு தொழிற்சங்க முக்கியஸ்தர்களும் முறையாக பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளாமல் தோட்ட அதிகாரியின் காரியாலயத்தில் கலந்துரையாடி தொழிலாளர்களை ஏமாற்றிவிட்டதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயத்தில் ஏனையோர் மௌனமாக இருப்பினும் 60 பேர் மாத்திரமே நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக போராடி வருவதால் தோட்ட நிர்வாகம் தம்மை பயமுறுத்தி பழிவாங்கும் முயற்சிகளை மேற்கொள்வதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர். தொழிற்சங்கங்களுக்கு தமது மாதாந்த சம்பளத்திலிருந்து சந்தா பணத்தை வழங்கி எவ்வித நன்மையும் ஏற்படவில்லை.

எனவே துயரங்களை புரிந்து கொண்டு மலையக அரசியல்வாதிகள் மௌனமாக இருக்காமல் இப்பிரச்சினைக்கு விடிவினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பது எங்களின் கோரிக்கையாகும்.

தாங்கள் படும் வேதனைகளை எங்களின் பிள்ளைகளும் படக்கூடாது என நினைத்தாலும் இத்தோட்டத்தில் தற்போது காணப்படும் நிலைமையை பார்க்கும்போது எங்களது பிள்ளைகளும் எங்களை போன்று வாழ வேண்டிய சூழ்நிலையே அதிகமாகவுள்ளது.

இத்தோட்டத்திலிருந்து மகாஊவா தமிழ் பாடசாலைக்கு சுமார் 5 கிலோமீற்றர் நடந்தே செல்ல வேண்டும். இப்பாதை போக்குவரத்து வசதிக்கு உகந்ததாக இல்லை. மிகவும் மோசமான நிலையில் உடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகின்றது. இப்பாதையினை புனரமைக்க எந்தவொரு அரசியல்வாதிகளும் முன்வரவில்லை. தற்போது எங்களுடைய பிள்ளைகள் பால் லொறிகளில் மிக சிரமத்துடன் பாடசாலைக்கு சென்று வீடு திரும்பும் அவல நிலை இருப்பது வேதனைக்குரிய விடயமாகும்.

எத்தனை தொழிற்சங்கங்கள் இருந்தபோதிலும் எங்களுடைய பிரச்சினைக்கு தீர்வு கிட்டியதாக இல்லை. தற்போது நல்லாட்சியில் அமைச்சராக இருக்கின்ற பழனி திகாம்பரம் அவர்கள் இப்பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுத்தருவார் என்ற நம்பிக்கையோடு எங்களுடைய பிரச்சினைகளை ஊடகங்களின் மூலம் வெளிப்படுத்தவதாக இவர்கள் தெரிவிக்கின்றனர். 

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.