புத். 67 இல. 52

மன்மத வருடம் மார்கழி மாதம் 12ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ர.அவ்வல் பிறை 15

sunday december 27, 2015

 

 

தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு தனியான புலமைப்பரிசில் திட்டம் அவசியம்

தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு

தனியான புலமைப்பரிசில் திட்டம் அவசியம்

திலகர் எம்.பி வேண்டுகோள்

இந்திய அரசாங்கத்தினால் வருடந்தோறும் பட்டப்படிப்புக்கான புலமைப்பரிசில் பரிசில்கள் வழங்கப்பட்டபோதும் அவை தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கிடைப்பதில்லை. அவர்கள் தங்களை இந்திய வம்சாவளியினர் என உறுதிப்படுத்தும் PIO, OCI சான்றுப்பத்திரங்களைக் கொண்டிராததன் காரணமாக இந்த வாய்ப்புகளை இழக்கின்றனர்.

இதனால் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு தனியான திட்டம் ஒன்றை வகுக்குமாறு இந்திய துணைத்தூதுவர் உடனான சந்திப்பில் இவ்வேண்டுகோள் விடுத்துள்ளதாக தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம். திலகராஜ் தெரிவித்துள்ளார்.

கண்டியிலுள்ள இலங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் துணைத்தூதுவர் திருமதி.ராதா வெங்கட்ராமனைச் சந்தித்தபோதே இவ்வேண்டுகோளை முன்வைத்ததாக அவர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கென க.பொ.த உயர்தரம் மற்றும் பல்கலைக்கழக பட்டப்படிப்பு ஆகியவற்றின்போது வழங்கப்படும் உதவித் தொகையான புலமைப்பரிசில் பயன்பெறுனராக தான் இருந்ததை தான் நன்றியுடன் நினைவு கூர்ந்ததுடன், CEWET (Cylon Estate Workers Education Trust) திட்டத்தின் அடுத்த கட்டமாக தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் இந்தியா சென்று பட்டப்படிப்பை மேற்கொள்ளும் வகையில் நிகழ்ச்சித்திட்டமொன்று அவசியம் என கேட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தற்போது வழங்கப்படும் புலமைப்பரிசில் திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. அவர்கள் தங்களை இந்திய வம்சாவளியினர் என உறுதிப்படுத்தும் PIO, OCI சான்றுப்பத்திரங்களைக் கொண்டிராததன் காரணமாக இவ்வாய்ப்புகளை இழக்கின்றனர்.

இதற்கு முன்னர் பலதடவைகள் இது குறித்து வலியுறுத்தி வந்தபோதிலும் அது சாத்தியமாகவில்லை. எனவே CEWET பயனாளிகளில் இருந்தே தன் தொடர்ச்சியாக இத்தகைய தனியான திட்டம் ஒன்று அமைவது பொருத்தமாக இருக்கும்.

இந்திய வீடமைப்புத் திட்டம் தொடர்பாக அண்மையில் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் பிரதி உயர்ஸ்தானிகர் பக்ஜியைச் சந்தித்து உரையாடினேன். எதிர்வரும் ஜனவரியில் அது நடைமுறைக்கு வரும் சாத்தியம் உள்ளது. அதனை துரிதப்படுத்த துணைத்தூதுவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளேன்.

ஹட்டன் தொண்டமான் தொழிநுட்ப பயிற்சி நிலையம் மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ள நிலையில் அங்கு கடமையாற்றும் இந்திய போதனாசிரியர்களின் சேவையை மேலும் ஒரு வருட காலத்திற்கு நீடிக்குமாறு கேட்டதற்கு தொடர்ச்சியாக ஏழு வருடங்கள் கடமையாற்றும் இவர்களை தொடர்ந்து சேவைக்கமர்த்துவதில் சில சிக்கல்கள் இருப்பதாக துணைத்தூதுவர் தெரிவித்தார்.

மாணவர்களுக்கு அப்பால் தொழில் செய்யும் மலையக ஆசிரியர்கள், தொழிநுட்பத் துறையினர், இளம் ஆய்வாளர்களுக்கு இந்தியாவில் குறுகிய காலப் பயிற்சிகளை புலமைப்பரிசில் அடிப்படையில் பெற்றுக்கொடுத்தல், மற்றும் இந்தியாவுக்கான ஈ விசா குறித்து மக்களை தெளிவுபடுத்தல் போன்றன குறித்தும் இந்தச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. 

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.