புத் 67 இல. 48

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 16

SUNDAY NOVEMBER 29 2015

 

 

சில மனிதர்களும் சில நியாயங்களும்

சில மனிதர்களும் சில நியாயங்களும்

ஆரணியின் மனசின் சத்தம் கொஞ்சம் வித்தியாசமாகவே இருந்தது.

ஆரணியை அவன் சந்தித்த நாளிலிருந்து அவள் அவனுக்கு மிக உயரத்தில் இருப்பதாகவே தோன்றுகிறது. தன்னால் அவளைப் பார்க்க மட்டுமே முடியும் என்று மட்டுமே அவன் நினைக்கிறான். காதலா என்றால் அவனுக்குப் புரியவேயில்லை. காதல் உருவானால் அதனை ஏற்றுக் கொள்ளும் மனநிலை உண்டா என்று பார்த்தால் அவனிடமிருந்து வெறும் சிரிப்பு மட்டுமே வருகிறது. அவனுக்கு அவனு டைய நிலை பரிதாபமாகவே படுகிறது. தன் தாய் தகப்பனைப் பார்க்கும் போ தெல்லாம் கூனிக்குறுகி விடுகிறான்.

தன்னுடைய கடந்த கால நடவடிக்கைகளுக்காகவும் தவறுகளுக்காகவும் உண்மையாகவே அவன் கவலைப்படத் தொடங்கிவிட்டான்.

இது காலங்கடந்த ஞானமா என்பதை காலம்தான் அவனுக்கு உணர்த்தவேண்டும். எவர்களையெல்லாம் தன் நண்பர்களாக நினைத்துப் பெருமைப்பட்டானோ இப்ப அவர்களைப் பார்ப்பதே பாவம் என்று நினைக்குமளவுக்கு மாறிப்போயிருந்தான்.

இந்த மாற்றங்களுக்கெல்லாம் ஆரணிதான் காரணமா?

அவனுக்குப் புரியவேயில்லை.

தாஸின் அப்பா அம்மா படாத துன்பம் இல்லை.

ஒரு ஆண்பிள்ளையைப் பெற்றுவிட்டு அவர்கள் பட்ட துன்பத்துக்கு அளவேயில்லை.

கூடாதவர்களோடை அவன் கூடிச் செய்த அட்டாதுட்டிகள் எல்லாம் இன்று

பூதாகரமாகப் பெருத்து அவனையே விழுங்கிவிடுமளவுக்கு

உள்ளதே என்றபோது அவர்கள் கலங்கியே விட்டார்கள்.

பெற்றவர்களின் இந்தத் துயரங்கள் தாசுக்குப் புரியாமலில்லை.

ஆனால் தான் விட்ட இந்தத் தவறுகளிலிருந்து எப்படி வெளிவருவது.

இது தான் இப்போ அவனுக்கு முன்னால் உள்ள வினா?

ஆரணியுடன் கதைத்தால் என்ன என்று மனம் நினைத்தது.

எப்படிக் கதைப்பது? ±என்ன கதைப்பது? ஆரணி தவறாக எடுத்து விட்டால் உள்ள

ஒரு நல்ல நண்பியையும் இழக்கவேண்டி ஏற்பட்டுவிடுமோ என்று பயந்தான்.

ஒரு மனிதன் நல்லவனாக வாழத் தொடங்கிவிட்டால் அவன்

முன்னால் ஏராளமான பயங்களும் ஐயங்களும் அணிவகுக்கத் தொடங்கிவிடும்.

இதற்குத் தாஸ் ஒன்றும் விதிவிலக்கில்லையே.

திடீரென்று தாசின் தொலைபேசி கிணுகிணுத்தது.

தொலைபேசியில் வந்தது ஆரணி. தாசிற்கு சந்தோசமாக இருந்தது.

தொலைபேசியை எடுத்துக் கதைத்தான்.

" என்ன தாஸ் சத்தத்தையே காணம். என்ன நடக்குது?" என்று ஆரணி கேட்டாள்.

" சும்மா இருக்கிறன். ஏன்ன செய்யிறதென்றே தெரியேல்லை ஆரணி .. உங்களுக்கு இப்ப எடுக்கலாமென்றுதான் இருந்தனான் அதுக்கிடையிலை நீங்கள் எடுத்திட்டியள்."

" அதென்ன நீங்கள் வாங்கள் என்று பன்மையிலை கதைக்கிறியள்." என்றாள் ஆரணி.

சிறிது நேரம் இதற்கு தாஸ் பதிலே அளிக்கவில்லை.

" ஏய் தாஸ் என்ன சத்தத்தையே காணம். இருக்கிறியா?"

"ஆரணி ஏனக்கிப்ப இந்தப் பிரச்சினையிலை இருந்து எப்படி வெளியிலை வாறதென்று புரியேல்லை. சுரியான குழப்பமாயிருக்குது. அம்மா அப்பா ஒரே யோசிச்சுக் கொண்டிருக்கினம். எனக்கு என்னை நினைக்கவே வெறுப்பாயிருக்குது."

"தாஸ் எதுக்கும் அளவுக்கதியமாய் யோசிக்கவேண்டாம். எல்லாம் நல்லபடியாய் நடக்கும். நீர் இப்பதான் பாதாளத்திலையிருந்து வெளியிலை வந்திருக்கிறீர். மெல்ல மெல்லத்தான் எல்லாம் நடக்கும். நீர் கொஞ்சம் பொறுமையாய் இருக்கவேணும்." என்று ஆரணி கூறியதும் தாசிற்கு மன ஆறுதலாய் இருந்தது.

ஆரணியைப் பொறுத்தவரை தாசின் பிரச்சினையில் ஏன் அவள் இவ்வளவு ஆழமாக ஈடுபடுகின்றாள் என்பது அவளுக்கே விளங்காத புதிராக இருந்தது.

ஆரணி ஒருவகையான புரட்சித்தன்மை கொண்டவள்.

அவளைப் பொறுத்தவரை பிரச்சினைகளை எதிர்கொள்ளாமல் தப்பிக்கொள்ளுதல் தவறு என்ற சித்தாந்தத்தை நம்புபவள். இதனால்தான் தகப்பன் தங்களைவிட்டு இலங்கைக்குப் போனபோது கொதித்தவள். தான் நாட்டை விட்டு தப்பி வந்தது தவறு என்றே சில சமயங்களில் நினைப்பவள்.

தகப்பன் தன்னுடைய பொறுப்புகளை தன்னுடைய சுயத்தை முன்னிறுத்தி தப்பி ஓடினவர் என்பது அவளது வாதமாக இருந்தது.

"சரி தாஸ் நான் பிறகு கதைக்கிறன்" என்று சொல்லிவிட்டு தொலைபேசியை வைத்து விட்டாள்.

கதவு தட்டிச் சத்தம் கேட்டது. தன்னுடைய அறைக்குள்ளிருந்து வெளியே வந்து எட்டிப்பார்த்தாள். தகப்பன் மற்றும் ஆதித்யா குடும்பம் உள்ளே வந்து கொண்டிருந்தார்கள்.

கதவைப் பூட்டிவிட்டு உள்ளே இருந்துவிட்டாள்.

உள்ளே வந்தவர்கள் இருந்து கதைக்க ஆதித்யா ஆரணி எங்கே என்று சைகை யால் தாயிடம் வினாவினாள்.

தாயும் அறையைச் சுட்டிக்காட்டினாள்.

அப்போ மகேந்திரம் எல்லாரையும் அமைதியாக இருக்கும்படி கூறிவிட்டு ஆரணி யின் அறையை நோக்கிச் சென்றார். எல்லோருக்கும் பயமாக இருந்தது. என்ன நடக்கப் போகுதோ என்று பயத்துடன் இருந்தார்கள். மகேந்திரம் எதையும் யோசிக்காமல் அமைதியாக ஆரணியின் கதவைத் தட்டிவிட்டுப் பதிலுக்குக் காத்திராமலே சட்டென்று கதவைத் திறந்து உள்ளே சென்றுவிட்டார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.