புத் 67 இல. 48

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 16

SUNDAY NOVEMBER 29 2015

 

 
religon - 02

செஞ்சோலைப் பட்டுடுத்து, செங்§¡ல் கரம்பிடித்து, மாமறையில் மாதவப் பயனால், மாசற்ற மாதவனின் பெரும்பணி ஏற்று, மாலை மதிபோல் தண்ணெழில் வதனம் கொண்டு, நேரு ஞானத்தென்றலில் புது உலகு காண, தெளிந்த உள்ளமதாய் திருஅசை முடிதரித்து, தூய்மையின் அணி பூண்டு, தாழ்மையின் தத்துவத்தை தனதென கொண்டு, மாதரசியா மகுடம் தாங்கிய மாமரியின் வாசகமான “அவர் உங்களுக்கு சொல்வதெல்லாம் செய்யுங்கள்” எனும் திருவார்த்தையை ஏற்று, நாவிற்கினிய பணியேற்கும் எம் பேரருட்திரு கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் இப்பெரும்பேற்றை தாங்கும் எம் இதயங்கள் ஆனந்த வெள்ளத்தால் பொங்கித் ததும்புகின்றது.

பணியின் வேந்தனாக, சிந்தனை முத்தாக, உறுதிமிக்க செயலாற்றல் பெற்று, நெஞ்சினில் வீரம் கொண்ட மதுர அருளாளனாய் திருமகன் திருவடியில் பணியேற்ற நேற்றைய பொன்னாளில் நறுமணம் கமழும் சந்தன மலர்களால் எம் ஆயர் மணியை வாழ்த்தி வரவேற்பதில் வடபுலம் சார்ந்து பேருவகை கொள்கின்றேன்.

தென்றலாய் வந்த சேதி

யாழ் மண்ணில் தனயன் பணியில் தலைவன் பொறுப்பேற்கும் எம் ஆண்டகை ஞானத்தின் பேராற்றல் பெற்று, நல்லிதயத்தை தன்னகத்தே அணி செய்து, பெருந்தன்மையுடன் யாழில் ஒளிரும் தீபமாய், ஆடம்பரமற்ற எண்ண உணர்வுகளுடன் மேடையிலே வீசிய கத்தோலிக்க பூங்காற்றாக உலா வருகின்றார். அறிவின் விசாலம் நெற்றியில் தெறிக்க, அன்பின் இதயமாய், தமிழ் கத்தோலிக்க சமூகத்தின் செஞ்சிற்கினிய நீதி வாசகமாய் பொன்னான புன்னகையுடன் அருட்பொழிவு பெறுகின்றார் எம் ஆயர் திலகம்.

மண்ணில் சிறப்புறு வேந்தனாய், கன்னி மரியின் அன்புச் சோலையில் மலர்ந்த நறுமண மலராய், கருத்துக் குவியலும், நகைச்சுவை சேர்ந்த பேச்சும், நேயமுடன் நல்லுறவை பேணும் மனித நேயரும் ஆவார். அறவழியை அச்சமறச் சாற்றிட ஆன்மீக குருத்தெறியும் வசனங்களை அள்ளித்தெளிக்கும் அன்பு நெஞ்சம் படைத்தவர். நற்பண்பும், நல்லோரிடம் காட்டும் நன்றிப்பிரவாகமும், உயர்ந்தோரிடத்தில் காட்டும் ஒப்பற்ற மரியாதையும், அனுபவ முத்திரைகளை நெஞ்சமெனும் குளிர்ச்செடியில் சேமித்து வைக்கும் மதியூகியாக, கரம்பொன்னின் மாணிக்கமாகக் கடவுளுக்குக் காணிக்கையாக்கப்பட்ட மெல்லிய பூங்காற்றே எம் ஆண்டகை ஆவார்.

வரலாற்று நதியின் வாரிசுகளில் பூத்த வெண்புறாவாக உள்ளத்தாலும், உருவத்தாலும் உயர்ந்து அருளாளராய், ஆசிரியராய், அதிபராய், பெருமதிப்பிற்கு உரியவராய், சிறந்த நாட்டுப்பற்றாளனாய், தேவபக்தியின் விடிவெள்ளியாய்த் திகழ்ந்தவர் நேற்று ஆயர் மகுடம் தாங்கினார் எனும்போது உலகமே பூரித்து நிற்கிறது.

நறுமணம் கமழும் ஆன்மிக நந்தவனம்

செயல்களில் செபமும், செபத்தில் நம்பிக்கையும், நம்பிக்கையில் உறுதியும் கொண்டு விசாலமான பணிக்காக இயற்கையுடன் இணைந்து வாழ அனைவரையும் அழைக்கும் நேச இதயம். எல்லோர்க்கும் பொதுவழி உண்டு - ஆனால் அது ஒரு புதுவழி எனப் புதுமை புகுத்தி யாழ். கத்தோலிக்க மக்களை விழிப்படையச் செய்து உலகத்தின் தீய சாயல்களைக் கசப்பாக்கி, தேவனிடத்தில் அவர்களின் சிந்தையை எழுப்ப இறையாசீர் பெற்று கால்பதித்தார்.

சுவை வாய்ந்த சொல்லாலும், பொருள் துலங்கும் மறையாலும் அற்புத ஆண்டவரின் பொற்பதத்தை ஒவ்வொரு கத்தோலிக்கனும் தொட வேண்டும் என்பதில் முற்றும் தன்னை அர்ப்பணிப்பவராவார். “நல்ல ஆயன் நானே ஆட்டு மந்தைக்கு வாயில் நானே” என இயேசுவின் வாசகங்களை கையில் ஏந்தி வளமுள்ள, வாசனையுள்ள அர்த்தமுள்ள வாழ்விற்கு கத்தோலிக்க திருச்சபையை அழைத்துச் செல்வார் என்பதில் ஐயமில்லை.

முன்னுள்ள நற்பணி வேந்தர்களான ஆயர்மணிகளின் வரிசையிலே கால்பதித்து தியானங்களும் திருத்தல யாத்திரைகளும், பல்சமய உரையாடல்களும், பண்பாட்டு மயமாக்கலும் பெற்று உச்சப் பயனை கத்தோலிக்க மக்களின் வாழ்வில் காணத்துடிப்பவர். திருமறைக்கு பெருமையூட்டி, தீரமூடன் அதிமதுர இயேசுவிற்குள் யாழ் திருச்சபையை எழிலுற அமைத்து ஆன்மீகத்தில் தழைக்கும் மக்கள் குலத்திற்காய் உழைக்கும் தவத்தூதன் இவரே. யாழ் மக்களின் ஆன்மிகத் தாக தொட்டில்களின் அருகே சென்று வெறுமைகளை பிரித்தெடுத்து எல்லோரின் உள்ளங்களும் இனிய தேவனின் மொழியில் வாத்தியம் ஒன்றை எடுத்து இசைக்க வேண்டுமெனும் பேராவல் கொண்டவராவர்.

தெய்வீக ஊற்றில் குருகுலத்தின் கருவூலம்

(படம் : சுமித்தி தங்கராஜா)

“வல்லமை பொருந்திய நல்லிதய குலமொன்றே குருகுலம்” என குருக்கள் எனும் பூஞ்சோலையை செங்கதிர் வீசும் தேவுலக தூதர்களாய் குறையற காக்கும் குலக்கொழுந்து. நற்பண்புடைத்தான நல்லூழியமே நன்மக்களை பிறப்பிக்கும் என்பதை இடித்துரைத்து நெறியாழ்கை செய்பவர். அன்பொழுக ஆலோசனைகள் பகர்ந்து, தயவுடன் இன்மொழிபேசி பரிசுத்தமும், இறைவனின் பேரிரக்கமும் ஆட்கொள்ள குருக்களின் தலைமகன் ஆனார்.

குருமணிகளை உருவாக்கி மெய்யியல், தத்துவ சாஸ்திரம், பிறமொழி அறிவு என்பவற்றால் அணி செய்து அருட்பணி சிறக்க ஆவன செய்வார். திருச்சபைத் தேரை குருத்துவத்தால் அலங்கரித்து சிலுவையின் வழி சிறப்புற செல்வார்.

“அரும்பணித்துறவிகள் இறைவனென்ற மலையில் ஊற்றெடுக்கும் நதிகள்” எனும் ஈழத்துத் தமிழ்ப் பேரறிஞர் செவாலியர் அமுதுப் புலவரின் வாசகத்திற்கு ஒப்ப தேவலோகத்தின் நறுமண செந்தாமரைகளாய், அமைதிக்கு வித்திடும் ஆன்மிகக் கனிகளான குருகுலத்தைக் காத்து விசாலப்படுத்தும் செயற்திட்டங்களைத் தமக்குள் வகுத்து வைத்து சலனமற்ற, தீர்க்க சிந்தையுடைய, ஈடாட்டமற்ற இறையுறவுச் சோலையாய்த் தளிர்க்க வைக்கும் கோல மலரே இம்முத்தான ஆண்டகை.

தமிழினத்தின் குரல்

இயேசுவின் மெய்யடியாரான எம் ஆண்டகை வட மண்ணில் உருவெடுத்து, வாழ்வினை வெறுத்து, கவலைத்தீயில் வெந்துருகிய ஆத்மாக்களின் அரவணைப்பில் தம் நினைவுகளை இழந்து வாடும் எம் தமிழ் மக்களுக்கு சிப்பியில் முத்தென, தக்க கோத்திரத்தில் பூத்த மலராய் கத்தோலிக்க தமிழ் மக்களிற்காய், இளையோரிற்காய் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

தீமை கண்டு பொறுக்காத வீர நெஞ்சம், அகத்தினில் களையறியா உருவும், மூர்க்கரை அணைத்து நுகத்தினை சுமக்கும் தன் சுகம் கருதாத போக்கும், துன்ப துயரங்கள் எரிமலையாய் வெடிக்க ஊமையான தமிழினம் தலைசாய்க்கும் வல்லமை பெற்ற தோளாகத் தெரிவானார்.

ஈழத்தமிழரின் குறிகாட்டியாக, கண்கண்ட துன்பங்கள், காதால் கேட்ட துயரங்கள், இதயத்தில் ஆழ வேரூன்றிய அதன் கீறல்களும், தாக்கங்களும் அகற்ற நெஞ்சத்தில் நிம்மதியாக, செதுக்குண்ட செம்மறியாக, தியாகத்தின் செம்மலாக, தமிழனுக்கு இடர்வந்தால் துடிக்கும் பிரிய குமாரனாக, கண்ணீர் துளிகளை பன்னீர்த் துளிகளாக மாற்றும் பெருந்தகை ஆவார். ஒவ்வொரு கணத்தையும் நன்மைக்குள் எவ்வாறு பயன்படுத்தலாம் எனும் சீரிய சிந்தையுடையவர்.

தமிழரின் சக்தியான பத்திரிகையாளர்களின் உள்ளங்களில் உறைந்திருந்து உலாவருபவர். உயரிய உள்ளத்தால் ஊடுருவிப் பாய்பவர் என்றால் சாலப் பொருத்தமானதாகின்றது.

சமூகச் சரிவுகளில் சாதுரிய சஞ்சீவி

தடம்புரண்டு சறுக்கிய சமூகத்திற்கு திடமளித்து எல்லையற்ற இறையருளால் நிறைவுற அன்பை விதைப்பதும், புதுப்பிப்பதும், மனிதர்களை மதிப்பதுமே இன்றைய காலத்தின் தேவை என உணர்ந்து சத்தியத்தை நிலைநாட்ட, திருவடி மறவாச் சீடனானார். மனித மாண்பை மதித்து, உரிமைகளைக் காத்து, மானிடத் தோழமையை வளர்க்கும் உறவுப்பாலமாவார். வெளிவேடம் நிறைந்த உள்ளங்களை வெண்பனியாக்குவார்.

நீதியை மார்புக்கவசமாக அணிந்து மனிதரின் வழக்குகளில் நீதியுடன் தீர்ப்பளித்து, கொடுப்பதற்கு அதிகம் பெறாமல், தன்கையால் அநீதி செய்யாமல், நியமங்களில் விலகாமல், காத்து “கொள்ளையடிக்கப்பட்டவனைக் கொடியோனிடத்தில் நின்று விடுவியுங்கள்” என்ற எரேமியாவின் வார்த்தையை பல வேளைகளில் நிஜப்படுத்தியவர். பொல்லாரின் அழிவான வழிகளையும், அதீத முறைமைகளையும் சரித்து நன்னெறி காட்டுபவரே இப்பெரும் குரவர்.

கடவுளின் பக்திப் பிரவாகத்தில் ஊறிய நல்லறிவுள்ள சமுதாயத்தை உருவாக்கும் பாரிய பொறுப்பு வாய்ந்தவர். சர்வாதிகார போக்குகளும், தொழிலாளர் உரிமைகள் மறுக்கப்படும் போதும், பொதுவுடைமை சின்னாபின்னமாக்கப்படும் போதும் கடும் குரல் கொடுக்கும் மனித மாணிக்கம். சமூக முன்னேற்ற பணிகளில் அவர் ஆற்றும் பணி காலத்தால் அழியாதவை ஆகும்.

அரசியலை அலசும் ஆன்மீக தென்றல்

அறமார்க்கங்களை ஆடையாய் அணிந்த அரியதுறவி. அரசியலில் ஆரவாரமற்றவராயினும் மனித நேயத்தை அரசியலூடே அலசிப்பார்ப்பதில் வல்லவர். அஞ்சா நெஞ்சுடையவர். இறைவனை நீதிபதியின் இடத்தில் நிலைநிறுத்தி, மேலைநாடுகளுடன் பேசி திருநிலைக்குரிய ஆன்ம இயல்புகளுடன் நல்லியக்க செயற்பாடுகளை மேற்கொள்பவர். நல்ஆட்சி அதிகாரங்கள் வீதிகளிலும் ஒழுங்கைகளிலும், மாட மாளிகைகளிலும், குடிசைகளிலும் சென்றடைய வேண்டுமென்பதில் நல்லெண்ணம் கொண்டவர். அறத்தின் சுரங்கமாய் அல்லும் பகலும் அரிய தொண்டாற்றும் உத்தம குரவர் இவரே.

இவ்விதமாக இறைவனின் இந்நிலம் காக்க அனைத்திலும் இடைவேளை அற்று “கேட்டது கிடைத்தது” எனும் வாக்கு ஏழைகளின் வரலாறாக வேண்டும். தூக்கி வீசப்பட்டவை நாட்டப்பட்டு தழைத்தோங்க வேண்டும். எம்மண்ணின் கத்தோலிக்க சமூகம் இறைவனின் இன்னொரு சாயலென பிரகாசிக்கப் பண்பெனும் குடியில் பூத்த இறைவனின் அரிய சொத்தானவர்.

பொன்னாடைகள் போர்க்கப்பட, மங்கள தாளங்கள் இசைக்கப்பட, செங்கம்பளங்கள் விரிக்கப்பட, மக்களின் உள்ளங்கள் ஆனந்தக் கண்ணீரால் பொங்கிப் பிரவாகிக்க ஆன்மீகத்தால் அவனியைத் தொட்டு “என் கடன் பணி செய்து கிடப்பதே” எனும் தாரக மந்திரம் சிம்மக்குரலில் சிதறிப்பரவ சூரிய உதயம் போல தாழ்மையுடன் பணியேற்கும் ஆயர் மணியின் வாக்குறுதியினாலே மாந்தர் இதயம் மகிழ்கின்றது.

“எண்ணித்துணிக கருமம்” என இனம், மதம், மொழி எனும் வேலிகளுக்கப்பால் துயர்களை துச்சமெனக் கொண்டு புண்ணிய பூமியைக் காக்கப் புதுப்புனலாகப் பூத்த புண்ணியவானின் மெய்க்கீர்த்திகள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. சங்க மரபுகளும், சரித்திரங்களும், வரலாறுகளும் பேசுகின்ற முன்னோர்களின் வரிசைக்கப்பால் புனித நாமம் பூண்டு பரமனின் பாதுகாவலில் யாழ். மண்ணின் பாரிய பொறுப்பைக் கையேற்ற நேற்றைய புனித நாளில் கத்தோலிக்க மக்கள் மட்டுமன்று, யாழ் மண்ணே ஆனந்தம் கொண்டது என்றால் அது மிகையாகாதது.

சிலுவையின் பாதையில், சத்தியத்தின் சாட்சியாக தன் பாதங்களை பதிப்பார் என்பதில் சற்றேனும் தளராத நம்பிக்கை கொண்டு வாழ்த்தி வரவேற்று ஆண்டகையின் இப்பெரும் பேற்றைப் போற்றி, இறையருளின் முத்தொளிர் இணையறப் பிரகாசிக்க வந்தனைகள் சாற்றி வாழ்த்துகின்றேன். வாழிய நீர் பல்லாண்டு!

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.