புத் 66 இல. 33

ஜய வருடம் ஆனி மாதம் 01ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் பிறை 20

SUNDAY AUGUST 17 2014

 

 
சர்வதேச யுத்த குற்ற விசாரணைக்குழு புஸ்வாணமாகி விட்டது?

சர்வதேச யுத்த குற்ற விசாரணைக்குழு புஸ்வாணமாகி விட்டது?

குற்றங்கள் இழைக்கப்பட்டால் விசாரணைகள் இடம்பெறுவது வழக்கம். ஆனால் தன்னிச்சையான விசாரணைகள் மற்றும் வெளி அழுத்தங்களுக்கு உட்படும் விசாரணைகள் சரியாக அமையாது. வெளிநாட்டவர்கள் உள்நாட்டு விடயங்கள் தொடர்பில் விசாரிப்பதும் பொருத்தமற்றது. அதுவும் உள்ளூர் அரசாங்க மற்றும் ஏனைய நிர்வாக அதிகாரிகளின் அனுமதியில்லாமல் மேற்கொள்ளப்படும் எந்தவொரு விசாரணையும் வெற்றியடையாது.

2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமைகள் மீறல் தொடர்பில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் ஒரு விசாரணைக்குழுவை நியமித்தது. இந்தக் குழுவிலுள்ள அங்கத்தவர்கள் குறித்து தெளிவான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. இந்தக் குழுவிலுள்ள அங்கத்தவர்களுக்கு இலங்கை பற்றி தெரியுமா என்பது கேள்விக்குறி. அதிலும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் போன்ற பிரதேசங்கள் பற்றி இவர்கள் தெரிந்திருக்க நியாயமில்லை.

இப்படியானவர்கள் விசாரணைகள் நடத்த முன்வந்தால் அதனை எந்த நாட்டின் அரசாங்கமும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. இலங்கையை பொறுத்தமட்டில் ஏற்கனவே ஒரு நிபுணர்குழு ஆணைக்குழுவாக நியமிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு மேலதிகமாக வெளிநாட்டிலுள்ள மூன்று விசேட நிபுணர்கள் இந்தக் குழுவில் உள்ளடக்கப்படவுள்ளனர். எனவே உள்ளூர் விசாரணைகளை நியாயமான முறையில் மேற்கொள்வதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சர்வதேச சமூகம் இந்த சந்தர்ப்பத்தில் இலங்கையின் உள்ளூர் விசாரணைகளை அங்கீகரிக்க வேண்டும்.

அதில் நம்பிக்கை கொள்ள வேண்டும். அதுவே இலங்கை முன்னெடுத்துச் செல்லும் நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு சிறந்த உந்துசக்தியாக அமையும். அதைவிடுத்து, உள்ளூர் விசாரணைகளில் குறைகண்டு அதற்கு மாற்றுத்தீர்வொன்றை மேற்குலக நாடுகள் முன்வைக்க முனைவது இலங்கையில் 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஒரு தடையாக அமையும். இதனை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் பல தடவைகள் வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்.

அதிகார பரவலாக்கலும்

தமிழ் கூட்டமைப்பின் நிலைப்பாடும்

2005ஆம் ஆண்டு தமிழ் மக்கள் பெரிதும் வாக்களிக்காத நிலையிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி பீடம் ஏறினார். தனக்கு வாக்களிக்காத போதிலும் அந்த மக்களின் துன்பங்களை நன்குணர்ந்து யுத்தத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்ற தீர்க்கமான முடிவோடு செயற்பாடுகளை முன்னெடுத்தார் ஜனாதிபதி மஹிந்த. அதில் வெற்றியும் கண்டார். அதன் பின்னர் இடம்பெற்ற 2010 ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் கணிசமான அளவு ஜனாதிபதிக்கு வாக்களித்திருந்தனர்.

இருந்தாலும், யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் கடுமையாக போர் புரிந்த முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்கும்படி தமிழ் மக்களுக்கு தமிழ்க் கூட்டமைப்பு அழுத்தம் கொடுத்தது. தமிழ் மக்களுக்கு பயனேதும் இதனால் கிட்டியதா? அல்லது சரத் பொன்சேகாவுக்கு தமிழ் மக்கள் மீது ஒரு பற்று இருந்ததா?

தமிழ் மக்களுக்கு இத்தனை கொடுமை செய்த தனக்கு இந்த மக்கள் எப்படித்தான வாக்களித்தார்கள் என்று அவர் எண்ணியிருக் கலாம். சரத் பொன்சேகாவுக்கு இது புரியாத புதிராக இருக்கிறது. இப்படியான பாவப்பட்ட ஜென்மங்களுக்கு வாக்களிக்கின்ற தமிழ் மக்கள் சற்று சுயமாக சிந்திருந்தால், நல்ல முடிவை எடுத்திருக்கலாம். முஸ்லிம்கள் இங்கிருக்க வேண்டியவர்கள் அல்லர், அவர்கள் சவூதி அரேபியாவிற்கு செல்ல வேண்டும் என்று தெரிவித்தவர் இந்த முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தான். தமிழ் மக்கள் இந்தியாவுக்கு செல்ல வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இவ்வாறான ஒருவருக்கு வாக்களிக்க கூறிய தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏதோ உள் நோக்கம் கொண்டது என்பது குறிப் பிடத்தக்கது. ஆனால் இப்பொழுது ஒரே நாடு என்ற கோட்பாட்டின் கீழ் ஒரு தீர்வை பெற்றுக்கொள்ள தயார் என்று பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஆனால் இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்படாத போதும் ஓர் ஆரோக்கியமான கூற்றாகும். ஆனால் இவற்றை கூட்டமைப்பினர் சொல்லளவில் மட்டும் வைத்திராமல் செயலிலும் காட்ட வேண்டும். முதலமைச்சர் விக்னேஸ்வரன் சர்வதேச ஆணைக்குழு முன் சாட்சி கூறப் போவது என்ற நிலைப்பாடு மத்திய அரசாங்கத்திற்கும் பிராந்திய அரசாங்கத்திற்கும் இடையில் விரிசலை ஏற்படுத்தும். எனவே கூட்டமைப்பு கூட்டுப் பொறுப்புடன் எதுவித முரண்பாடுகளும் ஏற்படாதவகையில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.

பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு!

தமிழ் கூட்டமைப்புக்கு எச்சரிக்கை

எமது பொறுமைக்கும் ஓர் எல்லை உள்ளது. எமது பொறுமையை எவராவது பலவீனமாகக் கருதினால் அதன் விளைவுகள் பாரதூரமாக இருக்கும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் பிரதானிகளை அண்மையில் அலரி மாளிகையில் சந்தித்து உரையாடிய ஜனாதிபதி ஊடகமொன்று எழுப்பிய பிரத்தியேனமான கேள்வி யொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே இவ்வாறு கூறினார்.

இனப் பிரச்சினைத் தீர்வு விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மீண்டுமொரு பேச்சுவார்த்தையை நடத்த அரசாங்கம் தயாராக உள்ளதா? என்ற கேள்விக்கே ஜனாதிபதி இவ்வாறு பதிலளித்தார். இனப் பிரச்சினைத் தீர்வு விடயத்தில் அரசாங்கம் இதய சுத்தியுடனேயே செயற்பட்டு வருகிறது.

பேச்சுவார்த்தை மூலமாகத் தீர்வு காண வருமாறு அரசாங்கம் தொடர்ச்சியாகப் பல தடவைகள் தமிழ் கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுத்து வருகின்றது.

இரண்டு தினங்களுக்கு முன்னர் கூட, அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் பாராளுமன்றத்தில் வைத்து நேரடியாக ஓர் அழைப்பையும் விடுத்திருந்தார்.

ஆனால் அவர்கள் இதுபற்றி அலட்டிக் கொள்வதில்லை. மாறாக தமக்குச் சார்பான தமிழ் ஊடகங்களில் தமக்குச் சார்பாக அறிக்கைகளை விட்டு தமிழ் மக்களை ஏமாற்றி வருவதுடன் அம்மக்களை அரசாங்கத்திற்கு எதிராகத் திருப்பவும் முயற்சித்து வருகின்றனர்.

இது ஆரோக்கியமானதல்ல. எமது பொறுமைக்கும் ஓர் எல்லை உள்ளது. எமது பொறுமையை எவராவது பலவீனமாகக் கருதினால் அதன் விளைவுகள் பாரதூரமாக இருக்கும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். தமிழ் ஊடகங்களில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழில் விட்டுவரும் அரசாங்கத்திற்கு எதிரான அறிக்கைகள் மற்றும் சர்வதேச விசாரணை தொடர்பாகத் தெரிவித்து வரும் கருத்துக்கள் வரவேற்கத்தக்கவை அல்ல. நாம் இந்தத் தீர்வு காணும் விடயத்தில் தமிழ்க் கூட்டமைப்பிற்கு பல சந்தர்ப்பங்களை வழங்கினோம். அவை எதனையுமே அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை.

அரசாங்கம் ஏதோ தமக்குத் துரோகம் இழைப்பது போலவும், தீர்வு காணும் விடயத்தில் அரசாங்கமே பின்னடிப்புச் செய்து வருவதாகவுமே பிரசாரம் செய்கின்றனர். இதனைத் தமிழ்க் கூட்டமைப்பு மாற்றிக்கொள்ள வேண்டும். தமிழில் அறிக்கை விட்டால் எனக்கோ அல்லது அரசாங்கத்திற்கு எதுவுமே தெரியாது என அவர்கள் நினைத்து வருகிறார்கள். அவர்களது ஒவ்வொரு அறிக்கைகளும் எம்மால் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருகிறது என்றும் ஜனாதிபதி கூறினார். அத்துடன் எமது தாய்நாட்டின் நலன் கருதி தமிழ் ஊடகங்கள் இவ்விடயத்தில் பொறுப்புடன் செயல்பட முன்வர வேண்டும் எனவும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.

அரசாங்கம் தவறு செய்தால் சுட்டிக்காட்டுங்கள். ஆனால் தமிழ்க் கூட்டமைப்பு போன்ற சில கட்சிகள் முன்வைக்கும் பொய்யான குற்றச்சாட்டுக்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண தமிழ் ஊடகங்களின் காத்திரமான பங்களிப்பு மிக அவசியம். தமிழ் ஊடகங்கள் நினைத்தால் தமிழ்க் கூட்டமைப்பை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு அழைத்துவர முடியும். அவ்வாறு செய்தால் நாட்டிற்கும், தமிழ் மக்களுக்கும் நன்மை செய்தவர்களாக இருப்பீர்கள் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். ஒவ்வொரு அறிக்கைகளும் எம்மால் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருகிறது என்றும் ஜனாதிபதி கூறினார்.

எவர் எதனைக் கூறினாலும், இதுவரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்திற்கும், பண்புக்கும், அறிவுத்திறனுக்கும், துணிச்சலுக்கும் சவாலாக எவரும் உருவாகவில்லை என்பதுதான் உண்மை.

உண்மை கசப்பானாலும் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.