புத் 66 இல. 33

ஜய வருடம் ஆனி மாதம் 01ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் பிறை 20

SUNDAY AUGUST 17 2014

 

 
இலங்கையில் ஆதிவாசிகள் வேகமாக அழிந்து வருகிறார்கள்

இலங்கையில் ஆதிவாசிகள் வேகமாக அழிந்து வருகிறார்கள்

தமிழ், சிங்கள கலப்புகொண்ட ஆதிவாசிகள் 40,000 பேர் வேடுவர்களாக வாழ்கிறார்கள்

உலகின் ஆதிவாசிகள் தினம் கடந்த வாரம் உலக நாடுகள் எங்கிலும் நினைவு கூரப்பட்டது. ஐக்கிய நாடுகள் அமைப்பே இந்தத் தினத்தை நினைவு கூருவது என்ற தீர்மானத்தை முன்வைத்து அதனை நடைமுறைப்படுத்தியது.

இலங்கையில் வாழும் ஆதிவாசிகளான வேடுவர்கள் இத்தினத்தைத் தங்கள் தலைவர் விஸ்வகீர்த்தி வனஸ்பதி ஊறுவரிகே வன்னிலா எத்தோவின் தலைமையில் வெகுவிமர்சையாக நினைவு கூர்ந்தனர்.

நாடெங்கிலும் வாழும் வேடுவர் குலத்தைச் சேர்ந்தவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்வை முன்னிட்டு வேடுவர் குலத்தின் தலைவர் வன்னிலா எத்தோ கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு மிகவும் சுத்தமான தேனை அன்பளிப்பு செய்தார். தியவதன நிலமே பிரதீப் இலங்கதெல வேடுவர் குலத்தின் இந்த அன்பளிப்பை தலதா மாளிகையில் பெற்றுக் கொண்டார். வேடுவர் குலத்தைப் பற்றி மகாவம்ச நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் இலங்கையில் ஐந்தாவது நூற்றாண்டில் இருந்து வாழ்ந்து வருவதாக வரலாற்று கல்வெட்டுக்களில் இருந்து தெரியவந்துள்ளது. இந்தியாவில் இருந்து தனது தந்தையினால் நாடு கடத்தப்பட்ட விஜயன் என்ற இளவரசன் 5 வது அல்லது 6வது நூற்றாண்டில் தனது எழுநூறு நண்பர்களுடன் புத்தளத்தை அடுத்துள்ள இலங்கை கரையில் அடியெடுத்து வைத்தபோது இந்த அழகிய இளவரசன் இலங்கையின் பூர்வீக மக்களான யக்ஷ குலத்தைச் சேர்ந்த குவேனி என்ற பெண்ணை மணந்ததகாவும், அவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் பிறந்ததாகவும் குவேனியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இளவரசன் விஜயன் குவேனியையும் அவளது பிள்ளைகளையும் இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள சிவனொளிபாத மலைக்கு அருகில் விரட்டிவிட்டதாக கூறப்படுகிறது.

அதற்குப் பின்னர் இளவரசன் விஜயன் தென்னிந்தியாவில் இருந்த அரச குமாரி ஒருவரை அழைத்து திருமணம் செய்து வாழ்ந்ததாகவும் மகாவம்ச நூல் சான்று பகர்கிறது. குவேனியின் பிள்ளைகளின் வழித்தோன்றல்களே இன்றைய வேடுவர் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது. ரொபட் நொக்ஸ் என்ற பிரிட்டிஷ் வரலாற்று ஆசிரியர் 17வது நூற்றாண்டில் வேடுவர்களை காட்டு மனிதர்கள் என்று வர்ணித்தார்.

அன்று வேட்டையாடி வாழ்க்கையை நடத்திய வேடுவர் சமூகம் இன்று படிப்படியாக கல்வி அறிவைப் பெற்று பொருளாதார ரீதியில் உயர்ந்து வருகின்ற போதிலும் அந்த சமூகத்தினர் தங்களை வேடுவர்கள் என்றும் ஆதிவாசிகள் என்றும் அழைப்பதில் பெருமைப்படுகிறார்கள். வேடுவர்களுக்கு என்று ஒரு தனியான மொழி இருக்கின்றது. அது சிங்களம் கலந்த வேடுவ மொழியாகும். தம்பானையிலேயே வேடுவர்கள் அதிகமாக வாழ்கின்ற போதிலும் அவர்கள் கரையோரப்பகுதிகளிலும், கிழக்கு மாகாணம், அநுராதபுரம் ஆகிய பகுதிகளிலும் அதிகமாக வாழ்கிறார்கள். இன்று வேடுவர்களின் மொழி இலத்தீன் மொழியைப் போன்று அழிந்து வருகின்ற போதிலும் இன்னமும் அவர்கள் அம் மொழியை மற்றவர்களுடன் பேசும் போது பயன்படுத்தி அம்மொழிக்கு உயிரூட்டி வருகிறார்கள். எங்கள் நாட்டில் பல்மொழி பேசும் வேடுவ சமூகத்தினர் இருக்கிறார்கள். கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்புக்கும் திருகோணமலைக்கும் இடைப்பட்ட கரையோரப் பகுதிகளில் வாழும் வேடுவர்கள் தமிழ் மொழியையே தாய்மொழியாகக் கொண்டுள்ளார்கள்.

தமிழ் பேசும் வேடுவர்கள் பெரும்பாலும் இந்து மதத்தையே பின்பற்றுகிறார்கள். கதிர்காமக் கந்தப் பெருமான் அப்பிரதேசத்தில் இருந்த வள்ளி என்ற பெண்ணை மணம் முடித்ததாகவும் அந்தப் பெண் வேடுவக் குலத்தைச் சேர்ந்தவர் என்ற நம்பிக்கையும் இருந்து வருகிறது. வேடுவர்கள் இப்போது பெரும்பாலும் சாரம் அணிந்து ஒரு துண்டை கழுத்தில் போட்டிருப்பார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு கோடரியை தங்களின் அடையாள சின்னமாக கழுத்தில் தொங்க விட்டிருப்பார்கள். வேடுவப் பெண்கள் முன்னர் மார்புக் கச்சை கட்டாதிருந்தாலும் இப்போது அவர்கள் மேலாடை அணியும் பழக்கத்தைக் கடைப்பிடித்துள்ளார்கள். வேடுவர் குலத்தைச் சேர்ந்த ஒரு மாணவன் கற்று பல்கலைக்கழகத்திற்குச் சென்று பட்டமும் பெற்றுள்ளதை வேடுவர் சமூகம் பெருமையாக கருதுகிறது. இந்தியாவில் இருப்பது போன்று பூர்வீகக் குடிகளுக்கு வேலைவாய்ப்பிலும், பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கொள்வதிலும் முன்னுரிமை அளிக்கும் சலுகைகள் எவையும் எங்கள் நாட்டில் பின்பற்றப்படவில்லை.

வேடுவர்களுக்கு மட்டுமே தம்பானைக் காட்டின் ஒரு பகுதியில் வேட்டையாடுவதற்கு அரசாங்கம் சட்டபூர்வமாக அனுமதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் ஆர். எல். ஸ்பிடன் என்ற வரலாற்று ஆசிரியர் வேடுவர் குலம் இன்று வேகமாக அழிந்து வருவதாக கூறுகிறார். இலங்கையில் அழிந்து வரும் ஆதிவாசிகளாக வேடுவர்கள் இன்று இனங்காணப்படுகிறார்கள். வரலாற்றுக் காலத்தில் வேடுவர் என்ற ஆதிவாசிகள் இந்தியாவில் தோன்றி அங்கிருந்து ஆபிரிக்கா, மடகஸ்கார், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு பரவியதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

இலங்கையில் ஜம்பதாயிரம் முதல் 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பலாங்கொடை மனிதன் என்ற மனித குலத்தில் இருந்தே ஆதிவாசிகள் தோன்றியதாக டாக்டர் ஸ்பிடன் தனது புத்தகத்தில் எழுதுகிறார்.

இவர் நடத்திய ஆய்வுகளின் மூலம் கற்காலத்தில் வாழ்ந்த வேடுவக் குடும்பங்களின் நீலா என்ற ஆதிவாசியின் தலைமையிலான வேடுவக் குடும்பங்களின் பரம்பரையை 1902ம் ஆண்டில் கண்டுபிடித்துள்ளார். ஆதிவாசிகள் பெரும்பாலும் தம்பன என்னும் இடத்திலும் பொல்லேபெத்த, ரத்துகல, திம்புலாகல போன்ற இடங்களிலும் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. ஆதிவாசிகள் அன்று தாங்கள் வேட்டையாடும் மிருகங்களின் இறைச்சி பழுதடைந்து போகாமல் இருப்பதற்காக அவற்றின் மீது தேனை தாராளமாகப் பூசுவார்கள். அதனால் பல நாட்களுக்கு மிருகங்களின் இறைச்சி பழுதடையாத நிலையில் இருக்கும்.

அவர்கள் அன்று பச்சை இறைச்சியை தேனோடு கலந்து உண்பார்கள். அதனால் அவர்கள் உடல் வலுவுடையவர்களாக இருந்தார்கள். காலப்போக்கில் நாகரீகம் வளர ஆரம்பித்த போது வேடுவர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் ஏற்பட்டன.

இன்று வேடுவர்கள் சாதாரண மக்களைப் போன்று சமைத்த உணவை உட்கொள்கிறார்கள். வேடுவர்கள் சாதாரண மக்களைப் போன்று மாற்றம் அடைவதற்கு சாதகமான சூழ்நிலைகள் உருவாகி இருக்கின்றபோதிலும் அவர்கள் தங்கள் குலத்தின் பெருமையை தக்கவைத்துக் கொள்வதன் மூலம் வருமானம் பெறலாம் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தம்பனைக்குச் செல்லும் மக்கள் வேடுவர்களிடம் இருந்து சுத்தமான தேனை வாங்கக்கூடியதாக இருக்கின்றது. அத்துடன் பிச்சையெடுக்காமல் இருந்தாலும் தங்களுடைய குலப் பெருமையை ஆயுதமாக வைத்து தங்களைப் பார்க்க வரும் மக்களிடம் இருந்து பணத்தை மிகவும் சாதுர்யமாக அறவிடக்கூடிய நிலையிலும் வாழ்ந்து வருகிறார்கள். 1939 ஆண்டில் வேடுவர்கள் மலேரியா நோயினாலும், இன்புளுவென்சா காய்ச்சலினாலும் பாதிக்கப்பட்டு இருந்தார்கள். இதனால் அவர்களில் பலர் மரணித்தார்கள். அரசாங்கம் எடுத்த குடிசன மதிப்பீட்டின் படி 1911ம் ஆண்டில் இலங்கையில் எல்லாமாக 5,300 வேடுவர்கள் இருந்தார்கள். இந்தத் தொகை 1946ஆம் ஆண்டில் 2,400 ஆக குறைந்தது பின்னர் அதி 1953ல் 803 ஆக் வீழ்ச்சி அடைந்தது.

1963ஆம் ஆண்டில் கலப்பற்ற 400 வேடுவர்களே இலங்கையில் இருந்தார்கள். இவர்களில் 121 குடும்பங்களைச் சார்ந்த வேடுவர்கள் தம்பனையில் வாழ்ந்தார்கள். ஆயினும் இன்று சிங்கள, தமிழ் கலவை உடைய 40,000 ஆதிவாசிகள் இலங்கையில் வாழ்ந்து வருவதாக அரசாங்க மதிப்பீடுகள் கூறுகின்றன.

... -

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.