புத் 66 இல. 33

ஜய வருடம் ஆனி மாதம் 01ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் பிறை 20

SUNDAY AUGUST 17 2014

 

அமைச்சர் டக்ளஸின் யதார்த்தமான கூற்று

அமைச்சர் டக்ளஸின் யதார்த்தமான கூற்று

அரசாங்க தகவல் திணைக்களத்தினால் கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட வடபகுதி ஊடகவியலாளருக்கான கருத்தரங்கில் கலந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்த யதார்த்தபூர்வமான கருத்து அக்கருத் தரங்கில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்களை மட்டுமல்ல முழு நாட்டிலுமுள்ள தமிழ் ஊடகவியலாளர்களையும் ஒரு கணம் சிந்திக்க வைத்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் அவர் தெரிவித்த கருத்து அடுத்த கணமே பல இணையத் தளங்களில் பிரதான செய்தியாகவும், அன்று மாலையே தொலைக்காட்சிகளில் முக்கிய செய்தியாகவும், அடுத்த நாள் காலையில் இலங்கையிலுள்ள அனைத்துத் தமிழ்ப் பத்திரிகைகளிலுமே முன்பக்கத்தில் முக்கிய செய்தியாகவும் பிரசுரிக் கப்பட்டமையானது அமைச்சரது கருத்தை சகல ஊடகங்களுமே ஏற்றுக் கொண்டுள்ளதையே குறித்து நிற்கின்றது.

நாட்டில் இடம்பெற்ற யுத்தத்திற்கும், அதன் காரணமாக ஏற்பட்ட மனித அவலங்களுக்கும் சில ஊடகங்களும் பொறுப்புக் கூற வேண்டும் என்ற உண்மையையே அமைச்சர் அங்கு தெரிவித்திருந்தார். தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்று கூடியிருந்த இடத்தில் வைத்து அமைச்சர் தெரிவித்த கருத்தை சபை யிலிருந்த அனைவருமே ஆமோதித்தவர்களாகவே காணப்பட்டனர். அதனால் தான் அங்கிருந்தவாறே தாம் கடமைபுரியும் அலுவலகங்களுக்கு அந்தச் சூடான செய்தியை உடனடியாகவே வழங்கியிருந்தனர்.

உண்மையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அக்கருத்தரங்கில் எந்தவொரு ஊடகத்தையும் விழித்தோ அல்லது பெயரைக் குறிப்பிட்டோ கூறவில்லை. ஆனால் அவர் கூறிய இக்குற்றச்சாட்டுக்கு உரித்தான ஊடகங்கள் கூட அவரது இந்த உரையை முழுமையாகப் பிரசுரித்திருந்ததைக் காண முடிந்தது. அவ்வாறு செய்யாதுவிட்டால் குறிப்பிட்ட செய்தியை பிரசுரிக்காத தமது ஊடகம் இக்குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்வதாக அமைந்துவிடும் என்பதால் அதனைக் கட்டமிட்டுப் பிரசுரித்திருந்ததைக்கூட அவதானிக்க முடிந்தது.

அமைச்சர் தேவானந்தா அடிக்கடி கூறிவருவது போன்று கடந்த காலத்தில் தமிழ் அரசியல் தலைவர்களும், தமிழ் ஊடகங்களும் விட்ட தவறே இன்று தமிழினம் இத்தனை கஷ்டங்களை அனுபவிக்கக் காரணமாகிவிட்டது. இன்று இவ்வளவு பட்டும்கூட திருந்துகிறார்களா என்றால் இல்லை என்பதே விடையாக உள்ளது. மேடைகளில் சில தமிழ் அரசியல்வாதிகள் தேவையற்ற வீரவசனங் களைப் பேச அவை அடுத்த நாள் தலைப்புச் செய்திகளாக பல தமிழ் ஊடகங் களில் வெளிவருகின்றன. இதனால் உற்சாகமடையும் அவர்கள் மேலும் மேலும் வீர வசனங்களை எடுத்து விடுகிறார்கள். இதனால் மக்கள் ஏமாற்றப்படுவதுடன் இளைஞர்கள் தூண்டப்படுகிறார்கள். இதுவே இன்று நடக்கிறது.

யதார்த்தத்தையும், உண்மையையும் கதைத்தால் அதற்கு முக்கியத்துவம் இல்லை. ஒற்றுமை, சமாதானத்தைப் பற்றிப் பேசினால் அதற்கு இடமில்லை. ஆர்ப்பாட்டம், ஹர்த்தால், ஆக்ரோஷமான பேச்சு என்பவைக்கே ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றன. அபிவிருத்தி, வேலைவாய்ப்பு, புனர்நிர்மாணம் பற்றிய செய்திகளை வேண்டா வெறுப்பாக ஏனோதானோ எனப் பிரிசுரிக்கும் நிலையே வடக்கில் காணப்படுகின்றது. வடக்கில் மட்டுமல்ல முழு நாட்டிலுமே பல தமிழ் ஊடகங்களில் நிலை இதுவாகத்தான் உள்ளது.

ஓரிரு ஊடகங்கள் மட்டுமே உண்மையை வெளிப்படுத்தி நாட்டில் ஐக்கியமும், சமாதானமும் நிலைபெறப் பாடுபடுகின்றன. ஆனால் அத்தகைய சமூகப் பொறுப்புடனும், நாட்டுப் பற்றுடனும் செயற்படும் ஊடகங்களுக்கு அரச சார்பு ஊடகங்கள் என இனவாதத்தைக் கக்கும் ஊடகங்களால் பெயரிடப்படுகின்றது. நாட்டின் இறைமை, நாட்டு மக்களது ஒற்றுமை என்பவற்றுக்கு எதிராகச் செயற் படுவோரைக் கண்டித்தால் ஊடகச் சுதந்திரத்திற்கு எதிராகச் செயற்படுவதாகக் கொடி பிடிக்க முற்படுகிறார்கள். இந்நிலையை மாற்றியமைக்க வேண்டும்.

விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் அவர்கள் விட்ட எந்தவொரு தவறையும் பல தமிழ் ஊடகங்கள் சுட்டிக்காட்டியதே கிடையாது. மாறாக அவர்களது தவறையும் சாதனை எனப் பாராட்டியே வந்தன. இதனால் புலிகள் தமது உண்மையான பலம் என்னவென்று தெரியாமலேயே ஊடகங்கள் கொடுத்த உற்சாகத்தினால் தம்மைத் தாமே தவறாக வழிநடத்திச் சென்று இறுதியில் அதே ஊடகங்களுக்குத் தலைப்பு செய்தி ஒன்றைக் கொடுத்துவிட்டு மடிந்து விட்டார்கள்.

வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில்கூட புலிகளை உற்சாகப்படுத்தும் வகையில் செயற்பட்ட பல தமிழ் ஊடகங்கள் இன்றும் எம்மத்தியில் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. இராணுவத்தினர் உண்மையிலேயே முன்னேறிச் சென்று கொண்டிருக்கையிலும் அதனைப் பொய் என்று கூறிய சில ஊடகங்கள், கிளிநொச்சி நகரைப் படையினர் முழுமையாகக் கைப்பற்றி அந்நகரின் பெயர்ப்பலகையை தொலைக்காட்சியில் காண்பித்த பின்னரும்கூட அதனைப் பொய் என்று கூறி வாதிட்டு புலிகளை உற்சாகப்படுத்தி அங்கு அகப்பட்டிருந்த அப்பாவி மக்கள் சிலரது அழிவிற்குக்குக் காரணமாகவும் இந்த ஊடகங்கள் இருந்துள்ளன. இதனையே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சூட்சுமமாகத் தெரிவித்துள்ளார். முன்னர் விடுதலைப் புலிகள் பற்றிய செய்திகளைப் பிரசுரித்தாலே தமது ஊடகங்கள் மக்கள் மத்தியில் பிரபல்யமாகும் எனும் மனநிலை காணப்பட்டது. இன்று தமிழ்த் தேசியம், தமிழ்க் கூட்டமைப்பு பற்றிய செய்திகளைப் போட்டாலே மக்கள் பத்திரிகைகளை வாங்குவார்கள், தமது வானொலிகளில் ஒலிபரப்பாகும் செய்திகளைக் கேட்பார்கள், தமது தொலைக்காட்சிச் செய்திகளைப் பார்ப்பார்கள் எனும் மனப்போக்கு சில ஊடக நிறுவனங்களிடம் காணப்படுகின்றன. இது வேதனை தரும் விடயம். இதனை மாற்றியமைக்க வேண்டும்.

முப்பது வருட கால ஆயுதப் போராட்டத்தால் கண்டது எதுவுமில்லை. ஐந்து வருட கால ஆயுதமில்லாப் போராட்டத்தாலும் கண்டதுவும் எதுவுமில்லை. போராட்டங்கள் இருந்தால் செய்திகளுக்கு பஞ்சமிருக்காது என்பதற்காக ஊடகங்களும், போராட்டங்களை நடத்தினாலேயே தமது அரசியல் வாழ்வைத் தொடரலாம் என நினைக்கும் தமிழ் அரசியல்வாதிகளும் இருக்கும்வரை தமிழினத்திற்கு தீர்வு என்பது எட்டாக் கனியாகவே இருக்கும். அதனால் இதனை நிச்சயமாக மாற்றியமைக்க வேண்டும்.

கடந்த வாரம் ஜனாதிபதி அவர்கள் தமிழ்க் கூட்டமைப்பை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்திருந்தார். ஆனால் அதனை குழப்பும் வகையில் சில ஊடகங்கள் அது குறித்து தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களிடம் கருத்துக் கேட்டு அடுத்த நாளே ஏட்டிக்குப் போட்டியாக செய்திகளை வெளியிட்டிருந்தன. ஜனாதிபதியின் அழைப்பை சம்பந்தன் ஏற்பது குறித்து யோசித்திருந்தால்கூட அதனை ஏற்க விடாது தடுப்பது போன்றே சில ஊடகங்களின் செயற்பாடு அமைந்திருந்தது.

இத்தகைய விடயங்களை மனதில் வைத்தே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது கருத்தை ஊடகவியலாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார். அவரது கருத்தை சகல ஊடகங்களும் குறிப்பாகத் தமிழ் ஊடகங்கள் மனதிற் கொண்டு எதிர்காலத்திலாவது செயற்பட முன்வர வேண்டும். அமைச்சர் தெரிவித்த கருத்திற்கு கொடுத்த முக்கியத்துவத்தை இனிவரும் காலங்களில் நாட்டின் இறைமைக்கும், நாட்டு மக்களது ஒற்றுமைக்கும் கொடுக்க வேண்டும். குறிப்பாக முப்பது வருட கால யுத்தம் காரணமாக துவண்டுபோயிருக்கும் வடக்கு கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்களது வாழ்வு மலர அரசாங்கம் செய்துவரும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். அதேபோன்று இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்திலும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தது போன்று தமிழ் ஊடகங்கள் தமது காத்திரமான பங்களிப்பைச் செய்ய முன்வர வேண்டும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.