புத் 66 இல. 33

ஜய வருடம் ஆனி மாதம் 01ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் பிறை 20

SUNDAY AUGUST 17 2014

 

கற்புண்ணி...

கற்புண்ணி...

சிவானந்தன், நந்தினியை அப்படி இப்படி விரும்பிய ஒருவனல்லன். அவளின் உள்ளங்களில் இருந்து உச்சந்தலைவரை அணு அணுவாக ரசித்தவன்; ரசித்தவன்.

ஒரே கிராமத்தில் பிறந்துவளர்ந்ததும்; ஒரே பாடசாலையில் சேர்ந்து உயர் வகுப்புவரை கல்வியை கற்றுக் கொண்டதால் இருவருக்கும் ஒருவரை ஒருவர் நன்றாகவே தெரிந்தும் இருந்தது.

வயதும் ஏற, பருவமும் பூரிக்க, வகுப்புகளும் உயர்ந்து கொண்டிருந்த காலத்தில் பாடசாலை நாடகம் ஒன்றில் நாயகன் நாயகியாக இருவரும் இணைந்த சகுனம் அவர்கள் இடையில் உறவையும் உருவாக்கி விட்டது.

சிவானந்தன் நல்ல குரல்வளம் வாய்ந்தவன். பாடசாலை கலை நிகழ்வுகளில் அவனது பாடல்கள் களைகட்டும் அவனின் சிருங்காரக் குரல் இனிமையில் நந்தினி கிறங்கிவிடுவாள்.

சிவானந்தனும் நந்தினியைப் பின்னும் முன்னும் துரத்திக் காதலிக்கவும் ஆரம்பித்தான். பாடசாலையை விட்டு விலகிய பின்னாகவும் சிவானந்தன் இசைக் குழுவொன்றில் இணைந்து பாடிவந்தான்.

அந்தச் செல்வாக்கைப் பயன்படுத்தி நகரசபை அலுவலகத்தில், எழுதுவினைஞன் வேலையிலும் இணைந்து கொள்ளும் வாய்ப்பையும் பெற்றிருந்தான். இவ்விதம் கூடிவந்த வாழ்க்கை நீரோட்டத்தில் நந்தினியையும், முறைப்படி பெண் கேட்டுதிருமணம் செய்து கொள்வதில் எவ்வித விக்கினமும் ஏற்பட்டு விடவில்லை.

விரும்பியவர் சேர்ந்தால் கேட்கவும் வேண்டுமா? இல்லறம் இனிதாகவே அமைந்து ஆறு ஆண்டுகளில் மூன்று பிள்ளைகளின் பெற்றோராக சேர்ந்தும் கொண்டிருந்தது.

குடும்பத்தில் அங்கத்தின் தொகை அதிகரிக்க, அதிகரிக்க உழைப்பையும் அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. லிகிதர் வேலை மற்றும் இசைக் குழுவில் பாடகராகக் கிடைக்கும் ஊதியங்களைக் கொண்டு வாழ்ந்த போதும், வரவுக்கு மேற்பட்ட செலவுகள் வாழ்க்கையை இறுக்கியது.

இன்னமும் கூடுதலாய் உழைப்பதற்கு இரவுகளில் நீண்ட நேரம், வேறும் இசைக்குமுக்களுடன் இணைந்து கொண்டாலே இயலும் என்னும் நிலையில் சிவானந்தன் புதுப்புது இசைக் குழுக்களுடன் சேர்ந்தும் பாடத் தொடங்கி இருந்தான்.

மாநகர சபை ஊழியத்தைப்பகலில் முடித்துக் கொண்டு, கிடைக்கின்ற பொழுதுகளில் நித்திரை செய்வதால் இரவுகளில் கோஷ்டிகளுக்குச் சென்று விட்டு அதிகாலையே வீடு திரும்புவான்.

“எனக்கினி உங்களுக்கு உழைச்சுப் போட ஏலாது நந்தினி...” திடீரென சலித்துப் போய் சிவானந்தன் கூறியது; அவளது சிந்தனையில் இடி விழுந்தது போல அமைந்தது.

“என்ன சொல்றியள்... உங்களுக் கென்ன பைத்தியமே... நாங்க தூக்கின சிலுவையை நாங்கதானை சுமக்க வேணும்...” என்றாள் நந்தினி.

“அதுதான் நான் செய்தபிழை அப்ப பைத்தியமாத்தான் திரிஞ்சன்... இளமைத் துடிப்பில அவசரப்பட்டு கல்யாணத்தைச் செய்து போட்டன்...” இவ்விதம் அலுத்துக் கொண்டான்.

சிவானந்தன் சொன்னதிலும் நியாயம் இருந்ததை அவள் உணர நேரமாகவில்லை. ஐந்து, பத்து வருடங்கள் உழைத்துச் சேர்த்து வைத்துக் கொண்டு வாழ்க்கையில் இணைந்திருந்தால் இந்த நெருக்கடிகள் தோன்றி இராதென்பது உண்மைதான்.

‘கண்கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம்’ செய்வது முடிந்த காரியமா? அதையெல்லாம் சிந்திக்காமல் அவசரப்பட்டு கலியாணத்தைச் செய்து கொண்டதால் தோன்றிய வினையாமோ!

சிவானந்தனும், நந்தனியும் கல்யாண பந்தத்தில் இணைந்த காலங்களில் வாழ்க்கைச் செலவுகள் இப்பொழுது அதிகரித்து விட்டது போன்று உயர்ந்திருக்கவும் இல்லையே!

“என்ன செய்யிறதுபாருங்க... அந்த நாளேல சும்மாவா சொல்லி வைத்தாங்க கால் கட்டு வாய்க்கட்டு என்று... ஒடித்துப் பிடித்துப் பிள்ளைகளை வளர்த்தெடுக்க வேண்டிது எங்கட கடமைதான்...” ஒப்புக்கு நந்தினி இதையே சொல்லவும் முடிந்திருந்தது.

சிவானந்தன் பாடிவந்த ஐந்துக்கும் மேற்பட்ட இசைக் குழுக்களில் புதிதாக மரியம் என்னும் பாடகியும் சேர்ந்து பாட வந்து கொண்டிருந்தாள். சிவானந்தனை விடவும் பத்து வயதுகள் இளமையான அவளின் குரல் வளம் சிவானந்தனின் இணை ஜோடியாகப் பாடுவதில் மிகவும் பொருத்தமாக இருந்ததால் நிகழ்ச்சிகளில் இருவரும் அடிக்கடி சேர்ந்து பாடுகின்ற வாய்ப்புகளும் அமைந்து வந்தன.

சிவானந்தனுக்கு நடுத்தரத்திற்கும் சற்றே அதிகரித்த வயதாகினும் இன்னமும் இளமைக் கவர்ச்சி அகன்று விடவில்லை. மரியத்துக்கு சிவானந்தனின் குரலில் ஏற்பட்ட மையல் அவனது உருவத்திலும் சிறிது சிறிதாகப்படரத் தொடங்கியது.

மரியத்தின் பார்வை பேச்சுகள் போன்ற இன்னோரன்ன செயற்பாடுகள் சிவானந்தனை காந்தமாக பற்றிப் பிடிக்கத் தொடங்கியது. நந்தினி பிள்ளைகள் தோன்றி மனத்தராசில் தாழ்ந்து காட்டினாலும், மரியத்தின் புதிய வசீகரக் காதல் தராசின் மறுதட்டில் உயர்ந்து சமன் செய்தது.

மனைவி, பிள்ளைகள் என்னும் தாக்கம், அவர்களுக்கு வாழ்நாள் பூராகவும் உழைத்துக் கொடுத்து மீட்சி ஏற்படப் போவதில்லை என்னும் சிந்தனை மரியத்தின் அரவணைப்பில் சுகபோகத்தை அனுபவிக்கத் தூண்டியதில் வியப்பில்லை.

“ஐயோ இனி நானென்ன செய்வன்... மூண்டு பிள்ளைகளேம் மறந்து அறுவான் குளியோட ஓடி விட்டானே...” நந்தினி பிலாக்கணம் வைத்தும் நாள் மாறி வாரம் கழிந்து மாதங்களும் ஒடி மறைந்து கொண்டிருந்தது.

“ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்” கழியக் கணவன், தன்னிடம் திரும்பி வந்திடுவான் எனக் காத்திருந்ததுதான் நந்தினிக்கிடைத்த தலை எழுத்து.

பிள்ளைகள் மூன்றையும் வளர்க்க சகேரதங்களின் உதவிகள் மட்டும் அமையாதெனத் தெரிந்து கொண்டவள் ஊரில் வசதி படைத்த வீடுகளில் தொட்டாட்டு வேலைகள் செய்வதுடன் தனக்குப் பெற்றோர் கொடுத்திருந்த தோட்டக் காணியிலும் சிறுபயிர் வளர்த்து வாழ்க்கையை நகர்த்தி கொண்டிருந்தாள்.

மரியத்துடன் புதிய வாழ்க்கையை பிணைத் திருந்த சிவானந்தனுக்குத் தேனிலவுக்குக் குறைவிருக்கவில்லை. இருவரும் மேடைகளில் சேர்ந்து பாடுவது போன்றே இல்லியலில் இன்பத்தின் அடிக்கரும்பை மாந்திக் கழிப்பதில் சுகம் அனுபவித்துக் கொண்டிருந்தனர்.

கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த மரியத்தை அவளது சமய ஆசாரப்படி கிறிஸ்தவம் படித்து, ஞானஸ்தானம் பெற்று ஒழுங்காகக் கைப்பிடித்துக் கொண்டான். இவதுவரை இந்துவாக வாழ்ந்த சிவானந்தன். இப்பொழுது அவனுடைய பெயர் ஸ்ரனி. (கதை சொல்லி வாசகர் புரிந்து கொள்வதற்காக சிவானந்தன் என்னும் பெயரையே வழங்குகிறார்.)

ஆசையும், மோகமும் முடியத் திரும்பி வருவான் எனக் காத்திருந்த நந்தினிக்கு இனியவன், கசந்தவனாகி திரும்ப மாட்டான் என்னும் எதார்த்தமும் புரியத் தொடங்கியது.

மாதச் சம்பளமும், இருவரும் சேர்ந்து இசைக் குழுக்களில் பாடும் வருவாயும் சிவானந்தன். மரியம் வாழ்வை வளப்படுத்திக் கொண்டிருந்தன. ஒரு நேரம் சாப்பிட்டு, இரு நேரங்கள் பட்டினி கிடந்தும் மூன்று பிள்ளைகளையும் வளர்த்தெடுக்க துலாபாரத்தை சுமந்தாள் நந்தினி.

மரியத்துக்கும் இரண்டு பிள்ளைகள் வந்த பின்பாக மேடைகளில் பாடுவதை நிறுத்த வேண்டிய நிலைமை தோன்றியது. சிவானந்தன் மட்டும் மாநகர சபை வேலையையும் பார்த்து, இசைக்குழுக்களுக்குப் பாடச் சென்றும் உழைத்த வருவாயில் வாழ்க்கை ரதம் சில்லெடுக்கத் தொடங்கியது.

“மரியம் இப்பெல்லாம் புதுப்பொடியங்கள் பாடத் தொடங்கியிட்டாங்கள்... அதால என்னையும் ஓரங்கட்டப் பாக்கிறாங்கள்...” சிவானந்தன் சொன்னது அவனது இயலாமையை மரியத்துக்குக் கட்டியம் கூறிவைக்கவும் தவறவில்லை.

“அப்படித்தான எல்லாம் நானும் பாடிக் கொண்டிருந்தன்... இப்ப என்னைக் கூடப்பிடுவாங்களா... புதிசாப் பெட்டையள் பாட வந்திட்டாளவை... அதோட இப்பத்தேப் பாட்டுகளும் அப்படி... எங்களால பாட முடியுமே...” சிவானந்தனின் மனமும் சோர்ந்து போகாமல் இருக்க இவ்விதம் சொல்லி வைத்தாள் மரியம்.

மரியத்தில் பெற்றோருடன் ஒட்டிக் கொண்டிருந்த வீட்டில் இவர்களுக்கு சீதனம் இன்னமும் எழுதிக் கொடுக்கப் படவில்லை. இதனிடையே அரியாலை கிழக்கில் பூம்புகார் பகுதியில் தரிசு நிலங்களைப் பங்கிட்டு வழங்குவதாகத் தகவல் கிடைத்தது.

மாநகர சபையில் நீண்டகாலமாக வேலை செய்வதாலும், சொந்தமாகக் காணி இல்லாமையாலும் இவர்களுக்கும் இரண்டு பரப்புக் காணித்துண்டு கிடைத்தது. பூம்புகாரில் வழங்கப்பட்டகாணிகளைப் பெற்றவர்கள், குடியேறி வாழ உதவி வழங்கும் நிறுவனம் ஒன்று அரைச்சுவர் அமைத்த வீடுகளை அமைத்துக் கொடுக்க முன்வந்தது. அவ்வாறு அமைத்த வீடுகளில் காணி கிடைத்திருந்த மக்கள் குடியேறிவாழத் தொடங்கி இருந்தனர்.

சிவானந்தனும், மரியமும் புதிதாகக் குடியேறிய குடும்பங்களில் ஒன்றாகினர். பூம்புகாருக்குக் குடிபோன பின்னர் மாநகர சபைக்கு வேலைக்கு வந்து போவதும், கோஷ்டிகளுக்குப் பாடச்செல்வதும் அவனுக்கு ஹிமாலயப் பிரச்சினையாகவே மாறிவிட்டது.

“வேலையை விட்டுட்டும் ஒண்டுஞ்செய்யேலாது... இன்னும் கொஞ்சக் காலம் வேலை செய்தால் பென்ஷன் வந்திடும்... அதுவரைக்கும் போய்த்தான் வரவேணும்...”

சிவானந்தனின் உடலும், வயதின் முதிர்ச்சியால் தளர்ந்து வந்ததை மரியத்துக்கு வேறொருவர் சொல்லியா தெரிய வேண்டும்?மரியத்தின் இளமை முறுக்குக்கு சிவானந்தனால் இப்பொழுதெல்லாம் ஈடு கொடுக்க முடிவதில்லை.

“அம்மாணே... அப்பா எங்களை விட்டுப்போக இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு எங்கள வளத்தீங்க... அவருக்குக் கடவுள் சரியான பாடத்தைக் குடுக்க வேணும்...ஓ...”

சிவானந்தன், நந்தினியை விட்டுப் போய் பதினைந்து வருடங்களும் கடந்து விட்டன. அப்போ ஆறே வயதாக இருந்த மூத்தவன் தயாபரன் இளந்தாரியாக வளர்ந்திருந்தான். அவனுடைய வாயில் இருந்து வந்த சூடான வார்த்தைகளை இடைமறித்தாள் நந்தினி.

“தயா அப்படிச் சொல்லாத. எல்லாம் எங்கட தலையெழுத்து... இல்லாட்டி எவ்வுளவோ அன்பாயிருந்த அவர் விட்டுட்டுப் போறேண்டா சும்மா இருக்கே...”

நந்தினியும் பிள்ளைகளும் வந்த கஷ்டங்களை எல்லாம் தாக்குப் பிடித்து இன்றைக்கு நிமிர்ந்து நிற்க எந்த மனித சக்திகளும், காரணமாக இருக்கவில்லை என்பது அவளது நம்பிக்கை!

பூம்புகாரில் குடியேறி வாழ்ந்த குடும்பங்களில் இவர்களின் பக்கத்து வீட்டுக் காரன் சந்திரன், வயதான தாய், தங்கையுடன் வந்ததிருந்தான். கூலி வேலை செய்யும் அவனுக்கு அங்கே வேலைகள் கிடைத்துக் கொண்டிருந்தன.

வேலைகள் இல்லாத நாட்களில் பொழுதைப் போக்க சிவானந்தன் வீட்டுக்கு வந்துபோவதும் வழக்கம். வேலைக்குப் போகும் போதே சிவானந்தன் இரண்டு பிள்ளைகளையும் பாடசாலைக்குக் கூட்டிப்போய் வரும்போது கூட்டி வருவான்.மரியம், பகலில் வீட்டில் தனியே சமையல் மற்றும் வேலைகளில் ஈடுபட்டு இருப்பாள். சந்திரனும் வேலை இல்லாது விட்டால் மரியத்துடன் வந்திருந்து அரட்டை அடிப்பான். சிவானந்தனுக்கு இந்நிகழ்வுகள் தெரிய வந்ததும் சிந்திக்க தொடங்கினான்.

நெருப்பும், பஞ்சும் கிட்ட இருந்தால் தீப்பற்ற நேரமா செல்லும்? சந்திரனுக்கும், மரியத்துக்கும் புதிய உறவு தோன்றி தலைக்குமேல் வெள்ளம் போனது போலாகி இருந்தது. சந்திரனும், மரியமும், சிவானந்தனுக்கு முன்பாகவே கணவன், மனைவியாக வாழ்வதை அவனால் தடுத்துவிடவும் முடியவில்லை.

தலை முழுகி விட்டதாக நினைத்த கணவன் பதினாறு வருடங்கள் கழிந்த பின் பாகத்தன்னைத் தேடி வருவான் என்றே நினைத்திராத நந்தினி முன்பாக வந்து நின்றான் சிவானந்தன்.

“ஆரிது...” தாயிடம், தயாபரன் கேட்டான். நந்தினி எதுவும் பேசாமல் குலுங்கிக் குலுங்கி அழத் தொடங்க இருந்தாள். இன்னமும் புரிந்து கொள்ளாமல் இருக்கத் தயாபரன் குழந்தையில்லை.

“ஓ... விளங்குது... இதுவரையும் உங்கட முகம் தெரியாமல் வளந்திட்டம்... இனியும் வாழ்வம்... இப்ப ஏன் வந்தனீங்க... போங்க போய் விடுங்க...” சிங்கமாகக் கர்ச்சித்தான் தயாபரன்.

சிவானந்தன் மனைவி நந்தினியின் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்தான். எதிர்பார்த்திராக நந்தினி பதறிப் போனாள். முந்தானையால் முகத்தைத் துடைத்துக் கொண்டு கணவனடியில் அமர்ந்தவள் குரல் வைத்தாள்.

“தயா ஒண்டும் பேசாதை... அங்காலபோதாயின் உறுதியான வார்த்தைகளைக் கேட்டு திக்கித்து நின்றான் அவன். வெளியில் போய் வந்த தம்பி, தங்கையும் வீட்டுள் நடக்கும் காட்சிகளைப் பார்த்து முகங்களில் பூரிப்புத் தோன்ற வந்து சேர்கின்றனர்.

“என்னை மன்னிச்சிடுங்கோ... எனி நானுங்களை விட்டுப் போக மாட்டன்...” சிவானந்தனின் வார்த்தைகளில் பட்டறிவு பட்டுத்தெறித்தன. கீழ்வானம் மெல்லச் சிவக்கத் தொடங்கியது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.