புத் 66 இல. 33

ஜய வருடம் ஆனி மாதம் 01ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் பிறை 20

SUNDAY AUGUST 17 2014

 

 
ஆயரின் செயற்பாடுகளில் அதிருப்தி

அன்பு, அருளாசி, காருண்யம், பாவமன்னிப்பு, ஒற்றுமை, சமாதானம் - இவையே ஒரு மதகுருவின் கடமைகள்;

ஆயரின் செயற்பாடுகளில் அதிருப்தி

காணாமற்போனோரின் உறவுகளின் மன உணர்வுகளை மழுங்கடிப்பதாக வசனம்

கலாநிதி தங்கராசா குற்றச்சாட்டு

நாட்டில் சமாதானத்தையும் இன ஐக்கியத்தையும் விரும்பும் தமிழ் மக்கள், வடபகுதியைச் சேர்ந்த மதிப்புக்குரிய ஆயர் ஒருவரின் அண்மைக்கால செயற்பாடுகள் குறித்துத் தமது அதிருப்தியுடன் மிகுந்த கவலையையும் வெளியிட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கலாநிதி வேல்முருகு தங்கராசா தெரிவித்துள்ளார். முப்பது வருடகால அழிவில் சிக்குண்டிருந்த மக்கள் இப்போது அதிலிருந்து மீண்டு வந்திருக்கையில் அம்மக்களை ஆசுவாசப்படுத்தி அன்பைப் போதிக்க வேண்டிய ஒரு மறை மாவட்டத்தின் ஆயர் ஏதோ அரசியல் கட்சியின் அரசியல் வாதி போன்று நடந்து கொள்வது தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் வருத்தம் தருவதாக அமைந்துள்ளதாகவும் தங்கராசா தெரிவித்தார். அத்துடன் குறிப்பிட்ட ஆயரின் செயற்பாடுகள் தெற்கில் பெரும்பான்மை சிங்கள மக்களுடன் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வரும் தமிழ் மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் ஊடகங்கள் இந்த உண்மையைப் புரிந்து கொள்ளாது ஆயர் ஏதோ கின்னஸ் சாதனை செய்வது போல முன்பக்கத்தில் தலைப்புச் செய்திகளை பிரசுரித்து வருகின்றன.

மக்கள் நலனுக்காக என ஆயர் தனக்குள் எண்ணிச் செயற்படுவது மக்களைப் பாதிப்படையவே செய்து வருகிறது என்பதை அவர் உணர்ந்து கொள்ள வேண்டும். நடந்து முடிந்த யுத்தம் அதில் ஏற்பட்ட இழப்புக்கள் குறித்து அரசாங்கம் விசாரணை நடத்தி வருகிறது. அதேபோன்று ஆணைக்குழு ஒன்றினை அமைத்து காணாமற்போனோர் குறித்த விசாரணை ஜனாதிபதி அவர்களின் ஆலோசனையில் நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் அதில் பங்குபற்றி தமது குறைகளைக் கூறி வருகின்றனர். இதில் தேவையற்ற விதத்தில் மூக்கை நுழைத்து மக்களின் நம்பிக்கையை ஆயர் இல்லாமற் செய்யப் பார்க்கின்றார். அவர் இதனைத் தவிர்க்க வேண்டும். ஆயரின் உறவினர்கள் எவரும் காணாமற் போகவில்லை. அப்படியிருக்கையில் உண்மையாகவே புலிகளினால் கடத்திக் காணாமற்போனோரின் உறவினர்களின் மன உணர்வுகளை ஆயர் கொச்சைப்படுத்துவதாகவும் வேல்முருகு தங்கராசா தெரிவித்தார். காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளில் புலிகளால் கடத்தப்பட்டவர்கள் குறித்தும் பல முறைப்பாடுகள் வந்துள்ளன. ஆனால் அவை குறித்து ஆயர் வாயே திறப்பதில்லை. ஆட்சியிலிருப்பவர்களைப் பழி தீர்க்கும் ஓர் எதிரணி அரசியல்வாதி போலவே இந்த ஆயர் செயற்படுகிறார். பிரச்சினை மீண்டும் தோற்றம் பெற்றால் இவர் எவ்வகையிலும் பாதிக்கப்பட மாட்டார். பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்களே என்பதை பொதுமக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் எனவும் தங்கராசா தெரிவித்துள்ளார்.

ஆயர் என்பவர் அன்பைப் போதிக்க வேண்டும். மக்களை ஒற்றுமைப்படுத்த வேண்டும். நாட்டின் இறைமையைப் பாதுகாக்க வேண்டும். சமாதானத்திற்காகப் பாடுபட வேண்டும். ஆனால் இவரது செயற்பாடுகள் குறித்து நான் அச்சமடை கின்றேன். ஏன் இவர் இவ்வாறு செயற்படுகின்றார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. யுத்த காலத்தில் புலிகள் இருக்கையில் செயற்பட்டது போன்று செயற்பட நினைப்பது மக்களைப் படுபாதாளக் குழிக்குள் தள்ளிவிடுவது போலாகிவிடும் எனவும் தங்கராசா தனது கண்டனத்தைத் தெரிவித் துள்ளார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.