புத் 66 இல. 33

ஜய வருடம் ஆனி மாதம் 01ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் பிறை 20

SUNDAY AUGUST 17 2014

 

 
பொன்விழாக் காணும் செங்கலடி தூய நிக்கொலஸ் தேவாலயம்

பொன்விழாக் காணும் செங்கலடி தூய நிக்கொலஸ் தேவாலயம்

மீன் பாடும் தேனாடாம் மட்டு மாநகரின் வடக்கே சுமார் 16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது தான் இந்த தூய நிக்கொலஸ் தேவாலயம். இந்த ஆலயம் இந்த இடத்தில் அமைத்து முடிக்கப்பட்டு (1963 - 2013) தனது ஐம்பது வருட நிறைவு பொன் விழாவைக் கொண்டாடுகின்றது. இந்த ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு 50 வருடம் பூர்த்தி அடைந்தாலும் இதன் ஆரம்பம் 1927ம் ஆண்டு ஆகும்.

அந்த நாட்களில் இந்தப் பகுதிகள் தன்னாமுனை தூய வளனார் ஆலயத்திற்கு அடுத்ததாக வந்தாறுமூலையில் தூயவர்களான இராயப்பர் சின்னப்பர் தேவாலயம் மாத்திரமே இருந்தது. செங்கலடி பகுதியில் வாழ்ந்த கத்தோலிக்க மக்களும், சவுக்கடி, தளவாய், புன்னக்குடா போன்ற இடங்களில் இருந்த சகோதர மொழி கத்தோலிக்கர்களும் தங்கள் வழிபாடுகளுக்கு என 1927ம் ஆண்டு இந்த இடத்தில் ஒரு குடிசை அமைத்து அதற்குள் தூய நிக்கொலஸின் உருவப்படத்தை வைத்து வழிபட்டு வந்தனர். இதற்கு மூலக்காரணமாக இருந்தவர் மார்டின் பெரேரா ஆகும்.

இந்த குடிசை அமைந்த வளவு முன்னாள் அமைச்சர் கே. டபிள்யூ. தேவநாயகத்தின் குடும்பத்துக்குரியது. இவ்வாறு அமைக்கப்பட்ட இந்த ஆலயமானது படிப்படியாக வளர்ச்சி கண்டது. இந்த வேளையில் இந்த பகுதிகளைப் பொறுப்பெடுத்து மக்களின் விசுவாச வாழ்க்கைக்கு அர்ப்பணிப்புள்ள சேவையாற்றிய இயேசு சபைத் துறவிகள் இந்த ஆலயத்தின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டனர். நாளடைவில் 1958இல் இடம்பெற்ற பாரிய இனக்கலவரத்தில் சகோதர மொழி கத்தோலிக்கர்கள் இங்கிருந்து வெளியேறிய பின்னர் ஆலயம் சிதைவுற்று போனது. அந்த வேளையில் சில பேரினவாதிகளால் ஆலயத்தின் வளவும் பறிபோக இருந்த சமயத்தில் எஞ்சியிருந்த சில கத்தோலிக்க குடும்பங்களும் அயலில் உள்ள இந்து மக்களும் இணைந்து ஆலயத்தையும் வளவையும் பாதுகாத்தனர்.

இந்த நாட்களில் மறை மாவட்ட ஆயராக இருந்த ஆயர் ஆண்டகை இக்னேசியஸ் கிளெனியிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க அருட்தந்தை மேயரின் காலத்தில் உதவிப் பங்குத் தந்தை நோபட் ஒக்கஸ் அடிகளாரின் மேற்பார்வையில் ஆலய கட்டுமான பணிகள் ஆரம்பமானது. அந்த வேளையில் ஆலயத்தை கட்டுவதற்கு கே. டபிள்யூ. தேவநாயகம் அவரின் சகோதரி அக்னஸ் கனபதிப்பிள்ளையும் சேர்ந்து ஆலய வளவை ஆயருக்கு மைகயளித்தனர்.

அத்துடன் கட்டடம் கட்ட ஒரு தொகைப் பணத்தையும் அளித்தனர். இதனுடன் சேர்த்து பங்கு மக்களும் தங்களால் முடிந்தளவு பண உதவிகளையும் சரீர உதவிகளையும் வழங்கி அனைவரின் கூட்டு முயற்சியில் இந்த ஆலயம் 1963ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

அந்த நாட்களில் திருப்பலிகளையும், வழிபாடுகளையும் தன்னாமுனை பங்குத் தந்தையே மேற்கொள்வார். அவருக்கு உதவியாக மறை போதகர்களும் அருட் சகோதரர்களும், அருட்சகோதரிகளும் பொதுநிலையினரும் பாரிய உதவியினை செங்கலடி பங்கிற்கு செய்து கொண்டே வந்தனர்.

இவர்களின் உதவியோ அளப்பெரியது. தன்னாமுனை இறை சமுகத்தின் பூரண ஒத்துழைப்பே இன்று செங்கலடி பங்கு சகல வழிகளிலும் தலைநிமிர்ந்து நிற்க உதவியது. இவ்வாறு கட்டப்பட்ட இவ்வாலயம் இன்று ஐம்பது வருடங்களை கடந்து தனது பொன் விழாவைக் கொண்டாடுகின்றது.

நாட்டில் ஏற்பாட்ட எத்தனையோ விதமான இயற்கை அழிவுகள், இனவன் முறைகள் என்பவற்றின் போது இந்த ஆலயம் அனைத்து மத மக்களையும் பாதுகாக்கும் அகதி முகாமாகவும் மாற்றம் பெற்றிருந்தது. பின்னர் மட்டு - திருகோணமலை மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகையின் காலத்தில் 1984ம் ஆண்டு இது ஒரு தனிப்பங்காக பிரகடனம் செய்யப்பட்டது.

இவ்வாறு மகிமை பெறும் இந்து ஆலயத்தின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு செயற்படும் அனைவருக்கும் புனிதரின் ஆசி கிடைக்க வேண்டுவதுடன் அனைவரையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

செயலாளர் அ. மை. ரூபகீர்த்தி

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.