புத் 66 இல. 33

ஜய வருடம் ஆனி மாதம் 01ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் பிறை 20

SUNDAY AUGUST 17 2014

 

‘KAVITHAIMANJAREY’

வயது செய்யும் கோளாறா?

பிரிய முடனே பெற்று வளர்த்து
பிறங்கும் கல்வி தனையூட்டி
அரிய முறையில் பேணி நடந்தும்
அவர்கள் போக்கில் மாற்றங்கள்
வருவது ஏனோ; வையகம் மீதில்,
“வயது செய்யும் கோளாறா?”
*
பிரியப் பட்ட உணவு வகைகள்,
புனையும் ஆடை, துணி மணிகள்!
தெரிவு செய்து அவர்கள் தேவை
தீர்த்து வைக்கும் பெற்றோரை
“உரிமையில்லை என்றே விலக்கும்
உண்மை, உலக நடைமுறையா?”
*
“பருவ மெய்தி விட்டால், தங்கள்
பாசத்தாயை, தந்தை தனைப்
பொருட்டாய் மதிக்க மறந்து போகும்
புன்மை நிலையும் வாழ்வியலா?”
வருத்தம் காண வைத்தே அவர்கள்
வாழும்நிலை யவர் தலைவிதியா?
*
“பாங்கி மார்கள் உரையைத் தாமும்
படிக்கும் வேதம்” எனவெண்ணி,
தாங்காத் துயரம் தாங்கி வாழ்ந்து
தளர்ந்து போன பெற்றோரை
ஏங்க வைக்கும் பிள்ளைகள் செய்கை
“இதயந் துளைக்கும் கூர்வேலா?



யாரறிவார்...

மூட்டைகளாய் உள்ளத்தில்
அடுக்கிவைக்கப்பட்ட சோகச்சுமைகள்
யாரறிவார்...!

சங்கடம் தந்த சந்திப்புகள்
சாகாவரம் பெற்ற தழும்புகள்
யாரறிவார்...!

ஏச்சுகளை மட்டுமே விருந்தளித்த
உறவுகளைக் கூடவே
வாயில் வந்த வதந்திகளை
பறக்கவிட்ட பாவைகளை
யாரறிவார்...!

ஆபத்தில் அரவணைக்காது
ஆறிய பின் வந்துசெல்லும்
தலைகளை
யாரறிவார்...!

பலபொழுது பல பார்வைகள்
நெஞ்சை பதம்பார்த்ததை
யாரறிவார்...!

விழி சொரிந்த நீர்க்குமிழிகள்
விழுந்து உடைவதைப் போல்
கனாக்கள் காணாமல் போய்விட்ட
தொடர்கதையை
யாரறிவார்...!

இதழ்கள் ஊமையாகி
உறவுகள் தூரமாகி
உண்மைகள் ஊனமாகி
பின்தொடர்ந்த சோதனைகளை
யாரறிவார்...!


இலவு காத்த கிளி

தேன் பூச்சி தேடி மகரந்தத்
தேன் எடுத்து வதை யிலிட
தான் பட்ட வாதை வெளித்
தெரியாது கொடுமை; கூடுடைத்துக்
கொப்பான் தேனைப் பிரித் தெடுக்க
காடுள் சுற்றும் வேடனுக்கு!
ஒப்பான அது தேவைதானா? பின்னே
அவனுக்குத் தேவை இனிய தேன்தானே!

ஆக்கத்தைப் பெற்ற ஆசிரியர் அதை
ஆற அமர பார்ப்பாரோ பொறுத்து
ஏக்கத்தைத் தானறிந்து எளிதில்
ஏற்பாரோ பிரசுரிக்க! இல்லை எடுத்து
அவர் பணிமனையில் இருக்கும்
அதற்கென்ற ‘டஸ்பி’ னிலிடுவாரோ?
எந்தக் கவலை சிரத்தை தேவை
அன்னாருக்கு தரமான படைப்பே சேவை!

ஆனது அவை போய் வீழ்ந்து
அமுங்கி கிணற்றுள் கல்லா யாழ்ந்து
ஆனால் இங்கதைக் கோத்து
அனுப்பியவன் எதிர்பார்த்து பார்த்து
ஆனானே வெளி வரும் என்று
இலவு காத்த கிளி போன்று!


என் இதயம் படும்பாடு

ஒருதலைக் காதலோ
ஓருண்மைக் காதலோ
நான் அறியேன்
பேரழகியா என்னுள்ளம்
வரிக்கும் எண்ணத்தில்
ஓரழகிதான் அவள்
இன்பத்திலும் துன்பத்திலும்
பங்குகொள்ள என்னிதயம்
துடித்தாலும்
என் எண்ணம் சொல்வதற்கு
ஏனோ மனத் தயக்கம்
யான் செய்யும் உதவிதனை
என்னமாய் நினைத்தாளோ
கண்ட மாத்திரத்தில் மரியாதை
மணம் பரப்பும்
மனத்தினைக் கொண்டவள்
மனந்திறந்து பேசுதற்கு
முறைமைகள் வாய்க்கவில்லை
முற்படுக்கை மேனியதாய்
மூட்டுக்களில் எல்லாம்
முள்ளாய்க் குத்துகிறது
என் எண்ணம் சொல்வதற்கு
மார்க்கம் ஒன்று தேடுகிறேன்
என்னென்று நான் சொல்ல
என் இதயம் படும்பாட்டை


கொதிக்கிறது நெஞ்சு

கர்வச் சூடு கொதிக்கிறது
ஆணவம் தலைக்கேறி துடிக்கிறது
கொடூர இஸ்ரேலின் கோரப்போக்கு
பலஸ்தீனத்தை கரைத்து வருகிறது

இறையில்லங்களை தரைமட்டமாக்கி
இனத்துவேதிகளின் பேய்வெறியாட்டம்
பாலகர்களையும் பலிக்கடாவாக்கி
இனக்கோரத்தை அரங்கேற்கிறது

நூறு ஆண்டுகள் கடந்தும்
முடிவில்லாத இந்த அராஜகத்துக்கு
முடிவுகட்டி விடிவு காண
உம்மத்து அனைவரின் துஆகட்டாயம்...


இதயத்தின் ராகம்!

என் இனியவளே!
உன் அங்கங்களை
பிரம்மன் மலர்களால்
செதுக்கினானா?
மனதைக் கொள்ளையடித்த
அல்லிப் பூ கண்ணும்
ஓரிரு நாட்கள் பூத்து வாடிய
ரோஜா போன்ற இதழும்
பருத்திப் பூ போன்ற
பாத சலங்கையின் நாதமும்
இரவில் என் சொப்பனங்களில்.....

பள்ளிக்குச் செல்வேன்
உன் வகுப்பறை வாகை
மரத்தடியில் ஒளிந்து நின்று
என்னவளை ரசிப்பேன்
அழகான முத்துப்பற்களின்
குறு நகையால் மெய் மறப்பேன்
படிக்க
முடியவில்லை
நோட்டுகளைப்
புரட்டினால்
உன் முகம்
காதலை
உன்னிடம் நான்
சொல்ல என் நிலைமை
உனக்கு வந்து விட்டால்...
என்பதால் இன்று வரை
உன்னிடம் சொல்லவில்லை

உன் நலம் தோழனிடம்
விசாரிப்பேன்
காதலா? வினவ மறுப்பேன்
உண்மையில் கற்பனையால்
அவளுடன் ஒவ்வொரு
நொடியும் வாழ்கிறேன்
உன் முகம் கண்டு
இரு வருடங்கள்
என் மனதை புரிந்தால்
என்னிடம் தூது அனுப்பு
மூச்சு நிற்கும் வரை
காத்திருக்கிறேன்



மழையே நீ வருவாய்

காலங்காலமதாய்க் கார்காலம் வருவதுண்டு
ஞாலம் செழித்திடவே நல்ல மழைபொழிவதுண்டு
சீலம் குறைந்ததனால் சீரழிவு மலிந்ததனால்
காலக்கணக்கு மழை காணாமல் போயினதோ

வாலைப் பருவத்து வஞ்சியெனக் கொஞ்சிச்
சோலை மலர்பூத்துச் சொரிந்திட்ட நிலமகளும்
சேலை களைந்திட்டுச் செந்தீயிலிட்டது போல்
பாலையென மாறிப் பதைக்கின்ற நிலைகாணீர்

கிழக்குத் திசையினிலே கீழ்வானக்கரையினிலே
வழக்கமதாய் நல்ல வரிசை மழை பொழிவதுண்டு
தழப்பமிலாதென்றும் தலைசாந்த்த நெல்வயல்கள்
கழப்புத்தரை வெடித்துக் கருகியது போனதனால்

களைத்து விவசாயி கதியற்று வானிடையே
மழைமேகமேதும் மருந்துக்கும் கிடைக்காமல்
பிழைப்பு எதுவுமின்றிப் பிள்ளைகளுக்குணவுமின்றி


உழைக்கும் வழி தெரியாதுயிர் ஊசலாடுதுகாண்
உறுகாமக்குளம் நிரம்பி உயர் விளைவு கண்டதனால்
வருமானம் கூடி வளமோடு நாமிருந்தோம்
வெறுவானச் சூரியனும் வெப்பம் உமிழ்ந்ததனால்
கருகிக்குளம் முழுதும் காய்ந்து கிடக்கிறதே

உன்னிச்சைக் குளமதுவும் உயர்விளைவு தந்ததனால்
தன்னிச்சை போல் வயல்கள் தங்கமென மின்னியதே
இன்னிலத்தில் வெப்பம் என்னுமிலாதேறியதால்
நன்னிலமும் கருகி நாசமுற்றுப் போனதுகாண்

நீரின்றிக் கான் விலங்கும் நிர்க்கதியாயானதினால்
பார்க்குமிடமெல்லாம் பரிதவித்துச் சாகிறது
தீர்க்கும் வழிதெரியாத் திசைமாறு மெங்களுக்கு
வார்க்கும் நீர் மழையை வரச் செய்வாயிறையோனே



விடியலை காணலாம்

உலகைப் புதுப்பிக்க வந்த
பூங்கொடியே.... உன்னை
தான் அழைக்கின்றது என்
கவிதை.... ஊரெல்லாம்
விழித்துக் கிடக்கிறது
உன் சிந்தனையை மட்டும்
ஏன் தாலாட்டுகிறாய்?
கண்ணீர் கோழையின்
கையில் இருக்கும் துரும்பு
உனக்கது வேண்டாமடி

உன் கண்ணீரைத் துடைத்தெடு
தூய சிந்தனையில்
வார்த்தை எனும் ஆயுதம்
ஏந்தி வீறு கொண்டு
போராடிடலாம்... தங்கி
வாழ்வது தன் மானக்கேடு
தயங்காமல் எழுந்து நில்
புதுமைகள் படைக்க வந்த
பாரதியின் புதுமைப்ஃ பெண்
நீயென்பதை புரிந்து கொள்
நம்பி வாழும் அவலம் வேண்டாம்
உன்னை நம்பி ஊரேனும்
வாழட்டும் வீறு
நடை போட்டு
விரைந்து வந்திடு
விடியலைக் காணலாம்...!


கையடக்கக் கவிதைகள்

கடிதங்கள்
குறைந்தபின்
ஊர் மக்களின்
பெயர்களை
சுமந்து திரிகிறார்கள்
தபாற்காரர்கள்

இன்னும்
பாடசாலையைவிட்டு
விலகவில்லை -
பழைய மாணவர்
சங்கம்!

பத்துப்பேர்
இறங்கித் தள்ளியதில்
ஓடியது -
நின்று போன பஸ்
இருபது பேர்
இருக்க!

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.