புத் 66 இல. 21

விஜய வருடம் வைகாசி மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ரஜப் பிறை 25

SUNDAY MAY 25 2014

 

 
இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியமைப்பதால் இலங்கைக்கு

இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியமைப்பதால் இலங்கைக்கு

ஏதேனும் அழுத்தங்கள் ஏற்படுமா?

இந்திய பொதுத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றது. 543 ஆசனங்களில் 343 ஆசனங்களை பாரதிய ஜனதா கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் பெற்றுள்ளன. இது கிட்டத்தட்ட 61.8 வீத வாக்குகளாகும். இதனால் அங்கு பலமான ஆட்சி ஒன்று உருவாகியுள்ளது. இந்த ஆட்சி இந்தியாவுக்கு நல்ல எதிர்காலத்தை பெற்றுக்கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.

தொங்கு பாராளுமன்றமாக இல்லாது அறுதி பெரும்பான்மையைக் கொண்ட ஒரு கட்சி ஆட்சிக்கு வரும்பொழுது அந்த ஆட்சி மிக சுமுகமானதாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். இதற்கு முன்னர் இந்தியாவில் பல தடவைகள் தொங்கு பாராளுமன்ற ஆட்சி நடைமுறையே காணப்பட்டது. இதனால் ஆளும் கூட்டணிக்குள் பல கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு பிரச்சினைகளும் தலைதூக்கின. சில கூட்டணி கட்சிகள் தமது ஆதரவை விலக்கிக் கொள்ள இந்தியாவின் மத்திய அரசு வீழ்ச்சி அடைந்த சந்தர்ப்பங்கள் பல சரித்திரத்தில் பதிவாகியுள்ளன. தொங்கு பாராளுமன்ற ஆட்சிமுறை ஏற்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தமிழ்நாடு அரசியல்வாதிகள் தமது ஆதரவை வழங்கி தன்னலமுள்ள நோக்கங்களை நிறைவேற்றி இருக்கின்றனர்.

அவ்வாறு சுயலாபத்துக்காக ஆதரவுகளை வழங்குவதில் தமிழ்நாட்டில் முதன்மையானவர் மு. கருணாநிதி, அதற்கு அடுத்தபடியாக சமகால முதல்வர் ஜெயலலிதா உள்ளார். ஆனால், இம்முறை பாரதிய ஜனதா கட்சி தனது பாரம்பரிய கூட்டணி கட்சிகளுடன் மட்டும் இணைந்து 249 ஆசனங்கள் கைப்பற்றியுள்ளது. இது அறுதிப் பெரும்பான்மையை விட 77 ஆசனங்களை மேலதிகமாக கொண்டுள்ளது. எனவே எக்காரணம் கொண்டும் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டின் ஆதரவை வேண்டி நிற்காது என்பது மட்டும் உறுதி. இது இலங்கைக்கு ஒருவகையில் அனுகூலமான நிலைமையாகும்.

அத்துடன் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றதும், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உடனடியாக நரேந்திர மோடிக்கு தனது உளங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதேவேளை, தேர்தலில் வெற்றி பெற்று 24 மணித்தியாலயங்களுக்குள் நரேந்திர மோடியும் இலங்கை பற்றி மிகவும் ஆரோக்கியமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இலங்கையுடன் எதிர்காலத்தில் இந்தியா மிகவும் நெருக்கமான உறவுகளை பேண எதிர்பார்த்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நிலமை இவ்வாறிருக்க பாரதிய ஜனதா கட்சி எனும் மாபெரும் இந்துவாத கட்சியில் இலங்கைக்கு மிகவும் ஆதரவான முக்கிய நபர் ஒருவரும் உள்ளார். அவர் தான் சுப்பிரமணி சுவாமி. இவர் முன்னர் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டுச் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சுப்பரமணிய சுவாமி புதிதாக இந்தியாவில் ஆட்சிபீடம் ஏறிய பாரதீய ஜனதா கட்சிக்கும் இலங்கைக்கும் இடையில் ஓர் உறவு பாலமாக இருப்பார் என எதிர்பார்க்கலாம்.

நரேந்திர மோடி ஒரு கடும் இந்துவாதி என்றும் இலங்கையிலுள்ள தமிழ் மக்களில் பலர் இந்து மதத்தை சேர்நதவர்கள் என்ற காரணத்தினால் மோடி இலங்கை தமிழ் மக்கள் சார்பில் ஏதேச்சையாக ஒரு முடிவெடுத்து இலங்கையில் மீண்டும் ஒரு பிரிவினையை ஏற்படுத்த முனைவார் என்று ஒரு சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஆனால் அந்த ஒருசிலருக்கு நரேந்திர மோடியே சிறந்த ஒரு பதிலையும் வழங்கியிருக்கிறார். அதாவது இலங்கையில் எதிர்கா லத்தில் எந்தவித பிரிவினையும் ஏற்படக்கூடாது. இலங்கையில் தனி ஈழம் என்ற ஒரு ராஜ்ஜியத்தை தாம் ஒருபோதும் ஆதரிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். இலங்கைக்குள்ளேயே தமிழ் மக்களுக்கு ஒரு சாதாரண நீதியான தீர்வை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் தமது ஆதரவை தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, இலங்கையின் உள்விவகா ரங்களில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்தியா தலையிடாது என்றும் திரு. நரேந்திர மோடி வலியுறுத்தி தெரிவித்துள்ளார். இந்த கூற்றுக்கள் இந்தியாவின் ஒரு சிரேஷ்ட தலைவரின் கூற்றுக்களை ஒத்து நிற்கின்றன. தூர நோக்கு சிந்தனை கொண்ட நரேந்திர மோடி இந்தியாவை அபிவிருத்தி செய்வதற்கு தனக்கு பத்து ஆண்டுகள் தேவை என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் நடந்து முடிந்து தேர்தலில் இந்தியாவில் ஒரு பலமான ஆட்சியை ஏற்படுத்துவதற்கு வாக்களித்த அனைத்து மக்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.

இது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் இலங்கை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொண்ட பலமான ஆட்சிக்கு ஒத்ததாகும். ஒரு நாட்டில் அறுதிப்பெரும்பான்மையுடன் கூடிய பலமான ஆட்சி இருந்தாலேயே வேமாக அந்த நாட்டை அபிவிருத்தி செய்யலாம். எதிர்கொள்ளும் தடைகளை இலகுவாக வெற்றி கொள் ளலாம். பலமான ஆட்சி ஒரு நாட்டின் பல்வேறு பிரச்சினைகளை தீர்ப்ப தற்கு உதவி புரிகிறது.

இதனை நன்கு உணர்ந்த நரேந்திர மோடி தமக்கு ஒரு பலமான ஆட்சியை பெற்றுத்தரும்படி பொதுமக்களை கேட்டார். இந்திய பொதுமக்களும் அதற்கிணங்க தமது முழுமை யான ஆதரவை வழங்கியுள்ளனர். எனவே நரேந்திர மோடி எதிர்காலத்தில் தனது நாடு குறித்து கூடுதலாக சிந்தித்து தீர்மானங்களை மேற்கொண்டு முன்னேறிச் செல்வார் என்று எதிர்பார்க்கலாம்.

நடந்து முடிந்த தேர்தலில் இலங்கை தமிழர் பிரச்சினையையும் ஈழ கோரிக்கையை முன்வைத்து போட்டியிட்ட தமிழ்நாட்டு அரசியல்வாதிகளான வைகோ மற்றும் திருமாவளவன் ஆகியோர் படுதோல்வி அடைந்துள்ளனர். தமிழ் நாட்டு மக்கள் இவர்களுக்கு நல்ல பாடம் புகட்டியுள்ளனர். இதன் மூலம் எதிர்காலத்தில் தமிழ் நாட்டில் இலங்கை தமிழர் பிரச்சினையை முன்வைத்து வாக்கு கேட்க முடியாது என்பதை இவர்கள் நன்கு புரிந்துகொண்டி ருப்பார்கள்.

அத்துடன் எல். ரி. ரி. ஈ தலைவர் பிரபாகரனை தனிப்பட்ட ரீதியில் வியந்து வருணித்து நெருக்கமாக இருந்த இந்திய ஊடகவியலாளர் அனிதா பிரதாப் இம்முறை ஆம் ஆத்மி கட்சியில் போட்டியிட்டு படுதோல்வியடைந்தார். இலங்கை தமிழர் பிரச்சினை எதிர்காலத்தில் இந்தியாவில் சந்தைப்படுத்த முடியாத பொருளாக மாறும் என எதிர்பார்க் கலாம்.

இந்து மற்றும் பெளத்த மதங்களுக் கிடையில் பல ஒற்றுமை உண்டு இரண்டு மதங்களும் நீண்ட சிறந்த பயணமென்றை மேற்கொள்ள முடியும். அந்த வகையில் இந்து பக்தரான இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பெளத்த மத பக்தரான இலங்கை ஜனாதிபதி மகிந்த ஆகியோருக்கு இடையில் நல்ல நட்புறவு விரைவில் ஏற்படும் எல்லோரும் எதிர்பார்க்கலாம்.

அத்துடன் 2002ம் குஜராத் மாநிலத்தில் மோடி முதலமைச்சராக இருந்த பொழுது ஏற்பட்ட கலவரம் காரணமாக திரு. மோடிக்கு அமெரிக்கா செல்ல தடை விதித்திருந்தது. அந்த கசப்புணர்வு மோடிமற்றும் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா ஆகியோருக்கிடையில் இன்னும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் இலங்கையும் அமெரிக்காவுடன் அந்தளவு நல்ல உறவுகளை கடந்த காலங்களில் கொண்டிருக்கவில்லை. இதன் காரணமாக இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் ஒன்றாக பயணிக்கக்கூடிய வாய்ப்பு உண்டு.

ஆகவே இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கிடையில் பல ஒற்றுமைகள் உண்டு. காங்கிரஸ் கட்சி ஆட்சியை விட புதிய ஆட்சி இலங்கையுடன் மேலும் உறவுகளை பலப்படுத்தும் என எதிர்பார்க்கலாம். மத நல்லிணக்கத்துடனும் பிராந்திய ஆட்சிப் புரிந்துணர்வோடும் பயணிக்ககூடிய ஒரு காலத்தை நாம் அடைந்துவிட்டோம் என்று கூறலாம். மோடி இலங்கைக்கு பலம் சேர்க்கும் சக்தி. மோடி அலை வீச இலங்கை தொடர்ந்தும் வேகமாக முன்னேறும் என எதிர்பார்க்கலாம்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.