புத் 66 இல. 21

விஜய வருடம் வைகாசி மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ரஜப் பிறை 25

SUNDAY MAY 25 2014

 

 
இதல்லவோ மனிதாபிமானம் இதல்லவோ மத நல்லிணக்கம்

இதல்லவோ மனிதாபிமானம் இதல்லவோ மத நல்லிணக்கம்

மதங்களின் பெயரை சக மனிதர்களை மாய்த்துக் கொள்ளத் துடிக்கும் கும்பல்களுக்கு மத்தியில் மத சிந்தனைகளை தூக்கி எறிந்துவிட்டு மனிதாபிமானத்துடன் சிறுநீரக தானம் கொடுத்தவர்களைப் பற்றிய நெகிழ்வான செய்திதான் இது.

பெங்களூரைச் சேர்ந்த விஸ்வநாதா பட்டா என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக சிறுநீரக பிரச்சினையால் டயாலிஸ் செய்து வருகிறார். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. அவரது மனைவி உஷா தமது சிறுநீரகங்களில் ஒன்றை கணவருக்காக கொடுக்க முன்வந்தார். ஆனால் இருவரது இரத்த மாதிரியும் ஒன்றாக இல்லாததால் சிறுநீரகம் பொருத்தவில்லை.

இதேபோல் பெங்களூரைச் சேர்ந்த 60 வயதான அப்துல் கலீல் என்பவரும் கடந்த 18 மாதங்களாக சிறுநீரக பிரச்சினையால் அவதிப்பட்டார். அவரது மனைவி அபிதா கலீலும் தமது சிறுநீரகத்தை கணவருக்கு தானமாக கொடுக்க முன்வந்தார். ஆனால், அபிதாவின் இரத்த மாதிரியும் கணவரின் இரத்த மாதிரியும் ஒன்றாக இல்லாததால் சிறுநீரகம் பொருத்தப்படவில்லை.

இதைத் தொடர்ந்து இரு தம்பதியினரும் பெங்களூர் நாராயணா இருதயாலாயா மருத்துவமனையை நாடினர். இதில்தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. ஹிந்துவான விஸ்வநாதா பட்டாவின் இரத்த மாதிரியும் இஸ்லாமியரான அபீதா கலீலின் இரத்த மாதிரியும் ஒன்றாக இருந்தது. இதேபோல் அப்துல் கலீலின் இரத்த மாதிரியும் உஷாவின் இரத்த மாதிரியும் ஒன்றாக இருந்தது.

இந்த இரு தம்பதியினருமே மதங்களைப் பற்றி சிந்திக்காமல் மனித உயிர்களை மதித்து சிறுநீர் தானங்களுக்கு முன்வந்தனர். இதனால் விஸ்வநாத்துக்கும் அப்துல் கலீலுக்கும் ‘வெற்றிகரமாக’ சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இப்போது இந்த தம்பதியினர் ஹிந்துவாக, இஸ்லாமியராக இல்லை.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.