புத் 66 இல. 04

விஜய வருடம் தை மாதம் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர. அவ்வல் பிறை 24

SUNDAY JANUARY 26 2014

 

 
ஆசியாவின் உதயசூரியன் வ.அ.தோமஸ் அடிகளார்

ஆசியாவின் உதயசூரியன் வ.அ.தோமஸ் அடிகளார்

இ-ன்று ஐம்பதாவது நினைவு தினம்

மனிதன் புனிதனாக வாழ வழிகாட்டிய மகான்கள் பலர். அவர்களில் மாணிக்கமாக விளங்கியவர் நமது ஆசியா நாட்டின் விடிவெள்ளியாகத் திகழ்ந்த ஈழமண்ணின் யாழ் மைந்தன் இறையடியான் அருட்தந்தை வ.அ.தோமஸ். இவர் யாழ் மண்ணின் சிற்றூராம் பாண்டியன் தாழ்வில் 07.03.1886ஆம் ஆண்டு பிறந்தார்.

இறைவன் இவரை தனது பணிக்கு அழைத்தார். யாழ். நகரில் பிரபல்யமான புனித மடுத்தினார் குருமடத்தில் காலடி வைத்தார். இறைபணிக்கு தன்னையே முழுமையாக கையளித்து துறவியாக முன்வந்தார்.

இவரின் மெலிந்த உடலும், தாடியுடன் கூடிய முகமும், நேர்கொண்ட பார்வையும், கையில் தவழும் செபமாலையும் பார்க்கும் அனைவருக்கும் இவர் ஒரு முனிவர் என்ற எண்ணப்பாட்டை அவர்களின் மனங்களில் உருவாக்கும். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக குருத்துவ படிப்பையும் துறவற வாழ்வையும் கற்றுத்தெளிந்த அடிகளார் 02.02.1910ஆம் ஆண்டு தனது துறவற அர்ப்பண வார்த்தைப்பாட்டை யாழ். நகரில் இயங்கி வந்த அமலமரி தியாகிகள் சபையில் (லிணியி) கொடுத்து இறைவனுக்கும் அன்னை மரியாளுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் வாழ்ந்து காட்டினார். இவ்வாறு வாழ்ந்த அடிகளாரின் மனதிலே சமுதாயத்தில் நிகழ்ந்து கொண்டிருந்த ஏற்றத்தாழ்வு, சாதிக்கொடுமை, தீண்டாமை, சமூக, பொருளாதார, ஞானச்சீர்கேடுகள் இவற்றை இல்லாதொழித்து அனைவரும் இறைவனுடைய பிள்ளைகள் என்று வாழ வேண்டும் என்ற எண்ணப்பாடு மேலோங்கியிருந்தது.

06.01.1912ஆம் ஆண்டு புனித குருவாக அருட் சகோதரர்கள் இம் மானுவேல், நிக் கோலஸ் ஆகியோ ரோடு தோமஸ் சகோதரரும் ஆய ருடன் பீடத்தை அணுகினார். குருத் துவ சடங்கு சிறப்பாக நிறை வேறியது. கடவு ளுக்குத் தம்மை முழு மனதுடனே கையளித்த தோமஸ் அடிகளார், மக்களை அவரிடம் அழைத்து செல்ல வேண்டும் என்ற நோக்குடன் தனது முதல் திருப்பலியை நிறைவேற்றினார். ஆங்கிலம் இலத்தீன் தமிழ் மொழிகளில் அதிக தேர்ச்சி பெற்று விளங்கிய அடிகளார் அவற்றை தனது குருத்துவப் பணிக்கு பயன்படுத்தினார். குறிப்பாக மேலை நாடுகளின் கலை கலாசாரங்களுக்கும் சமய வழிபாடுகளுக்கும் ஏற்ப அவற்றைப் பயன்படுத்தி மக்களை இறைவன் பால் கொண்டு செல்ல வழி காட்டினார்.

இவ்வாறு செபத்திலும் இறை அனுபவத்திலும் வாழ்ந்து பணிபுரிந்த அருட்தந்தை தோமஸ் அடிகளார், தான் வாழ்வதை போதிப்பதிலும் போதிப்பதை கடைப்பிடிப்பதிலும் கண்ணும் கருத்துமாக சிறந்து விளங்கினார்.

யாழ். நகரிலே பிரசித்திபெற்ற புனித பத்திரிசியார் கல்லூரியில் படித்த இந்து விடுதி மாணவர்களுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இவருடைய செப வாழ்வும் அர்ப்பண வாழ்வும் நாளுக்கு நாள் குன்றின்

மேல் ஏற்றிய தீபதாக சிறந்து விளங்கியது. எனவே தான் வெளிச்சத்தை தேடும் விட்டில் பூச்சிகளாக இந்து மாணவர்கள் இவருடைய வாழ்வினால் கவரப்பட்டு மனமாற்றம் அடைந்து கத்தோலிக்க குருக்களாக மிளிர்ந்தார்கள். அவர்களுள் சிறப்பாக பிரபல்யமான வழக்கறிஞர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்களின் சகோதரர் ஜீ.ஜீ.பாலசுந்தரம் ஆவார். இவ்வாறு பல கிறிஸ்தவ மக்கள் மட்டுமல்ல இந்துக்கள் கூட அவருடைய வாழ்வை கண்டு பெரிமிதத்தோடு ஆசியாவின் உதய சூரியனாக அவரை புகழ்ந்து போற்றினார்கள்.

எம் ஆசியா தேசத்தில் எமக்கிடையே ஏற்றத்தாழ்வுகள், பிரிவினைகள், போட்டி மனப்பான்மைகள், சாதிவேற்றுமை, உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடுகள் இல்லாமல் இறைவனின் அருளால் மக்கள் ஒற்றுமையாகவும் சமாதானத்துடனும் வாழ வேண்டும் என்று அவர் எண்ணத் தொடங்கினார். இதை தமது அன்பு நண்பனும் புதிய ஆயருமாகிய வந்தனைக்குரிய ஜே.ஏ.கியோமாரிடம் கூறினார். இருவருமே, பல நாட்கள் இந்த எண்ணத்தை எமது இலங்கையிலும் செயற்படுத்தினால் நிச்சயம் புதியமாற்றம் ஒன்று உருவாகும் என்று உரையாடினார்கள்.

இந்த எண்ணத்தின் நீரோட்டத்தில் தான் இறைவனின் செயல் வெளிப்படுத்தப்பட்டது. ஆம்! 1986 பெப்ரவரி 28ஆம் திகதி (ஞிலீruசீ ரிணீணீlலீsiaணீ) திருச்சபையை சார்ந்த மறை உண்மை என்ற சுற்றுமடல் வழியாக பரிசுத்த பாப்பரசர் பதினோராம் பத்திநாதர் கீழ் நாடுகளில் நடக்கும் மனந்திரும்புதல் பணிக்கு செபமும் தபமும் கொண்ட துறவற சபைகள் உருவாக்கப்படல் வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்தார். ஆன்ம தாகம் கொண்ட தோமஸ் அடிகளார் இதைக் கேட்டதும் தனது கனவு நிறைவேற போவதையிட்டு மிகுந்த சந்தோசம் அடைந்தார். இதை இறைவனே முன்நின்று நடத்த வேண்டும் என்று செபிக்கத் தொடங்கினார்.

ஆழ்ந்த செபப்பற்றும் தவப்பற்றும் உடைய ஒருவரால் தான் இத்துறவற சபையை உருவாக்க முடியும் என்று உணர்ந்த ஆயர் ஜே.ஏ.கியோமார் அவர்கள் தோமஸ் அடிகளாரிடமே இந்த பணியை ஒப்படைத்தார். ஆண்டவர் மீது கொண்ட அசையாத நம்பிக்கையும் அன்னை மரியாள் மீது கொண்ட அளவிட முடியாத நம்பிக்கையும் சீர் தூக்கி பார்த்த அடிகளார் 02.02.1928ஆம் ஆண்டு செபமாலை தாசர் துறவற சபையை யாழ் நகரின் தோலகட்டி என்னும் சிற்றூரில் நிறுவினார். ஆறு இளைஞர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இச்சபை செப தவ பரித் தியாக வாழ்வை முழு மூச்சாகக் கொண்டு இயங்கியது. பலர் எதிர்த்தனர், பலர் எள்ளி நகையாடினர், பலர் எங்கள் பிள்ளைகளை தவறான வழிக்கு இட்டுச் செல்கின்றான் என்றனர். இவன் போலி போதகர் என்றனர். இன்னும் சிலர் இவன் எங்கள் மதத்திற்கு எதிராக செயல்படுகிறான் என்றனர். அவர்களுடைய செப தப வாழ்வை குழப்ப முனைந்தார்கள். இவை எல்லாவற்றையும் அமைதியாக செப தபத்தால் வெற்றி கண்டார் தோமஸ் அடிகளார்.

இது இவ்வாறு இருக்க இவர்களுடைய தியாகம் நிறைந்த அர்ப்பண வாழ்வை அறிந்து கொண்ட மக்கள் தோலகட்டியை நோக்கி படை எடுத்தனர்.

பெண்களும் செப தப வாழ்வில் ஈடுபட்டு உலகில் நடைபெறும் அநியாயங்களுக்கும் பாவங்களுக்கும் பரிகாரம் தேட வேண்டும். இதன் வழி பாவிகளை மனம் மாறச் செய்து இறை அன்பில் வாழ துணை புரிய வேண்டும் என்று அடிகளார் விரும்பினார். எனவே மூன்று முறை, பெண்களுக்கு என்று கன்னியர் மடத்தை தொடங்கினார். மூன்று முறையும் தோல்வி. “முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்” “முயற்சி திருவினையாக்கும்” என்ற எண்ணம் அடிகளாரின் அடி மனதில் ஆழமாக இருந்தது. 1950ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 22ஆம் நாள் நான்காம் முறையாக கன்னியர் மடம் ஒன்றினை புனித சூசையப்பர் பாதுகாவலில் தொடங்கினார். புனித வளனாரின் பாதுகாவலில் போடப்பட்ட சிறு பொறியானது சில காலத்தில் மூண்டு எரியத் தொடங்கியது. வெகு விரைவில் பல இடங்களில் குறிப்பாக இலங்கை இந்தியாவில் பரவியது.

செப தப வாழ்வில் உரம் கொண்ட பக்குவப்பட்ட புனித துறவியாக விளங்கினார். ஆசியாவின் உதய சூரியன் என்று அழைக்கப்படும் தவத்திரு தோமஸ் அடிகளார்.

சூரியன் 1964.01.26ஆம் திகதி அன்றும் வழமை போல் மெதுவாக தன் கதிர் பரவி உதித்தான். அன்று யாழ். நகரமே ஏன் இலங்கையையே உலுக்கும் ஒரு செய்தி பரவியது ஆசியாவின் உதயசூரின் அஸ்தமனாகி விட்டது என்பதே அந்த செய்தி... இவ்வுலக பணியை முடித்துவிட்டு அமைதியாக சாந்த முகத்துடன் அடிகளார் மீளாத்துயில் கொண்டுவிட்டார். தோலகட்டி ஆச்சிரமத்திலே ஆயரின் தலைமையில் கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுத்து அடிகளாரை அடக்கம் செய்தார்கள்.

இன்றைய தினம் (26.01.2014) அவருடைய விண்ணகப்பிறப்பின் ஐம்பதாவது ஆண்டை நினைவு கூரும் நாமும் அவரைப் போல் எளிமை, தாழ்மை, அன்பு உள்ளம் கொண்டவர்களாக வாழ்ந்து இறைவனுக்கும், மனித இனத்துக்கும் ஏற்றவர்களாக அண்ணல் காட்டிய புனிதப் பாதையில் பயணிப்போமாக!

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.