புத் 66 இல. 04

விஜய வருடம் தை மாதம் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர. அவ்வல் பிறை 24

SUNDAY JANUARY 26 2014

 

 
மக்களின் வறுமையைப் போக்க ~திவிநெகும' ஒரு புதிய பயணம்

மக்களின் வறுமையைப் போக்க ~திவிநெகும' ஒரு புதிய பயணம்

-அமைச்சர் பசில் ராஜபக்

2005 நவம்பர் 17ஆம் திகதி நாட்டின் தலைவர் பதவியினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்ற பின்னர் நம் நாட்டின் நிலைமை பற்றிய உங்கள் கருத்து என்ன?

மிகக் கடுமையான பல சவால்களுக்கு முகம் கொடுத்து அவற்றை மிகச் சிறந்த முறையில் வெற்றி கண்டதன் மூலம் நாட்டையும் மக்களையும் வெற்றிப் பாதையில் இட்டுச் சென்ற பெருமையுடன் பேச முடியும் என்று கருதுகின்றேன்.

o அவரது பதவியேற்பின் பின்னர் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் கிடைக்கப்பெற்ற நன்மைகளைப் பற்றி கூற முடியுமா?

முப்பது வருடங்களாக இந்த நாடு ஈவிரக்கமற்ற கொடூர பயங்கரவாதத்தின் பிடியில் சிக்கித் தவித்தது. இந்தப் புலிப் பயங்கரவாதத்தை யுத்தத்தால் தோற்கடிக்க முடியாது என்ற கருத்தை எமது நாட்டின் சில அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கொண்டிருந்தனர். இக் கருத்தை மிக ஆழமாக கொண்டிருந்த சிலர் வடக்கு கிழக்குப் பிரதேசங்களை புலிகளுக்கே தாரைவார்த்துக் கொடுத்து விட்டாவது நாட்டின் ஏனைய பகுதிகளை தாம் ஆட்சி செய்தால் போதும் என்று கூட சிலர் எண்ணியிருந்தார்கள். அந்த எண்ணத்திற்கேற்ப அவர்கள் செயற் படவும் செய்தார்கள். அந்த பின்னணி யில் ஆட்சிபீடம் ஏறிய ஜனாதிபதி அவர்கள் இந்த நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் பெற்றுக்கொடுத்த மிகப் பெரிய வெற்றி யுத்தபீதியற்ற ஒரு நாட்டைப் பெற்றுக்கொடுத்ததேயாகும்.

o ஆனால் யார் வேண்டுமானாலும் யுத்தம் செய்யலாம் என்று எதிர்க்கட்சி கூறுகின்றதே.

ஜனாதிபதி அவர்களின் திடமான தலைமைத்துவத்தின் கீழ் படைவீரர்கள், யுத்தத்தினை வெற்றிகரமாக முன்னெடுத்துச் சென்றபோதே எதிர்க்கட்சி அவ்வாறு கூறியது. 2006 மே மாதம் 19ஆம் திகதியன்று மாவிலாறை விடுவிக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கை வெற்றிமேல் வெற்றியுடன் முன் நகர்ந்து சென்றதை பொறுக்க முடியாத சில உள்நாட்டு, வெளிநாட்டு தீய சக்திகள் அதைத் தடுக்க முயற்சித்தன. பலம்வாய்ந்த சில வெளிநாடுகள் கூட அந்த முயற்சியில் ஈடுபட்டன. ஆனால் இன்று அச்சமோ பீதியோ அற்ற விதத் தில் நாட்டின் நாலாபுறத்திற்கும் சுதந்திரமாக சென்று வரக்கூடிய சந்தர்ப்பத்தை அனைவரும் பெற்றிருக்கின்றோம்.

o நாட்டின் நாலாபுறத்திலும் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இருந்தும் எதிர்க்கட்சி எந்நேரமும் அரசு ஒன்றும் செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டுகின்றதே?

தற்போது எதிர்க்கட்சி எதுவுமே சொல்ல முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. நாம் அதிகாரத்திற்கு வந்தால் பயங்கரவாதத்தை அழிப்போம் என்றோ, அதிவேக பாதைகளை அமைப்போம் என்றோ, நுரைச்சோலை, மேல் கொத்மலை மின் நிலையங்களை அமைப்போம் என்றோ அவர்களால் இப்போது கூற முடியாது. காரணம் எமது ஜனாதிபதி அப்படி சொல்வதற்கு அவர்களுக்கு ஒன்றையும் விட்டுவைக்க வில்லை. அவரே இவை அனைத்தையும் செய்து முடித்துள்ளார். ஆகையால் நாம் மேற்கொண்ட அபிவிருத்தித்திட்டங் களில் ஏதேனும் குறைகளைக் கண்டு பிடித்து அதைப்பற்றி பேசிக்கொண்டிருக்க வேண்டிய நிலையே தற்போது எதிர்க் கட்சிக்கு ஏற்பட்டிருக்கின்றது.

o இம்மாதம் 3ஆம் திகதியன்று தேசிய பொருளாதாரத்தில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வேலைத்திட் டம் ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட் டது. அதாவது திவிநெகும திணைக்க ளம் ஆரம்பித்து வைக்கப்பட்டதைப் பற்றி கூறுங்களேன்?

உண்மையில் இது இந்த நாட்டின் அனைத்து மக்களினதும் வெற்றியின் ஆரம்பம் என்றே கூற வேண்டும். இன்று நாம் இந்த திணைக்களத்தை ஆரம்பித்த போதிலும் இதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பித்த காலத்தில் நாம் தனிமைப்படுத்தப்பட்டு விடுவோமா என்ற அச்சம் அன்று என்னிடம் இருந்தது. ஆனால் ஜனாதிபதி அவர்களும் அமைச்சரவையும், மாகாண சபைகளும், உள்ளூராட்சி மன்றங்களும் வழங்கிய ஒத்துழைப்பும், ஊக்குவிப்பும் இதை வெற்றிபெறச் செய்தது என்பதை இத்தருணத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

o திவிநெகும வேலைத்திட்டத்தின் ஆரம்பத்தைப் பற்றி கூற முடியுமா?

2005ஆம் ஆண்டு இந் நாட்டின் அரச அதிகாரத்தைப் பெற்ற ஜனாதிபதி அவர்கள் நாட்டில் நிலவும் வறுமையினைப் போக்கும் வேலைத்திட்டம் ஒன்றினை முன்னெடுப்பதாக வாக்குறுதி அளித்தார். அச்சமயம் செயலில் இருந்துவந்த சமுர்த்தி உட்பட்ட ஏனைய வேலைத்திட்டங்களை சிறந்த முறையில் உறுதிப்படுத்த வேண்டும் என்ற உண்மையான உணர்வு ஜனாதிபதியிடம் இருந்தது. அதனால்தான் அவ் வேலைத்திட்டம் மஹிந்த சிந்தனையில் உள்வாங்கப்பட்டது. இந்தப் பின்னணியில் 2010, 2011 காலப் பகுதியில் ஏற்பட்ட உலக உணவுத் தட்டுப்பாடுகளுக்கு சிறந்த முறையில் முகம் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே திவிநெகும தேசிய வேலைத்திட்டம் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது. அதன் ஆரம்பக் கட்டமாக பத்து இலட்சம் குடும்பங்களை ஊக்குவிக்கும் நோக்கில் பத்து இலட்சம் வீட்டுத் தோட்டங்களை உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன் செயற்பட்டோம். அந்த ஆரம்பம் தற்போது திவிநெகுமவின் ஐந்தாவது கட்டம் வரை வளர்ந்து வந்துள்ளது.

o திவிநெகுமயும் இந்த நாட்டில் இருக்கும் ஏனைய திணைக்களங்களைப் போல் ஆகிவிடுமா?

ஆங்கிலேயரின் அடிமையில் எமது நாடு இருந்த காலத்தில் எமது வளங்களை சேகரித்துக்கொள்ளவும், வருமானத்தை தேடிக்கொள்ளவுமே திணைக்களங்கள் இங்கு உருவாக்கப்பட்டன. ‘கலெக்டர்’ என்ற பெயர் இன்னும் இந்தியாவில் இருந்து வருகின்றது. வருமானம் சரியாக வந்து சேர்கின்றதா என்பதைக் கண்டறியவே கணக்காளர் திணைக்களத்தை வெள்ளையர்கள் உருவாக்கினார்கள். வெள்ளையரின் ஆட்சிக்கு அடிபணியாத நாடுகளில் இந்த நடைமுறை காணக்கூடியதாக இல்லை. ஆகையால் இப்போது இங்கே செயற்பட்டு வருகின்ற அரச திணைக்களங்களில் இருந்து முற்றாக மாறுபட்ட, வித்தியாசமான ஒரு திணைக்களமாகவே திவிநெகும திணைக்களம் அமையும். இத் திணைக்களத்தில் பல்வேறுபட்ட வித்தியாசங்களைக் காணலாம்.

o எவ்வாறான வித்தியாசங்கள் இங்கே காணப்படுகின்றது?

நாம் நடுத்தர வருமானம் பெறும் நாடு, குறைந்த நடுத்தர வருமானம் பெறும் நாடு என்ற நிலைமை 2008, 2009ஆம் ஆண்டுகளிலேயே அடைந்தோம். எமது நாட்டு சனத்தொகையில் 70% சத விகிதமானவர்களாக இருக்கும் கிராமத்து மக்களின் வறுமை, தொழில்வாய்ப்புகள் இன்மை, வருமானம் பகிர்ந்து செல்வதில் காணப்படும் ஏற்றத்தாழ்வு நிலை, ஆகியவற்றை குறைக்க வேண்டும், எமது மக்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே இந்த திணைக்களத்தை நாம் உருவாக்கினோம்.

இது ஒரு புதிய பயணம், ஆகையால் இதை இந் நாட்டு அரசியல் கட்சிகள், அரச உத்தியோகத்தர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், ஊடகத்துறை ஆகியன நல்ல எண்ணத்துடன் பார்க்க வேண்டும். மக்களுக்கு வழிகாட்டிகளாக இருத்தல் வேண்டும்.

இந்த புதிய திணைக்களத்தை உருவாக்குவதனால் இத் துறை சார்ந்த அமைச்சர், அரச உத்தியோகத்தர் ஆகியோரின் ஆதிக்கம், செல்வாக்கு ஆகியன அவர்களிடமிருந்து கை நழு வுகின்றது. இவற்றை நாம் எதற்காக விட்டுக்கொடுக்கின்றோம் என்றால், நாட்டு மக்களின் நலனுக்காகவே என்பதை இங்கு கூறி வைக்க வேண்டும்.

o இதன் செயற்பாடு எவ்வாறு அமைகின்றது என்று கூற முடியுமா?

இதுவரை சமுர்த்தி அதிகாரசபை, மலையக மக்கள் மறுசீரமைப்பு அதிகாரசபை, தென்மாகாண அபிவிருத்தி அதிகாரசபை போன்ற பல நிறுவன அமைப்புகள் செயற்பட்டு வந்தன. அவற்றிற்கான பல பதவிகளையும் நாம் உருவாக்கி நியமித்து இருந்தோம். எவரை வேண்டுமானாலும் நியமிக்கும் அதிகாரமும் எமக்கிருந்தது. ஆனால் தற்போது எம்மால் அவ்வாறு செய்ய முடியாது.

புதிதாக உருவாக்கிய திணைக்களத்தின் கீழ் மேலே நான் குறிப்பிட்ட அதிகாரசபைகள் மூன்றும், சமுர்த்தி ஆணையாளர் திணைக்களமும், மலையக மக்கள் மறுசீரமைப்பு திணைக்களமும் உள்வாங்கப்படுகின்றது. இந்த புதிய திணைக்களத்திற்கான அனைத்து பதவி நியமனங்களும் பதவி உயர்வுகள், ஆகிய அனைத்து விடயங்களும் அரச சேவைகள் ஆணைக்குழுவின் அனுமதி மற்றும் தொழிலாளர் சம்பள ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடனேயே செயற்படுத்த வேண்டும்.

ஆகையால் உத்தியோகத்தர்கள் தாம் விரும்பிய அபிவிருத்தித் திட்டங்களை தான்தோன்றித்தனமாக செயற்படுத்தவோ நிர்வாக தீர்மானங்களை எடுக்கவும் முடியாது. இன்று முதல் அவ்வாறான தீர்மானங்களை கிராமங்களில் செயற்பட்டு வரும் மக்கள் மனங்களின் யோசனைகளுக்கு ஏற்பவே எடுத்தல் வேண்டும். கிராமங்களின் மக்கள் மன்றங்கள், அதன் பிரதிநிதிகள் ஆகியோருக்கே முக்கியத்துவம் கிடைக்கப் பெறுகின்றது. சுருங்கச் சொன்னால் இது இப்போது செயலில் இருந்துவரும் செயற்திட்டங்களைவிட முற்றிலும் மாறுபட்ட ஒரு செயற்பாட்டுத் திட்டமாகும்.

o இந்த புதிய செயல்முறையினால் வேலைகளை முன்னெடுப்பதில் சிக்கல்கள் ஏற்படுமா?

இந்த புதிய முறையின் கீழ் திணைக்களத்தில் எவராலும் தனித்து இயங்க முடியாது. ஆகையால் இதில் அனைத்து செயல்களும் கூட்டு முயற்சியாகவே முன்னெடுக்கப்பட வேண்டும். இத் திணைக்களத்தின் செயற்பாடுகள் பொது மக்களுக்கு நன்மை பயக்கும் விதத்திலேயே அமையும். மக்களின் வாழ்க்கையினை வளமாக்கும் எண்ணம்கொண்ட அனைவரினது ஒத்துழைப்பும் இதற்கு கிடைக்கப் பெற வேண்டும். அதே சமயம் திவிநெகும திணைக்களத்தினர் ஏனையோருடன் போட்டிப்போட போக வேண்டிய நிலமையும் ஏற்படக் கூடாது. ஒற்றுமையுடன் செயற்படும் அதே நேரம் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருத்தற் வேண்டும்.

o இதுவரையில் இருந்துவந்த சமுர்த்தி வங்கிகள் மற்றும் சமுர்த்தி அமைச்சுகளின் நிலை என்னவாகும்?

அவற்றிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. இருந்ததைவிட பலமான நிலையில் மத்திய வங்கியின் நேரடி கண்காணிப்பின் கீழ் சிறந்த முறையில் செயற்படும் வாய்ப்பு அவற்றிற்கு கிடைக்கும். எமது நாட்டில் இன்னும் சிறந்த கட்டமைப்புக்குள் வராதிருக்கும் சிறிய அளவிலான நிதித்துரையில் இதன் மூலம் பெரும் மாற்றம் ஏற்படும். அதேபோன்று நான் மேலே குறிப்பிட்ட நிறுவனங்களில் தொழில் புரியும் இருபதாயிரம் ஊழியர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பு கிடைக்கும். ஓய்வூதியச் சம்பளம் கிடைக்கும். குறிப்பாக இருபது இலட்சம் குடும்பங்கள் அல்லது ஐம்பது இலட்சம் மக்களுக்கு நேரடியாக இதன் மூலம் நன்மை கிடைக்கும்.

ரவி ரட்ணவேல்

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.