புத் 66 இல. 04

விஜய வருடம் தை மாதம் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர. அவ்வல் பிறை 24

SUNDAY JANUARY 26 2014

 

சிறுவன் செனித்தின் வாழ்வில் யமனாய் வந்த ~ரோலர்'

சிறுவன் செனித்தின் வாழ்வில் யமனாய் வந்த ~ரோலர்'

ஆனந்தா கல்லூரியில் நேர்ந்த அவலம்

கடுவலை, மாலபை பொது அராவை இலக்கம் 977/4 இல்லத்தில் வசித்து வந்த பிரபாத் விஜேசிங்ஹ கொழும்பு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவர். தாம் கல்வி கற்ற அதே கல்லூரியில் தமது ஒரே மகனையும் கல்வி கற்க அனுப்ப விரும்பிய பிரபாத் அவரது மகனான செனித் விஜேசிங்கவை பலத்த எதிர்பார்ப்புகளுடன் ஆனந்த கல்லூரியில் சேர்த்தார். காலம் கடந்து அச் சிறுவனும் அக் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயின்று வந்தான்.

தாமாகவே தமது வேலைகளை செய்து அதிகாலையில் தயார் செய்துகொண்டு பெற்றோருக்கு தொந்தரவு கொடுக்காது பாடசாலை வேனில் செல்லப் பழகி இருந்த செனித் கல்வியிலும் சிறந்து விளங்கினான். கடந்த 21ஆம் திகதியன்றும் வழமைபோல் கல்விக்காக கல்லூரி சென்ற அச் சிறுவன் சக நண்பர்களுடன் கல்லூரி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். ஆனால் அந்த விளையாட்டோ சற்று வித்தியாசமானதாகவே இருந்தது.

நொறுக்குத் தீனியான டிப்பி-டிப் பக்கெட் ஒன்றை உடைத்து மைதானத்தில் கொட்டிய சிறுவர் கூட்டம், அதை பக்கத்தில் இருந்த கையால் தள்ளி நிலத்தை மட்டப்படுத்தும் ரோலரைக் கொண்டு நசுக்கத் தொடங்கியது. செனித் அந்த ரோலரின் பிடியின் நடுவில் நின்று அதை பிடித்து இழுக்க அவனது இரு பக்கங்களிலுமிருந்து இன்னும் இரண்டு நண்பர்களும் அதை இழுக்க உதவினர். அந்த இழுவைக்கு துணையாக இன்னும் நான்கு ஐந்து மாணவர்கள், அந்த ரோலரில் கை வைத்து அதை செனித் பக்கம் தள்ளினார்கள். சிறுவர்கள் எதிர்பார்த்தது போலவே ரோலரில் அகப்பட்ட டிபிடிப் தவிடுபொடி ஆகியது. வஞ்சகமற்ற பிஞ்சு உள்ளங்கள் இந்த விளையாட்டை தொடர, எதிர்பாராத விதமாக ரோலர் சிறார்களையும் மீறிக்கொண்டு பள்ளத்தை நோக்கி வேகமாக நகரத் தொடங்கியது. செனித்தின் இரு புறங்களிலும் இருந்து ரோலரை இழுத்த நண்பர்கள் சற்றென்று ஒதுங்கிக் கொண்டார்கள். ஆனால் ரோலரின் பிடியின் நடுப்பகுதியில் இருந்தவாறு பின் நோக்கி நடந்து கொண்டிருந்த செனித்தினால் தம்மை நோக்கி வேகமாக உருண்டு வரும் ரோலரின் வழியை விட்டு விலக முடியாது போய்விட்டது. அடுத்த கணமே அந்த ரோலரின் கைப்பிடி செனித் சிறுவனை அருகே இருந்த சுவருடன் அமுக்கி நெரித்துவிட்டது. தமது நண்பன் விபத்தில் சிக்கியதைக் கண்டு கூக்குரலிட்ட சிறுவர்களின் குரல் கேட்டு ஸ்தலத்திற்கு ஓடி வந்த சிரேஷ்ட மாணவர்கள் தமது சகாவை தம்மால் முடிந்த அளவு சீக்கிரமாக ரிஜ்வே வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றார்கள். ஆயினும் அங்கே வைத்தியர்களுக்கு செய்வதற்கு எதுவும் இருக்கவில்லை. செனித்தின் உயிர் உடலைவிட்டுப் பிரிந்திருந்தது. அக்காவிற்கும் தங்கைக்கும் இடையே அழகான வாழ்க்கை வாழ்ந்து வந்த செனித் தமது 9ஆவது வயதிலேயே எதிர்பாராத விதமாக விளையாட்டே வினையாக மாறியதால் இவ் உலகைவிட்டுப் பிரிய நேர்ந்தது.

சுமார் 7000 மாணவர்கள் கல்வி கற்றுவரும் நாட்டின் முன்னணி கல்லூரி என்ற பெருமையைக் கொண்ட ஆனந்தா கல்லூரியின் வரலாற்றில் செனித்தின் பிரிவு ஒரு சோகக் கதையாகவே அமையும். மேலும் நாடளாவிய ரீதியில்

வருடாந்தம் சுமார் 600 பாடசாலை மாணவர்கள் திடீர் விபத்துகளில் மரணிப்பதாகவும், மேலும் 20,000 மாணவர்கள் பல்வேறு விபத்துக்களுக்கு முகம் கொடுப்பதாகவும் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கை அவ்வாறான விபத்துக்களில் 90 வீதமானவற்றை தவிர்த்துக்கொள்ள முடியும் என்றும், பெரியவர்களின் கவனக் குறைவு காரணமாகவே பெருமளவு விபத்துக்கள் இடம்பெறுகின்றது. செனித்தும் நன்பர்களும் விளையாடிய இடத்தில் ஒரு ஆசிரியர் இருந்திருந்தால் இந்த விபத்தைக் கூட தடுத்திருக்கலாம் என்று செனித்தின் உறவினர்கள் கூறி இருப்பதையும் இங்கு நாம் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். குறிப்பாக சிறுவர்களின் பாதுகாப்பை பற்றி பெற்றோரினதும் பெரியவர்களினதும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதையே இந்த துன்பியல் சம்பவமும் பறைசாற்றி நிற்கின்றது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.