புத் 66 இல. 04

விஜய வருடம் தை மாதம் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர. அவ்வல் பிறை 24

SUNDAY JANUARY 26 2014

 

 
சட்டக் கல்லூரி செல்லாத சட்டமேதை

சட்டக் கல்லூரி செல்லாத சட்டமேதை

பிரசித்த நொத்தாரிஸ் க.மு. தர்மராசாவின் நினைவலைகள்

சட்ட கல்லூரி செல்லாது சட்டத்தையும் சட்ட நுணுக்கங்களையும் பயின்ற பிரசித்த நொத்தாரிசும் சட்ட வல்லுநரும் உதவியாளருமான க.மு. தர்மராசா ஐந்து தசாப்தகாலம் சட்ட, சமய, சமூக நலனில் ஆற்றிய அளப்பரிய சேவைகள் எண்ணிலடங்காதவை. சட்டத்துறையில் அரை நூற்றாண்டு காலத்தை பூர்த்தி செய்துவிட்டு பூரிப்போடு இருந்த அவரின் வாழ்வை திரும்பிப்பார்க்கின்றேன்.

கொழும்பை வாழ்விடமாகக் கொண்ட அவரிடம் பிறந்தகத்தைப் பற்றி கேட்டேன்.

யாழ். காரைநகர் பாலாவோடையைப் பிறப்பிடமாகக் கொண்டவன் நான். என் தந்தையார் கந்தையா முருகேசு, தாயார் வள்ளியம்மை. நான்கு சகோதரர்களுடன் பிறந்த நான்தான் குடும்பத்தில் கடைசியும் கும்பத்தின் கடைசி வாரிசும். மூத்த சகோதரர்கள் மூவரும் காலவோட்டத்தில் காலனுக்கு இரையாகிவிட்டார்கள்.

என்னுடைய ஆரம்ப கல்வி காரைநகர் களபூமி சுந்தர மூர்த்தி வித்தியாலயத்தில் ஐந்தாம் தரம் வரை கற்று பின் காரைநகர் இந்து கல்லூரியில் ஜீ.ஸி.ஈ. வரை கற்றேன். எனக்கு போதித்த ஆசிரியர்களில் என். சபாரத்தினம் மாஸ்டரை மறக்க முடியாது. மாணவரின் மனப்பக்குவத்திற்கேற்ற ஹாஸ்யத்துடன் கற்பிப்பதை கையாண்டவர். அவர் படிப்பித்த ஆங்கிலமும் தமிழும் மனத்திரையில் காட்சியாகப் பதிந்துவிடும். பேச்சுப் போட்டி, விவாதப் போட்டிகளில் என் பங்களிப்பு தவறாது இடம்பெறும். அதேபோன்று உதைபந்தாட்டப் போட்டிகளில் ஆரம்பத் தரத்திலிருந்து விளையாடியிருக்கின்றேன். பள்ளி முதலாம் தரத்தில் உதைபந்தாட்ட கோல்ட் கீப்பராக உரும்பிராய் இந்துக் கல்லூரிக்கு எதிராக விளையாடியது பசுமையான நினைவுகள்.

தாங்கள் கால்பதித்த முதல் தொழில் எது?

எனக்கு பாடசாலை காலத்திலிருந்து சட்ட விவாதங்கள் பிடிக்கும். பாடசாலைக்கு ‘கட்’ அடித்துவிட்டு பள்ளிதோழர்கள் சினிமா பார்க்கப் போவார்கள். நான் நீதிமன்றில் நடக்கும் விவாதங்களைப் பார்க்க போய்விடுவேன். பள்ளி காலத்திலேயே இந்த ஆர்வம் என்னைத் தொற்றிக்கொண்டது. ஒருமுறை ஜீ.ஜீ. பொன்னம்பலம் ஊர்காவற்றுறை நீதிமன்றுக்கு வழக்கொன்றுக்காக ஆஜராக வந்திருந்த சமயம் நான் பாடசாலைக்கு செல்லாமல் அவரின் வழக்கு விவாதத்தைப் பார்க்க சென்றுவிட்டேன். அடுத்தநாள் பாடசாலைக்கு சென்ற போது, நான் சினிமா பார்க்கப் போனதாக அதிபர் கண்டித்தார். அவரிடம் உண்மையைக் கூறியதும், என் ஆர்வத்தைப் பாராட்டினார். உண்மையில் இதுகாலம் வரை என் வாழ்க்கையில் மூன்றே மூன்று சினிமாப்படம்தான் பார்த்திருக்கின்றேன். கம்பராமாயணம், வெற்றிவீரன், திருட்டுராமன் ஆகிய படங்களே. அதுவும் பால்ய பருவத்தில் பார்த்தது.

பள்ளி காலத்தில் என்னை ஈர்ந்த சட்டம், மேற்கொண்டு தொடர பின்புலம் அமையாததால், தனிப்பட்ட முயற்சியில் 1964ம் ஆண்டு தை மாதம் முதலாம் திகதி சட்டவாதிகளிடம் உதவியாளராக காலடி எடுத்து வைத்தேன்.

இதற்கு முன்னோடியாக ஒரு சம்பவம் நான் 5ம் தரத்தில் படிக்கும்போது, ஜீ. ஜீ.யின் தேர்தல் பிரசாரத்தின்போது அவருடைய பிரதிநிதியின் வேட்பாளரின் வாகனத்தில் ஏறி அவர்களுடைய சின்னத்தைக் கூறி ஜே! ஜே! என்று கோஷமிட்டது இன்னும் என் நினைவில் நிழலாடுகிறது. இன்றுவரைக்கும் அந்த தீர்க்கதரிசியின் நிழலிலிருந்து மாறவில்லை. தொழில் நிமித்தம் முதலில் காலஞ்சென்ற பிரபல நியாயதுரந்தரர் என். ரி. சிவஞானத்தின் உதவியாளராகவும் அத்துடன் சிறிது காலத்தின் பின்னர் நாடறிந்த சட்டவாதி எஸ். ஆர். கனகநாயகத்தின் உதவியாளராகவும் பலகாலம் பணியாற்றினேன். அதன்பின்னர் பிரசித்தி நொத்தாரிசு பரீட்சையில் சித்திபெற்று யாழ்ப்பா ணத்திலேயே எனது தொழிலை சிறப்புறத் தொடர்ந்தேன். சட்ட வறிஞர் என்று அழைக்கப்படும் நொத்தாரிசுப் பதவியில் நேர்த்தியாகவும் கண்ணியமாகவும் செயலாற்றிவந்தமையால் எனது சேவை மிகவும் பிரகாசித்தது.

குடியியல் நடைமுறைச் சட்டக்கோவை சிவில் நீதிமன்ற செயற்பாடுகள் பற்றி நுண்ணிய அறிவைப் பெற்றேன்.

1995முதல் கொழும்புக்கு இடம்பெயர்ந்து இளம் சட்டத்தரணிகளின் வழிகாட்டியாக இருந்துவருவதுடன் காணி வழக்குகள், தத்துவ வழக்குகள், விவாகரத்து வழக்குகள் உள்ளிட்ட குடியியல் வழக்குகளுக்கான பிராது, மனு, சத்தியவோலை, சொத்துப் பட்டியல் போன்றவற்றை வரைந்தும் ஆலோசனை வழங்கியும் வருகின்றேன்.

எனது சட்டப் புலமையை நன்கறிந்த உச்சநீதிமன்ற பிரதம நீதியரசர்களாயிருந்த கனம் ஜி. பி. எஸ். த சில்வா மற்றும் எஸ். சர்வானந்தா போன்றோரின் பரிந்துரைகளின் பேரில் எனது தேசிய அடையாள அட்டையில் “பிரசித்த நொத்தாரிசும் சட்ட உதவியாளரும்” என்ற தொழிற்பெயர் இடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சட்டத்துறையில் நீங்கள் பெற்ற சான்றிதழ்கள்பற்றி சொல்லுங்கள்...

உச்ச நீதிமன்ற பிரதம நீதியரசர் ஜீ. பி. எஸ். சில்வா பிரதம நீதிபதியாக கடமையாற்றிய சமயம் அவருடைய அனுமதியுடன் உச்சநீதிமன்ற பாதுகாப்பு அலுவலகத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, படத்துடன். இவை யாவற்றுக்கும் ஆதாரமாக அமைந்தது.

* இளைப்பாறிய உச்ச நீதிமன்ற நீதிபதி கனம் எஸ். சர்வானந்தா அவர்கள் வழங்கிய சான்றிதழ்.

* கனடா ஞிoaணீh, ஷிணீhwartz & திssoணீiatலீs வழங்கிய நற்சான்றிதழ்

* கனடா கிora ழிaskin ழிaw ழிibrary பொறுப்பதிகாரி வழங்கிய சான்றிதழ்

* சமாதான நீதிபதி பட்டம் வழங்கப்பட்ட சமயம் ஹிhலீ யிslanனீ பத்திரிகையில் வெளியான செய்தி.

* 40 வருடங்கள் பூர்த்தியடைந்த சமயம் வீரகேசரி, தினக்குரல், சுடர்ஒளி மற்றும் உதயன் ஆகிய பத்திரிகைகளில் வெளியான வாழ்த்துச் செய்திகள்.

சட்டக்கல்லூரி செல்லாது சட்டத்தைப் பயிற்றுவித்த என்னுடைய குருமார்கள் வழங்கிய சான்றிதழ்கள்.

சிரேஷ்ட குரு அட்வகேற் எஸ். ஆர். கனகநாயகம்

கனிஷ்ட குரு என். ரி. சிவஞானம் புரொக்டர் எஸ். சி

அத்துடன் பிரசித்தி நொத்தாரிசும்

வேலணையூர் ஆசிரிய மணி பண்டிதர் மருதையனார் அவர்களிடம் சைவ சித்தாந்த தத்துவத்தையும் ஓரளவுக்கு கற்றேன். இவர்களையும் இவ்விடத்தில் நினைவு கூர கடமைப்பட்டுள்ளேன்.

இன்றைய தலை முறைகளுக்கு நீங்கள் கூற விரும்புவது...

வயது முதிர்ச்சியடைந்த நேரத்தில் நாம் செய்யக்கூடியது வாழ்க்கையில் நன்றி மறவாமல் நன்றிக்கடனைச் செலுத்துவதே முக்கியமானது.

அந்தவகையில் கொழும்புத் தமிழ்ச் சங்கம் இன்று கொழும்பு மாநகரிலே எழுபது வருடங்களுக்கு மேலாக வளர்ந்து வந்திருக்கின்றன. கொழும்புத் தமிழ்ச் சங்க வளர்ச்சியை மேலும் மேலும் வளரச்செய்ய ஆக்கபூர்வமான செயல்களைச் செய்ய வேண்டும். அந்தவகையில் கொழும்புத் தமிழ்ச்சங்கம் தமிழ்த்தேசிய இனத்தின் சொத்தென நான் பலமுறை வலியுறுத்தி வந்துகொண்டிருக்கின்றேன்.

அதுமட்டுமல்ல கொழும்புத் தமிழ்ச் சங்கம் இன்றைய காலகட்டத்திற்கேற்ப ஓர் கல்விக்கூடமாக செயற்பட்டு வருகின்றது என்பதை நினைவூட்ட விரும்புகின்றேன். கொழும்புத் தமிழ்ச்சங்கம் வாரந்தோறும் புதன்கிழமையும் வெள்ளிக்கிழமையும் நிகழ்ச்சி நடாத்திவருகின்றது. அந்நிகழ்ச்சிக்கு நான் சென்றபோது பல அறிவுரைகளைக் கற்றிருக்கின்றேன். சுவாமி விபுலானந்தர் கன்னியா குமரியிலிருந்து இமயமலை வரை பிரசாரம் செய்து வந்தபோது அவர் வலியுறுத்திய இருவிடயங்கள் ஆவன, பட்டினியால் வாடுகின்ற ஏழைகளுக்கு சாப்பாடு கொடுக்க வேண்டும், அதேபோல் குடியிருக்க வீடு இல்லாமல் இருக்கும் ஏழைகளுக்கு வீடு அமைத்துக் கொடுக்க வேண்டும். இந்தக் கொள்கையை சுவாமி அவர்கள் அமெரிக்காவுக்கு சென்று அங்கு இதனை வற்புறுத்தி பிரசாரம் செய்தார்.

கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு என்பதை நாம் ஒவ்வொருவரும் இன்றைய காலகட்டத்தில் உணர்ந்து செயற்பட வேண்டியது முக்கியம். அந்தவகையில் கொழும்புத் தமிழ்ச் சங்கம் பல விடயங்களை அறிவுரைகளை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தி வருகின்றது. அதுமட்டுமல்ல கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் அமைந்திருக்கும் நூலகம் மிகவும் முக்கியமானது. சட்டத்துறையில் நாம் எங்கு நிற்கின்றோம்? நாம் பல வழிகளிலும் எத்தனை தடைகள் இடையூறுகள் இருந்தும் முயற்சி செய்து முன்னேறிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் சட்டத்துறையில் எவ்வளவோ சட்ட நிபுணர்கள் வாழ்ந்து தமிழ்த் தேசிய இனத்திற்கு சேவையாற்றியிருந்தனர். அப்படிப்பட்டவர்களின் வழியிலேயே அந்தவகையில் இன்று செயற்படுவதற்கு ஆளில்லை ஏன்? இன்று ஏன் சட்டத்துறையில் பின்தள்ளப்பட்டிருக்கின்றோம் இதற்கு என்ன காரணம்?
கடந்தவாரம் ஆறுமுகனே திரும்பிப் பார்த்தவர்

கடந்த வாரம் ‘திரும்பிப் பார்க்கிறேன்’ பகுதியை அலங்கரித்தவர் எம். ஏ. எம். ஆறுமுகம். ஆனால் அவரது பெயர் தவறு தலாக அந்தப் பகுதியில் பிரசுரமாகவில்லை இந்தத் தவறுக்கு நாம் வருந்துகின்றோம். இலங்கை காவற்றுறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அழகன் முத்தன் ஆறுமுகம் முன்னாள் பொலிஸ் இன்ஸ்பெக்டர். மரபுக்கவிதையில் ஆர்வமுள்ள இவர் தற்போது மட்டக்குளியிலுள்ள இயேசு ஜீவிக்கிறார் நற் செய்தி தலைமைப் பணிமனையில் வாத்திய இசை வழங்கி வருவதோடு அரச கருமமொழிகள் திணைக்களத்தில் சிங்கள தமிழ் உரைபெயர்ப்பாளர் குழாத்திலும் அங்கம் வகிக்கின்றார். விபரங்களுக்கு -

அந்தவகையிலே தமிழ்ச் சங்கத்திலே சட்டத்துறையை வளர்ப்பதற்காக சட்டப்பிரிவும் சேர்த்து உசார்த்துணைப் பிரிவும் ஆரம்பிக்கப்பட்டு சட்டத்துறை வளர்வதற்கு கொழும்புத் தமிழ்ச்சங்கம் முன்மாதிரியாக நடவடிக்கை எடுத்துள்ளது. கொழும்புத் தமிழ்ச் சங்கத்திலுள்ள சட்டநூலகத்தில் சாதாரண மனிதர்கள் எவரும் அங்கத்தவராகச் சேர்ந்து சட்டநூல்களைப் பயன்படுத்தலாம். இச் சந்தர்ப்பத்தில் குறித்த சட்டநூலகத்தில் நன்றிக்கடனாக இரு சட்டமேதைகளுக்கு நினைவாக ஓர் அன்பர் இலட்சக்கணக்குப் பெறுமதியான சட்டநூல்களை வழங்கியிருக்கின்றார்.

அதில் முக்கியமாக தமிழில் இந்தியாவில் வெளிவந்த தமிழில் எழுதப்பட்ட சட்ட தீர்ப்புக்கள் அடங்கிய நூல்கள் தமிழில் சட்ட அகராதி போன்ற பல சட்ட நூல்கள் இருக்கின்றன. இந்தவிடயம் நன்றிக்கடனையும் சட்டத்துறையை வளர்ப்பதற்கும் செயற்படுகின்ற செயலேயாகும்.

செனற்றர் அட்வகேற் எஸ். ஆர். கனகநாயகம் அவர்கள் பாராளுமன்றத்திலே தனிச் சிங்களச் சட்ட மசோதா இயற்றப்பட்ட சமயம் அதனை எதிர்த்து தமிழினத்திற்காக பேசிய குறிப்பிட்ட முக்கிய வார்த்தையை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். ‘தனிச் சிங்கள சட்ட மசோதாவை இயற்றி தமிழ்க் கலாசாரத்தையோ சைவத்தையோ தமிழர்களையோ அழித்துவிடமுடியாது.’ என்று கூறினார். அவர் அன்று கூறிய வார்த்தை வீண்போகவில்லை.

தமிழ் பேசும் இனம் உலகம் முழுவதிலும் பரந்து செறிந்து வாழ்க்கிறார்கள். தமிழ் கலாசாரத்தை ஆங்காங்கே நிலைநாட்டி வருகின்றார்கள். அதேபோன்று இந்துபோட் இராஜரத்தினம் 1927ம் ஆண்டு கொழும்பு வாழ் சைவ இளைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள் விட்டார். அவ்வேண்டுகோளுக்கமைய இன்று உலகம் முழுவதும் சைவர்கள் பிள்ளையாரை வைத்து வணங்கிக் கொண்டிருக்கின்றார்கள். தமிழர் கலாசாரத்தை அழிக்க முடியாது என்பதற்கு இவையெல்லாம் ஓர் எடுத்துக்காட்டு.

சட்டத்துறையில் முன்னைய சட்டத்தரணிகள் நடந்து கொண்ட விதத்தை மேலே குறிப்பிட்டிருந்தேன். அதேபோன்று அமரர் ஜீ. ஜீ. பொன்னம்பலம் சட்டத்தை கையாண்ட வழி. 1956ம் ஆண்டு யூன் 5ந் திகதி பாராளுமன்று முன்னால் தமிழினம் சத்தியாக்கிரகம் இருந்த சமயமும் 1958ம் ஆண்டு ஸ்ரீ எதிர்ப்பு போராட்டத்தில் நடந்த சம்பவத்திலும் கொழும்பிலே வாழ்ந்த தமிழினம் தாக்கப்பட்டு அகதிகளாக கொழும்பிலே பாதுகாப்பான இடத்தில் வைத்திருந்த சமயம் அங்கேயும் அவர்களுக்கு தீமை ஏற்படும் என்பதை அறிந்து அவர்களை யாழ்ப்பாணம் அனுப்ப வேண்டும் என்று முயற்சி செய்தார்.

அந்நேரம் கப்பல் மூலமாகத் தான் அனுப்பவேண்டியிருந்தது. அப்போது அல்பிரட் தம்பிஜயாவின் உதவியுடன் யாழ்ப்பாணம் அனுப்ப உதவி செய்திருந்தார். அந்நேரம் ஒரு எதிர்ப்பு ஏற்பட்டு வெளிநாட்டுக் கப்பல்கள் போவதற்கு வழியும் இல்லை அனுமதியும் இல்லை என்று சட்டவல்லுணரான அன்றைய பிரதமர் எடுத்துக் கூறினார். அதற்கு மாறாக ஜீ. ஜீ. பொன்னம் பலம் ஒரு நாட்டில் கலவரம் நடைபெற்ற சமயம் வெளிநாட்டுக் கப்பல்களை உபயோகிப்பதற்கு அனுமதி பெறத் தேவையில்லை என்ற சட்டத்தை எடுத்துக்காட்டி வெளிநாட்டுக் கப்பல்கள் மூலம் அகதிகளாக இருந்த தமிழ்மக்கள் யாழ்ப்பாணம் அனுப்பி வைத்தார். இதனைப் போல் பல சட்டத்துறையில் தமிழ்த்தேசிய இனத்திற்காக தீர்க்க தரிசனத்துடன் அமரர் ஜீ. ஜீ. நடந்தவிடயங்கள் பல நினைவு கூரத்தக்கவை.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.