புத் 66 இல. 04

விஜய வருடம் தை மாதம் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர. அவ்வல் பிறை 24

SUNDAY JANUARY 26 2014

 

‘KAVITHAIMANJAREY’

வேண்டாம் ஒரு நாட்குறிப்பு!

எனக்கொரு டயறி வேண்டும்....
நானொரு பள்ளி ஆசிரியன்
பிரத்தியேக ரியூசன் விபரங்களை
நாட்பிசகாமல் குறித்து வைத்து
கடமையை கண்ணியமாய் நிறைவேற்ற

நானோர் எழுத்தாளன், கவிஞனும்கூட
இரகசியமாக எடுத்தாண்ட
இன்னொருவரின் படைப்புக்களை
எனது பெயரில்
எந்தெந்த பத்திரிகைக்கு அனுப்பிவைத்தேன்
என்பதையெல்லாம் ஞாபகப்படுத்திக்கொள்ள

நானொரு நாடறிந்த இலக்கியவாதி
எந்த விருது, எந்தெந்தப் பட்டங்கள்
யாரால், எப்பொழுது வழங்கப்பட்டன
என்பதையெல்லாம்
சரியாக எழுதிவைத்து
நேர்காணல்களின் போது எடுத்துவிட

நானொரு சிற்றிதழ் ஆசிரியன்
மாதாந்தம் கையால் இழந்த காசுத்தொகை
ஈடுவைத்த காணி, நகைகளின் விபரம்
விற்காமல் தேங்கி திரும்பிய பிரதிகள்
என்பதைப் பற்றியெல்லாம் எழுதிவைத்து, எனது
இலக்கிய தியாகம் பற்றிப் பெருமைகொள்ள

சாதாரணமானவன் நான், ஐயையோ
வேண்டவே வேண்டாமப்பா அஃது எனக்கு
இரகசியங்களை எழுதிவைத்து
உங்களைப் போல என்னையும்
மனைவியிடம் வகையாக
மாட்டிக் கொள்ளவா சொல்கிaர்கள்?


உன் மனைவி

அவள் உனக்கு ஆடை
அவளுக்கு நீ
ஆடை

உன் புத்தி வருத்தும்
உனக்கு புரியா நோவை
குணமாக்கும் மருந்து

இறை வகுத்த வரன்
அவள் உனக்கு மனைவி
அரணாகக் காக்கும் துணைவி

நீ மன்னன்
அமைச்சர் அவள்

நீ எங்கே சென்றாலும்
நீ என்ன செய்தாலும்
உன் நிழலாகி தொடர்வாள்

உன்னோடு வாழ்
இரகசியங்கள்
அறிவாள்

உன் உள்
உணர்வுகளுள் இதயமாகி
துடிப்பாள்

அவள்
நீ உறை இல்லம்

வாழ்நாள் வரை
நீ பெற்றவள்
உற்ற தோழி

நீ விட்ட பிழை
கணப் பொழுது மறப்பாள்
உன் வெற்றிக்கு
பின்னால் ஒரு பெண்
மகிழ்வாள் அவள்
உன் மனைவி


காதல் சின்னம்

தரையிறங்கியது நட்சத்திரம்
அதன் ஒளியில் என் கண்கள்
கூசின
அவள் பாதங்கள் தரையை
முத்தமிடவில்லை
ஒத்தி ஒத்தி எடுத்தன
தேனிலே தோய்த்தெடுத்த
தேனதரங்களில் புன்னகை
அத்திப் பழத்தை வெட்டி
ஒட்டி வைத்த வித்தை
சங்கு மணி குடியேறிய
பவள மணிக் கழுத்து!

அவள்
கட்டிக் கொண்ட
தாவணி நழுவவில்லை
அவளைத் தொட்டுக்
கொள்வதில் மகிழ்ச்சி
கட்டுக்கடங்கவில்லை

ரோஜாவோ அவள்!
ரோஜாவை நீட்டினாள்
காதலின் சின்னமாய்


இதுதானா மனித நேயம்?

வட்டிக்குக் கடன் வாங்கி
வயிற்றை நிரப்பி விட்டு
கட்ட வழியின்றி
கவலையில் மாய்கின்றார்!

எங்கெங்கோ அலைந்து வந்து
ஏதோ ஒரு வாறு
சங்கு மட்டி எடுத்து
சாப்பாட்டைக் கழித்தாலும்!

வாங்கிய பற்று இன்னும்
வங்கியில் செலுத்த வில்லை
தூங்கியே எழுந்த போதும்
தொல்லையே மனதில் வாட்டம்!

பெண்டிலும் பிள்ளையீறாய்
பட்டினி தாங்க முடியா
அண்டையில் அரிசி கேட்டும்
அது கூட அமைய வில்லை!

தொழில் தேடிச் செல்லுதற்கு
தூரத்தே போக வேண்டும்
வழியிலே யானைத் தொல்லை
வாய்ப்புக்கு இதுவும் தடை!
இப்படி இன்னல் படும்
ஏழைகள் வாழ்வில் மீள
எப்போது காலம் வரும்
இதுதானா மனித நேயம்!


விளம்பரப் பலகை

வியாபார சந்தைக்குப் பிரபலமும், பிரசித்தமும்
சந்திகளில் சந்திக்கும் விந்தையான வர்ணனை வார்ப்புகள்
சொக்கிப் போகும் மனங்கள்
‘விஸ்வல் ரீம்ஸ்’ கனவுகளில் மிதக்கும்
‘மொடன் ஆட்டாக’ நெளியும் மொபைல் பெண்,
மோகவலை வீசுவாள்
‘மெகந்தி’ பூசிய கைகளில்
‘பீட்சா’ பெட்டி பசியைக் கிளறும்
கொன்பரன்ஸ் செமினார்களில்
நாசுக்காக பேசுவதற்கு நளினமான சுவிங்கம்
தாண்டிச் செல்லும் போது,
மன இச்சையைத் தூண்டி
போதையேற்றும் விசித்திர ஓவியங்கள்

அனாவசியங்களை அவசியமாக்கிடும்
விற்பனை சாணக்கியம்
நவீனத்துவத்தின் முன்னேற்றமாக
பாதசாரிகளின் இதய சரிவுகளால்
யதார்த்தங்களை நேசிக்கும் மன இயல்பு குறைகிறது

இயற்கையோடு வாழ்ந்து, நலம் பேணுதல் அருகில்,
பெட்டிகளில் சுருங்கிவிட்ட செயற்கை வில்லைகள்
அலங்கார ஆரோக்கியத்திற்கு நிர்ப்பந்தமாகிவிட்டது
மனங்கள் காட்டும் மோகமும், வேகமும்
விசாலித்த உலகிற்கு விளம்பரம் விதியாகிவிட்டது.


எதிர்பார்ப்பு

வெண் பஞ்சு
மேகங்கள் கூட்டமாய்
எதையோ தேடி
அவசரமாய் வான்
வெளியில் ஓட

கார் மேகத்தில்
மறைந்த வெண்
நிலவு மெதுவாய்
எட்டிப் பார்த்து
புன்னகை புரிய

நீல வானம்
எதையும் கண்டு
கொள்ளாமல்
அமைதியாய் அழகு
கோலம் போட

மாலையில் மலரும்
மலர்கள் வீசும்
சுகந்தத்தில் பூமி
எங்கும் மணம்
பரப்ப

காலையில் இரைதேட
சென்ற புள்ளினங்கள்
கீச்சிட்ட வண்ணம்
கூடு நோக்கி
பறக்க

தென்னங் கீற்றுகள்
தென்றல் காற்றில்
மெல்ல அசைந்தாட

மனதை கொள்ளை
கொண்டு மயக்கும்
சுகந்தமான இனிய
மாலைப் பொழுதில்

பசும் புல்
தரையில் நெஞ்சில்
உன் நினைவுகளுடன்
காத்திருக்கும்
என் அருகில்
வந்து புன்னகை
புரிந்து இதமாய்
என் கரங்களை
பற்றி

கன்னித் தமிழில்
இனிய சொல்
எடுத்து கொஞ்சும்
மொழியில் கொஞ்சி கொஞ்சி
உன் காதலை
என் காதில்
மெல்ல சொல்வாய்
என்று எதிர்
பார்த்து காத்திருக்கிறேன்


பணம்

குணத்தை மறைத்து
நிறத்தைக் காட்டி
குலத்தைத் தரம்பிரித்து
இன்பத்தைப் பறித்து
துன்பத்தைத் தொலைத்து
உறக்கத்தைக் கெடுத்து
பசிக்கு நசி கேட்டு
புசிக்கு மது, மாது கேட்டு
மானத்தை விற்றுப் பிழைத்து
ஏற்றத் தாழ்வை உண்டு பண்ணி
மனித இனத்தை அழிப்பது பணம்!

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.