புத் 66 இல. 04

விஜய வருடம் தை மாதம் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர. அவ்வல் பிறை 24

SUNDAY JANUARY 26 2014

 

கவிதை எழுத வா

கவிதை எழுத வா

கவிதை எழுத வா - என்றொரு அழைப்பு

ஐயோ கவிதை எழுதவா? என்றொரு மலைப்பு

ஏன் கவிதை எழுத வேண்டும் இது ஒரு கேள்வி

ஏன் கவிதை எழுதக் கூடாது இது ஒரு வேள்வி

ஒரு குறுகிய வட்டத்துக்குள்

வாழ்ந்து மடிந்து போகவா - நாம் வந்தோம்

படிப்பு - தொழில் - அலுவலகம் - குடும்பம்

பின் அலுவலகம் குடும்பம்

குடும்பம் - அலுவலகம்

சிலருக்கு அலுவலகமே குடும்பம்

இன்னும் சிலருக்கு குடும்பமே அலுவலகம்

இன்னொரு சாரார்

கடையும் - குடும்பமும்

குடும்பமும் - கடையும்

கடையே குடும்பமாய்

குடும்பமே கடையாய்

கடையும் இந்த வாழ்க்கை

உங்கள் மனதையே குடையும்

நட்டு வைத்த ஒரு குடை

லேசான மழைத்தூறல்

நனையாமல் அமர்ந்திருக்க

நடுவிலே ஒரு கல்

பச்சை பசேலெனப் போர்த்திய மலைகள்

அதன் ஒரு பக்கத்து மலை அடிவாரம்

சலசலத்து ஓடும் நீரோடை ஒன்றின்

சந்தோ'மான கலகலப்பு காதில்

கையில் ஒர் ஏடும் எழுத்தாணியும்……

இத்தகைய ஒரு சு+ழலுக்கு - உங்கள்

உள் மனது போகட்டும்

என்னவெல்லாமோ எழுதத் தோன்றுகிறதா?

உடனே எடுங்கள்

ஒரு பேனாவும் தாளும்

எழுதுங்கள் - எழுதுங்கள்

இது வெறும் சொல்வதெழுதல் தான்

மனது சொல்வதை எல்லாம்

மனது வைத்தெழுதுங்கள்

மனது போதும் என்று

சொல்கிற வரை எழுதுங்கள்

எதுகை மோனை எதுவும் வேண்டாம்

எது கை வருகுதோ அதை எழுதுங்கள்

இலக்கண மரபுகளே வர வேண்டாம்

இலங்கு புகழ் வருமெனும் எண்ணமும் வேண்டாம்

சரிபிழை பார்க்க யாருமே இல்லை

சரியாயிருக்கட்டும்

பிழையாயிருக்கட்டும்

சரியும் பிழையும் இரண்டுமிருக்கட்டும்

சரி ஒரு பக்கம் பிழை ஒரு பக்கம்

சரிசமமாகக் கலந்திருக்கட்டும்

எழுத எழுத பிழையும் சரியும்

பிழையெலாம் சரிந்து

சரியே மிகைக்கும்

எழுதுங்கள்

எழுதிய பின்……

மடித்து ஒரு மூலையில் வையுங்கள்

யாரும் அதனைப் பார்க்கவே வேண்டாம்

உற்ற நண்பன் - உளம் போற்றும் கவிஞன்

உள்வீட்டு மனைவி - வெளிவீட்டு நண்பி

ஏன் நீங்கள் கூட

அதைப் பார்க்கவே வேண்டாம்

மூடி வைத்து விட்டு

வேறு வேலையைப் பாருங்கள்

மூன்று நான்கு ஐந்தாறு நாட்கள்

இருப்புக் கொள்ளாது என்ற நிலை வந்ததும்

இப்போது மெதுவாய் எடுத்துப் பாருங்கள்

அமைதியாய் இருந்து படித்துப் பாருங்கள்

பிழைகள் தெரியும்

பிசகுகள் தெரியும்

பிசிறு தட்டுகின்ற இடங்கள் புரியும்

எங்கே திருத்தலாம் என்பதும் புரியும்

எதுகை மோனைகள் புதிதாய்ப் பிறக்கும்

இன்னும் வர்னணைகள் இடையிடை இணையும்

இலக்கணம் இப்போது ஜPரணமாகும்

மெல்லின வல்லின இடையினமெல்லாம்

அதனதன் இடத்தில் சேரனும் என்னும்

காரணம் எல்லாம் பு+ரணமாகி

கவிதை ஒன்று சம்பு+ரணமாகும்

இப்போது……

உனக்கே பார்க்கப் பெருமையாய் இருக்கும்

எழுதியது நானா? என்றும் நினைக்கும்

நான் தான் என்று உணர்ந்த அப்பொழுதிலே

உன் கற்பனைத் தூரலில்

உண்மையில் நனைவாய்

உள்ளமெல்லாம் எம்பி

எங்கெங்கோ பறக்கும்

இதுதான் உண்மைக் கவிதையின் நெகிழ்ச்சி

ஒரு குழந்தை பெற்றதும் தாய் பெறும் மகிழ்ச்சி

அந்த கவிதை ஓஹோ என்றிருக்கும்

பார்த்தவரெல்லாம் ஆஹா என்றுரைப்பார்

ஆகாயமேறி உன்மனது குதிக்கும்

உன் உள்ளே இருந்து ஒரு கவிஞன் குதிப்பான்

தமிழ்த்தாய்க்குப் புதிதாய்

ஒரு கவிமகன் கிடைப்பான்

இப்படியெல்லாம் நடக்காது போனால்

யாரும் அதனைப் படிக்காது போனால்

யார்க்கும் உன் கவிதை பிடிக்காது போனால்

கவிதையை மடித்து என்னிடம் கொண்டு வா

கூடவே கூர்மையாய் ஒரு கத்தியும் கொண்டு வா

ஒரு காதை வெட்டிக் கையிலே தருகிறேன்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.