புத் 66 இல. 04

விஜய வருடம் தை மாதம் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர. அவ்வல் பிறை 24

SUNDAY JANUARY 26 2014

 

சமயம் தொடர்பான சர்ச்சைகளை பகிரங்கப்படுத்துவது நல்லதல்ல

சமயம் தொடர்பான சர்ச்சைகளை பகிரங்கப்படுத்துவது நல்லதல்ல

எந்தவொரு சமயத்திலும் எழுகின்ற உள்ளகச் சர்ச்சைகளை ஊடகங்களில் பகிரங்கப்படுத்துவது நிச்சயம் அச்சமயத்திற்கு நல்லதல்ல என்பதுடன் அது எவ்வகையிலும் ஆரோக்கியமாகவும் அமையாது. வெறுமனே தனிமனித அல்லது சமயம் சார் ஓர் அமைப்பிற்கு மட்டுமேயான பிரசாரமாக அது அமையுமே தவிர அதனால் ஒரு தீர்வினைக் காண முடியாது. இதனை நாம் வரலாற்றில் பல தடவைகள் அனுபவித்திருக்கின்றோம். அது நன்கு தெரிந்திருந்தும் சிலர் மீண்டும் மீண்டும் இத்தவறினைச் செய்து வருவது வேத னைக்குரிய விடயமாகும். சிவராத்திரி தினம் எப்போது? கந்த சஷ்டி விரதம் எத்தனை நாட்கள்?, நவராத்திரி ஏன் எட்டுத் தினங்களில் முடிவுறுகிறது? சூரன் போர் இன்றா நாளையா? என்று சமய விரதங்கள் சார்ந்த விடயங்களுக்கு சர்ச்சைகள் எழுந்ததனையும் அவற்றுக்குத் தீர்வு காணப்படாமலேயே சர்ச்சை, இரு துருவங்களாகி விரும்பியவாறு அவ்விரதங்களை மக்கள் அனுஷ்டித்த மையையும் வரலாற்றிலிருந்து அழித்துவிட முடியாது இவையெல்லாம் எமக்கு ஊடகங்களில் பகிரங்கப்படுத்தியமையாலேயே விரிவாகத் தெரிய வந்தன.

இதேபோன்றதொரு சமயம்சார் சர்ச்சை அண்மையில் ஓர் ஆலயத்தின் கும்பாபிஷேகம் தொடர்பாக எழுந்து அடங்கியது. அதிலும் இப்பிரச்சினை ஊடகங்களிலேயே மிகைப்படுத்தப்பட்டு ஏட்டிக்குப் போட்டியான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வழமைபோன்று தீர்வு காணப்படாமலேயே முடிவிற்கு வந்தது.

அவ்விடயத்தை விரிவுபடுத்த நாம் விரும்பவில்லை. விரிவுபடுத்தினால் நல்லது கூற விழையும் நாமும் தீங்கு செய்ததில் பங்குதாரராகிவிடுவோம். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் இனி நடப்பவையாவது நல்லதாக நடக்கட்டும் என்பதே எமது வேண்டுகோளாகும். ஒரு சமயத்தினுள் விரத அனுஷ்டானங்கள் அல்லது மதக் கிரியைகள் தொடர்பான சர்ச்சைகள் எழுந்தால் அதனைப் பகிரங்கப்படுத்தாது சம்பந்தப்பட்ட இருதரப்பினரும் அமர்ந்து பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் எதிர்மறையான கருத்துக்களை முன்வைத்து ஊடகங்களில் அறிக்கைகளை வெளியிடக் கூடாது.

எமது நாட்டைப் பொறுத்தவரையில் இதுபோன்ற இந்து சமய சந்தேகங்கள் எழுந்தபோது நவாலியூர் பிரம்மஸ்ரீ சாமி விஸ்வநாதக் குருக்கள், பிரம்மஸ்ரீ குஞ்சிதபாதக் குருக்கள், பிரம்மஸ்ரீ பா. சண்முகரத்தின சர்மா குருக்கள் ஆகி யோர் விடை காண்பவர்களாக இருந்தனர். அவர்கள் கூறினால் இந்து சமூகம் அதனை சரியென ஏற்றுக் கொள்ளும் நிலையும் காணப்பட்டது. ஆனால் இம்மூவரும் இன்று நம்மத்தியில் இல்லை. இறைவனடி சேர்ந்துவிட்டார்கள். இவர்களது இடைவெளியை நிரப்ப அனுபவத்திலும், வயதிலும், சமயம் சார்ந்த அறிவிலும் மூத்த சிவாச்சாரியார்கள் இல்லையென்றே கூற வேண்டும்.

இந்நிலையில் இன்று இலங்கை வாழ் இந்துக்கள் மத்தியில் இதுபோன்ற சமயம்சார் சர்ச்சைகள் எழும்போது அதனை எவ்வாறு கையாள்வது என்பது ஒரு பெரும் சர்ச்சையாக உள்ளது. உண்மையில் இன்று அரசாங்க அங்கீகாரம் பெற்ற இந்து சமய இந்துக் கலாசார திணைக்களமும் மற்றும் முழு நாட்டு இந்துக்களாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அமைப்பான அகில இலங்கை இந்து மாமன்றமும் இருபெரும் பலம் மிக்க சக்திகளாக உள்ளன. இந்நிலையில், இவையிரண்டுமே இத்தகைய மத ரீதியான பிணக்குகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்பது மக்களது பொதுவான கருத்தாக உள்ளது. இது முற்று முழுதாக ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்தாகவும் உணரப்படுகின்றது.

எனினும் அதிலும் ஒரு சர்ச்சை காணப்படுவதாக, இன்னொரு பிரிவினர் சுட்டிக்காட்டுவதையும் நாம் கருத்திற் கொண்டே ஆக வேண்டும். அதாவது இவ்விரு பலம் மிக்க அமைப்புகளிலும் வேதாகமம் தெரிந்த அந்தணப் பெருமக்களான பிராமண சமூகத்தினர் இல்லாமை அதாவது உள்வாங்கப்பட்டி ருக்காமையே அதுவாகும். சமய தினங்கள், சமயக் கிரியைகள் தொடர்பான சர்ச்சைகளோ சந்தேகங்களோ எழுந்தால் அவற்றை ஓர் அந்தணக் குருமார் கொண்ட குழாமினாலேயே தீர்த்து வைக்க முடியும் என்பதுவும் பொதுவாக ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு கருத்தாகவே உள்ளது. அதில் நியாயமுமுள்ளது.

இந்நிலையில் இனிவரும் காலங்களிலாவது இதுபோன்ற சந்தேகங்களுக்கு சர்ச்சையில்லாது, ஆர்ப்பாட்டமில்லாது, எதிர்ப்புப் பிரசாரம் செய்யாது தீர்வு காணப்படுவது பற்றிச் சிந்தித்தே ஆக வேண்டும். இல்லையேல் அது நாம் சார்ந்த சமயத்திற்கும், நமது மூதாதையர்கள் கட்டிக் காத்து வந்த சமயப் பாரம்பரிய முறைகளுக்கும், நம்பி வணங்கும் தெய்வங்களுக்கும் நாம் துரோகம் செய்தவர்களாகிவிடுவோம். இதற்குத் தீர்வாக முன்னர் பல தட வைகள் வலியுறுத்தப்பட்ட இந்து சமய உயர் பீடம் என்ற அமைப்பை உருவாக்குவதே சிறந்தது என்பது எமது கருத்தாகும்.

அரச அங்கீகாரம் பெற்ற இந்து சமய கலாசார திணைக்களப் பணிப்பாளர், அதன் உயரதிகாரிகள், இருவர், ஜனாதிபதியின் இந்து சமய விவகார, இணைப்பாளராக இருக்கும் அந்தணப் பெருமகன் பிரம்மஸ்ரீ பாபுசர்மா இராமச்சந்திரக் குருக்கள், அகில இலங்கையிலுமுள்ள பிரதான ஆலயங்களின் சிவாச்சாரியார்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஐந்து மூத்த சிவாச்சா ரியார்கள், அகில இலங்கை, இந்துமாமன்றத் தலைவர் உட்பட மூவர், அம் மன்றத்தில் பதிவு செய்யப்பட்டு உண்மையாகவே சேவை நோக்குடன் இயங்கி வரும் நாட்டிலுள்ள இந்து அமைப்புக்களிலிருந்து தெரிவு செய்யப்படும் நான்கு பிரதிநிதிகள், கொழும்பு மயுராபிளேஸ் ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய அறங்காவலர் சிவநெறிச் செல்வர் சுந்தரலிங்கம் அவர்கள் போன்று சமயத்திற்கு உண்மையாகவே தொண்டாற்றும் ஆலய அறங்காவலர்கள் ஐவர் என்பதாக இருபது பேர் கொண்ட குழுவாக இந்த இந்து சமய உயர் பீடத்தை அமைக்க வேண்டும். எதிர்காலத்தில் சமய தினங்கள், கிரியைகள் தொடர்பான சர்ச்சைகள் எழுந்தால் இவ்வாறு அமைக்கப்படும் இந்த இந்து சமய உயர் பீடம் ஒன்று கூடியே தீர்வினைக் காணும். அது சரியானதும், இறுதியானதுமான தீர்வாக அமையும். அத்தீர்விற்கு ஒட்டுமொத்த இந்து சமூகமும் கட்டுப்பட வேண்டும் என்பதை வழமையாக்க வேண்டும். இதனைவிடுத்து சமயத்தையும், சமய விழுமியங்களையும், உயர் கோட்பாடுகளையும் ஊடகங்களில் வியாக் கியானம் செய்வோரை சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்க வேண்டும். இதுவே சர்ச்சைகளுக்குத் தீர்வாக அமையும்.

அத்துடன் சமயம் தொடர்பான விடயங்களை ஊடகங்கள் குறிப்பாகத் தமிழ் ஊடகங்கள் மிகவும் அவதானமாகக் கடைப்பிடிக்க வேண்டும். முகஸ்துதிக்காக சமய விடயங்களை விமர்சிக்கும் சிலரது செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக எண்ணி சமயத்தை மாசுபடுத்தக் கூடாது என்பது எமது வேண்டுகோளாகும். இச்செயலில் இறங்கக் கூடிய சக்தி இந்து சமய கலாசார திணைக்களத்திடமும், அகில இலங்கை இந்து மாமன்றத்திடமுமே உள்ளது. இவ்வமைப்புக்களுக்கு ஜனாதிபதியின் இந்து மத இணைப்பாளரான குருக்களும், அறங்காவலர் சிவநெறிச் செல்வர் சுந்தரலிங்கம் அவர்களும் உறுதுணையாக இருந்து செயற்பட்டால் அடுத்து ஒரு சர்ச்சை எழுந்தால்கூட அதனை காதோடு காது வைத்தாற்போல் தீர்த்துவிடலாம். தீர்வினை மட்டுமே ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு அறிவித்தும் விடலாம் இந்து மத உயர் பீடத்தின் தீர்விற்கே ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.?

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.