புத் 66 இல. 04

விஜய வருடம் தை மாதம் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர. அவ்வல் பிறை 24

SUNDAY JANUARY 26 2014

 

 
முதலாவது பிரெய்லி சஞ்சிகை அயராத முயற்சியில்...

முதலாவது பிரெய்லி சஞ்சிகை அயராத முயற்சியில்...

விழிப்புலனை முற்றாக இழந்த ராஜ்குமார் தனது தளராத முயற்சியின் பலனாக வெற்றிப்படிகளில் கால்பதித்து வருகிறார். பிரைல் எழுத்தைக் கண்டுபிடித்த லூயி பிரேயிலை முன்னுதாரணமாகக் கொண்டு செயல்படும் இவர் தான் பெற்ற இன்பம் தன்னைப் போன்ற விழிப்புலனற்றோர் அனைவரும் பெற்று இன்புற வேண்டுமென்ற பேரவா கொண்டு செயல்படுவர்.

விழிப்புலனற்றோருக்கென்றே 2004 ஆம் ஆண்டிலிருந்து கலாபதிப்பகத்தை ஆரம்பித்து அவர்களை மையப்படுத்தி சிறந்த விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் இவர் நிரந்தரமாக பதிப்பகத்தையும் அதற்கான அச்சக இயந்திரங்களையும் நிறுவுவதில் அயராத முயற்சியை மேற்கொண்டுள்ளார். சகோதர மொழிகளில் விழிப்புலனற்றோருக்கான வாராந்த சஞ்சிகைகள் வெளியாவது போன்று தமிழ் பேசும் விழிப்புலனற்றோருக்கான தமிழ் பிரெய்லி சஞ்சிகையை வெளிக்கொணரும் கைங்கரியங்களை மேற்கொண்டுள்ளார்.

இதற்கான முன்னேற்பாடாக நிதி சேகரிக்கும் பொருட்டு அதிர்ஷ்ட இலாப சீட்டுகளை ஆர்வமுள்ள மனிதாபிமானிகளிடையே விற்பனைக்கு விட்டுள்ளார். முதல் பரிசாக ஹி.V.ஷி ஸ்கூட்டி, இரண்டாம் பரிசு சலவை மெஷின், மூன்றாம் பரிசு குளிர்சாதனப் பெட்டி. இவற்றுடன் ஆறுதல் பரிசுகளும் அதிர்ஷ்டசாலிகளுக்கு வழங்க கலாபதிப்பகத்தினர் முன்வந்துள்ளனர். இதன் சீட்டிழுப்பு எதிர்வரும் மே மாதம் 10ஆம் திகதி, கொழும்பு 04இல், 35, பிரங்போர்ட் பிளேஸிலுள்ள வெஸ்டர்ன் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

‘வாழும்போதே’ பிரைல் வாராந்த தமிழ் சஞ்சிகையாக விழிப்புலனற்றோர் கரங்களில் தவழவிட்டு அவர்களுக்கு உந்துசக்தியாக இருக்க நாம் ஒவ்வொருவரும் முன்வர வேண்டும். தனிப்பட்ட நபர்களோ, தனியார் நிறுவனங்களோ மன்றங்களோ இவர்களுக்கு நேசக் கரம் நீட்ட விரும்பினால், 0718277906 - 075 7713546 - 0112362920 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம்.

வாசகர்களுக்காக அவரின் வாழ்க்கையைப் பற்றி கேட்டபோது...

நான் சுன்னாகத்தை பிறப்பிடமாகக் கொண்டவன். மூன்று வயதில் கண்ணில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இரண்டு கண்களிலும் பார்வையை இழக்க வேண்டி ஏற்பட்டது. கைதடி கண்பார்வையற்றோர் பாடசாலையில் எனது ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்தேன். ஆண்டு 5 முதல் க.பொ.த சாதாரண தரம் வரை சாவகச்சேரி ட்ரிசர் கல்லூரியில் கற்றேன். உயர் தரத்தை யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியிலும், கொழும்பு விவேகானந்தா கல்லூரியிலும் தொடர்ந்தேன்.

உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து விசேட பிரைல் மூலம் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று கலைமாணிப் பட்டத்தைப் பெற்றுள்ளேன். அது மட்டுமன்றி இந்தியாவின் காமராஜர் பல்கல்கலைக்கழகத்தில் கண் பார்வையற்றோர்களுக்கான விசேட கணனி பயிற்சி மற்றும் ஊடகத் தொடர்பாடல் பட்டத்தையும் பெற்றுள்ளேன். தற்பொழுது சமூக சேவைத் திணைக்களத்தில் அபிவிருத்தி அலுவலராகக் கடமையாற்றி வருகின்றேன்.

முடியாது என்பதை முடியுமாக மாற்றுவதே எனது கொள்கை.

எனது இக்கொள்கை காரணமாகவே கண் பார்வையை இழந்த போதும் என்னால் முன்னேற முடிந்தது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லூயி பிரேயில் தன் மூன்றாவது வயதில் ஊசியை வைத்து விளையாடிக் கொண்டிருந்த போது, கண்ணில் காயம் ஏற்பட்டு பார்வையை இழந்தார். பின்னர் அந்த ஊசியைக் கொண்டே பிரைல் எழுத்தைக் கண்டுபிடித்தார். அவருடைய வாழ்க்கையை முன்னுதாரணமாகக் கொண்டே நான் வாழ்ந்து வருகின்றேன். இயலாது என்பதை இயலுமாக மாற்றுவதே எனது நோக்கமாகும். திருமணமாகி இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். ஒருவர் உயர்த் தரத்திலும் மற்றுமொருவர் 7 ஆம் ஆண்டிலும் கல்வி கற்று வருகின்றனர். கலா பதிப்பகம் உள்ளிட்ட எனது அனைத்து முயற்சிகளுக்கும் குடும்பத்தினர் பூரண ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். சிறு வயது முதலே எனக்கு இலக்கியத் துறையில் ஆர்வம் உள்ளது.

சமுதாயத்துக்கு நல்ல விடயங்களைக் கொடுக்க வேண்டும். விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கம் காரணமாக பல்வேறு துறைகளில் புத்தகங்களை எழுதி வருகின்றேன். ஏனையவர்களைப் போன்று புத்தகங்களை வாசிக்க முடியாது. இருந்தாலும் எனது யோசனைகளை ஏனையவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் புத்தகங்களை எழுதி வருகின்றேன்.

இதுவரை நான் எழுதிய 14 புத்தகங்கள் கலா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளன. சமூகம், மனித நேயம், உளவியல், விசேட தேவையுடையோரின் பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள், கல்வி, காதல், கவிதைகள் உள்ளிட்ட துறைகளைக் கொண்டதாக எனது புத்தகங்கள் அமைந்துள்ளன. வாழும் போதே முற்றத்தின் முத்தத்தில் என்ற இரண்டு புத்தகங்களையும் குறிப்பிட வேண்டும். இந்தப் புத்தகங்கள் மூலம் எனது கருத்துக்களையும் சமூகத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்.

எதுவும் முடியாது என்று இருக்கக் கூடாது. முடியும் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். வாழ்க்கையிலும் முடியும் என்ற நம்பிக்கையுடன் எந்தக் காரியத்திலும் இறங்க வேண்டும்.

காலத்தையும், நேரத்தையும் வீணடிக்கக் கூடாது. எந்த செயலையும் நாளைக்குச் செய்வோம் என்று நாட்களை தள்ளிப்போடக் கூடாது. ஆகவே என் முயற்சிக்கு நேசக்கரம் நீட்டுங்கள்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.