புத் 65 இல. 50

விஜய வருடம் கார்த்திகை மாதம் 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஸபர் பிறை 11

SUNDAY DECEMBER 15 2013

 

 

மரங்களை வெட்டி விற்று ஈ.பி.எப். செலுத்த முடியுமா?

மரங்களை வெட்டி விற்று ஈ.பி.எப். செலுத்த முடியுமா?

தொழிற்சங்கங்கள் ஒன்று கூடி ஆராய முடிவு

ngருந்தோட்டத் தொழிலாளர்களின் ஊழியர் சேபலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி, சேவைக்கால பணம் ஆகியன கடந்த பத்தாண்டுகள் கடந்தும் இன்னும் பெற்றுக்கொள்ள முடியாமல் இருப்பது தொழிலாளர்களின் உரிமையையும், சர்வதேச தொழில் நியமங்களையும் மீறும் செயலாகும் என தொழிலாளர் ஒத்துழைப்புச் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.பி. சிவப்பிரகாசம் தெரிவித்தார்.

மனித அபிவிருத்தித் தாபனத்தின் ஏற்பாட்டில் கொழும்பு நிப்பொன் ஹோட்டல் கேட்போர் கூடத்தில் கடந்த 11 ஆம் திகதியன்று நடைபெற்ற ஊடகவியலாளர்களுடான கலந்துரையாடலின்போதே இவ்வாறு குறிப்பிட்டார் அவர். மேலும் கருத்து தெரிவிக்கையில், மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபை, அரச பெருந்தோட்டயாக்கம் மற்றும் எல்கடுவ பிளாண்டேசன் கம்பனி என்பனவற்றினால் நிர்வகிக்கப்படுகின்ற 31 தோட்டங்களில் தொழில் புரியும் 12,000ற்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி, சேவைக்கால பணம் ஆகியவற்றை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை தொழிலாளர் ஒத்துழைப்பு சங்கம் மேற்கொண்டுவருகிறது.

இதுவரை காலமும் வழங்கப்படாமல் இருக்கும் 1888 மில்லியன் ரூபாய் நிதியை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை தொழிலாளர்கள் சார்பாக பத்து தோட்டங்களைச் சேர்ந்த தலைவர்கள், தொழிலாளர் ஒத்துழைப்பு சங்கம் மற்றும் மனித அபிவிருத்தி தாபனம் என்பன இணைந்து மேற்கொண்டு வருகின்றன. இதன் முதற் கட்டமாக மனித உரிமைகள் தினத்தன்று கண்டியிலும் மற்றும் கொழும்பிலுள்ள மனித உரிமைகள் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளர் சகோதரர்களுடன் சென்று முறைப்பாடு செய்துள்ளோம்.

இது ஒரு ஆரம்ப கட்ட நடவடிக்கையாகும். ஜனவரியில் அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைத்து இது தொடர்பாக பேச இருக்கிறோம். அத்துடன் தோட்ட மக்கள் விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறோம்.

பெருந்தோட்டத்துறையைப் பொறுத்தவரையில் 22 பிராந்திய கம்பனிகள் 450 தோட்டங்களை நீண்டகால குத்தகை அடிப்படையில் நிர்வகித்து வருகின்றன. முப்பதுக்கு மேற்பட்ட தோட்டங்களை அரசாங்க நிறுவனங்களான மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபை அரச பெருந்தோட்ட யாக்கம் மற்றும் எல்கடுவ பிளாண்டேசன் கம்பனி ஆகியன நிர்வகித்து வருகின்றன. அரசாங்கத்திற்குச் சொந்தமான மேற்படி தோட்டங்களில் வாழும் ஏறக்குறைய 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் தோட்ட சேவையாளர்கள் ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி, சேவைக்கால பணம் என ஏறக்குறைய 1888மில், ரூபாவை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருக்கின்றனர். மேற்படி இத்தோட்டங்கள் கண்டி, மாத்தளை மாவட்டங்களில் அமைந்துள்ளன.

பிராந்திய தோட்டக் கம்பனிகளைப் பொறுத்தவரையில் ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி, சேவைக்கால பணம் உரிய முறையில் வழங்கப்பட்டுவரும் நிலையில் அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் நிறுவனங்கள் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து அறவிடப்பட்ட ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி என்பனவும் வைப்பிலிடப்படவில்லை என அறியமுடிகின்றது. இக்காலப்பகுதியில் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட சேவைக்காலப்பணமும் கிடைக்கவில்லை என தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

மேற்படி தொழிலாளர்களுக்கு மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை 885 மில. ரூபாவையும், அரச பெருந்தோட்ட யாக்கம் 664 மில். ரூபாவையும், எல்கடுவ பிளாண்டேசன் கம்பனி 339 மில். ரூபாவையும் வழங்க வேண்டியுள்ள நிலையில் 66 ஆயிரம் மரங்களை வெட்டி விற்று அதில் கிடைக்கும் நிதியை பாதிக்கப்பட்டுள்ள 12 ஆயிரம் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க முடியுமா என்பது கேள்விக்குறியே. அத்துடன் இந்நிறுவனங்கள் பெரும் நட்டத்தில் இயங்குகின்றன. கடந்த காலங்களில் பெற்ற 200 மில் ரூபா கடனைக்கூட திருப்பிச் செலுத்த முடியாமல் இருக்கின்றனர்.

இந்த தோட்டங்கள் தனியாருக்கு 10, 20, 50, 100 ஏக்கர்களாக பிரித்து கொடுக்கப் படுகின்றன. இதில் மீளவும் தேயிலை உற்பத்தி, விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் தமதுசொந்தத் தேவைகள் என பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்துகின்றார்கள். இவ்வாறானதொரு நிலையில் தோட்டங்கள் தூண்டாடப்பட்டு இலங்கையில் நில சம்பந்தமான பிரச்சினையை தோற்றுவிக்கலாம்.

இது தொடர்பாக கண்டி, மாத்தளை மற்றும் சம்பந்தப்பட்ட தொழில் திணைக்கள காரியா லயங்களில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களினால் முறைப்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் தொழில் திணைக்களத்தினால் மேற்படி தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக எடுக்கப்படும் சட்டரீதியான நடவடிக்கைகள் மிகவும் மந்தகதியிலேயே நடைபெறுகின்றன.

இலங்கையில் மனித உரிமை மேம்பாட்டிலும் கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்ற சட்ட ரீதியான நிறுவனம் என்ற அடிப்படையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் இலங்கை பிரஜைகளின் தொழில் மற்றும் மனித உரிமை மீறல்களில் தலையிட்டு அவர்களின் மனித உரிமையை நிலைநாட்ட வேண்டுமென தாம் கேட்டுக்கொண்டுள்ளதாக பி.பி. சிவப்பிரகாசம் மேலும் குறிப்பிட்டார்.

 

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.