புத் 65 இல. 01

நந்தன வருடம் மார்கழி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 சபர் பிறை 23

SUNDAY JANUARY 06 2013

 

 
முஸ்லிம் காங்கிரஸ் பேராளர் மாநாடு

முஸ்லிம் காங்கிரஸ் பேராளர் மாநாடு

ஒரு வெட்டு முகப் பார்வை

லீமது நாட்டிலே வாழ்கின்ற முஸ்லிம்கள் பலநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமைவாய்ந்த வரலாற்றைக் கொண்டவர்கள். வடக்கு, கிழக்கிலும் நாட்டின் எல்லாப் பிரதேசங்களிலும் செறிந்தும் பரந்தும் வாழ்பவர்கள். வணிகமே முஸ்லிம்களின் பூர்வீகத் தொழிலாக அமைந்துவிட்டபோதும் தாம் வாழும் பிரதேசங்களின் இயற்கை வளங்களைப் பயன்படுத்தி விவசாயம், மீன்பிடி போன்ற தொழில்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். முஸ்லிம்கள் தமது தொழில்துறை மூலம் நாட்டின் சுபீட்சத்துக்கு உழைத்து வந்தபோதும் அரசியல் ரீதியாகப் பின்னடைவே இருந்தது.

முஸ்லிம் சமூகம் அரசியல் ரீதியாக ‘எடுப்பார் கைப்பிள்ளைகள் போல’ அநாதை நிலையில் காணப்பட்டனர். இலங்கை முஸ்லிம்களின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்யும் ஒரு மக்கள் அமைப்பு முன்னர் இருந்ததில்லை. முஸ்லிம்களின் தனித்துவம், பாதுகாப்பைப் பேணக்கூடிய ஒரு மக்கள் சக்தி அல்லது அமைப்பின் தேவை அக்காலையில் உணரப்பட்டது. முஸ்லிம் அரசியல்வாதிகள் ஐ.தே.க, ஸ்ரீ.ல.சு.க போன்ற தேசியக் கட்சிகளில் இணைந்து முஸ்லிம்களுக்கான தேவைகளை நிறைவேற்றினர். எனினும் பேரினவாதக் கட்சிகளின் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட முஸ்லிம்களைப் பாதிக்கும் தீர்மானங்களை எதிர்த்து நிற்கவும், தட்டிக் கேட்கவும் திராணியற்றோராக இருந்தனர். கட்சிக்கட்டுப்பாடு அவர்களுக்குத் தடையாக அமைந்தது.

இந்நிலையிலேதான் முஸ்லிம்களுக்கெனத் தனியான ஓர் அரசியல் பலத்தின் தேவை உணரப்பட்டது. கல்வியை நிறைவு செய்து அரசியலில் பிரவேசித்தார் இளைஞர் அஷ்ரப். அவரது சமூக நலன் சார்ந்த சிந்தனையின் பயனாக ஸ்ரீ.ல.முஸ்லிம் காங்கிரஸ் உதயமானது.

மாதலைவர் அஷ்ரப் மு.காவைத் தோற்றுவித்தபோது அதற்கெதிராகப் பல கண்டனங்களும் விமர்சனங்களும் எழுந்தன. அஷ்ரப்புக்கு இது தேவையற்ற வேலை என பல்வேறு மட்டத்தினர் போர்க்கொடி பிடித்தனர். துணிச்சலும் திறமையும், சீரிய சிந்தனையும் கொண்ட மாமனிதர் அஷ்ரப் அத்தகைய எதிர்ப்புக்களுக்குச் செவிசாய்க்காது, சளைக்காது தன் இலட்சியப் பாதையில் முன்சென்றார்.

உயிர் ஆபத்துக்களையும் எதிர்நோக்கினார். எனினும் அவருக்கே இயல்பான சாதுரியம், சாணக்கியத்தின் பலத்தால் அனைவரையும் தோற்கடித்தார். சமூகப்பற்றுடன் மு.காவில் இணைந்து கொண்டவர்களுடன் கைகோர்த்து கட்சியை வளர்த்தார். நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமென வளர்ந்த மு.கா தேசிய, சர்வதேச ரீதியாக முஸ்லிம்களின் தனித்துவத்தையும் ஒற்றுமையையும் வெளிகாட்டும் மக்கள் சக்தியாகப் பரிணமித்தது. ஆட்சி மன்றத்திலே அரசியலைத் தீர்மானிக்கும் முக்கிய சக்தியாகவும் கட்சியாகவும் விளங்கியது. அஷ்ரப்பின் அற்புதமான தலைமைத்துவமும் அரவணைக்கும் சுபாவமும் எதிரிகளையும் கட்சியில் இணையச் செய்தது.

வரலாற்று நாயகனான அஷ்ரப்பின் அகால மரணத்தின் பின் கட்சிக்குள்ளே கருத்து வேற்றுமைகள் தோன்றின. கட்சியை வளர்த்த சில முக்கியஸ்தர்களும் தொண்டர்களும் மு.காவை விட்டுப்பிரிந்தபோதும் கட்சிக்குத் தலைமை தாங்கிய புதிய தலைமைத்துவமான ஹக்கீம் அவர்கள் கட்சியைச் சோரம் போகாதவாறு கட்டிக் காப்பதில் கரிசனையோடு செயல்பட்டு வருவது மு.கா ஆதரவாளர்களுக்குத் திருப்தி தரும் விடயமாகும். எனினும்,

நடைமுறை அரசியலிலே மு.காவுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பாக தொண்டர்களிடையே கருத்து வேற்றுமைகள் எழத் தொடங்கின. தனிப்பட்ட ஒருவரது அல்லது சிலரது கருத்துக்களுக்கு மு.கா தலைமை வழிபோக வேண்டுமென நினைப்பது மடமைதான்.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலிலே ஆளுங்கட்சியில் இருந்து கொண்டு தனித்துத் தேர்தலில் குதித்ததும், தேர்தலின் பின்னர் மாகாணசபை ஆட்சியமைய அரசுக்கு கைகொடுத்ததும் மு.கா தொடர்பான பல்வேறு விமர்சனங்கள் எழக் காரணமாகின.

கிழக்கு மாகாண சபை தேர்தல் முடிந்ததன் பின்னர் மு.கா தலைவர் ஹக்கீமை தாம் விரும்பிய வழியில் கொண்டு செல்லலாம் என தப்புக்கணக்குப் போட்டவர்கள் ஹக்கீம் மேற்கொண்ட தீர்க்கமான தீர்மானத்தால் நிலைகுலைந்து போயினர். ஏமாற்றத்தின் விளிம்பில் நின்றுகொண்டு ஹக்கீமை மோசமாக விமர்சித்தனர். தமது அரசியல் வங்குரோத்துத்தனத்தை வெளிப்படுத்தினர். ஊடகங்களும் இவற்றை ஊதிப் பெருப்பித்தன. எனினும் ஹக்கீம் எதற்கும் அசைந்து கொடுக்காது தான் ஒரு சமூகக் கட்சியொன்றின் தலைவர் என்பதை நிரூபித்தார். தொலைக்காட்சியிலும் பத்திரிகையாளர் மாநாடுகளிலும் கட்சி மேற்கொண்ட முடிவு மிகச் சரியானதென தெளிவுபடுத்தினார். உச்சபீட அதிருப்தியாளர்கள் பலர் இதில் திருப்தி கண்டபோதும் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலில் இயங்குபவர்கள் இன்னும் விமர்சனங்களை நிறுத்திக் கொண்டதாகத் தெரியவில்லை.

கடந்த சனிக்கிழமை கட்சியின் 24ஆவது பேராளர் மாநாடு தெஹிவளையில் இடம்பெற்றபோது பேராளர்களில் ஒரு சிலர் தமது மனக் குறைகளைக் கொட்டித் தீர்த்ததைக் காண முடிந்தது. பல்வேறு கருத்துகள் அங்கு எதிரொலித்தன.

தலைமை மீது குற்றச்சாட்டுக்களையும் சுமத்தினர். சில பேராளர்களின் சுயாதீன, ஆக்ரோஷமான கருத்துகள் கட்சியின் ஜனநாயகத் தன்மையையே பிரதிபலித்தன. அங்கு கருத்துச் சுதந்திரத்துக்கு தாராளமாக இடமளிக்கப்பட்டது. மாநாட்டு இறுதியில் கட்சித்தலைவரின் ஆழமான, தீர்க்கதரிசனமான உரை அனைவரையும் சிந்திக்க வைத்ததாக மாநாட்டில் பங்குபற்றியோர் கூறுகின்றனர்.

கட்சித் தலைமை முகம்கொடுக்கும் சவால்களை தமது நீண்ட உரையில் தொட்டுக்காட்டிய ஹக்கீம் பல்வேறு விமர்சனங்களுக்கு தனது உரையின் மூலம் முத்தாய்ப்பு வைத்தார்.

பேராளர் மாநாட்டில் கட்சியின் தவி சாளர் பiர் சேகுதாவூத் ஒரு கன தியான உரையை ஆற்றினார். செய லாளர் நாயகம் ஹஸனலி முக்கிய தீர்மானங்களை வாசித்தார். சர்வதேச குர்ஆன் மனனப்போட்டியில் முத லிடம் பெற்ற இலங்கை மாணவன் ஹாபிஸ் றிஸ்கானுக்கு கட்சியின் பிரதித்தலைவர் மாகாண அமைச்சர் ஹாபிஸ் நiர் அஹமட் பணமுடிப்பு வழங்கி கெளரவித்தார்.

கட்சியின் அம்பாறை மாவட்ட பொருளாளர் ஏ.சி.எம்.யஹ்யாகான் அங்கு வெளியிட்டு வைக்கப்பட்ட கலண்டரின் முதற் பிரதியொன்றை தலைவருக்கு வழங்கினார். மு.காவின் விசேட இணையத்தளம் ஒன்றும் தலைவரால் அங்குரார்ப்பணம் செய்து வைக் கப்பட்டது.

கட்சியின் புதிய உச்ச பீட உறுப் பினர்களின் பெயர்களும் அறிவிக் கப்பட்டன.

புதியவர்களுக்கும் உச்ச பீடத்தில் பதவிகள் வழங்கப் பட்டன. மு.காவின் வளர்ச்சியில் ஈடுபாடுடைய சிலருக்கு சில பொறுப்புகள் வழங்கப்பட்டமை யும் ஈண்டு குறிப்பிடத்தக்கது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.