புத் 65 இல. 01

நந்தன வருடம் மார்கழி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 சபர் பிறை 23

SUNDAY JANUARY 06 2013

 

 
ஞாயிற்றுக்கிழமையை விற்கலாமா?

ஞாயிற்றுக்கிழமையை விற்கலாமா?

இந்தப் புத்தாண்டின் முதல் ஞாயிற்றுக்கிழமை இன்று. இன்றைய நாள் ஒரு புதிய நாள்; புத்துணர்ச்சிமிக்க நாள். உங்களுக்குப் பிந்திய புத்தாண்டு வாழ்த்துகள்!

ஞாயிற்றுக்கிழமை பற்றி இதற்கு முன்னரும் ஆற அமர அலசியிருக்கிறோம். ஆனால், அதன் மகத்துவத்தை இன்னமும் நாம் உணராதவர்களாகவே இருக்கிறோம். சனிக்கிழமை இரவு உயிரோடு பிறக்கின்ற ஞாயிற்றுக் கிழமையைப் பெரும்பாலானவர்கள், விடிந்ததும் சாகடித்து விடுகிறோம். சிலருடைய கரங்களில் மட்டும்தான் இந்த ஞாயிறு உயிருடன் உறவாடுகிறது.

வார இறுதி நாள் என்பதால் சூரியனைச் சுருக்க வேண்டுமெனச் சிலர் சொல்கிறார்கள். அதிகாலையில் அக்கறையோ, அவசரமோ அவசிய மில்லை என்பது சிலரின் வாதம். விடுமுறை என்பதால் வீட்டிலிருக்க வேண்டும். வெளியில் போகக் கூடாது என்பது அவர்களின் பிடிவாதம். அதனால், முக்கியமான நிகழ்ச்சிகளைக் கூட தூர வைத்துவிடுவார்கள்.

ஞாயிற்றுக்கிழமை என்பது நீண்ட நேரம் நித்திரை கொள்ளும் ஒரு நாளல்ல. அது மனதைத் தூசு தட்டும் நாள் என்கிறார் கவிப்பேரரசு. உழைப்புக்கு ஆறு நாள், உளத்துக்கு ஒரு நாள் என்கிறார் அவர். ஆனால், அதிக விலை கொடுத்தால், இந்த ஞாயிற்றுக்கிழமையும் வயிற்றுக்காக விற்றுவிட நாம் தயாராக இருக்கிறோம்.

நம்மில் எத்தனை பேருக்கு இந்த ஞாயிற்றுக்கிழமையை அனுபவிக்கும் பாக்கியம் கிடைத்திருக்கிறது என்று சிந்தித்துப்பார்த்தால், மிகச் சொற்பமானவர்கள் தான்.

ஞாயிறு என்றதும்தான் அலுவலகத்திலிருந்து அள்ளிக் கொண்டு வந்த வேலைகளை முடிக்கின்றோம். வீட்டில் எஞ்சியிருக்கும் பணிகளைத் தொடங்குகிறோம். ‘சும்மா’ இருக்கும் நேரத்தில்கூட ‘சும்மா’ இருக்காமல் அந்த நேரத்தை வீணடிக்கிறோம்,

‘Do not waste your non-working hours’ என்கிறார்கள் ஆங்கில மேலாண்மையாளர்கள். இதை எத்தனைபேர் கடைப்பிடிக்கிறோம்?

புத்தாண்டு வந்துவிட்டால் சிலர் புதுப்புது திடங்கற்பம் பூணுவார்கள். இந்த வருடத்தில் எவருக்கும் பண உதவி செய்வதில்லை. கடன் வாங்குவதில்லை. மது அருந்துவ தில்லை. நேரத்திற்கு வேலைக்கு போக வேண்டும். மற்றவரை மனம் கோணும்படி பேசுவதில்லை. இந்த ஆண்டிலிருந்து நான் புதிய ஆள். என்றெல்லாம் தீர்மானம் எடுப்பார்கள்; எடுத்திருப்பார்கள். என்னதானிருந்தாலும் நேர முகாமைத்து வத்தில் அனைவரும் கோட்டைதான் விடுகிறோம். பிறகு சோம்பேறித்தனத்தை மறைந்து புதுப்புது காரணங்களைத் தேடி நேரம் இல்லை என்கிறோம்.

சரி இப்போது என்ன சொல்ல வருகிறாய் என்று கேட்பீர்கள்! எத்தனையோ விடயங்களை நிறைவேற்றுவதாகத் தீர்மானிக் கும் நாம் இந்த ஞாயிற்றுக்கிழமையை மட்டும் நமக்குச் சொந்த மாக்கிக்கொள்ள முயன்றால் என்ன? என்பதுதான் கேள்வி.

உழைப்புக்கு ஏற்ற ஓய்வும் வேண்டும் என்பதால்தானே வருடத்தில் ஒன்றை மாதத்தை ஒதுக்கியிருக்கிறார்கள். அதனால்தான், ஓய்வு நாளில் பணிக்கும் சென்றால் மிகைக்கொடுப்பனவு கொடுக்கிறார்கள். இது விடயம் புரியாமல்தான் நாமும் ஓடிக்கொண்டிருக்கிறோம்!

இந்த வருடத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை இயற்கையுடன் உறவாடுவோம். மலர்களுடன் பேசுவோம். இளங்காற்றுடன் கைகுலுக்கிக்கொள்வோம். உள்ளத்து தூசுகளைத் தட்டி உறுதிப்படுத்திக்கொள்வோம். நண்பர்களின் நட்பினை புதுப்பித்துக்கொள்வோம். விடுமுறையை விற்காமல் இருப்ப தாகத் திடசங்கற்பம் கொள்வோம். வேதனையைத் தனி யார்மயப்படுத்தி வியர்வைக்கு விலங்கிடுவோம்! இவையெல் லாம் இந்தப் புத்தாண்டில் சாத்தியமா எனப் பார்த்து சாதக மாக்குங்கள் என்பதுதான் ஆற அமர புத்தாண்டு செய்தி!

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.