புத் 65 இல. 01

நந்தன வருடம் மார்கழி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 சபர் பிறை 23

SUNDAY JANUARY 06 2013

 

‘KAVITHAIMANJAREY’

சருகான மனது!

என்-
இதய வாவியில்
கண்ணீர் வெள்ளம்!
அதில்-
ஓடமாய் உன் நினைவுகள்
ஓரமாய் என் கனவுகள்!

என்-
இளமை வானில்
இருண்ட மேகங்கள்
அதில்-
வெள்ளியாய் உன்
அசைவுகள்
வெறுமையாய்
என் உணர்வுகள்!

என்-
மனத்தோட்டத்தில்
மலராத மொட்டுகள்
அதில்-
வேர்களாய்
உன் நினைவுகள்
சருகானது என் மனது!


புத்தாண்டு பிரார்த்தனைகள்

- பாஹிரா பதுளை -

மேன்மையான சிந்தையதில்
நன்மையான செயல்கள் மிகுந்து
உண்மையான ஐக்கியம் படர்ந்து
கண்ணிய கலாசாரம் மிளிர்ந்து
மன விருப்புகள் ஒற்றுமைபாட
இனிமையான புத்தாண்டு மலர
பிரார்த்திப்போம்.
நம்பிக்கைகள், நல்லெண்ணங்கள்
உயிர் மூச்சுடன் உறுதியாகக் கலந்து
சார்ந்திடும் நல்லுறவுகளால்,
சகல இனங்களும் சமத்துவம் பேணி
சாற்றிடும் மனிதத்திலே சகோதரத்துவத்தை
எழுதுவோம்
தேசியத்தின் வளர்ச்சிக்காக, மலர்ச்சிக்காக
தொழுவோம்
பேதமற்ற புலத்திலே சாதனைகள் படைத்து
நாதமிசைக்கும் நல்லிணக்கத்திலே வளங்கள் பெருக்கி
சாதீயம் பேசாத சமுதாயத்திலே நலங்கள் பாடி
இதயங்களிணைந்து உரிமை கீதம் இசைப்போம்
நாட்டிலமைதியும், சமாதானமும்
வேர்விட்டு படர்ந்திட
வீட்டில் விமோசனமும், சுயாதீனமும்
நிலையாக தொடர்ந்திட
மன ஓர்மையுடன், நேர்மையான
வழியதில் பயணிப்போம்
தேசியத்தின் பெருமையும், மதிப்பும்
திசையெங்கும் பரவிட வேண்டுவோம்


நதியை தொலைத்த ஊர்!

ஒலுவிலுக்கும் அக்கரைக்கும் இடைநடுவே
ஓடியதொரு பேராறு நதியைப் போல
சிலுசிலென்று குளிரேற அதில் குளித்த
சிறுவர்கள் இன்றிங்கு முதுமை கண்டார்!

கடல் போல விரிந்த நதி ஓடிச் செல்ல
கரையிரண்டும் சிறுவரெல்லாம் கூடிநின்று
படகோட்டி மீன் பிடித்த பழங்கதைகள்
பாடுதற்கு மரபிலென்றால் பாலுந் தேனும்!

கைமீனும் கணையானும் நாட்டிய மாட
கருங்கெழுத்தி சுங்கான்கள் பாட்டுகள்பாட
கொய்மீனோ தூண்டிலிலே மாட்டியே ஓட
கொண்டாடி சிறுவரெல்லாம் குதுகலமானார்!

பரவைக்கார மூத்தம்மா பன்னை நாட்ட
பரிசாரியார் ஓரமெல்லாம் தென்னை நாட்ட
கரையிருந்த ஆட்களெல்லாம் ஒன்று கூடி
கல்லு மண்ணு குப்பை கொட்டி காணிசேர்த்தார்!

ஆறிருந்த இடங்களெல்லாம் தோட்டம் என்று
ஆளுக்கோர் உறுதியோட நிற்கின்றார்கள்
ஊறிவரும் தண்ணீரோட வழியில்லாமல்
ஊர்முழுக்க நாறு தாறு ஓடையாகி!

சீனம்பிட்டி வடிச்சல் தண்ணீர் சீறிவந்து
சிற்றோடையான ஆற்றில் ஓடி மிச்சம்
ஊனமுற்ற காயநீரு நாறுமாப்போல்
ஊரேதுர் நாற்றமாகி தொல்லையாச்சு!

கடைசியாகி மிஞ்சி நின்ற ஓடைக்குள்ளே
கம்பிவேலி போட்டுப் பொதுத் தள்ளுறாங்க
இடையிடையே சண்டை வரும் இருகரைக்கும்
இவைகளை யார் கேட்டாரோ இதுவரைக்கும்!

ஓடைகள் நதிகளான கதைகள் உண்டு
ஓரசாரம் நகரமான சரித்திர முண்டு
ஓடையாகி நதிதொலைந்த ஓரொன்றென்றால்
ஒலுவிலைத்தான் சொல்லிடலாம் வேறெங்குண்டோ!


வரமொன்று வேண்டும்

- தொன்மையூர் கவிராயர் -

பொங்கும் அலை தரைமீது பொருதுகின்ற கோலம்
பொந்துகளில் நண்டுபுகுந் தோடிவிளை யாடும்
செங்கதிரும் சாகரத்துள் செத்துவிழும் மாயம்
செகமெங்கும் காரிருளும் சூளுகின்ற நேரம்

அந்திபடும் வேளையிலே ஆகாயம் மீதில்
அணியணியாய் பறவைகளும் அடைந்திடவே செல்லும்
உந்தி எழும் அலைகளினால் உயர்ந்துவரும் தோணி
உள்நோக்கி இறங்கையிலே உறைந்துவிடும் மேனி

திரைகடலில் மீனவர்கள் திரும்பிவரக் கண்டு
திருமதிகள் தரைமீதில் திருப்தியினைக் கொண்டு
விரைந்தோடி வீட்டிற்குள் விரிப்புதனைப் போட்டு
விருந்தினையே படைத்திடுவார் விருப்போடு கேட்டு

மென்காற்று மேனியினில் மேவிஇத மூட்டும்
மெதுவாக வெண்ணிலவும் எழுந்துமுகம் காட்டும்
தண்ணொளியால் தரணியெங்கும் பொன்னிறமாய் மாறும்
தலைதூக்கும் துயரெல்லாம் தானாக ஓடும்

நெய்தல்நிலம் மீதினிலே நிதந்தோறும் நானும்
நெஞ்சத்தில் நெகிழ்வூட்டும் நிகழ்வுகளைக் காணும்
மெய்யான உலகத்தில் மெய்மறந்த காலம்
மென்மேலும் தொடர்ந்திடவே வரமொன்று வேண்டும்.


~பென்சன் பணம்'

 

- கிண்ணியா மஜீத் ராவுத்தர் -

பென்சன் பெரிய தொகையுமில்லை
கணிசமான அளவுதானே, மட்டமாக
காணும் எனக்கும் அவளுக்கும்
இனி விலை வாசி கூடாவிட்டால்

பென்சன் நாளன்று அது
ஒரு பெருநாள் போல
பெண்சாதிபேர, பெற்ற
பிள்ளைகள் பெரிய தொல்லை

பலசரக்கு பால்காரன், புதினப்
பத்திரிகை மின், தண்ணி, மீன்காரன்
பல மரக்கறிகள், மாமிசம் வேற
படிப்புச் செலவு, பரிதாபங்கள் வேற

வேறுதொழில் தெரியாது
வெய்யிலில் நின்று செய்யாது
ஏர் பூட்டி உழைக்க இப்போ
என்னால ஏலாது

அப்போ வேறு வருவாய்..ஏது?
வெறும் குண்டானுக்குள்ளே குதிரை
‘ஒப்கோர்ஸ்’ வார பென்சனுக்குள்தான்
வக்காளத்தெல்லாம் வரையறை

கைக்கூலி பெற்று
கனவிலும் பழக்கமில்லை
பொய் சொல்லிப் பிழைத்ததில்லை
போதுமான வருமானமில்லை

பெட்டிக் கடை ஒன்றை
பறையாம வைப்போமென்றா, பேரன்
தட்டியை ஒசத்தி திறந்து
தரையில தவளுரான் பாரன்

பிறகென்னாச்சி...? கடையில அறுந்து
பலருக்குக் கடன்காரனா எல்லாம் போச்சு
குருடி வந்து பழைய கதவை
திறடி என்ற கதையாச்ச


உ யர்வோ யர்வு!

- வெலிமடை ரபீக் -

காலுக்குக் கீழ் இருந்த
வாழ்க்கைச் செலவு
நாளுக்கு நாள்
உயருது
தோளுக்கும் மேல்

இருபதாம் தேதி
துக்க தினமா?
சம்பள நாள்
சந்தோசம் பாழ்

நகர வாழ்க்கை
நகரா வாழ்க்கை

கிராமத்து மண்ணில்
பாதங்களால் மிதிபட்டு
நசுங்கும்
கீரைக்கும்
காசிங்கு

எரிவாயு
ஏறுவரிசை
வருவாய்
இறங்குவரிசை

கொங்ரீட் கூட்டுக்குள்
கொதிக்குது வாழ்க்கை
மருந்துக்கு
வைத்திருந்த காசும்
விருந்துக்குப் போச்சடி

காலுக்குக் கீழ் இருந்த
வாழ்க்கைச் செலவு
நாளுக்கு நாள்
உயருது
தோளுக்கும் மேல்


முதல் காதலிக்கு...

நீ.... என
கணைக்கிறது
உள்ளம்

பாசமது
புரியாப் பருவத்தில்
பாசத்தைக் காட்டி
நேசத்தை வளர்த்தாய்...

மடி தாங்கி பாலூட்டி
கைபிடித்து தூரம் சென்று
கதை சொல்லி கதை வாங்கி

குளிப்பாட்டி எண்ணெய் தேய்த்து
பாட்டோடு தூக்கம் கொடுத்து
கரைசேர கல்வியும் சொன்னாய்...

அன்னையாகவும்
தந்தையாகவும்
என் முதல் காதலி
நீ தான்
அம்மா......


மறுபிறப்பில் என்னை மகனாகப் பெற்றுவிடு!

- கவிமணி அ.கெளரிதாசன் -

தும்பியது பிடிக் கின்ற
துடுக்கான சிறு வயதில்
அம்மாவுன் முந்தானை
அலைந்து திரிந்தவன் நான்!

ஆனாவை அரி வரியில்
ஆம், நானும் அறிய முதல்
பேனாவால் “ஆனா” வைப்
பெற்றவள்நீ, எழுதவைத்தாய்!

பத்தாம் வயதி னிலும்
பால்குடித்த நினைவுகளை
சித்தம் மறக்கவில்லை
சித்திரமே, நீயிலையே!

அண்ணன்மார் அக்காமார்
அனைவருக்கும் ‘கடைக்குட்டி’
இன்னுமென்னைத் துரத்தி வரும்
இனியவளே, உன் பா(வா)சம்!

காசினியே மதிக் கின்ற
‘கவிஞன்’ எனும் படியாய்
பேசரிய தமிழ் ஊட்டி
பெருங்கல்வி கற்பித்தாய்!

மணம்முடித்து எந்தனுக்கு
மழலைகளோ நான்கி ருந்தும்
கணப்பொழுதும் உனைக் கண்டு
கதைபேசா நாளிலையே!

வறுமையிலே வாடி டினும்
வாய்மைதனை மறக்காமல்
வறுமையிலும் செம்மையுடன்
வாழ்ந்து முடித்தவளே!

‘அம்மாநீ, இல்லை’ யென்ற
அந்தவொரு வெற்றிடத்தை
இம்மா நிலத் தினிலே,
‘ஈடுசெய்ய எவரு மில்லை!’

கண்மணியே! எந்த னையே
கண்போல காத்தவளே!
மண்மறந்தாய்; “எனை மகனாய் -
மறுபிறப்பில் பெற்று எடு!”


வைர விழாக் கோலம் 

- பெளஸியா அலியார் -

டீச்சர் கனநாளைக்குப் பிறகு
வாட்டசாட்டமா யிருந்தநீ
இதுவென்ன கோலம்
இளைச்சிப் போனாயே
வாடி வதங்கி
முகத்திரை மூப்பைக் காட்ட
ஆடித்திரிந்த காலமதை
மனத்திரையில் கண்டபோது
வைரவிழாக் கோலம் இதுவென
என்னுள் விடைகண்டேன்

உன்னைக் கண்டபோது தோழி
என்னிதயம் கனக்கிறது
பல்லாண்டுகாலம்
படாதபாடுபட்டும் பள்ளியிலே
பார்த்துப் பரிதவிக்க யாருமில்லை
மாணவர் மரியாதை
என்னிலை புரியாத
பெற்றாரின் அங்கலாய்ப்பு
நேயமிகு அதிபர் என்னை
ஓய்வுபெற தடையானார்
வீட்டில் வேலையில்லை
வீணான சோலியில்லை
பாட்டியாய் ஆகும்வரையான்
பாடஞ் சொல்லி ஆறுகிறேன்.


வேண்டாத ஞாபகம்

- ஜே. வஹாப்தீன் -

இன்னும் ஆறவில்லை
நீ கொடுத்த அன்பை
முள்ளோடு விழுங்கியதால்
என்
தொண்டையில் வலித்ததன் புண்

குடித்து முடிந்த பின்
ஏன்
குளிர் நதித் தண்ணீர்
என் இதய வயிற்றில்
எரி மலைக்குழம்பானது?

தங்கக் கவிதையென
தரையில் விழவிடவில்லை
இன்று
கிலுட்டு நகையாகும் என்று
தெரியாமல்

செத்தும் சாகாத மனசு
இன்னும் இன்னும்
துடிதுடிக்கிறது
அறுத்துப்போட்ட கோழிபோல

அன்பை உருட்டி
அடை வைத்தேன்
இப்படி
குரங்காகித் தாவும் என்று
தெரியாமல்...

சுடுகாட்டுக் கவிதைக்கு
பூஞ்சோலைத் தலைப்பு
என்பேனா
அவமானப்படுகிறது
உயிர்போகிறது மைவற்றி

கண்ணைக் கழற்றி
கையில் கொடுத்த
பாசத்திற்குப் பரிசளிப்பா
கண்ணிருந்த இடத்தில்
தீத்தணல் வைப்பு?

என் இதயத்தில் இருந்த
ஓரிரு ஞாபகத்தை எடுத்து
அவிழ்த்துப் போட்டேன்
புழுக்கள் நெளிகின்றன
நான்
கண்களையும் மூடி
மூக்கையும் பொத்தி........

 

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.