புத் 65 இல. 01

நந்தன வருடம் மார்கழி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 சபர் பிறை 23

SUNDAY JANUARY 06 2013

 

 
பன்முகங்களில் சாதனை படைக்க சாதனமாக இருந்தது மன உறுதியே

பன்முகங்களில் சாதனை படைக்க சாதனமாக இருந்தது மன உறுதியே

‘ஊக்கமது கைவிடேல்’ உதாரணபுருஷர் ஸக்கியா ஸித்திக் பரீத்

கல்வி அறிவு மறுக்கப்பட்டு அறியாத வயதில் திருமண பந்தத்தில் நுழைத்து, தனக்கான விருப்பு வெறுப்புகள் மறுக்கப்பட்டு எவ்வித அடையாளமும் இன்றி வாழ்ந்த பெண்களின் காலம் களைந்து இன்று தங்களுக்குள் புதிய பாதைகளை வகுத்து ஆளுமை சக்தியோடு அத்தனை அம்சங்களிலும் நீக்கமற நிறைந்து வியாபித்திருப்பது அரோக்கியமான விடயம். இவ்வகையில் பன்முகங்களில் சாதனைபடைத்துவரும் உறுதியும் தெளிவும் மிளிர்கின்ற சாதனைப் பெண் திருமதி ஸக்கியா ஸித்திக் பரீத் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தைத் திரும்பிப் பார்க்கின்றேன்.

உங்கள் குடும்பப் பின்னணி பிறப்பிடம் பற்றி...

மாவனல்லைப் பிரதேசத்திலுள்ள உயன்வத்தை என்ற ஊரில் பிறந்தேன். எனது தாய் உயன்வத்தையில் வாழ்ந்து மறைந்த யூசுப்லெவ்வை ஆஸியா உம்மா தம்பதிகளின் புதல்வியான ஸாலிஹா பீ.பீ. தந்தை தெல்கஹகொட என்ற ஊரில் வாழ்ந்து மறைந்த யூ.மு. இப்றாஹீம் லெவ்வை பாதுமுத்து தம்பதிகளின் புதல்வன் இப்றாஹீம் ஸித்தீக் என்பவர். எனக்கு எட்டு சகோதரர்கள். இரண்டு சகோதரிகள். நான் குடும்பத்தில் மூத்த மகள்.

உங்கள் முன்னேற்றத்திற்கு காரணமாக இருந்தவர்கள் பற்றி...

எனது முன்னேற்றத்தின் ஆரம்ப கர்த்தாக்கள் எனது தாயும் தந்தையும். எனது கற்கை கொழும்பு மருதானை ஸாஹிராவில் ஆரம்பக் கல்வி படித்து படிப்பை இடையில் விட்டு சென்றபடியால் தனது மக்களையாவது கடைசி வரை படிப்பிக்க வேண்டுமென்று கஷ்டப்பட்டு உழைத்தார்.

சொந்த ஊரில் அப்போது உயர்தர வகுப்புகள் இருக்கவில்லையாதலால் சகோதரர்களை கம்பளை ஸாஹிராவுக்கும், என்னை பக்கத்திலுள்ள எனது தாயின் ஊரிலுள்ள உயன்வத்தை நூராணியா மகா வித்தியாலயத்திற்கும் அனுப்பி படிப்பதற்கு உதவி செய்தார். அடுத்து எனக்குக் குர்ஆனைக் கற்றுத்தந்த முஹம்மது லெவ்வை ஆலிம் அவர்கள், அத்தோடு ஆரம்பத்திலிருந்து எனக்குக் கற்பித்த ஆசான்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் இவர்கள் அனைவருமே எனது முன்னேற்றத்திற்கு காரணமானவர்கள்.

கலாபூஷணம் அரச விருதைப் பெற்றபோது...

உங்கள் கற்றல் செயற்பாடுகளை எவ்வாறு முன்னெடுத்துச் சென்aர்கள்?

நான் ஆரம்பக்கல்வியை தெல்கஹகொட முஸ்லிம் வித்தியாலயத்தில் பெற்றேன். உயர்தர வகுப்புக்கு உயன்வத்தை நூராணியா மகாவித்தியாலயத்திற்குச் சென்று ஜி.சீ.ஈ. உயர்தரம் வரை கற்றேன்.

எனது தாய் அகால மரண மடைந்தால் எனக்கு ஜீ.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை எழுத வாய்ப்புக் கிடைக்கவில்லை. பதினெட்டுப் பூர்த்தியோடு ஆசிரியர் தெரிவுப் பரீட்சைக்குத் தோற்றிச் சித்தியடைந்து ஆசிரியர் நியமனத்தைப் பெற்றுக் கொண்டேன்.

முதலில் நான் ஆரம்பக் கல்வி கற்ற பாடசாலையில் பயிற்சி ஆசிரியையாகப் பணிபுரிந்தேன். ஒருவருடத்தில் அளுத்கம ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி பயிற்சி ஆசிரியர் பரீட்சையில் சித்தியடைந்து பயிற்சிக் கல்லூரிக்கு சென்று இரண்டு வருட ஆசிரியர் பயிற்சியை முடித்துக்கொண்டு நூராணியா மகாவித்தியாலயத்திற்கு நியமனம் பெற்றேன்.

அடுத்து வாழ்வின் அடுத்த கட்டமான இல்லற வாழ்வில் புகுந்தேன். கிருங்கதெனிய என்ற பக்கத்து ஊரில் சிங்கள மொழி ஆசிரியரான அப்துல் றஸ்ஸாக் பரீத் என்பவரை வாழ்க்கைத் துணைவராக ஏற்று கிருங்கதெனியிலிருந்து முஸ்லிம் ஆண்கள் வித்தியாலயத்திற்கு இடமாற்றம் பெற்று வந்தேன்.

அதிபரிடம் கேட்டு முதலாம் தர மாணவர்களை பாரமெடுத்து அதே வகுப்பு மாணவர்களை தொடர்ந்து ஐந்தாம் வகுப்புவரை கையாண்டேன். அந்தப் பாடசாலையின் வரலாற்றில் அந்த வகுப்பில் கற்ற இருபது மாணவர்களில் ஜந்து மாணவர்கள் ஐந்தாம்தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து சாதனை படைத்தார்கள். அன்று எனது மனதில் தோன்றிய மகிழ்வை இன்றும் நினைத்துப் பார்க்கிறேன்.

மனித உரிமை அமைப்பு தங்கப்பதக்கமும் நற் சான்றிதழும் வழங்கியபோது...

இல்லறத்தில் புகுந்து விட்டீர்கள். கற்பித்தல் பணியைச் சிறப்பாக எடுத்துச் சென்aர்கள். இத்தோடு உங்கள் கற்றலை நிறுத்திவிட்டீர்களா?

இல்லை. இதன்பின்னர்தான் எனது கற்றல் செயற்பாடுகள் உத்வேகம் பெற்றன. ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை எழுத முடியாமல் போன ஆதங்கம் என் மனதை அடிக்கடி வருத்திக்கொண்டிருந்தது. திரும்பவும் பாடங்களைத் தெரிவுசெய்து பிரத்தியேக வகுப்புக்களுக்குச் சென்று படித்து ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை எழுதி நான்கு பாடங்களிலும் சிறப்பாகச் சித்தியடைந்து மன ஆறுதலடைந்தேன்.

ஒரு குழந்தைக்குத் தாயாகிய பின் பேராதனைப் பல்கைக்கழகத்தில் வெளிவாரிப்பரீட்சார்த்தியாகப் பதிவு செய்தேன். அந்தக் காலப் பகுதியில் மாவனல்லைப் பிரதேசத்தின் கல்வி முன்னேற்றத்திற்காகத் தம்மை அர்ப்பணித்துச் செயல்பட்ட பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளராகப் பணிபுரிந்த கெளரவ எம். ஐ. எம். அமீன், கெளரவ எம். பி. எம். சைபுதீன், அதிபராகப் பணிபுரிந்த திருவாளர் ஹாசிம் ஆகியோரின் உதவியைப் பெற்று படித்து பல்கலைக்கழக இறுதி நிலைப் பரீட்சையில் சித்தியடைந்து கலைமாணிப்பட்டத்தைப் பெற்றுக்கொண்டேன். இத்துடன், இரண்டு மகன்மார்களுக்குத் தாயாகும் தகுதியும் பெற்றுக்கொண்டேன்.

குடும்பத்தினருடன்

கிராமத்தில் பிறந்து வளர்ந்து கல்வி கற்று, கற்பித்தபின் நீங்கள் தலை நகரத்துக்கு வந்துள்Zர்கள் இது பற்றி...

எனது மூத்தமகன் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து கொழும்பு றோயல் கல்லூரியில் அனுமதி பெற்றார்.

எனது சகோதர்கள் தலைநகரில் தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுக் கொண்டார்கள். எனக்கு இடம்மாற வேண்டிய குடும்பச் சூழ்நிலைகளும் இருந்தபடியால் நான் கொழும்பு டீ.எஸ். சேனாநாயக்கா கல்லூரிக்கு இடமாற்றம் பெற்றுத் தலைநகருக்கு வந்தேன். டீ.எஸ். சேனாநாயக்கா கல்லூரியில் குறுகிய காலம் உயர்வகுப்பில் கற்பித்தேன். எனது இரண்டாவது மகனும் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து கொழும்பு டீ.எஸ்.

சேனாநாயக்கா கல்லூரியில் அனுமதி பெற்றார். இதன் பின் நான் கொழும்பு பல்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கு இடமாற்றம் பெற்றுச் சென்று அங்கு உயர்தர வகுப்பு மாணவியருக்கு அரசறிவியல், இஸ்லாமிய நாகரிகம் ஆகிய பாடங்களை ஐந்து வருடங்கள் கற்பித்தேன்.

இந்தக் காலப்பகுதியில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் உள்வாரியாக இரண்டு வருடங்கள் பகுதி நேர விரிவுரைகளுக்குச் சென்று கல்வி டிப்ளோமா பட்டப்பின்படிப்பை மேற்கொண்டு எனது கல்வித் தகுதியை சற்று உயர்த்திக் கொண்டேன்.

அத்துடன், இலங்கை அதிபர் சேவைக்கு இரண்டாம் தரத்திற்கான ஆட்சேர்ப்புப் பரீட்சையிலும் சித்தியடைந்தபின் 40 வயதுப் பூர்த்தியோடு அரச பாடசாலைகளின் கல்விப் பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் எனது வாழ்க்கை சற்று திசை திரும்பியது.

ஜப்பான் ஹிரோஷிமாவில்...

20 வருடம் சேவைசெய்த ஆசிரியர்களுக்கு ஓய்வு பெற முடியும் என்ற சுற்று நிருபம் வந்தது. அந்த சுற்று நிருபத்தின்படி ஓய்வு பெற்று கணவனைச் சத்திரசிகிச்சைக்காக இந்தியாவுக்கு அழைத்துச் சென்றேன். சத்திரசிகிச்சைக்குப் பின் கணவர் குணமடைந்தார். என் மனதிலே ஒரு வெறுமை நிலை தோன்றியது.

உங்களுக்கு ஜப்பான் நாட்டு அனுபவங்கள் இருப்பதாக அறிகிறேன் அது பற்றி...

ஜி.சீ.ஈ. உயர்தரம் சித்தியடைந்த எனது மூத்த மகனுக்கு ஜப்பான் நாட்டுக்குச் சென்று கல்வி கற்கக்கூடிய ஒரு வாய்ப்புக் கிட்டியது. எனது குடும்பத்தவர்கள் கணவனைக் கவனித்தார்கள்.

நானும் மகனோடு ஜப்பான் நாடு சென்று இரண்டு வருடங்கள் அந்த நாட்டில் தங்கினேன். இலங்கையிலிருந்து பல வருடங்களுக்கு முன் ஜப்பான் சென்று இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஜப்பானின் சிறந்ததொரு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணிபுரியும் கலாநிதி பாரி என்பவர் வெளிநாட்டவர்கள் படிக்கும் சமூகக் கல்லூரியொன்றில் இணைந்து ஜப்பானிய மொழி ஜப்பானிய கலை, கலாசாரங்களை படிக்கலாம் என்று எனக்கு வழிகாட்டினார்.

 சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில்...

அதன்பிறகு அவ்வாறானதொரு சமூகக் கல்லூரியில் இணைந்து பேச்சு, கலை, கலாசாரங்களைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்புக்கிடைத்தது. அத்துடன், பகுதிநேர வேலை செய்து வருமானத்தையும் தேடிக்கொண்டேன். கணவரும் அங்கு வந்தார். அந்த நாட்டுக் காலநிலை ஒத்துவராதபடியால் அவர்களுக்கு அங்கு தங்கி வாழமுடியவில்லை. காலம் உருண்டோடியது. எனது மகனின் கற்கை நெறிக்காலமும் முடிந்தது.

அவருக்கு அங்கு நல்ல தொழில் வாய்ப்புக்கள் இருந்தன. அதிகபணம் உழைக்கலாம் என்று எனக்குப் பலரும் ஆலோசனை கூறினார்கள். பணம் உழைப்பதுதான் கல்வியின் நோக்கம் என்று கருதாமல் அவரைக் கையோடு அழைத்துக் கொண்டு நாட்டுக்கு வந்தேன். இறைவனின் அருளால் எனது புதல்வர்கள் எமது நாட்டின் சிறந்த நிறுவனங்களில் உயர்பதவிகளில் இருக்கிறார்கள். இறைவனைப் புகழ்கிறேன்.

பிற்பட்ட காலத்தில் நீங்கள் கொழும்பு ஸாஹிராவில் பணிபுரிந்துள்Zர்கள். “ஸாஹிராவை உருவாக்கிய உத்தமர்கள்” என்ற ஒரு நூலையும் வெளியிட்டுள்Zர்கள் இது பற்றி...

கொழும்பு ஸாஹிராவில் ‘விழிப்பு’ சஞ்சிகை வெளியீட்டின்போது...

ஜப்பான் நாட்டில் நான் கண்ட ஓர் அனுபவம் அங்கு ஒருவரும் வீணாக ஒரு நிமிடத்தையேனும் கழிப்பதில்லை. வயோதிபப் பெண்கள் கூட மிகச் சுறுசுறுப்பாக இயங்குவதைப் பார்த்தபோது ஆச்சிரியம் தோன்றியது. அவர்களுடன் நெருங்கிப் பழகியதால் எனது மன நிலையும் சுறுசுறுப்பாக இயங்கவேண்டுமென்ற உத்வேகத்தைத் தந்தது. ஸாஹிராக் கல்லூரியில் தமிழ்பிரிவுக்கு ஓர் ஆசிரியர் தேவை இருப்பதைப் பத்திரிகையில் வாசித்து நேர்முகப் பரீட்சைக்குச் சென்றேன். சென்ற தினமே எனக்கு நியமனம் தந்தார்கள். சுமார் ஏழு வருடங்கள் தமிழ்ப் பிரிவில் கற்பித்ததுடன் இணைப்பாளராகவும் பணிபுரிந்தேன்.

2004ஆம் ஆண்டு கொழும்பு ஸாஹிராவில் நாடளாவிய ரீதியில் தொடர்ந்து இரண்டு நாட்கள் ஒரு தமிழ் விழா சிறப்பாக நடத்ந்து. அப்பொழுது கல்லூரியின் ஆளுநராக இருந்த முன்னாள் அமைச்சரும், ஜனாதிபதி சட்டத்தரணியு மான கெளரவ ஸ¤ஹைர் அவர்கள் பணிபுரிந் தார்கள். அதிமேதகு மஹிந்த ராஜ பக்ஷ அவர்கள் தமிழ் விழாவுக்குப் பிரதம அதிதியாக வருகை தந்தார்கள். இந்தியா விலிருந்து கவிக்கோ அப்துல்ரஹ்மான், பேராசிரியை பர்வின் சுல்தானா போன்றவர்கள் சிறப்பதிதிகளாக வருகை தந்தார்கள்.

கொழும்பு சாஹித்திய விழாவில் கட்டுரை, கவிதை போட்டியில் முதலிடத்திற்கான விருது பெற்றபோது...

மிக விமர்ச் சையாக நடந்த இவ் விழாவில் “ஸாஹிரா உருவாக்கிய உத்தமர்கள்” என்ற எனது முதலாவது நூல் வெளியீடு செய்யப்பட்டது. இந்த நூலின் மூலம் என்னை மிகவும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த ஸாஹிராக்கல்லூரிக்கு என்றும் நன்றியுடையவளாக இருப்பேன். அத்துடன் ஸாஹிரா கல்லூரி ஆளுநர் சபையின் ஆலோச னைப்படி எனக்கு 2007ல் ‘நல்லாசிரியர் விருது’ கிடைத்தது.

இருபத்தேழு வருட எனது ஆசிரியப் பணிக்குக் கிடைத்த அங்கீகாரமாக இந்த விருதைக் கருதுகிறேன். இந்த விருதைப்பெற்ற மறுதினமே கல்லூரியை விட்டு விலக வேண்டிய சூழ்நிலைகள் உருவானதால் கல்லூரியை விட்டு நீங்கிக் கொண்டேன்.

ஸாஹிராவிலிருந்து நீங்கி ஓய்வுக்குச் சென்aர்களா?

இல்லை. ஓய்வு என்ற சொல் எனக்கு ஒத்து வராத சொல். பின்னர் மனித உரிமை நிலையம் நடத்திய மனித உரிமை டிப்ளோமா பயிற்சி நெறியை மனித உரிமை நிலையத்தில் ஆறு மாதங்கள் பெற்றுக்கொண்டேன். அஹிதிய்யா அரசாங்கப் பரீட்சைப் பணிகளைத் தொடர்ந்தேன். பெண்கள் முன்னேற்றம் சம்பந்தமான அமைப்புக்களில் இணைந்து சேவை புரிந்தேன். நோய் வாய்ப்பட்ட எனது கணவருக்கு முடிந்தவரை பணிவிடை செய்து பராமரித்தேன். என்னுடைய பணிகள் மிகவும் விரிவடைந்தன. நேரத்தைத் திட்டமிட்டு சேவை செய்து மனமகிழ்வடைகின்றேன்.

நீங்கள் நூல்களை எழுதி வெளியிட்டுள்Zர்கள் அது பற்றி...

எனது முதலாவது நூலைப் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டேன். அதன்பிறகு நான் அவ்வப்போது எழுதியிருந்த சிறுகதைகளை ‘விடியலின் விழுதுகள். என்று தலைப்பிட்டுத் தொகுத் தெழுதினேன். பொதுவாக எல்லாமே பெண்கள் சம்பந்தமான கதைகள். எனது கணவர் 2010ல் காலம் சென்றுவிட்டார். எமது மார்க்கக் கடமையான ‘இத்தர்’ என்ற காலப் பகுதியில் ‘இதயத்தின் ஓசைகள்’ என்ற கவிதைத் தொகுப்பையும், ‘முதிசம்” என்ற பொன் மொழித் தொகுப்பையும் எழுதி 2011ல் வெளியிட்டேன். கொழும்பு ஸாஹிராவில் மாணவர் சஞ்சிகை யொன்றைப் பொறுப்பேற்று 2007ல் பாடசாலையில் வெளியீடு செய்தேன். இப்பொழுது எனது ஐந்தாவது நூல் வெளியீட்டுக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறது.

வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிள் பங்குபற்றியுள்Zர்களா?

1985 லிருந்து இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்சி ‘மாதர் மஜிலிஸ்’ என்ற நிகழ்ச்சிக்குப் பிரதிகளும், சிறப்புப் பிரதிகளும் எழுதியிருப்பதுடன் நிகழ்ச்சிகளில் பங்குபற்றியும் உள்ளேன். இதற்கு என்னை வழிப்படுத்தியவர் ஊடகவியலாளர் திருமதி புர்கான் பீ இப்திகார் அவர்களாவர். இன நல்லுறவு, சமாதானம் சம்பந்தமான நிகழ்ச்சிகளில் கலந்துரையாடியுள்ளேன். தொலைக்காட்சிக் கலந்துரையாடல்களிலும் நேர்காணல் நிகழ்ச்சிகளிலும் பங்கு பற்றியுள்ளேன்.

விருதுகள் கெளரவங்கள் ஏதும் பெற்றிருக்கிaர்களா?

ஸாஹிராவை உருவாக்கிய உத்தமர்கள் முதல் பிரதியை தனது கணவருக்குச் சமர்ப்பித்தபோது...

* 2005ல் நான் கல்வி கற்ற நூராணியா மகா வித்தியாலயத்தில் உயன்வத்தை ரம்ஜான் என்பவர்களின் கீழ் இயங்கும் ‘ப்ரியநிலா’ வட்டத்தினர் எனக்கு ‘இலக்கியத் தாரகைப் பட்டத்தை வழங்கி பொன்னாடை போர்த்தி கெளரவித்தனர்.

* 2007ல் கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் ஆளுநர் சபையினர் ‘நல்லாசிரியர் விருதும்’ பரிசும் வழங்கினார்கள்.

* 2008ல் கொழும்பு மாவட்டத்தில் நடைபெற்ற சாஹித்தியவிழா போட்டி நிகழ்ச்சியில் முதலாமிடம் பெற்றமைக்கு விருது வழங்கினார்கள்.

* 2010ல் அகில இலங்கை இன நல்லுறவு ஒன்றியத்தினர் “சாமஸ்ரீ’. ‘தேசமான்ய விருதுகள்’ வழங்கி பொன்னாடை போர்த்திக் கெளரவித்தார்கள்.

* 2010ல் அகில இலங்கை சமாதான நீதிவான் நியமனம் கிடைத்தது.

* 2011ல் கலாசாரத் திணைக்களத்தினர் “கலாபூஷணம்” விருது வழங்கிக் கெளரவித்தார்கள்.

* 2012ல் ‘மனித உரிமை நிலையத்தின்’ மூலம் நற்சேவைக்கான விருதும், தங்கப் பதக்கமும் வழங்கினார்கள்.

* இளம் முஸ்லிம் மாதர் சங்கத்தில் இணைந்து இருபத்தொன்பது வருடங்கள் பணி புரிந்தமைக்காக சங்க உறுப்பினர்கள் விருது வழங்கி கெளரவித்ததுடன் மூன்று நூல்களை ஒரே மேடையில் வெளியிட்டமையைப் பாராட்டி இளம் முஸ்லிம் மாதர் சங்கத்தினர் பொன்னாடை போர்த்தி, மலர்ச்செண்டு வழங்கிக் கெளரவித்தார்கள். என்னைப் பொறுத்தவரை விருதுகள் பெறுவதைவிட, அவற்றைப் பெறுவதற்கு என்னைத் தயாராக்குவதுதான் முக்கியமாகும்.

பல்வேறு சமூகப்பணிகளில் ஈடுபடும் நீங்கள் வெளிநாடுகளுக்குச் சென்ற அனுபவங்களைப் பெற்றிருக்கிaர்களா...?

வெளிநாட்டுப் பயணங்களைப் பொறுத்தவரை இலங்கை, சென்னை, மலேசியா, காபயல்பட்டிணம் போன்ற இடங்களில் நடைபெற்ற எல்லா இஸ்லாமிய இலக்கிய மாநாடுகளிலும் பேராளராகக் கலந்துகொள்ளச் சென்றிருக்கிறேன்.

எனது மார்க்கக் கடமைகளுக்காக மக்கா, மதீனா போன்ற இடங்களுக்குச் சென்றிருக்கிறேன். தாய்லாந்து நாட்டுக்குச் சென்று அங்கும் அனுபவங் களைப் பெற்றுக் கொள்ள வாய்ப்புக்கிடைத்தது.

மத்திய கிழக்கில் ரியாத், தமாம், கட்டார் போன்ற இடங்களுக்குச் சென்று அங்கு வாழும் இலங்கையர்களையும் இலங்கை மாணவர்கள் பயிலும் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்களையும் சந்தித்திருக்கிறேன்.

தற்பொழுது நீங்கள் ஈபடும் முக்கியமான பணிகள் பற்றி...

இரண்டு சிறுமியர் பராமரிப்பு இல்லங்களில் சிறுமியர்களின் கல்விப் பணிகளுககு உதவி செய்கின்றேன். சிங்கள மொழிப்பாடசாலைப் பிள்ளைகள் எனது வீட்டுக்கு வந்து தமிழ் மொழி கற்றுச் செல்வார்கள். கொழும்பு டீ.எஸ். சேனாநாயக்கா கல்லூரியின் முன்னாள் ஆசிரியர் சங்க உறுப்பினராக இணைந்து அவர்களுடன் வேலைத்திட்டங்களில் முழுமனதோடு ஈடுபட்டு வருகிறேன். நோயாளிகள், வயோதிபர்கள், விதவைகளை அடிக்கடி சந்தித்து அவர்களோடு அளவளாவுதல், உதவிகள் புரிதல் போன்றனவும் எனது வேலைத்திட்டத்தில் உள்ளது. அலங்காரத் தையல்கள் தைப்பது, நூல்களை வாசிப்பது போன்றன எனது ஓய்வு நேரப் பொழுது போக்குகள். நிம்மதியாக, மனநிறைவோடு வாழும் பாக்கியத்தைத்தந்த இறைவனைப் புகழ்கிறேன். “என் கடன் பணி செய்வதே’

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.