புத் 65 இல. 01

நந்தன வருடம் மார்கழி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 சபர் பிறை 23

SUNDAY JANUARY 06 2013

 

 
வெள்ள அனர்த்தத்தில் குளிர்காயும் கூட்டமைப்பு

வெள்ள அனர்த்தத்தில் குளிர்காயும் கூட்டமைப்பு

மன்னார் மக்கள் வேதனை

சீண்மையிலே நாடெங்கும் பெய்த பாரிய அடைமழை காரணமாக நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மன்னார் மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களும் வெள்ளத்தால் மூடப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. குறிப்பாக மாந்தைப் பிரதேசம் படுமோசமாகப் பாதிக்கப்பட்டது.

கட்டுக்கரைக்குளம் கட்டுக்கடங்காமல் நிரம்பி வழிந்ததாலும் வான் கதவுகள் திறக்கப்பட்டதாலும் வெளியேறிய நீர் மாந்தைப் பிரதேசத்துக்குட்பட்ட வயல் நிலங்களை வெள்ள மயமாக்கியது. சிறுகுளங்களும் நிரம்பி வழிந்து வயல்களையும் குடிமனைகளையும் தெருக்களையும் வெள்ளக் காடாக்கியது.

இந்த மோசமான அனர்த்த்திலிருந்து மக்களைப் பாதுகாக்கவும் நிவாரணப் பணிகளில் ஈடுபடவும் அரசு உடனடி நடவடிக்கைகள மேற்கொண்டது. ரிசாத் பதியுதீனின் வேண்டுகோளுக்கமைய அனர்த்த நிவாரண அமைச்சர் மஹிந்த அமரவீர நிவாரணப் பணிகளுக்கான நிதியை ஒதுக்கினார். வழமையாக அரசை விமர்சிப்பவர்களும் அமைச்சர் ரிசாட் பதியுதீனை காழ்ப்புணர்வு கொண்டு தூற்றுபவர்களும் என்னதான் விமர்சனங்கள் தெரிவித்து வருகின்றபோதும் மக்கள் நலன் என்று வரும்போது இன, மத பேதமின்றி செயற்படுபவர். ரிசாட் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர். வன்னி மாவட்ட பிரதிநிதி. அமைச்சரவையிலே அவர் முக்கியமான ஓர் அமைச்சராக பதவி வகிப்பதன் மூலமாக மக்களுக்கு வேண்டியவற்றை வேண்டிய நேரம் செய்ய வாய்ப்புக்கிடைப்பது அவரை ஆட்சிமன்றம் அனுப்பிய மக்களுக்கு பெருமை தருவதாகும்.

அமைச்சர் ரிசாட்டின் உடனடி நடவடிக்கையினால் கொழும்பிலிருந்து 20 தொன் உணவுப் பொருட்கள் மன்னாருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அமைச்சர் ரிசாட், ஹுனைஸ் பாரூக் எம்.பி, அமைச்சு அதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகளும் மேலும் பல அரச பணியாளர்களும் பொது நலசேவையாளர்கள் பலரும் பொதுமக்களை அனர்த்தத்திலிருந்து காப்பாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

மாந்தையிலே நாயாறு, பாலியாறு முதலியன பெருக்கெடுத்ததன் காரணமாக வெள்ளாங்குளம், இலுப்பைக்கடவை, தேத்தாவடி, தேவன் பிட்டி, விடத்தல்தீவு, சன்னார், பெரியமடு ஆகிய பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

கட்டுக்கரைக்குள நீர் பெருக்கெடுத்ததனால் நெடுவரம்பு, ஆண்டான்குளம், பள்ளிவாசல்பிட்டி, அடம்பன், ஆட்காட்டிவெளி, வட்டக்கண்டல், சொர்ணபுரி, பரப்புக்கடந்தான், மானையன் குளம் முதலிய கிராமங்களும் அவற்றுக்கிடைப்பட்ட பல்வேறு கிராமங்களும் பாதிக்கப்பட்டன.

சிறுகுளங்கள் கட்டுக்கடங்காமல் நிரம்பி பாதிப்பை அதிகப்படுத்தின. இத்தகைய அனர்த்த சூழ்நிலையிலிருந்து பொதுமக்களைக் காப்பற்ற மாந்தை மேற்கு பிரதேச செயலகம் உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. உதவி அரசாங்க அதிபர் மாணிக்கவாசகர் ஸ்ரீஸ்கந்தகுமார், அவர்களும் செயலகப் பணியாளர்கள், கிராமசேவையாளர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய வாழ்வாதார உதவிகளை நல்கினரென பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். வெள்ளம் வடிந்த பின்னரும் கூட சிறு பயிர்களைக் கொண்ட வயல்களில் தேங்கி நின்ற நீரை வெளியேற்றி உதவினர்.

வெள்ள அகதிகளை பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு செல்ல இராணுவத்தினர் பங்களிப்புச் செய்தனர். இத்தகைய நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற மன்னார் அரச அதிபரின் பணிப்புரைக்கமைய மேலதிக அரச அதிபரும் ஏனைய அதிகாரிகளும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் இத்தகைய உடனடி நிவாரணப் பணிகளை அரச அதிகாரிகள் மேற்கொண்டிருந்தபோதும் அவற்றைக் கொச்சைப்படுத்தி அரசின் மீது சேறுபூசும் தீய நடவடிக்கைகளிலும் சிலர் ஈடுபடத்தான் செய்கின்றனர். வழமையாக அரசை எதிர்த்து குரல் எழுப்பும் பிராந்திய தீய சக்திகள் விஷயத்தை அரசியல் மயப்படுத்தி அரச நிவாரணப் பணிகளை மலினப்படுத்தினர். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர் எனக்கூறப்படும் பிராந்தியத்தலைவர் ஒருவரும் அவருடன் சேர்ந்த குழுவினரும் பெயருக்காக நிவாரணப்பணிகளில் ஈடுபட்டனர். ஒரு சில முகாம்களுக்கு சென்று 2றிg அரிசி, 1/2றிg பருப்பு வழங்கி அவற்றை பத்திரிகைகள், இணையத் தளங்களில் பிரசுரிக்க ஆவன செய்தனர். அரசு எந்த உதவியுமே வழங்க வில்லையென அப்பட்டடமான பொய் கூறி அரசின் மீது சேறு பூசியுள்ளனர். அரச நிவாரணம் கிடைக்கவில்லையென கூறுவது முழுப்பூசணிக்காயை சோற்றில் புதைக்கும் கதைதான் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

வெளியுலகம் அரசின் மீது குறைகாணவும் தம்மைப் பெருமைப்படுத்தவும் செய்யப்படும் முயற்சிகளே இவை எனப்பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர்.

தேர்தல் காலங்களில் கூட்டமைப்புத் தலைவர்களுக்கு மேடைபோட்டுக் கொடுக்கும் உள்ளூர் அரசியல்வாதியொருவரின் கைங்கரியமே இது என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த குறிப்பிட்ட அரசியல்வாதி வாழும் காத்தான்குளம் பிரதேசத்தின் சோழ மண்டலக்குளம் உடைப்பெடுத்தபோது இவர் வாளாவிருந்தவர். அந்த கிராம மக்களுடன் அயல் கிராமமான தேத்தாவடி மக்களே பெருக்கெடுத்த நீரை மறிப்பதற்கு உதவியதாக மக்கள் கூறுகின்றனர்.

வெள்ளத்தினால் பாதிக்க்கப்பட்ட மக்கள் 28 முகாம்களில் பாதுகாக்கப்பட்டனர். பின்னர் முகாம்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு எஞ்சியமக்களுக்கு வாழ்வாதார வசதிகள் அளிக்க மாந்தை மேற்கு உதவி அரச அதிபர் ஸ்ரீஸ்கந்தகுமார்(அன்ரன்) அவரது செயலகப் பணியாளர்களும் முன்னின்று உழைத்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர். மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணியாளர் எம். ஏ. சி. றியாஸ், மேஜர்களான தந்திரிவத்த, பெளமி கிச்சிலான், லந்திரா ஆகியோரின் அபரிமிதமான பணிகளை பாதிக்கப்பட்டவர்கள் பாராட்டுகின்றனர்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.