புத் 65 இல. 01

நந்தன வருடம் மார்கழி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 சபர் பிறை 23

SUNDAY JANUARY 06 2013

 

ஆழ்மன அழுக்குகள்

ஆழ்மன அழுக்குகள்

முத்துக்கிட்டினன் ஒரு வித்தியாசமான பேர்வழி. படிச்சிருந்தும் தான் பிடிச்ச முயற்குட்டிக்கு மூண்டு கால் எண்டு அடம்பிடிப்பான். தன்னில பிழை எண்டு தெரிஞ்சாலும் ஒப்புக்கொள்ளாது விதண்டாவாதம் பேசி வீண் சண்டை பிடிப்பான். உலகத்தில் உள்ள பெண்களை எல்லாம் ஒழுக்கங் கெட்டவர்கள் எண்டு ஒற்றைக் காலில் நிப்பான்.

உன்ரை அம்மா, அக்காவும் பெண்கள்தானே என்று கேட்டால் சற்றுப் பேசமாட்டான். பிறகு ஆரம்பித்து விடுவான் தனது பழைய புராணத்தை. அதாவது, மீண்டும் பெண்களை வசைபாடும் வக்கிர புராணத்தை.

இதனால் நாளுக்கு நாள் இவனது நண்பர்கள் வட்டம் சுருங்கிக்கொண்டே போனது. இத்தனைக்கும் ஆள் ஒழுக்கமான பேர்வழியுங் கிடையாது. இரவானால் கள்ளு சாராயம், கஞ்சா போன்ற போதை வஸ்த்துக்களில் மூழ்குவதுடன், ரெயில் ரோட்டுப் புதர், ஒதுக்குப்புறமான இரகசிய விடுதிகள் பக்கமும் நாயாய் அலைந்துவரும் பழக்கமும் உண்டு.

இதைவிட ஊருக்குள் குறுக்க மறுக்க வேலிபாயப் போய் விளக்குமாத்துப் பூசை வாங்கினவனெண்டுங்கதை. என்னவோ அவனுக்கு எதிர்பாராத விதமாகக் கச்சேரிக்குள் பியோன் வேலையொண்டு கிடைச்சது அவனது அதிஸ்டம்தான்.

எல்லோரும் ஆச்சரியப்பட்டனர் இவனுக்கு எப்படித் திடீரென்று உத்தியோகம் கிடைச்சதெண்டு. ஆனால், அவன் தனது தகுதிக்கும் திறமைக்கும்தான் கிடைத்ததென்று பீற்றிக்கொண்டான். ஆனால் யாரோ மந்திரிக்குத் தரகர் மூலம் ஒண்டரை லட்சம் கொடுத்துத்தான் தகப்பன் இந்தப் பதவியை வாங்கி கொடுத்ததென்பதே உண்மை.

பியோன் வேலை கிடைத்த பின்னர் முத்துக்கிட்டினனில் பெரிய மாற்றம். டீசன்ற்றாக உடையணிந்து கொலோன் வாசனை கமகமக்க கையில் பைல் பேக் சகிதம் தானே தலைமைக் குமாஸ்தா என்ற பாவனையில் போய்வருவான்.

அதைப் பார்த்தால் ஏதோ ஒரு சினிமாப் படத்தில் வடிவேலுக்கு கவர்மண்ட் வேலை கிடைச்சு வடிவேலு காட்டிய ஓவர் பந்தாவும் கூத்தும் ஞாபகம் வரச் சிரிப்பும் பொத்துக்கொண்டு வரும். ஒரு நாள் முத்துக் கிட்டினன்ர கூட்டாளியில் ஒருவனான கணேஷ் என்னிடம் சொன்னான். “உனக்கொரு விசயம் தெரியுமாடா! நம்மட முத்துக் கிட்டினன் ஒரு பெட்டையை லவ் பண்றான்ரா” எண்டு. எனக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது.

உண்மையாடா கணேஷ் இந்தக் கதை? பிறகென்ன நான் பொய்யா சொல்றன். பெட்டையினுடைய பேர் ராதாவாம். கச்சேரிக்குள்ள இவனோடதான் வேலை செய்யிறவளாம் என்றான் கணேஷ்.

இப்படி நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே முத்துக் கிட்டினன் அவ்வழியாகச் சைக்கிளில் வந்து கொண்டிருந்தான். என்னடாப்பா, எப்பிடி சுகம்? உத்தியோகம் கிடைத்ததிலயிருந்து ஆளைச் சந்திக்க முடியல்ல படு பிஷி போல என்றேன்.

சேச்சே அப்பிடி ஒண்டுமில்ல வேலைக்குப் போறதால முதல்மாதிரி நேரம் கிடைக்கிறதில்லைத்தான் அதோட........” என்று இழுத்தான்.

“அதோட........ சொல்லு சொல்லு” என்று அவனைத் தூண்டினேன். நான் ஒரு பிள்ளையை லவ் பண்றன். அவளையும் சந்திக்கப் போறனான். அதுதான் உங்களிட்ட வரமுடியல என்றான்.

“சபாஷ் சரியான முடிவுதான். இப்பவாவது ஒரு பெண் பிள்ளையை நம்பினாயே! அதுக்குப் பெரிய பாராட்டுக்கள். உனது காதல் வெற்றிபெற எங்களனைவரதும் நல்லாசிகள். உன்ர பிள்ளையின் பெயரென்ன?” என்று ஒன்றும் அறியாதவன் போல் கேட்டேன்.

“ராதா, நல்ல பெயர்தானே?” என்றான் அப்பாவித்தனமாக.

“கிட்டினனுக்கு ராதா!” ஆகா என்ன பொருத்தம். “எங்களுக்கு எப்ப கலியாணச் சாப்பாடு போடப் போகிறாய்?” என்று நான் கேட்க இவ்வளவு நேரமும் கதையில் குறுக்கிடாமல் இருந்த கணேஷ்....

“ஓமடாப்பா! அதைச் சொல்லு அதைச் சொல்லு” என்று தானும் இணைந்து கொண்டான். “வீட்ட இன்னுஞ் சொல்லயில்ல கெதியில சொல்லலாமெண்டிருக்கிறன். அதுக்குப் பிறகுதான் தெரியவரும் எப்ப கலியாணமெண்டு” என்றான் அவன்.

“நல்ல விடயத்தைத் தள்ளிப் போடக்கூடாது கிட்டினன். ஆனபடியா கெதியில வீட்ட சொல்லி அலுவலை முடிக்கப்பார்.” என்று கூறி விடைபெற்றோம்.

அவனும் தன்ர பிள்ளையைச் சந்திக்க வாக்கும் விட்டால் காணுமெண்டு போய்க் கொண்டிருந்தான். ஒருவாரம் கழிந்திருக்கும்.......குளக்கோட்டன் பூங்கா நோக்கிப் போய்க் கொண்டிருக்கும்போது என்னுடன் வந்த கணேஷ் சொன்னான்.

“எதிரே வாற பெட்டையைப் பார் மச்சான் இவள்தான் ராதா முத்துக் கிட்டினன்ர ஆள்” நான், “மெய்தானாடா!” என்று கேட்டவண்ணம் கவனமாகப் பார்த்தேன். கறுப்புமில்லை சிவப்புமில்லை பொதுவான ஆனால் மினுமினுப்பான நிறம். இடுப்பைத்தாண்டி பின்னழகைத் தொட்ட கூந்தல், எடுப்பான மூக்கு, களையான முகம், சுளையான அதரங்கள், ஒடுங்க வேண்டிய இடங்கள் ஒடுங்கியும், நிமிர வேண்டிய இடங்கள் நிமிர்ந்தும், அளவான உயரத்துடன் கூடி அழகான பெண். மனதுக்குள் கொஞ்சம் பொறாமை தலை நிமிர்த்துவது போல உணர்ந்தேன்.

“முத்துக் கிட்டினன் குடுத்து வெச்சவன் மச்சான்” என்றேன் நான்.

“உண்மைதான் மச்சான், ஆனால் அந்தக் கிறுக்கன் எந்தளவுக்கு இதைப் புரிஞ்சு வெச்சிருக்கிறான் என்பதுதான் புரியவில்லை” என்றான் கணேஷ்.

“நானும் அதைத்தான் யோசிக்கிறன், வடிவான பெண் மட்டுமில்ல நான் விசாரிச்சதில நல்ல அடக்கமான குணச்சிறப்புகள் கொண்ட சிறந்த பெண்ணென்றும் அறிய முடிஞ்சிது, இந்தக் கொழுப்பு மண்டையன் என்ன செய்வானோ எண்டு கவலையாத்தான் இருக்கு” என்றேன் நான்.

“காலந்தான் பதில் சொல்ல வேண்டும்” என்றான் கணேஷ்.

இச்சமயம் ராதா எங்களைக் கடந்து போய்க்கொண்டிருந்தாள். நானும் கணேசும் பூங்காவிற்குள் நுழைந்தோம். கொஞ்சநாளா முத்துக் கிட்டினனைச் சந்திக்க முடியவில்லை. சுமார் இரண்டு மாதங்களின் பின் ஒருநாள் அவனே வீடு தேடி வந்தான். கணேசும் என்னுடன் இருந்தான்.

“என்னடா முத்து உன்னைக் கண்டுபிடிக்கவே முடியல்ல, வா!வா! வந்து உட்கார்” என்று கூற கதிரையில் வந்து அமர்ந்தான். இதற்கு முதல் சந்தித்த போதிருந்த பொலிவும் தெளிவும் அவனிடமில்லை. குழம்பிய மனநிலையை அவன் முகம் காட்டிற்கு. என்னவாயிருக்கும்.........? என்று எண்ணியபடி,

அவனிடமே கேட்டேன் “என்ன முத்துக் கிட்டினன் மிகவும் சோர்ந்து களைப்படைந்தது போல இருக்கிறாய்? உன்ர கல்யாணத்துக்கு வீட்டார் சம்மதிக்கவில்லையோ?” என்று கேட்டேன்.

“வீட்டில எல்லாருக்கும் சம்மதம்தான்....” என்று இழுத்தான்.

“பிறகென்னடா படமெடுத்து ஆடவேண்டிய நேரத்தில செத்த பாம்புபோல கிடக்கிறாய்?” என்றேன்.

“இவனுக்கு வழமைபோல, முருங்கையில ஏறயில்ல வேம்பில ஏறியிருக்குது போல” என்றான் கணேஷ். “போங்கடா விசயம் விளங்காமல் கதைக்கிறியள் எனக்கு இப்ப அவளில விருப்பமில்ல” என்றான் முத்துக் கிட்டினன்.

“பார்த்தியோ நான் சொன்னன் வேதாளம் வேம்பிலதான்” கணேஷ் கூறினான். நான் கேட்டேன் “ஏன்டா என்ன நடந்தது உனக்கு! எவ்வளவு அழகான பிள்ளை, நல்ல குணசாலி வேறு ஏன் சீதனப் பிரச்சினை கள் எதனாலும் குழம்பினி யோ?” என்று வினவினேன்.

“இல்ல மச்சான் நான் சீதனம் ஒரு சதமும் கேட்க யில்ல. அது வேற பிரச்சின......” என்று இழுத்தான். “என்னண் டுதான் சொல்லித் துலையன்” கணேஷ் அலுத்தான்.

“சொல்றன் போன மாதம் அவளுக்குக் கருப்பையில கட்டி எண்டு கொழும்பு ஆசுப்பத்திரியில ஒப்பறேசன் செய்திருக்கிறாங்கள்.”

“செய்தால் என்ன! குழந்தை பிறக்காதாமோ இல்லாட்டி வேறேதும் பெரிய பிரச்சனைகளாமோ?” என்றேன் நான். “அப்பிடி எதுவுமில்ல உடுப்பொண்டுமில்லாம எத்தின பேர் பாத்திருப்பாங்கள்! அதை நினைக்க எனக்கு மன வெறுப்பாயிருக்கு” என்றான் சிறுபிள்ளைத்தனமாக கிட்டினன்.

கணேசுக்குக் கோபம் வந்துவிட்டது......!”மடையா! நோய் வந்தா மகாராணி மகாராசாவாயிருந்தாலும் டொக்டரிட்டப் போகத்தான் வேணும். நோயுற்ற உடம்பைக் காட்டத்தான் வேணும். நீ நாகரீக உலகத்துக்குப் பொருத்தமில்லாத பிறவியடா! படிக்கிறனெண்டு போய்ப் படிச்ச நீயா சிரைச்சநீயா அறிவிலிப் பயலே கதைக்கிறாய் கதை” என்று பொரிந்து தள்ளினான்.

எனக்கென்னவோ அவன்மீது கோபப்படுவதை விட அனுதாபந்தான் ஏற்பட்டது. ஏனெண்டால் இவனுக்கு ஆழ்மனத்தில ஏதோ கோளாறு இருப்பதாகவே உணர்ந்தேன்.

அதற்குள் மீண்டும் கணேசு “டேய் கோம்பைத் தலையா! நீ பிறக்கும்போது உன்ர மொக்கு மண்டை வெளிவராமல் கொம்மா அவதிப்பட ஒப்பிரேசன் செய்துதான்ரா உன்னையும் கொம்மாவையும் டொக்ரர்மார் காப்பாத்தினதெண்டு ஒருநாள் உன்ர அம்மா என்ர அம்மாட்டக் கதைச்சதை நான் கேட்டுக்கொண்டிருந்தநான்ரா. ஒம்பது தையல் போட்டதென்றும் சொன்னவ இதுக்கென்ன சொல்லுறாய்? கொப்பர் கொம்மாவ வேணாமெண்டு சொல்லயில்ல......! அதுக்குப் பிறகுதான் உன்ர தம்பி, தங்கையெல்லாம் பிறந்து இப்பவும் எவ்வளவு ஒற்றுமையாய் வாழ்கிறதைக் காணயில்லயாடா மோடா?” என்று வாய்க்கு வந்தபடி திட்டியவாறே விளக்கினான்.

கணேசு கூறியதைக் கேட்டிருந்த முத்துக்கிட்டினன் வாய்பிளந்தபடி விக்கித்துப் போனவனாய் காணப்பட்டான். நான் அவனருகில் போய் ஆதரவாய் அவன் தலையை வருடியபடி, கவலைப்படாத மச்சான், கற்பென்பது உடம்பில இல்ல, அது மனசிலதான் இருக்கு. மனமொத்து ஆணும் பெண்ணும் தவறான முறையில் அதாவது கணவன் மனைவி என்ற நிலையில் இல்லாமல் புணர்ந்தால்தான் கற்புக்கு இழிவு இழுக்கு. வல்லுறவைக் கூடக் கற்பழிப்பு என்று கூறுவது தப்பு. இப்படி இருக்க நோய்த் தீர்ப்புக்காக உடம்பை வைத்தியர் பார்த்தால் அதில ஒரு குறையுமில்ல களங்கமுமில்ல மச்சான்.

நீ இண்டைக்கே போய் உன்ர ராதாவைப் பார்த்து ஆறுதல் கூறு, சுகம் விசாரி. இன்னும் ரெண்டு மாதத்தில கலியாணத்த முடிக்க தயாராகு சரியோ! என்று அவனுக்கு சமாதானம் கூறினேன்.

“சரி மச்சான் நான் அவளுக்குப் பால்மா பழவகை, பிஸ்கற் ஏதும் வாங்கித்தான் போகவேணும் என்று கூறியபடி கடைத்தெரு நோக்கிப் புறப்பட்டான்.”

நானும் கணேசும் சந்தோசமாக அவனை வழியனுப்பிவைத்தோம். அவன் போன பின் கணேஷ் கூறினான்.......! “எனக்கெண்டா மச்சான் இவனில நம்பிக்கையில்ல, இந்த வேதாளம் முருங்கையை விட்டு வேம்பில ஏறிப் பிறகு வேம்பவிட்டு மின்கம்பத்தில......ஏறினாலும் ஏறும்”

கணேஷ் சொன்னதைக் கேட்டு நான் கூறினேன். “நீ சொல்றத நானும் மறுக்கயில்ல. ஆனால், இவன வெறுக்கிறத விட்டுட்டு இவனுக்கு ஆதரவு காட்ட வேணும் மச்சான். ஏனெண்டால் இது இவன்ர அடிமனதில படிந்துவிட்ட கறைமாதிரியான மனக் கோளாறாகவே எனக்குப் படுகிறது. இதைக் கிளியர் பண்ணத் தகுந்த மனநல வைத்தியரிட்டக் கொண்டு போக வேண்டும்”. “நீ என்ன சொல்கிறாய்” என்றேன்.

“நீ சொன்னாச் சரிதான் அப்படியே செய்வம்” என்றான் கணேசு.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.