புத் 65 இல. 01

நந்தன வருடம் மார்கழி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 சபர் பிறை 23

SUNDAY JANUARY 06 2013

 

 

தமிழ்க் கல்வியை மேம்படுத்த ஒப்பந்த அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்

ஊவா மாகாணத்தில்

தமிழ்க் கல்வியை மேம்படுத்த ஒப்பந்த அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்

ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான்

விவா மாகாணத்தின் கல்வி அமைச்சராக, மாகாண முதலமைச்சர் சiந்திர ராஜபக்ஷ இருந்து வருகின்றார். மாகாண தமிழ்க்கல்வித்துறையை மேம்படுத்த வேண்டுமென்ற எனது கோரிக்கையையேற்ற முதலமைச்சர் நூறுமில்லியன் ரூபாவை, ஒதுக்கிக்யிருக்கிறார். ஊவா மாகாணத்தில் பின்னடைவை எதிர்கொண்டிருக்கும் விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம் போன்ற பாடங்களில், உயர்வகுப்பு மாணவர்களை மேம்படுத்தும் வகையில், வெளி மாகாணங்களிலிருந்து ஒப்பந்த அடிப்படையில் பாடரீதியிலான பட்டதாரி ஆசிரியர்களைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைளை துரிப்படுத்தியிருப்பதாக மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், தினகரன் வாரமஞ்சரிக்கு தெரிவித்தார்.

ஊவா மாகாண மின்சத்தி, எரிபொருள், கைத்தொழில், நெசவுத்தொழில், விளையாட்டுத்துறை, சமூக நலன்புரி, இளைஞர் விவகாரம், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக சேவையாற்றும் செந்தில் தொண்டமான் மேலும் கூறுகையில், ஊவா மாகாணத்தில் 194 தமிழ்மொழிமூலமான பாடசாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 57 பாடசாலைகளில் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளேன். அத்துடன் 27 பாடசாலைகளுக்கு புதிய கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன. ஒதுக்கப்பட்டிருக்கும் நிதி பற்றாக்குறை ஏற்படும்போது, முதலமைச்சர் நிதியிலிருந்தும் நிதியைப் பெறக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதற்கமைய தமிழ் மொழி மூலமான பாடசாலைகளின் அபிவிருத்தி கருதி நிதி ஒதுக்கீடுகளையும் செய்துள்ளேன்.

தமிழ்மொழிமூலமான 36 பட்டதாரி ஆசிரிய நியமனங்கள் உட்பட டிப்ளோமா பட்டதாரி ஆசிரிய நியமனங்களும் வழங்கப்பட்டுள்ளன. க.பொ.த. சாதாரணதர பெறுபேற்றை உயர்த்தி, உயர்தர வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், சொந்த நிதியின் மாதிரி வினாத்தாள் அடங்கிய இரு தொகுதிகள் அச்சடித்து வழங்கப்பட்டன.

மாகாணத்தின் தமிழ் மொழி மூலமான பாடசாலைகளில் விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் பாடரீதியிலான ஆசிரியர்களின் பற்றாக்குறை இருந்து வருகின்றது. இதுவே மேற்குறிப்பிட்ட பாடங்களில் மாணவர்கள் பின்னடைவை எதிர்கொள்ள பிரதான காரணமாகும். இதனை நிவர்த்தி செய்யும் வகையில், வெளி மாவட்டங்களிலிருந்தாவது ஒப்பந்த அடிப்படையில் விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் பாடரீதியிலான பட்டதாரி ஆசிரியர்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை எடுத்துள்ளேன்.

எமது தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான், பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் ஆகியோரின் வழிகாட்டலில், மக்கள் சேவையை வெற்றிகரமாக நிறைவேற்றி வருகின்றேன்.

அத்துடன், இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் ஏ. நடராஜனுடன் தொடர்புகொண்டு, மகாணத்தின் அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலை அதிபர்களை கெளரவித்துள்ளேன். அவர்களை ஊக்குவிக்குமுகமாக, இக்கெளரவிப்பு இடம்பெற்றது. இதன் தொடர் செயற்பாடாக பாடசாலைகளுக்கான கணனித் தொகுதிகள், சங்கீத உபகரணங்கள், விளையாட்டு உபகரணங்கள், குறிப்பிடப்பட்ட பாடசாலை மாணவர்களின் நன்மைகருதி போக்குவரத்திற்கான பஸ் வசதிகள் ஆகியவற்றை இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் மூலம் பெற்றுக் கொள்ள ஏற்பாடுகளை மேற்கொண்டிருக்கின்றேன்.

ஊவா மாகாணத்தின் ஏழு அமைச்சுகளின் பொறுப்புக்களை ஏற்றிருக்கும் தாங்கள், மாகாணத்தின் தமிழ்மக்களின் அபிலாசைகள், தேவைகள், விருப்புகள் ஆகியவற்றினை நிவர்த்தி செய்ய மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் பற்றிகேட்டபோது...

சமூக சேவை அமைச்சை நான் பொறுப்பேற்கும் முன்பு, மாகாணத்தில் 35 ஆயிரம் வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன. 450 பேர் என்ற அடிப்படையில் தமிழர்கள் உள்வாங்கப்பட்டிருந்தனர். நான் அமைச்சைப் பொறுப்பேற்றதும், 10,500 தமிழர்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கி வருகின்றேன். இவ் உதவிகள் 250ரூபா முதல் ஆயிரம் ரூபாவரையில் அமைந்துள்ளன.

புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோய் ஆகியவற்றினால் பீடிக்கப்பட்டிருப்பவர்களுக்கு ஆயிரம் ரூபா என்றவகையில் மருத்துவ செலவுகள் வழங் கப்படுகின்றன. விதவைகளின் சுய தொழில் வாய்ப்பு கருதி 100க்கு மேற்பட்ட தையல் இயந்திரங்களை வழங்கியுள்ளேன். அத்துடன் சிறையிலிருக்கும் கைதிகளின் குடும்ப மேம்பாடுகளைக் கருதி 100 தையல் இயந்திரங்களையும் வழங்கியிருக்கின்றேன். சிறையில் இருப்பவர்களை தங்கிவாழ்ந்துவந்த பெண்களின் நன்மை கருதி அவர்களின் சுயதொழில் வாய்ப்புக்கென்று தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. மற்றும் இளைஞர், யுவதிகளின் சுய தொழில் ஊக்குவிப்புக்கென்று, நிதி உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. தோட்டப்பகுதிகளில், இம் மூன்று வருடகாலத்திற்குள் 40 மருத்துவ முகாம்கள் நடாத்தப்பட்டன. இதன் மூலம் 40 ஆயிரம் பேர் பயன் பெற்றுள்ளனர். மூக்குக்கண்ணாடிகள், செவிப்புல இயந்திரங்கள், ஊன்று கோல்கள், சக்கர நாற்காலிகள், ஆகியனவும், தேவை கருதி வழங்கப்பட்டுள்ளன. தோட்ட இளைஞர்கள் 300 பேருக்கு சாரதி அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளேன்.

விளையாட்டுத்துறையைப் பொறுத்த வரையில், அமைச்சைப் பொறுப்பேற்பதற்கு முன் 16 விளையாட்டுக்கழகங்கள் மட்டுமே, தோட்டப் பகுதியில் இருந்து வந்தன. தற்போது மாகாணத்தின் 25 பெருந்தோட்டங்களிலும் 300 விளையாட்டுக்கழகங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஊவா மாகாண சபையின் ஆரம்பகாலத்தில் இ.தொ.கா. வின் பிரதிநிதித்துவம் கூடுதலாக இருந்தது. தற்போது அப்பிரதிநிதித்துவம் ஒன்றாக குறைந்துவிட்டது. இதற்கு காரணம் என்ன? எதிர்வரும் காலங்களில் தமிழ் பிரநிதித்துவத்தில் மாற்றம் ஏற்படுமா?

அடுத்துவரும் மாகாணசபையில் இ. தொ. கா.வின் பிரதிநிதித்துவம் அதிகரிப்பு நிச்சயமிருக்கும். பிரதிநிதித்துவங்கள் குறையக்காரணம் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் சுயநலன் கருதி செயல்பட்டமையும், மக்களின் தேவைகள், விருப்புகள், அபிலாஷைகள் ஆகியவற்றை புறக்கணித்து செயற்பட்டமையுமேயாகும். மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல் இருந்தமையும் பிரநிதிநித்துவம் குறைய இன்னொரு காரணமாகும். இ. தொ. கா. என்பது ஆல விருட்சம் போன்றது. இந்த ஆல விருட்சத்தின் கீழிருந்து, மக்களுக்கு சேவையாற்றும் தொண்டனாகவே இருந்து வருகின்றேன்.

பதுளை மாவட்டத்திலிருந்து இ.தொ.கா. சார்பாக போட்டியிட்டு பாராளுமன்றம் சென்ற இருவர், இ.தொ.கா விலிருந்து ஒதுங்கியுள்ளனர். அவர்கள் மனமாற்றமடைந்து மீண்டும் இணைவார்களானால் அவர்களை ஏற்றுக்கொள்வீர்களா?

அதற்கான பதிலை என்னால் கூறமுடியாது. இ. தொ.காவின் தலைமைத்துவமே அதற்கான முடிவினை எடுக்க வேண்டும். இ.தொ.கா தலைமைத்துவம் எடுக்கும் அம்முடிவுக்கு, நான் தலைவணங்குவேன்.

மாகாண அமைச்சுப் பொறுப்பிலிருந்து தாங்கள் அண்மையில் இராஜினாமா செய்யக்காரணம் என்ன?

எனது பொறுப்பிலுள்ள அமைச்சுக்கு வெறுமனே பத்து இலட்சம் ரூபா நிதியே ஒதுக்கப்பட்டது. இந்நிதியில், மாவட்டத்தில் 250 தோட்டங்களுக்கும் சேவையற்ற முடியாது. இதன் காரணமாகவே அமைச்சுப்பதவியை இராஜினாமாச் செய்தேன். எனது இராஜினாமாவில் நியாயமிருப்பதை உணர்ந்த முதலமைச்சர், இ.தொ.கா மீது அவர் கொண்டிருக்கும் நம்பிக்கை, என்னை அழைத்து அமைச்சைப் பொறுப்பை ஏற்று, வேலைத்திட்டங்களை தயாரித்து தரும்படி கூறினார். அதன்பின் அதற்கென்று 50 மில்லியின் ரூபா நிதியையும் ஒதுக்கித்தந்தார். மேலும் தேவைப்படும் நிதியினை முதலமைச்சரிடமிருந்து பெறக்கூடியதாக இருக்கின்றது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.